மாற்றம்?

வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள பொளத்த மேலாண்மைவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமே அது. கடந்த சுமார் ஐந்தேமுக்கால் ஆண்டுகளாக ராஜபக்‌ஷ அதற்குத் தலைமைதாங்கினார். ஆனால், அவருடைய தலைமையின் கீழ் சிங்கள பௌத்த மேலாண்மைவாதமானது அனைத்துலக அரங்கில் அதிகம் அபகீர்த்திக்குள்ளாகியது. இந்நிலையில், வெற்றிவாதத்தின் பங்காளிகளை வைத்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டை வெற்றிபெற வைத்ததன் மூலம் சிங்கள பெளத்த மேலாண்மைவாதம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டுள்ளது.

Maatram-800x365வெற்றிவாதத்திற்கு எதிராக யாரும் தலைதூக்க முடியாதென்றே ராஜபக்‌ஷ நம்பியிருந்தார். ஆனால், அவருடைய கோட்டைக்குள்ளிருந்தே அவருடைய எதிரிகள் உற்பத்திசெய்யப்படுவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்விதம் வெற்றிவாதத்தின் பங்காளிகளாக இருந்தவர்களை வைத்தே உருவாகிய புதிய கூட்டு 2015 இற்குரிய சிங்கள பௌத்த மேலாண்மைவாதத்திற்குத் தலைமைதாங்கியதன் மூலம் சிங்கள பௌத்த அரசு தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளது. அதாவது, அரசை மாற்றியதன் மூலம் சிங்கள பௌத்த அரசு பாதுகாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கில் உள்ள ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர் தனது நண்பர் ஒருவரிடம் பின்வரும் தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். “மைத்திரி வாக்களித்திருக்கும் நூறு நாட்களுக்குள் நாங்கள் செய்யக்கூடியதை வேகமாகச் செய்ய வேண்டும். அதன்பின் அவரும் ஒரு மஹிந்தவாக மாறுவதை எப்படித் தடுப்பது என்பதைக் குறித்து சிந்தித்துச் செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதாவது, சிங்கள பெளத்த அரசுக் கட்டமைப்பு அப்படியே மாறாதிருக்கும்வரை மனித முகத்துடன் ஆட்சிக்குவரும் புதிய இனவாதக் கூட்டமைப்புக்கள் ஒரு கட்டத்திற்குப் பின் சாயமிழந்து சிங்கள பௌத்த மேலாண்மைவாதத்தை பாதுகாக்கத் தலைப்படும் என்பதே இலங்கைத் தீவின் நவீன வரலாறாகக் காணப்படுகின்றது.

இப்படிப் பார்த்தால் கோட்பாட்டு அடிப்படையில் இங்கு மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஆனால், மேற்கு நாடுகளின் நோக்குநிலையிலிருந்து பார்த்தால் இது ஒரு திருப்பகரமான மாற்றம். சீனாவின் முத்துமாலை வியூகத்திலிருந்து சீனாவிற்கு மிக விருப்பத்திற்குரிய ஒரு முத்து கழற்றி எடுக்கப்பட்டுவிட்டது. இதனால், இந்தியாவிற்கும் மகிழ்ச்சிதான். அதாவது, இந்த மாற்றத்தால் பெருநன்மையடைந்தது மேற்கும் இந்தியாவும் தான். பெருந்தீமையடைந்தது சீனாதான். ஒரு பிராந்திய மோதல் மௌனமாக நடந்து முடிந்துவிட்டது. இது பிராந்தியத்தின் வலுச் சமநிலையை மாற்றியமைக்குமா?

வெளித்தரப்புக்களைத் தவிர உள்நாட்டில் இம் மாற்றத்தால் சிங்கள மக்கள் அதிகம் நன்மைபெறுவார்கள். முன்பு நிலவிய இறுக்கச் சூழல் தளர்ந்து ஒருவித ஆசுவாசச் சூழல் இனி உருவாகக் கூடும். சிங்கள மக்கள் மத்தியிலுள்ள செயற்பாட்டாளர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இனி ஒப்பீட்டளவில் அதிகரித்த வெளி கிடைக்கக்கூடும். குறிப்பாக அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு நாடு தடையின்றித் திறக்கப்படக்கூடும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆசிய மைய வெளியுறவுக் கொள்கை ஒன்றின்கீழ் காணப்பட்ட சந்தை நிலவரங்களோடு ஒப்பிடுகையில் இனி மேற்கை நோக்கி நாட்டின் கதவுகள் அகலத் திறக்கப்படலாம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் ஒப்பீட்ளவில் தணியும். அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளிற்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்கள் இனிக் குறையக்கூடும்.

ஆனால், தமிழர்களுக்கு?

மேற்கண்ட அனைத்துத் தரப்புக்களோடும் ஒப்பிடுகையில் தமிழர்களுக்கே குறைந்தளவு மாற்றங்கள் ஏற்படும். இருப்பதைவிட சிவில்வெளி ஓரளவிற்கு அதிகரிக்கும். பொருளாதார நிலைமைகளும் ஒப்பீட்டளவில் செழிப்புற்றதான ஒரு தோற்றம் உருவாகும். ஆனால், எல்லா மாற்றங்களுக்கும் அடித்தளமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை எத்தகைய மாற்றங்கள் நிகழும்? அல்லது இந்தக் கேள்வியை மாற்றியும் கேட்கலாம். அப்படி ஏதும் திருப்பகரமான மாற்றங்கள் நிகழ்வதற்குரிய அடிப்படைகள் ஏதும் பொது எதிரணியிடம் உண்டா?

பொது எதிரணி உருவாகி வெற்றிபெற்றது வரையிலான இந்நாள் வரையிலும் அப்படி நம்பத்தக்க சமிக்ஞைகள் எதனையும் வெளிக்காட்டியிருக்கவில்லை. வெளிக்காட்டவும் முடியாது. ஏனெனில், இனவாத்திற்கு எதிரான இனவாத்தையே அவர்களும் முன்னிறுத்தினார்கள். அவர்களுடைய தேர்தல் அறிக்கை இனப்பிரச்சினை தொடர்பில் எதையுமே குறிப்பிட்டிருக்கவில்லை. இனிமேலும் அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் அவர்கள் இது தொடர்பாக அதிகம் பேச முடியாத ஒரு நிலமையே காணப்படும். ஏனெனில், நடந்து முடிந்த தேர்தலில் வாக்களிப்பு நிலவரங்களை உற்றுப்பார்த்தால் அது தெரியவரும். ராஜபக்‌ஷ சகோதரர்கள் இப்போதும் சிங்களக் கடும்போக்காளர்களின் இதயத்தில்தான் அமர்ந்திருக்கிறார்கள். எனவே, வரப்போகும் பொதுத் தேர்தலில் தமிழர்களுக்கு குறையக் கொடுப்பது யார் என்ற போட்டி தொடர்ந்தும் நிலவும். இதனால், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான உரையாடல்கள் மேலும் ஒத்திவைக்கப்படலாம். அதாவது, உடனடிக்குக் கிடைக்கக்கூடிய வலி நிவாரணியையே தமிழர்கள் நோய்த்தடுப்பு மருந்தாகவும் தொடர்ந்தும் உட்கொள்ள வேண்டியிருக்கும். நோய்த்தடுப்பிற்குரிய உள்மருந்து எதுவும் பொது எதிரணியின் முதலுதவிச் சிகிச்சைப்பெட்டியில் காணப்படவில்லை. அதாவது, ஆசுவாசச் சூழல்தான் கிடைக்கும். நிரந்தரத் தீர்வுக்கான உரையாடல் ஒத்திவைக்கப்படக்கூடும். இத்தகையதொரு பின்னணியில் கூட்டமைப்பு என்ன செய்யும்?

பொது எதிரணிக்கு தமிழர்களை வாக்களிக்கக் கேட்ட கூட்டமைப்பு இணக்க அரசியலையா அல்லது எதிர்ப்பு அரசியலையா முன்னெடுக்கும்? எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தமிழர்களைக் கேட்டார்களோ அதே கூட்டணிக்கு எதிராக உடனடியாக எதிர்ப்பு அரசியலைச் செய்ய முடியாது. அதேசமயம் நிரந்தரத் தீர்விற்குரிய அடிப்படைகளை விவாதிக்கத் தயங்கி ஒருவித கள்ளக் காதலைப் பேணும் அரசியற் சூழலில் இணக்க அரசியலையும் முழுமையாகச் செய்ய முடியாது. இரண்டுக்குமிடையில் புதிதாக ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். மஹிந்தவை அகற்றுவதே உடனடித் தேவையாக இருந்தது என்று அவர்கள் கூறக்கூடும். மக்களின் விருப்பமும் அதுவே என்று அவர்கள் கூறக்கூடும். மஹிந்தவை அகற்றுவதன் மூலம் இச்சிறுதீவில் அரசியலில் புதிய தெரிவுகளை உருவாக்கத் தேவையான ஒரு சூழல் கனியும் என்று அவர்கள் நம்பக்கூடும். அது ஓரளவிற்குச் சரிதான். ஆனால், அப்புதிய தெரிவுகள் எத்தகையவை? அவை நீண்டகால நோக்கில் தமிழர்களுக்கு நன்மையாக முடியுமா?

கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவோ அல்லது தன்னியல்பாகவோ தமிழ் மக்கள் மஹிந்தவிற்கு எதிராகவே பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளால் தான் மைத்திரி வெற்றிபெற்றிருக்கிறார். அதாவது, சிறுபான்மை இனத்தவர்கள் பெற்றுக்கொடுத்த ஒரு வெற்றி இது. மறுவளமாகக் கூறின் சிறுபான்மை மக்கள் மஹிந்தவிற்குக் கொடுத்த தண்டனையும் இது. ஆனால், இங்குள்ள கேள்வி என்னவெனில் மஹிந்தவை தண்டிப்பது மட்டுமே தமிழர்களுக்கு தீர்வாக அமைந்துவிடுமா என்பதே.

நிச்சயமாக இல்லை. ஒரு வம்சத்தைத் தண்டிப்பது மட்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது. தேர்தல் தோல்வியானது அந்த வம்சத்தை பெரிய தண்டனையிலிருந்து காப்பாற்றிய சிறிய தண்டனையாகக்கூட அமையலாம். அதாவது, ஓர் அரசை அகற்றுவது மட்டும் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தராது. மாறாக இச்சிறுதீவின் அரசுக் கோட்பாடாக இருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தோற்கடித்தால் மட்டுமே தீர்வைப் பற்றிச் சிந்திக்க முடியும். ஆனால், இங்கு வெற்றிபெற்றிருப்பது மறுபடியும் அதே சிங்கள பௌத்த மேலாதிக்கம் தான். அதன் 2015 இற்குரிய பிந்திய வெளியீடுதான். ஆட்சியை மாற்றியதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது சிங்கள பௌத்த மேலாதிக்கம்தான். எதை தோற்கடித்தால் மட்டும் தீர்வு கிடைக்குமோ அதுவே மறுபடியும் வெற்றி பெற்றிருக்கிறது. அது வழமைபோல இதற்கு முந்திய ஆட்சி மாற்றங்களின் போது எழுச்சிபெற்ற சில அரசுகளைப் போல இம்முறையும் தொடக்கத்தில் மனித முகத்துடனான இனவாதமாகவே காட்சியளிக்கிறது. முன்னைய ஆட்சிமாற்றங்களைப் போலவே இம்முறையும் சிங்கள புத்திஜீவிகள், கலைஞர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் பொது எதிரணியைச் சூழ்ந்து காணப்படுகிறார்கள்.

அது மட்டுமல்ல பொது எதிரணி அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகக் காணப்படுகின்றது. அனைத்துலக கவர்ச்சியற்ற, போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிய ஓர் அரசிற்குப் பதிலாக அனைத்துலகக் கவர்ச்சிமிக்க மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் நட்பாகக் காணப்படும் ஒரு புதிய எதிரணி வெற்றிபெற்றிருக்கின்றது. இவ் எதிரணியை களமிறக்கியதன் மூலம் இச்சிறுதீவில் சீனாவிற்காக திறக்கப்பட்ட கதவுகளை வெற்றிகரமாக மூடியிருக்கும் மேற்கு நாடுகள் இனிமேல் தமிழர்களை ஒரு கருவியாகக் கையாளவேண்டிய தேவை இருக்குமா?

இதுதான் பிரச்சினை. சீனச்சார்பு அரசை அகற்றுவதே மேற்கினதும் இந்தியாவினதும் இறுதி இலக்காகும். அது இப்போது ஈடேறிவிட்டது. இனி அவர்கள் தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோக்கிக்க வேண்டிய தேவைகள் ஒப்பீட்டளவில் குறைந்துவிடும். இலங்கை – இந்திய உடன்படிக்கை வரையிலும் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்ட இந்தியா உடன்படிக்கையின் பின் தமிழர்களோடு எப்படி நடந்துகொண்டது?

எனவே, பொது எதிரணியின் எழுச்சியோடு பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் ஈழத்தமிழர்களுடைய பேரம் பேசும் சக்தி குறையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன. 2009 மே வரை தமிழர்களுக்கு அகப் பேரம்பேசும் சக்தி ஒன்று இருந்தது. நாலாங்கட்ட ஈழப்போரின்போது புறப்பேரம் பேசும் சக்தி ஒப்பீட்டளவில் பலவீனமானதாகவே இருந்தது. 2009 மே இற்குப்பின் தமிழர்களின் அகப் பேரம்பேசும் சக்தி குறைந்துவிட்டது. அது உயர்வாக இருந்திருந்தால் மஹிந்தவோ மைத்திரியோ தமிழர்களோடு வெளிப்படையான ஒரு பேரத்திற்கு வந்திருப்பார்கள். அதேசமயம் மஹிந்தவின் சீனச்சார்புக் கொள்கை காரணமாக மேற்குநாடுகளும் இந்தியாவும் தமிழ் மக்களைக் கையாளவேண்டிய தேவை அதிகரித்த போது தமிழ் மக்களின் புறப் பேரம் பேசும் சக்தி ஒப்பீட்ளவில் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், இப்பொழுது பொது எதிரணியின் எழுச்சியோடு புறப் பேரம்பேசும் சக்தி ஒப்பீட்டளவில் குறைந்துவிடும். ஜெனீவாக் கூட்டத் தொடர்களுக்கான தேவைகளும் குறைந்துவிடும். ஜ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை எதிர்பார்க்கப்படும் கடுந்தொனியில் அமையுமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவ் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பு எத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்?

அதாவது, அனைத்துலக மற்றும் பிராந்திய அளவில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது குறையக்கூடிய ஏதுநிலைகள் அதிகமாகத் தென்படுகின்றன. ஆயின், அகப்பேரம்பேசும் சக்தியும் குறைந்து புறப்பேரம்பேசும் சக்தியும் குறைந்தால் தமிழர்களின் எதிர்காலம் என்னவாய் ஆகும்?

2005 இல் மஹிந்தவை வெல்ல வைத்ததன் மூலம் புலிகள் இயக்கம் தம்மைத் தோற்கடிக்கவல்ல ஒரு எதிரியைத் தெரிந்தெடுத்தது. இப்போது மைத்திரியைத் தெரிந்தெடுத்ததன் மூலம் கூட்டமைப்பானது 2015ஆம் ஆண்டுக்குரிய இனவாதத்தின் பலியாடாய் ஆகுமா? அல்லது அதை வெற்றி கொள்ளுமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *