மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஓர் ஊடகத்தின் தமிழ் பதிப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி ஊடகம் ஒன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தவிர அநேகமாக வடக்கிலுள்ள ஏனைய எல்லா ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2009 மே இக்குப் பின் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட ஒப்பீட்டளவில் பெரிய ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாக இதனைக் கூறலாம்.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதியும் இதில் பங்குபற்றியிருக்கின்றார்கள். யாரெல்லாம் வழமையாக இப்படிப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றுவார்களோ அவர்கள் எல்லாரும் இதில் கலந்துகொண்டார்கள். யாரெல்லாம் வழமையாக வருவதில்லையோ அவர்கள் எவரும் இதிலும் பங்குபற்றவில்லை. எனினும் இந்த ஆர்ப்பாட்டம் வழமையான ஆர்ப்பாட்டங்களை விட ஒரு விதத்தில் வித்தியாசமானது. வழமையான ஆர்ப்பாட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் மிகச் சில ஊடகவியலாளர்களையே காண முடியும். மற்றும்படி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வெளியே செய்தி சேகரிப்பவர்களாகவே காணப்படுவதுண்டு. ஆனால், இம்முறை ஊடகவியலாளர்களே ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினார்கள் என்பது ஒரு முக்கியமான வித்தியாசம். மேலும் ஆர்;ப்பாட்டத்தின் முடிவில் அரசியல் வாதிகள் பேச்சாற்றவில்லை என்பதும் ஒரு வேறுபாடுதான். கட்சி சாரா ஊடகவியலாளர்களின் எதிர்ப்பாக இதை வெளிக்காட்டுவதே இதை ஒழுங்குபடுத்தவர்களின் நோக்கமாயிருந்திருக்கலாம்.

எனினும், கடந்த ஐந்தாண்டுகளாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் இது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குமுள்ள பொதுப் பண்புகள் பலவற்றை இக்கண்டன ஆர்ப்பாட்டமும் கொண்டிருந்தது.அப் பொதுப்பண்புகள் வருமாறு……….

முதலாவது- 200இற்கும் கூடாத தொகையினரே இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்கின்றார்கள். அரிதாhகவே அந்தத் தொகை 100ஐ தாண்டுவதுண்டு.

இரண்டாவது- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றுகிறார்கள். கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு தொகுதி முக்கியஸ்தர்களும் பங்குபற்றுகிறார்கள்.

மூன்றாவது- யார் வழமையாக வருகிறார்களோ அவர்கள் தான் எல்லா எதிர்ப்புக்களின்போதும் வருகிறார்கள். யார் வழமையாக வருவதில்லையோ அவர்கள் எப்பொழுதும் வருவதில்லை. குறிப்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் அநேகமாக கலந்துகொள்வதில்லை. பல மாதங்களுக்கு முன் வடமாகாண சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு எதிர்ப்பு நடவடிக்கையின் போது அதன் முதலமைச்சர் கலந்துகொண்டதை ஒரு விதி விலக்காகக் கூறலாம்.

நாலாவது- சமூகத்தின் அறிவியல் ஊடாட்டத்தின் மையம் போலக் காணப்படும் உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் எவரும் இவற்றில் பங்குபற்றுவதில்லை. ஆனால், குறிப்பிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நிகழும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர்கள் பங்குபற்றுவதுண்டு.

ஐந்தாவது- வடக்கு கிழக்கிலுள்ள முக்கிய படைப்பாளிகள், செயற்பாட்டாளுமைகள், கல்விமான்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் போன்றவர்கள் இவற்றில் பங்குபற்றுவதில்லை.

ஆறாவது- வடக்கு கிழக்கிலுள்ள அரச உயர் அதிகாரிகள் இவற்றில் பங்குபற்றுவதில்லை.

ஏழாவது- வடக்கு கிழக்கிலுள்ள மத குருக்கள் சில எதிர்ப்புக்களின் போது கலந்து கொள்வதுண்டு.

எட்டாவது- வடக்கு கிழக்கிலுள்ள மூத்த ஊடகவியலாளர்களோ அல்லது ஊடக ஆசிரியர்களோ இவற்றில் முகம் காட்டுவதில்லை.

ஒன்பதாவது- சில சமயங்களில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள்கூட பங்குபற்றுவதில்லை. உதாரணமாக பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்பில் பெண்ணியச் செயற்பாட்டு இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைளின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களோ அல்லது ஊரவர்களோ மிக அரிதாகவே கலந்துகொள்கிறார்கள்.

எனவே, மேற்கண்ட அனைத்து பொதுப்பண்புகளையும்; தொகுத்துப் பகுத்தால் அதிர்ச்சியூட்டும் ஒரு சித்திரமே எமக்குக் கிடைக்கும். அதாவது, இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏறக்குறைய சடங்குகள் போல ஆகிவிட்டன என்பதே.கடந்த ஐந்தாண்டுகளாக இத்தகைய எதிர்ப்புக்களின்போது ஏறக்குறைய ஒரே அளவு தொகையினரே கலந்து கொள்கிறார்கள். அரசியல் வாதிகளிலும் ஓரேயாட்களே கலந்து கொள்கிறார்கள். ஆயின் கடந்த ஐந்தாண்டுகளில் இந்த நிலைமை மாறாது அப்படியே இருப்பதற்கு யார் பொறுப்பு? இத்தகைய எதிர்ப்புகளை ஒழுங்கு படுத்தும் நிறுவனங்களும், கட்சிகளும் தானே?

பாதுகாப்புப் பிரச்சினை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆயின் பங்களிக்கும் மக்களின் தொகையைக் கூட்டும் விதத்தில் புதிதாக ஏதையாவது ஏன் சிந்திக்க முடியாமற் போயிற்று? ஏதாவது ஒரு செய்முறை திரும்பத் திரும்ப எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றால் அதைச் செய்யும் முறையில் தான் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். எனவே, அந்தச் செய்முறையை மாற்றுவது பற்றியே முதலில் யோசிக்க வேண்டும் என்று அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறினார். இது மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் எல்லாருக்கும் பொருந்தும். அதாவது, ஒரு புதிய சிந்தனை தேவைப்படுகிறது. இதுவரையிலும் இல்லாத புதிய வழிமுறைகளைப் பற்றி ஆகக் கூடிய பட்ச படைப்புத் திறனோடு சிந்திக்க வேண்டியுள்ளது. எந்தவொரு துறையிலும் படைப்புத் திறன் மிளிர வேண்டுமாயிருந்தால் அதற்கு அந்தத் துறை சார் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், தியாக சிந்தையும் இருக்கவேண்டும். அதுவே வாழ்க்கை முறையாகவும் இருக்கவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு துறை சார்ந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு புதிய வழிகள் திறக்கும். படைப்புத் திறன் அதிகரிக்கும்.

எனவே, இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் எவரும் அதற்கு முழு அளவு விசுவாசமாக இருக்க வேண்டும். அது அவர்களுடைய பிரதான அரசியல் ஒழுக்கமா? இல்லையா என்பதை முதலில் முடிவெடுக்கவேண்டும். மாறாக, அது ஒரு பகுதிநேர ஒழுக்கமாக அல்லது குறிப்பாக, வாக்கு வேட்டை அரசியலுக்கான உப தந்திரங்களில் ஒன்றாக கைக்கொள்ளப் படுமாகவிருந்தால் அது இப்பொழுதிருப்பதைப் போல அது ஒரு சலிப்பூட்டும் சடங்காகவே மாறும். இது மிகக் கொடுமையானதொரு நிலை. அனைத்துலக அரங்கில் ஜெனிவாக் கூட்டத் தொடர்கள் ஏறக்குறைய சடங்குகளாக மாறிவரும் ஒரு பின்னணியில் உள்நாட்டில் சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் சடங்குகளாக மாறி வருகிறன என்பது.

இது தொடர்பில் மேலும் ஓர் உதாராணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். அண்மை வாரங்களில் படைத்தரப்பு தமது தேவைகளுக்காக காணிகளை அளப்பதும் தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடியாகக் களத்தில் இறங்கி அவற்றைத் தடுப்பதும் ஒரு விறுவிறுப்பான அரசியல் செயற்பாடாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகிறது. படைத்தரப்பினர் நிலத்தை அளக்கும் போது தமிழ்த் தரப்பினர் அதை தடுக்க முற்படுகையில் அதில் ஒரு சாகச உணர்வு இருக்கும்தான். ஆனால், இது தமிழ்ப் படம் பார்ப்பதைப் போன்றதல்ல. அதைவிட ஆழமானது, ஆபத்தானது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது முடிவை எட்டவேண்டும். அது ஒரு அரசியல் கொள்கைத் தீர்மானமாக அமையவேண்டும். அதற்கு ஏற்ப உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிவில் செயற்பாடாகவும், சட்டச் செயற்பாடாகவும் அவற்றை முன்னெடுக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் முதலில் இது தொடர்பில் கொள்கைத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பொழுது நடப்பதைப் போன்று தெட்டம் தெட்டமாகவும் தன்னியல்பாகவுமே செயற்படவேண்டியிருக்கும்.

இது தான் பிரச்சினையே. அதாவது, கடந்த ஐந்தாண்டுகளாக வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தெட்டம் தெட்டமானவை அல்லது குறியீட்டு வகைப்படுத்தப்பட்டவை அல்லது அடையாள எதிர்ப்பு வகைப்பட்டவை அல்லது கவன ஈர்ப்பு வகைப்பட்டவைதான். நிச்சயமாக அவை நன்கு திட்டமிடப்பட்ட தொடர் செயற்பாடுகள் அல்ல.

ஆனால், கட்சிகள் தங்கள் மாநாடுகளைக் கூட்டும்போது மினக்கெட்டு ஒழுங்கு படுத்தி மினக்கெட்டு ஆட்களைத் திரட்டி மண்டபம் நிறைந்த ஆட்களோடு மாநாடுகளை நடாத்துகின்றன. தமது கட்சியின் பலத்தை நிரூபிப்பதற்காக எங்கிருந்தோ எல்லாம் தமது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டுவரும் கட்சிகளால் மேற்கண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது மட்டும் ஆட்களைத் திரட்ட முடியாமற்போனது ஏன்? மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் எல்லாருமே பத்தாயிரத்திற்குக் குறையாத அல்லது சில சமயங்களில் இருபாதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவர்கள். ஆகக் கூடிய பட்சம் 90 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவரும் அவர்கள் மத்தியில் உண்டு. ஆயின் வாக்களித்த மக்களுக்குள் இருந்தாவது ஒரு கவர்ச்சியான தொகையை அவர்களால் ஏன் திரட்ட முடியாமற்போயிற்று? ஆயிரக்கணக்கான வாக்காளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மேற்படி அரசியல் வாதிகள் தனியன்களாக ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதை எப்படி விளங்கிக் கொள்வது? பெண்களுக்கு எதிரான வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தவர்களே ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றாததை எப்படி விளங்கிக்கொள்வது?

இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் ஆகப் பிந்திய ஒரு உதாராணத்தை ஆழமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். அந்த உதாராணம் அண்மை வாரங்களில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட காரைநகர் விவகாரம் ஆகும். காரைநகரிலுள்ள ஊரியான் என்ற அச்சிறு கிராமத்தை இங்கே ஒரு வகை மாதிரி உதாராணமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஊரியான் மிக வறண்ட, மிக வறிய ஒர் ஒதுக்குக் கிராமம். சாதி ஒடுக்குமுறையும் உட்பட எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுக்கும் ஒரு கிராமம். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆன பின்னும் கார்பற் சாலைகள் இன்னமும் சென்றடையாத ஒரு கிராமம். ஜந்து மாதங்களுக்கு முன்புதான் அதற்கு மின்சாரம் கிடைத்தது. 1998இல் ஒரு தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட மிகச் சிறிய வீடுகள். போதியளவு கழிப்பறைகள் கிடையாது. கல்வி அறிவு குறைந்த, நடுத்தர வர்க்கம் போதியளவு வளர்ச்சியைப் பெற்றிராத ஒரு கிராமம். கால போகத் தொழில் செய்பவர்களே அங்கு அதிகம். சீவல் தொழில் அல்லது சிறு கடல் மீன்பிடி இவை இரண்டிலுமே அந்த மக்கள் பெருமளவிற்கு தங்கியிருக்கிறார்கள். முன்னைய காலங்களில் பிள்ளைகள் பாடசாலைக்குப் போவதாக இருந்தால் அவர்களுக்கு ஒப்பீட்டளவில் கிட்டவிருக்கும் தியாகராஜா மகாவித்தியாலயத்திற்கு சுமாராக ஆறு கிலோ மீற்றர் தூரம் நடந்துபோகவேண்டிருந்தது. ஆயுத மோதல்களின் போதும் அதற்குப் பின்னரும் இப்பிடித்தான் இருந்தது ஊரியான். கடந்த ஐந்தாண்டுகளில் அரசியல் வாதிகளையும், ஊடகங்களையும் பொறுத்த வரை அது ஒரு கவர்ச்சி மிக்க கிராமம் அல்ல.

ஆனால், புரட்டஸ்தாந்து திருச்சபையான – அமெரிக்கன் சிலோன் மிஷன்அங்கே அதிகம் வேலை செய்திருக்கிறது. பெருமளவுக்கு இந்துகளைக் கொண்ட ஊரியானில் ஒரு முன்பள்ளியையும் மாலைப் பள்ளியையும் அமெரிக்கன் சிலோன் மிஷன் நடாத்துகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்கு வரும்பொழுது அவர்களில் சிலரை ஊரியானுக்கு அனுப்பி தொண்டு செய்வதற்கும் அந்த மக்களுக்கு ஏதோவொரு விதத்தில் உதவி செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளை அத்திருச்சபை செய்து கொடுத்திருக்கிறது. காரைநகர் அபிவிருத்தி சங்கத்தோடு இணைந்து நீர் விநியோகத்தையும் ஓரளவுக்கு செய்திருக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன்புதான் அந்தக் கிராமத்திற்கு போக்குவரத்துச்சபைப் பேருந்தைக்கொண்டு வந்து தினமும் 12 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் பிள்ளைகளுக்கு பருவ காலச் சீட்டுகளையும் அத்திருச்சபையே பெற்றுக்கொடுத்திருக்கிறது.

அச் சிறுமிகளின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை வெளிவரும் வரையிலும் ஊரியானை அரசியல் கட்சிகளோ அல்லது ஊடகங்களோ பெரியளவில் உற்றுக் கவனிக்கவில்லை. தேர்தல்களின்போது சில தலைவர்கள் சென்றிருக்கிறார்கள்.வடமாகாண சபை தேர்தல் முடிந்த பின் முதலமைச்சர் ஒரு முறை கிராம தரிசனம் செய்திருக்கிறார். கிராமத்துக்கு மின்சாரம வந்த போது அமைச்சர் தேவானந்தா வந்திருக்கிறார். மாவை சேனாதிராசா ஒருமுறை போனதாக ஒரு தகவல் உண்டு. தண்ணீர் பிரச்சினை பற்றி எல்லாரிடமும் அந்த மக்கள் முறையிட்டிருக்கிறார்கள். காரைநகர் பிரதேச சபையிலுள்ள கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் ஊரியானுக்குக் குடிநீர் வேண்டும் என்று பல வழிகளிலும் முயன்றிருக்கிறார். ஆனால், அந்த சிறுமிகளின் விவகாரம் வெளியுலகத்தின் கவனத்தை ஈர்த்த போதே குடிநீர் பிரச்சினைக்கு ஏதோவொரு தீர்வு கிடைத்திருக்கிறது.

ஆனால், அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வேறுவிதமான பிரச்சினைகள் உருவாகியிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மதப் பிரமுகர் கவலை தெரிவித்தார். சில ஊடகங்கள் அந்த சிறுமிகளின் பெயர்களையும் வயதுகளையும் குறிப்பிட்டிருந்தன. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகளைக் கொண்டு வரலாம் என்றுமவர் அச்சம் தெரிவித்தார். சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கிராமத்தில் பெருமளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உளவியல் ரீதியாக பாதிப்புற்றிருப்பதாகவும் சில செயற்பாட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள். ஒரு புறம் அச்சம் இன்னொரு புறம் பண்பாட்டு ரீதியிலான விமர்சனங்கள், நெருக்கடிகள்;. முன்னைய காலங்களில் இத்தகைய செய்திகளைப் பிரசுரிக்கும்போது பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்வையும் கவனத்திலெடுத்தே செய்திகள் எழுதப்படுவதுண்டு. இப் பொழுதெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் எதிர்காலத்தைக் குறித்த கவலைகள் எதுமின்றி செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன என்று ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவர் கவலைப்பட்டார்.

ஊடகவியலாளர்களுக்குத் தொழில் சார் திறன்கள் அதிகரிக்கும்போது இது போன்ற பிரச்சினைகள் எழுவதைத் தடுக்கலாம். அத்தகைய தொழில் சார் திறன்களை பெருக்கும் நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சி நெறிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களே தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அதற்கெதிராகவே அவர்கள் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கடந்த ஐந்தாண்டுகளில் அபிவிருத்தி அரசியலும் ஊரியானுக்குப் போதியளவு போகவில்லை. தமிழ் தேசிய அரசியலும் போதியளவு போகவில்லை. அமெரிக்கன் சிலோன் மிஷன் தான் குறிப்பிடத்தக்களவிற்குச் செயற்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்ததன் பின் காரைநகரில் ஓர் எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டிந்தது. ஆனால், இதில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களே கலந்துகொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கிராமத்தை மேற்படி ஆர்ப்பாட்டத்தில் வெற்றிகரமாக இணைத்துக் கொள்ள முடியவில்லை. அச்சுறுத்தலான ஒரு சூழலில் வெளியிலிருந்து வந்தவர்கள் ‘‘ஆர்ப்பாட்டம் செய்ய வா” என்று அழைத்தால் யார் தான் கலந்துகொள்வார்கள்? அந்தச் சனங்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்கக் கூடிய ஓர் அரசியல் வாதியோ அல்லது செயற்பாட்டாளரோ அழைத்திருந்தால் அந்த மக்கள் நிச்சயமாக இணைந்திருப்பார்கள். ஆனால், அரசியல் வாதிகளும் செயற்பாட்டியக்கங்களும் அங்கே அத்தகைய ஆழமான உறவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை.

இது தான் பிரச்சினை. ஊரியான் ஒரு வகை மாதிரி உதாராணம் தான். ஊரியானைப் போலவே அநேகமாக பெரும்பாலான உட்கிராமங்களில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு அலுவலகங்களும் இல்லை. உயிர்த் தொடர்பும் இல்லை. அவர்களுக்கும் சாதாரண சனங்களுக்குமான தொடர்பு தேர்தல் காலத் தொடர்புதான். இந்த லட்சணத்தில் அச்சத்தோடு வாழும் மக்களை ஆர்ப்பாட்டம் செய்ய வா என்று அழைத்தால் எந்த நம்பிக்கையில் அவர்கள் இவர்களைப் பின் தொடர்வது?

சில மாதங்களுக்கு முன் வடக்கிலுள்ள ஒரு செயற்பாட்டாளரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், எங்களில் பலர் தங்களுக்குரிய சௌகரிய வலையத்திற்குள் (comfort zone) வாழ்ந்து கொண்டு சிவில் எதிர்ப்பைக் குறித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்று. இது தான் உண்மை. அவரவர் தங்களுக்குரிய பாதுகாப்பு வலையத்துள் இருந்துகொண்டு உயர் பாதுகாப்பு வலையத்தை அகற்றுவது பற்றி கற்பனை செய்கிறார்கள். வீராவேசமாகப் பேசுகிறார்கள். அதனால்தான், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ் அரசியல் பரப்பில் தொழில் சார் அரசியல்வாதிகள் பெருகிய அளவுக்கு செயற் பாட்டாளுமைகள் பெருகவில்லை.எதிர்ப்பு நடவடிக்கைகளும் மக்கள் மயப்படவில்லை.வாக்கு வேட்டை அரசியலுக்காக தெருவில் இறங்கும் அரசியல்வாதிகளிடம் தமிழ்மக்கள் அதிகமாக எதிர் பார்க்கலாமா?;

01-08-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *