மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும்

காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் அதே காலப்பகுதியில் இவ்வாறு ஓர் அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மூவர் அடங்கிய இக்குழுவின் தலைவராக சேர். டெஸ்மன் டி சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றார். மற்றைய இருவர்களில் ஒருவர் பேராசிரியர்.சேர்.ஜெவ்றி நைஸ் எனப்படும் பிரித்தானியர். மூன்றாமவர் அமெரிக்க சட்ட நிபுணரான பேராசிரியர் டேவிட் கிறேன்.

இக்குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சேர். டெஸ்மன் டி சில்வா ஒரு ராணி சட்டத் தரணி. போர்க் குற்றங்கள் தொடர்பாகவும், மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாகவும், அரசுகள் தொடர்பாகவும் அரசுத் தலைவர்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக மட்டத்திலான விசாரணைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பொதுநலவாய நாடுகளில் மரணதண்டனைக்கு எதிராக வெற்றி பெற்ற பல வழக்குகளை முன்னெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

மற்றவர் சேர். ஜெவ்றி நைஸ் இவரும் ஒரு ராணி சட்டத்தரணி. முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் பிரதான வழக்குத்தொடுநராக பணி புரிந்தவர். 1995ஆம் ஆண்டு யூலை மாதம் யூகோஸ்லாவியாவில் உள்ள ஸ்ரெபெரினிக்காவில் 8372 முஸ்லிம்கள் கொல்லப்பட்டமையை அனைத்துலக சமூகம் இனப்படுகொலையாக ஏற்றுக்கொண்டு விட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மூன்றாமவர் அமெரிக்கச் சட்ட நிபுணரான பேராசிரியர் டேவிட் கீறேன். ஆமெரிக்கப் படைத்துறையில் 20 ஆண்டுகள் சேவையற்றிய பின் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் 10 ஆண்டுகள் மூத்த புலனாய்வு அதிகாரியாக இருந்தவர். மேற்கு ஆபிரிக்காவின் சத்தி மிக்க யுத்தப் பிரபுவான லைபீரியத் தலைவர்; சாள்ஸ் ரெய்லரை யுத்தக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்த விசாரணைகளுக்குப் பொறுப்பாய் இருந்தவர். அப்பொழுது அவர் சொன்னார், ”துப்பாக்கியின் ஆட்சியை விட சட்டத்தின் ஆட்சி மிகவும் பலமானது’ என்று. மேலும் இவர் சியாரா லியோனில் அனைத்துலக போர்க் குற்ற விசாரணை மன்றின் பிரதான வழக்கு தொடுநராகவும் இருந்தவர்.

மேலும், இவ்வாண்டு வெளியிடப்பட்ட 2014சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் அறிக்கை எனப்படும் அறிக்கையை தயாரித்தது இம்மூவரும்தான் என்பதை இங்கு உற்றுக்கவனிக்க வேண்டும். இவ்வறிக்கையானது சிரிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட மற்றும் காணாமற் போன சுமார் 11000 பேர்களைப் பற்றிய ஒரு அறிக்கையாகும். சிரிய அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் மேற்கு நாடுகளுக்கு வேண்டிய தகவல்களை இது வழங்குகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் உலகப் பரப்பில் குறிப்பாக, ஆபிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் என்பவை தொடர்பான விசாரணைகளில் தேர்ச்சியும் நிபுணத்துவமும் பெற்றவர்களும் மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டவர்களுமே இந்நிபுணர் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதே இந்நிபுணர் குழுவின் பணியாகும். அந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும். இப்படிப் பார்த்தால், இந்நிபுணர் குழுவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஒரு கட்டத்திற்கு மேல் போக முடியாதவை. ஆனாலும், அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆளுமைகளைக் கொண்ட ஒரு நிபுணர் குழு இது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு ஏதோ ஒரு விகிதமளவிற்கு அனைத்துலக பரிமாணத்தை, அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள எத்தனிக்கிறது என்று தெரிகிறது.

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவோடு இந்த நிபுணர் குழுவை ஒப்பிட முடியாது. முன்னையது அனைத்துலகத் தீர்மானத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதால் அதற்கு முழு அளவிலான அனைத்துலக அங்கீகாரமும் அனைத்துலக ஆணையும் உண்டு. ஆனால், இந்நிபுணர் குழுவிற்கு அந்தளவிற்கு அங்கீகாரம் கிடையாது. ஏனெனில், இது ஒரு அனைத்துலகத் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்படவில்லை. மாறாக, அனைத்துலகத் தீர்மானம் ஒன்றை எதிர்கொள்ளும் உத்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நிபுணத்துவத்தைப் பொறுத்தவரை இரு குழுக்களிலும் உள்ளவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளுமைகள் தான். ஆனால், மனித உரிமைகள் ஆணையகத்தின் குழு எனப்படுவது ஒரு விசாரணைக் குழு. பின்னையது ஓர் ஆலோசனைக் குழு. இதை இலங்கை அரசாங்கமே நியமித்தது. இப்பிடிப் பார்த்தால், இக்குழுவிற்கு இருக்கும் அங்கீகாரம் ஒப்பீட்டளவில் குறைவு.

ஆனாலும், இப்படியொரு குழுவை நியமித்ததன் மூலம் அரசாங்கம் அனைத்துலக நெருக்கடிகளிலிருந்து தன்னை சுதாகரித்துக் கொள்ள முற்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவை தான் ஏற்கப் போவதில்லை, பொருட்படுத்தப்போவதும் இல்லை என்றவொரு தோற்றத்தையே இதுவரையிலும் அரசாங்கம் வெளிக்காட்டி வந்தது. ஆனால், அவர்களுக்கு உள்ளுர ஒரு பயம் இருந்தது என்பதையே இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு உணர்த்துகிறது. தனது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏதோ ஒரு விகிதமளவிற்காவது அனைத்துலக பெறுமனங்களுக்கு ஏற்புடையதாக மாற்ற வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை காலம் பிந்தியேனும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா.வின் நிபுணத்துவ உதவிகளைப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசாங்கம் இப்பொழுது தானாகத் தேடிச் சென்று நிபுணர்களை வரழைத்திருக்கிறது. ஐ.நா.வின் நிபுணத்துவ உதவிக்கும் இவ் ஆலோசனைக் குழுவிற்குமிடையில் பெரிய அடிப்படையான வேறுபாடு உண்டு. ஐ.நா.வின் நிபுணத்துவ ஆலோசனை எனப்படுவது ஐ.நா. மன்றத்தின் ஆணைக்குட்பட்டே செயற்படும். ஆனால், அரசாங்கத்தின் நிபுணர் குழு அரசாங்கத்தின் ஆணைக்குட்பட்டது. இப்படிப் பார்த்தால் இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் ஒரு பலவீனமான, காலத்தால் பிந்திய அனைத்துலக நீட்சி எனலாம். சற்றுக் கூராகச்சொன்னால், ஒரு தந்திரமான நீட்சி என்றும் சொல்லலாம்.

எதுவாயினும், நிபுணர் குழுவில் இடம்பெற்றிருப்பவர்களின் கடந்த கால வரலாற்றையும் தகைமைகளையும் கவனத்தில் எடுக்கும்போது, இந்நிபுணர் குழுவானது அனைத்துலக மட்டத்தில் ஏதோ ஒரு விகிதமளவிற்கு கவனிப்பைப் பெறக்கூடும். குறிப்பாக, இந்நிபுணர் குழுவை வைத்து அரசாங்கம் மேற்குலகத்தை திசை திருப்புவது கடினமாகவே இருக்கும். இதன் மூலம் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவின் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்து அரசாங்கமானது தன்னை எந்தளவு தூரத்திற்கு சுதாகரித்துக்கொள்ள முடியும் என்பது பற்றி இப்பொழுதே எதிர்வு கூறுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக, அனைத்துலக மட்டத்திலிருந்து வரும் ஒரு நெருக்கடியை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்ற விடயப் பரப்பை சற்று உற்றுக் கவனிப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் பிராந்திய அளவில் அல்லது அனைத்துலக அளவில் நெருக்கடிகள் வரும்போது முதலில் வீரம் காட்டுவார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் இனிச் சமாளிக்க முடியாது என்று தோன்றும்போது முன்பு காட்டிய வீரத்திற்கு முற்றிலும் தலைகீழாக பணிந்து போவார்கள். சிங்கள ஆட்சித் தலைவர்களினுடைய செழிப்பான இராஜதந்திர பாரம்பரியம் இதுவென்பதை ஏற்கனவே தமிழில் மு. திருநாவுக்கரசு போன்ற ஆய்வாளர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமது அரசைப் பாதுகாப்பதற்காக சிங்களத் தலைவர்கள் சாம, பேத, தான, தண்ட என்ற நான்கு வகையான உத்திகளையும் தருணத்திற்கேற்ப கையாள்வது உண்டு என்பதே இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்று அனுபவமாகக் காணப்படுகின்றது. தயான் ஜெயதிலக போன்றவர்கள் அரசாங்கத்தோடு முன்னரைப் போல நெருக்கமில்லை என்றாலும் கூட அடிக்கடி பொறுத்த நேரங்களில் பல்லி சொல்வதைப் போல அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்வதும், ஆலோசனை கூறுவதும், நினைவுபடுத்துவதும் அதைத் தான். அதாவது, சிறிய இலங்கைத்தீவானது தனது பெரிய வெல்லக் கடினமான சக்தி மிக்க வெளி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாளும் என்பதே கடந்த கால அனுபவமாகக் காணப்படுகின்றது.

இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு முன்னரும், பின்னரும் ஜெயர்த்தன அப்பிடித்தான் நடந்து கொண்டார். இந்திய வான்படை விமானங்கள் உணவுப் பொதிகளைப் போடும் வரையிலும் அவர் மீசையை முறுக்கிக் கொண்டு வீரம் காட்டினார். ஆனால், உணவுப் பொதிகள் போடப்பட்டதும் அவர் குத்துக்கரணம் அடித்தார். கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ரஜீவ் காந்தியையும் அருகில் வைத்துக்கொண்டு ”மன்னிப்பேன், மறக்கமாட்டேன்’ என்று சொன்னார். உணவுப் பொதிகள் போடப்படும் வரையிலும் இந்தியாவுக்கு எதிராக வீரம் காட்டிய அவர், பொதிகள் போடப்பட்டதும் இந்தியாவின் காலைப் பிடித்தார். அதிலிருந்து தொடங்கி இந்தயாவை சரணடைந்து கையாள்வது என்ற ஒர் உத்தி மாற்றத்திற்கு அவர் போனார். அதில் பெருமளவு வெற்றியையும் பெற்றார். நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும் அந்த வெற்றிதான்.

ஜே.ஆர்.இற்கு பின்னர் வந்த பிரேமதாஸ ஜே.ஆரைப் போல தந்திரசாலி அல்ல. ஆனால், அவரும் தனது முன்னோடிகளைப் போலவே முதலில் வீரம் காட்டினார். பின்னர் பம்மிக்;கொண்டிருந்தார். இந்தியப் படைகளை வெளியேறக் கோரும் விடத்தில் தொடக்கத்தில் அவர் இந்தியாவிற்கு சவால் விட்டார். அப்பொழுது இந்தியத்தூதுவராக இருந்த மெஹோத்ராவை கடுமையாகச் சீண்டினார். ஆனால், அமைதியான சுபாவமுடைய மெஹோத்ரா ஒரு கட்டத்தில் நீங்கள் மோதலுக்குத் தயார் என்றால் நாங்களும் தயார் என்ற தொனிப்பட மிரட்டியபோது பிரேமதாஸ பம்மத் தொடங்கினார். அதன் பின் இந்தியாவோடு இது தொடர்பில் நேர அட்டவணையை வரைவதற்கு உடன்பட்டார்.

ஜெயவர்த்தன, பிரேமதாஸ இருவரோடும் ஒப்பிடுகையில் இந்த அரசாங்கமானது, பெருமளவிற்கு வேறுபாடான ஒரு அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றது. அவர்கள் மோதியது ஒரு பிராந்தியப் பேரரசோடு. இந்த அரசாங்கம் எதிர்கொள்வது ஒரு அனைத்துலக சமுகத்தை. தவிர இந்த அரசாங்கம் இதற்கு முன்பிருந்த சிங்களத் தலைவர்களால் வெல்ல முடியாது என்றிருந்த ஓரு யுத்தத்தை வெற்றி கொண்டிருக்கிறது. அந்த வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் ஒரே முதலீடு. அந்த வெற்றியின் மீது கட்டியெழுப்பட்டிருக்கும் வீரப் படிமத்தை முன்னிறுத்தியே உள்நாட்டில் தனது எதிரிகளை தோற்கடித்து வருகின்றது. உள்நாட்டில் நிறுவி வைத்திருக்கும் வீரப்படிமத்தின் தொடர்ச்சியாக வெளியுறவுக் கொள்கையையும் வகுக்க முற்பட்டபோதே மேற்கு நாடுகளோடு முரண்படும் நிலை தோன்றியது. வெற்றியை முதலீடாகக் கொண்டு ஆட்சியைத் தொடரும் வரை உள்நாட்டில் இது மிகச் சக்தி வாய்ந்த அரசாங்கமாக இருக்கும். அதேசமயம், அனைத்துலக அளவில் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகின்றது. வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் பலம். வெற்றிதான் இந்த அரசாங்கத்திற்குச் சிறை. வெற்றி தான் இந்த அரசாங்கத்திற்கு பொறியும்.

வெளிச் சவால்களுக்கு வளைந்து கொடுக்கும்போது உள்நாட்டில் நிறுவி வைத்திருக்கும் வெற்றிப் படிமம் உடைய நேரிடும். இது பிரேமதாஸிற்கும் ஜெயவர்த்தனவிற்கும் இருந்ததைவிடவும் ஒப்பீட்டளவில் கடினமானது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் அப்படித்தான் இருக்கிறது. சிறிய விட்டுக் கொடுப்புக்கள், சிறிய சுதாகரிப்புகள், சிறிய தளர்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைக் குழு போன்ற புதிய தெரிவுகளை உருவாக்குவதன் மூலம் இந்த அரசாங்கம் நெருக்கடிகளை வெட்டியோடப் பார்க்கிறது. பிரேமதாஸவைப் போல, ஜெயவர்த்தனவைப் போல தலை கீழ் சரணாகதிக்கு அது இதுவரையிலும் போகவில்லை. ஏனெனில், இது தனது சொந்த வெற்றியின் கைதியாகவுள்ள ஓர் அரசாங்கம். இவ்வாறாக மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் அளவிற்கு வளைந்து கொடுக்க தயாரற்றிருக்கும் ஒரு காரணத்தினால் தான் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழு என்றவொரு நகர்வை மேற்கு நாடுகள் மேற்கொண்டன. இப்பொழுது அந்த நெருக்கடியைச் சமாளிக்க நிபுணர்களின் ஆலோசனைக் குழுவை அரசாங்கம் உருவாக்கி இருக்கின்றது. இது கூட ஒப்பீட்டளவில் சிறியளவிலான நெகிழ்வுப் போக்குத்தான். மேற்கு நாடுகள் எதிர்பார்ப்பது அதைவிடக் கூடுதலானது.

எனவே, வரப்போகும் பத்து மாதங்களிற்குள் அரசாங்கம் மேலும் புதிய தெரிவுகளை உருவாக்க வேண்டியிருக்கும். மேற்கு நாடுகளின் நகர்வாகக் காணப்படும் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகளை எதிர்கொள்வதற்காக மேற்கத்தைய பாரம்பரியத்தைச் சேர்ந்த மூன்று நிபுணர்களை அணுகியது என்பது மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறு வெற்றிதான்.

இவ்வாலோசகர் குழுவின் தலைவராக இருக்கும் சேர். டெஸ்மன் டி. சில்வா உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக வெற்றி பெற்ற வழக்குகள் பலவற்றில் சம்பந்தப்பட்டிருக்கிறார். கென்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவரை அவர் முன்பு அப்படிப்பட்ட வழக்கொன்றிலிருந்து விடுவித்திருக்கிறார். பிரிட்டிஷ; சட்டத்துறை வட்டாரத்தில் மரண தண்டனைக்கு எதிராக பொதுநலவாய நாடுகளில் ஆகக் கூடிய வழக்குகளை வெற்றிபெற்ற ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.ஆயின், மேற்குலகம் தன்னை நோக்கி வீச முற்படும் சுருக்குக் கயிற்றிலிருந்து அவர் தன்னையும் மீட்பார் என்று இலங்கை அரசாங்கம் நம்புகின்றதா?

19-07-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *