வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்

மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை; அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள் ஏற்கனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின் தூதுவர் இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரோடு உரையாடியிருக்கிறார்.

ஆனாலும், கத்தியின்றி இரத்தமின்றி ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அது மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான பிடியை அவர் அமைதியாகக் கைவிட்டதும் இதற்குள் அடங்கும்.

அரபு வசந்தத்தைப் போன்று ஒரு இரத்தம் சிந்தும் நடவடிக்கை மூலமே தன்னைக் கவிழ்க்க முடியும் என்று மஹிந்த நம்பிக்கொண்டிருந்தார். கடாபியைப் போலவும் சதாம் ஹூசைனைப் போலவும் தன்னைக் கவிழ்க்க முடியாது என்று அவர் சிங்கள மக்களுக்குக் கூறியுமிருக்கிறார். வெற்றிவாதத்தின் எதிரிகளை அவர் வெற்றிவாதத்திற்கு வெளியில்தான் தேடினார். ஆனால், வெற்றிவாதத்தின் எதிரிகள் வெற்றிவாதத்திற்குள் இருந்தே கிளம்ப முடியும் என்பதை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். சரத் பொன்சேகாவை வெற்றிகரமாக முறியடித்த பின் தனது வெற்றியில் பங்கு கேட்க தனது பங்காளிகளின் மத்தியில் இருந்து எவரும் எழமாட்டார்கள் என்றும் அவர் நம்பியிருந்திருக்கக் கூடும். சிறிலங்காவை நெருக்கமாக அவதானிக்கும் அனைத்துலக அவதானிகளில் பலரும், உள்நாட்டில் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் மஹிந்த ராஜபக்‌ஷவை இப்படி அமைதியாகக் கவிழ்க்க முடியும் என்று கருதியிருக்கவில்லை.

ஏனெனில், ராஜபக்‌ஷவின் அரசு எனப்படுவது அதற்கு முன்பிருந்த அரசுகள் பலவற்றில் இருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபட்ட ஒன்றாகக் காணப்பட்டது.

முதலாவது வேறுபாடு – அது சிங்கள மக்களால் வெல்ல முடியாத எதிரி என்று கருதப்பட்ட புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்தமை.

இரண்டாவது வேறுபாடு – அந்த வெற்றிக்காக அவர் கொடுக்கத் தயாராக இருந்த விலை.

மூன்றாவது – அந்த வெற்றியை முதலீடாக வைத்து வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கும் ஒரு அரசியலை முன்னெடுத்தமை.

நான்காவது – அந்த வெற்றியை அடைவதற்காக அவர் எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டார் என்பதும், அந்த வழிமுறைகளே வெற்றிக்குப் பின் அவரைச் சுற்றி வளைத்தன என்பதும்.

ஐந்தாவது – போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக அளவில் விமர்சனங்களுக்குரிய ஒரு தலைவராக அவர் காணப்பட்டார் என்பதும்.

ஆறாவது – வெற்றியை அவர், அந்த வெற்றியின் பங்காளிகளாக இருந்த தளபதியோடும் தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களோடும் பங்கிடத் தயாராக இருக்கவில்லை என்பதும் அந்த வெற்றியை பெருமளவுக்கு குடும்பச் சொத்தாகப் பேண முற்பட்டமை என்பதும்.

மேற்கண்ட காரணங்களின் விளைவாக ராஜபக்‌ஷவின் அரசு கடந்த பல தசாப்தங்களில் இச்சிறுதீவை ஆண்ட எல்லா அரசுகளிடம் இருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபட்டுக் காணப்பட்டது. இவ்வாறான அதன் அசாதாரணத் தன்மை காரணமாக அது எளிதில் கவிழ்க்கப்பட முடியாத ஒன்றாகவும் தோன்றியது. பெரும்பாலான அவதானிகள் இந்த அரசை பாரம்பரியமான வழிமுறைகளின் ஊடாகத் தோற்கடிப்பது இலகுவானதல்ல என்றே கருதிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எல்லாரும் மஹிந்தவின் எதிரிகளை அவருடைய அரசிற்கு வெளியே தேடிக்கொண்டிருக்க உலகின் சக்திமிக்க நாடுகளோ அவருடைய கோட்டைக்குள் இருந்தே எதிரிகளை உற்பத்தி செய்துவிட்டார்கள். வெற்றிவாதம் எப்பொழுதும் உட்சுருங்கும் தன்மை கொண்டது. உலகம் முழுவதும் அது அப்படித்தான் இருந்திருக்கிறது. இங்கேயும் அது உட்சுருங்கி உட்சுருங்கி ஒரு கட்டத்தில் இறுகி வெடிப்புக் கண்டது.

SriLankaElectionTamils-02e70-e1421651634533-800x365ராஜபக்‌ஷவைக் கவிழ்க்கப் போகிறோம் என்பதை மேற்கத்தேய இராஜதந்திரிகளும் பிரதானிகளும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூறத் தொடங்கிவிட்டார்கள். இது தொடர்பாக அவர்கள் தமிழ் அரசியல் பிரமுகர்களோடும், செயற்பாட்டாளர்களோடும் நேரடியாகவே கதைத்தும் இருக்கிறார்கள். ராஜபக்வுக்கும் இது நன்கு தெரியும். எல்லாருடைய முற்கற்பிதங்களிலும் ஆழப்பதிந்திருந்தது ஓர் அரபு வசந்தமே. ஆனால், அரபு நாடுகளைப் போலன்றி இங்கே கத்தியின்றி இரத்தமின்றி கனகச்சிதமாக ஓர் ஆட்சிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. திரை மறைவில் நடந்திருக்கக் கூடியவற்றைக் கருதிக் கூறின் இதை ஒரு வழமையான ஆட்சி மாற்றம் என்று கூறலாமா? இத்தகைய பொருள்பட சற்றுக் கலைத்துவமாகக் கூறின், இலங்கைத் தீவில் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதை சிறிலங்காவின் வசந்தம் எனலாமா?

தான் ஆட்சியில் இருந்த காலம் வரை மஹிந்த பெருமையாகக் கூறிக்கொண்ட ஆசியாவின் அதிசயம் எனப்படுவது அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட விதம்தானா என்று கேட்கத் தோன்றுகிறது. இலங்கைத்தீவில் படைத்தரப்பானது அரசியலைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக எப்பொழுதோ எழுச்சிபெற்றுவிட்டது. எனினும், ஆட்சி மாற்றங்களின் போது படைத்தரப்பின் தலையீடு என்பது அநேகமாகத் தவிர்க்கப்பட்டே வந்திருக்கின்றது.   இராணுவ சதிப்புரட்சிகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஊகங்கள் நிலவிய கால கட்டங்களிலுங் கூட ஆட்சிக் கைமாற்றங்கள் சுமூகமாகவே நடந்து வந்துள்ளன. அனைத்துலக அரங்கில் இச்சிறுதீவுக்குப் பெருமை சேர்க்கும் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று. இம்முறையும் அவ்வாறு பலவிதமான ஊகங்கள், அச்சங்கள், முற்கற்பிதங்கள், ஆரூடங்கள் என்பவற்றின் மத்தியிலும் ராஜபக்‌ஷ மிகவும் அமைதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.

அவரை அவ்வாறு கவிழ்த்ததில் தமிழ் வாக்காளர்களுக்கு கணிசமான பங்குண்டு. இதை இன்னொரு விதமாகச் சொன்னால் அரபு வசந்தங்களைப் போல இரத்தம் சிந்தாமல் மிக அமைதியாக சிறிலங்காவின் வசந்தம் முன்னெடுக்கப்பட்டதில் தமிழ் வாக்காளர்களுக்குப் பெரிய பங்குண்டு. இதை அனைத்துலகப் பரிமாணத்தில் வைத்துக் கூறின் மேற்கு நாடுகளின் வியூகம் ஒன்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமிழ் வாக்காளர்கள் பெருமளவிற்கு உதவியுள்ளார்கள் எனலாம். தமிழ் வாக்குகள் இல்லை என்றால் சிறிலங்காவின் வசந்தம் நடந்தேயிருக்காது.

எனவே, மேற்கு நாடுகளின் உலகளாவிய வியூகம் ஒன்றின் கருவிகளாக தமிழ் வாக்காளர்கள் பங்காற்றியிருக்கிறார்கள். ராஜபக்‌ஷவை அகற்றுவது என்று தீர்மானித்துத்தான் பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், தங்களுடைய வாக்குகளுக்கு இப்படியொரு அனைத்துலக வியூக முக்கியத்துவம் உண்டு என்பது அவர்களுக்கே தெரியுமா? அல்லது அவர்களை வாக்களிக்கக் கேட்ட அவர்களுடைய தலைவர்களுக்குத் தெரியுமா?

2005இல் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் வியூகத்தைக் குழப்பினார்கள். மறுவளமாக சீனாவின் முத்துமாலை வியூகத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தார்கள். இந்த முறை வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் மேற்குநாடுகளின் வியூகத்திற்கு வழிகளை இலகுவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதேசமயம், சீனாவின் பிராந்திய வியூகத்தைக் குழப்பியுமிருக்கிறார்கள்.

ஆட்சி மாற்றமானது இலங்கைத் தீவில் இருந்து சீனாவின் பிரசன்னத்தை உடனடியாக முழுமையாக அகற்றிவிடாது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் நீடித்திருக்கும். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் மேற்கு நாடுகளுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியறாது நீடித்ததைப் போல. அதோடு, திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் உலகம் ஏறக்குறைய ஓர் அலகாகிவிட்டது. இப்பூகோளச் சந்தையில் சீனாவுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்ந்துமிருக்கும். ஆனால், மஹிந்தவின் காலத்தில் இருந்தது போல ஒரு அரசியல் உரித்துடமை அல்லது அரசியல் அந்தஸ்து இனி இச் சிறுதீவில் சீனாவிற்கு இருக்குமா என்பது சந்தேகமே. இத்தகைய பொருள்படக் கூறின், முத்துமாலை வியூகமும் கடல்வழிப் பட்டுப்பாதையும் புதிய உபாயங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

அதாவது, தமிழ் வாக்காளர்கள் சீனாவின் பிராந்திய இலக்குகளை நெருக்கடிக்கு உ​ள்ளாக்கியிருக்கிறார்கள். இவ்வாறுதான் 1983இல் இருந்து 1987 வரையிலும் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பூகோள யுத்தம் ஒன்றில் தமிழ் மக்களும் பங்காளிகளாய் இருந்தார்கள். அமெரிக்கச் சார்பு ஜெயவர்த்தன அரசை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக சோவியத் சார்பு இந்தியா ஈழப்போரை ஊக்குவித்தது.

இவ்வாறாக கடந்த சில தசாப்தங்களாக பேரரசுகளும் பிராந்தியப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கருவிகளாகக் கையாண்டு வந்துள்ளன. பேரரசுகளுக்கு நிழல் யுத்தம், தமிழ் மக்களுக்கோ நிஜ யுத்தம். பேரரசுகளுடைய வியூகங்களில் சிக்கி தமிழ் மக்களே பலியாடுகளானார்கள். நடந்து முடிந்த தேர்தலும் அதைத்தான் நிரூபித்திருக்கின்றது.

பொதுவாக அரசற்ற தரப்புக்களின் பேரம் பேசும் சக்தி பற்றிய உரையாடல்களின் போது அரசற்ற மக்கள் திரள்களுக்கிருக்கக் கூடிய சந்தை கவர்ச்சிமிக்க இயற்கை வளங்கள் மற்றும் புவிசார் அரசியல் அமைவிடம் காரணமாக ஏற்படும் கேந்திர முக்கியத்துவங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வெவ்வேறு பிராந்திய மற்றும் பூகோள வியூகங்களை ஏதோ ஒரு விகிதமளவிற்கு குழப்பவோ முன்னெடுக்கவோ அவர்கள் உதவி புரிந்து வந்துள்ளார்கள். இத்தகைய பொருள்படக் கூறின், ஈழத் தமிழர்களுக்கு என்று ஏதோ ஒரு வியூக முக்கியத்துவம் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ஈழத் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியின் பிரதான கூறாகவும் அது இருந்து வந்துள்ளது.

தமது வாக்குகளுக்கு இப்படியொரு வியூக முக்கியத்துவம் உண்டு என்று தெரிந்திருந்தால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஈழத்தமிழர்கள் யாரோடு எத்தகைய பேரங்களை வைத்திருந்திருக்க வேண்டும்? கூட்டமைப்பானது அத்தகைய பேரங்களைக் குறித்து வெளிப்படையான ஆழமான வாதப்பிரதிவாதங்களை நடத்தியிருக்கின்றதா? இது மிகக் கொடுமையான ஒரு நிலை. தமக்குள்ள வியூக முக்கியத்துவம் பற்றியோ அதாவது, பேர முக்கியத்துவம் பற்றியோ எத்தகைய விழிப்புணர்வும் இன்றியே இச்சிறிய மக்கள் கூட்டம் வாக்களித்திருக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இரத்தம் சிந்திய ஒரு மக்கள் கூட்டத்தை – சுகப்படுத்தப்படாத கூட்டுக் காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை – இறந்துபோனவர்களையும் காணாமல் போனவர்களையும் இன்றுவரையிலும் கணக்கெடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை – தமது வியூகத் தேவைகளுக்காக கையாண்டுவரும் சக்திமிக்க நாடுகள் இனி இந்த மக்கள் கூட்டத்திற்குத் தரப்போகும் தீர்வு என்ன? நீதி என்ன?

ராஜபக்‌ஷவை அவரது பங்காளிகளை வைத்தே கவிழ்த்த மேற்கு நாடுகளும், இந்தியாவும் தமிழ் மக்களுக்குரிய நீதி எனப்படுவது வெற்றி வாதத்தையும் அதன் பங்காளிகளையும் தண்டிப்பதில் இருந்தே தொடங்குகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுமா?

அண்மையில் பாப்பரசர் மடுவிற்கு வந்தபோது அவரிடம் நீதி கேட்டுச் சென்ற தமிழ் மக்கள் தமது கைகளில் வைத்திருந்த சுலோக அட்டைகளில் பின்வருமாறு எழுதி வைத்திருந்தார்கள். “இனப்படுகொலைக்கான தீர்வே இனப்பிரச்சினைக்கான தீர்வுமாகும்”.

பாப்பரசரும் தனது பிரதான உரையில், “சுகப்படுத்தலுக்கான முன்னெடுப்புக்களில் உண்மையைப் பின் தொடர்வதும் உள்ளடக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இது பழைய காயங்களைத் திறப்பதற்காக அல்ல. மாறாக நீதியை மேன்நிலைப்படுத்துவதற்கும் ஐக்கியத்திற்கும் ஆற்றுப்படுத்தலுக்குமான அவசியமான வழிமுறை இது என்பதால்” என்று கூறியிருந்தார்.

தென்னாபிரிக்காவின் வெற்றி பெற்ற நல்லிணக்க முயற்சிகளில் உண்மைக்கு அதிக அழுத்தம் உண்டு. அங்கு உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பெயரில் உண்மை என்ற வார்த்தை உண்டு. ஆனால், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பெயரில் அது இல்லை. இப்பொழுது பாப்பரசரும் ‘உண்மைக்கு’ அழுத்தம் கொடுத்துள்ளார்.

இங்கு எது ‘உண்மை’? இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் பேசத் துணியாத உண்மை எது? ஐ.நாவின் இதுவரையிலுமான தீர்மானங்களில் பேசப்படாத உண்மை எது?

பாப்பரசரின் வருகையின் போது உரை நிகழ்த்திய அரசுத் தலைவர் மைத்திரி “குரூரமான பயங்கரவாத பிணக்கை வெற்றிகொண்ட பின் எமது மக்கள் மத்தியில் சமாதானத்தையும் நட்பையும் எனது அரசு மேன்நிலைப்படுத்துகிறது” என்று கூறியதா உண்மை? அல்லது பாப்பரசரை வரவேற்ற தமிழ் மக்கள் ஏந்தியிருந்த சுலோகங்களில் தொனித்தது போல இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்பதா உண்மை?

பொது எதிரணி இந்த உண்மைகளை உள்வாங்குமா? அல்லது அரபு வசந்தம் சில அரபு நாடுகளில் அரபுப் பனிக்காலம் ஆகியது போல சிறிலங்காவின் வசந்தமும் ஒரு கோடையாக மாறினால் மேற்கு நாடுகளும் இந்தியாவும் என்ன செய்யும்?

வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் மக்கள் வெளிச்சக்திகளால் கையாளப்படுவதற்குப் பதிலாக வெளிச்சக்திகளை எப்பொழுது வெற்றிகரமாகக் கையாளப்போகிறார்கள்?

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • muthukumaran , 23/01/2015 @ 12:24 PM

    “இறைவா எங்கள் எதிரிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீ எங்கள் நண்பர்களிடம் இருந்து எம்மை காப்பாற்று ” என்பது போல் தான் இருக்கிறது, எம் நிலை . தமிழ் மக்கள் உலகத்தில் இருந்து விலகாது, அதன் ஓட்டத்தோடு பயணித்து காலம் வரும் போதெல்லாம் தங்கள் போராட்ட வடிவத்தினை வேண்டும் . தங்களை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

  • muthukumaran , 23/01/2015 @ 12:26 PM

    “இறைவா எங்கள் எதிரிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீ எங்கள் நண்பர்களிடம் இருந்து எம்மை காப்பாற்று ” என்பது போல் தான் இருக்கிறது, எம் நிலை . தமிழ் மக்கள் உலகத்தில் இருந்து விலகாது, அதன் ஓட்டத்தோடு பயணித்து காலம் வரும் போதெல்லாம் தங்கள் போராட்ட வடிவத்தினை தகவமைத்துக்கொள்ள வேண்டும் . தங்களை தொடர்ச்சியாக வாழும் சமுகமாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *