வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்

இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால்  அது சரி என்றே தோன்றுகிறது.சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார்.அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது.அப்படி என்றால் துரித அன்டிஜென் சோதனைகளை செய்தால் என்ன?

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கூறுகிறார்கள் அது செலவு கூடிய ஒரு பயிற்சி என்று. இலங்கைத் தீவு போன்ற ஒரு வழங்குறைந்த நாடு அதைத் தாங்காது என்று. எல்லாப் பிரஜைகளையும் சோதனை செய்வதை விடவும் நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைப்பதே புத்திசாலித்தனமானது செலவு குறைந்தது  என்று அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பது என்றால் தடுப்பூசி; சமூக விழிப்பு; சமூக முடக்கம் போன்றனவே பயன்பொருத்தமானவை என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் தடுப்பூசி விடயத்திலும் இலங்கைத்தீவு பின்தங்கியிருப்பதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பதுலட்சத்து இருபத்திஐயாயிரம் பேருக்கு பல கிழமைகளுக்கு முன்பு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது.இரண்டாங்கட்ட தடுப்பூசியை ஏற்றுவதற்கான மூன்றுமாத காலஎல்லை இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும்.ஆனால் அவர்களில் ஐந்து லட்சத்து எழுபத்திஐயாயிரம் பேருக்கு   இரண்டாங்கட்ட தடுப்பூசி இன்னமும் ஏற்றப்படவில்லை. இதற்கிடையே சீனா ஐந்துலட்சம் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.அது வேறுவகை.இதை மாவட்டங்கள் தோறும் அரசாங்கம் பிரித்துக் கொடுக்கிறது.இவ்வாறு கிள்ளிக் கொடுத்து முழு நாட்டுக்கும் தடுப்பூசியை ஏற்றி முடிப்பது எந்தக் காலம்?

எனவே தடுப்பூசி விடயத்திலும் அரசாங்கம் திருப்தியாக செயல்பட முடியவில்லை.ஆயின், சமூக முடக்கந்தான் ஒரே வழியா ? இல்லை அதுவும் செலவு கூடிய ஒரு செய்முறை என்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியது.. அண்மை வாரங்களாக அரசாங்கம் தொடர்ச்சியாக சமூகத்தை முடக்கி வருகிறது. இது விடயத்தில் வெளிப்படைத்தன்மையும் சிவில் தன்மையும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வளவு காலத்துக்கு சமூகம் முடக்கப்படும் என்பதை முன்கூட்டியே தெளிவாக அறிவித்திருக்கவில்லை. பதிலாக ஊடகங்கள் ஒருபக்கம் குழப்புகின்றன. தவிர அரசாங்கமும் இத்தனை நாள் சமூகமுடக்கம் என்று முதலில் கூறிவிட்டு பின்னர் நாட்களை மேலதிகமாக நீடிக்கின்றது.

இது ஒருவிதத்தில் மக்கள் முன்கூட்டியே உசாராவதைத் தடுக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கமும்தான்.ஏனென்றால் இலங்கைத்தீவில் பெருநகரங்களில் உள்ளதுபோல ஒன்லைன் விநியோக வலைப்பின்னல் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவலாகவும் பலமாகவும் இல்லை.இதனால்தான்  உள்வீதிகளில் சமூகத்தை  முழுமையாக முடக்க முடியவில்லை. எனவே சமூக முடக்கம் எத்தனை நாட்களுக்கு என்பதனை அரசாங்கம் முன்கூட்டியே தெளிவாக அறிவிப்பதன் மூலம் மக்கள் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். ஆனால் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு போரைப் போலவே முன்னெடுக்கின்றது.அதில் சிவில்த்தனத்தை விடவும் ரானுவத்தனமே அதிகமாக காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.

“ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் முதலாவது தவறு கோவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்” என்று தனது  ருவிற்றர் பக்கத்தில் இமேஷ் ரணசிங்க என்ற சிங்கள ஊடகவியலாளர் கூறுகிறார். உலகளாவிய  தொற்றுநோய் காலத்தில் மையத்தில் அதிகாரங்களை குவித்த ஒரு நாடாக ஸ்ரீலங்கா சுட்டிக்காட்டப்படுகிறது. கோத்தாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் ஒரு பெருந் தொற்றுநோய் சூழலை காரணம் காட்டி நாட்டின் சிவில் கட்டமைப்புக்கள் அதிகபட்சம் ராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.கோவிட்-19ஐ கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவரான படைத்தளபதி ஊடகச் சந்திப்புக்களில் மருத்துவர்களைவிடக் கூடுதலாகக் கதைக்கிறார்.சமூக முடக்க நாட்களில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தெருக்களையும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் படைத்தரப்பே பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நாட்டின் எல்லா covid-19 தடுப்பு மையங்களும் படைத்தரப்பினரால்தான் நிர்வகிக்கப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த மாத இறுதியில் அரசாங்கம் மூன்று நியமனங்களை செய்திருக்கிறது.காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற பொலிஸ் பிரதானியும் ஓரு ஓய்வுபெற்ற படைப்பிரதானியும், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற படைப்பிரதானியும்  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த இரண்டு அலுவலகங்களும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டவை. அதாவது நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புகளுக்கு ஓய்வுபெற்ற படைப்பிரதானிகள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஒரு நோய்த்தொற்றுச் சூழலை முன்னிறுத்தி நாட்டின் வெவ்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளை அரசாங்கம் படைமயப்படுத்தி வருகிறது.ராணுவத்தனமாக முடிவுகளை எடுத்து படைத் தரப்பை முன்னிறுத்தி வைரசை எதிர்கொண்ட போதிலும் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றிகளை பெறத் தவறிவிட்டது என்பதைத்தான்  இமேஷ் ரணசிங்க
போன்ற ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் இது விடயத்தில் வெற்றிபெற்ற நாடுகளை தொகுத்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மையத்தில் அதிகாரத்தை குவித்து நோயெதிர்ப்பு நடவடிக்கைகளை இராணுவத்தனமாக முன்னெடுத்த நாடுகள் என்று பார்த்தால் சீனாவை மட்டும்தான் பெருமளவுக்கு முன்னுதாரணமாக காட்டமுடியும்.ரஷ்யாவும் பெருமளவுக்கு ராணுவ தனமாகவே நிலைமைகளை அணுகியது. எனினும் சீனா அளவுக்கு அவர்கள் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும்கூட சீனா எந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது என்பது தொடர்பில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற செய்திகளை பெற முடியவில்லை என்பதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதேசமயம் வைரஸ் தொற்றை இப்போதைக்கு ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகள் என்று வரிசைப் படுத்தப்படும் நாடுகளை தொகுத்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் சிவில் விழுமியங்களையும் வெளிப்படைத் தன்மையையும் அதிகளவு மதித்த நாடுகள்தான். மையத்தில் அதிகாரத்தை குவித்து ராணுவத்தனமாக முடிவுகளை எடுத்த நாடுகள் அல்ல. எனவே பெரும் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகமதிகம் ராணுவ மயப்படுத்துவதற்கு பதிலாக மக்கள் மயப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒன்றுதான் இது விடயத்தில் அதிகபட்சம் வினைத்திறன் மிக்கது என்பது கடந்த ஓராண்டு காலத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மக்களை வைரசுக்கு எதிராக உளவியல் ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் தயார்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகபட்சம் வெளிப்படைத் தன்மையோடு மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.இதில் சிவில் சமூகங்களையும் மத நிறுவனங்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

அவ்வாறு மக்கள் மையப்படுத்தப்படாத ஒரு பின்னணியில்தான் வண் டே மாஸ்கை அணிபவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்படுகிறதா? நமது தெருக்களில் ஒரு கணக்கெடுப்பை செய்தால் அதில் அதிகமானவர்கள் வண் டே  மாஸ்க் அணிந்திருக்கக் காணலாம். ஒரு நாள் மாஸ்க் எனப்படுவது மீளப் பயன்படுத்த முடியாதது. ஆனால் நாட்டில்   வண் டே மாஸ்கை திரும்ப திரும்ப துவைத்து பயன்படுத்தும் ஒரு நிலைமையை காணலாம். வீதிகளிலும் அலுவலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வண் டே மாஸ்கை அணிபவர்களே  அதிகம். அவர்களெல்லாம்  வண் டே மாஸ்கை ஒருநாள் மட்டும் பயன்படுத்தி விட்டு ஏறிவதில்லை..வண் டே மாஸ்க் அவ்வாறு பல நாட்கள் பல தடவைகள் துவைத்துப் பயன்படுத்தக் கூடியது அல்ல. அதற்கென்று மீளப் பயன்படுத்தக்கூடிய வகைகள் உண்டு.

ஆனால் மக்கள் பெருமளவுக்கு  வண் டே மாஸ்கைத்தான் அணிகிறார்கள். ஏனெனில் அதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன…. முதலாவது அது பயன்படுத்த இலகுவானது.இரண்டாவது விலை குறைந்தது.மூன்றாவது துவைத்துப் பாவிக்க இலகுவானது.நாலாவது கண்ணாடி அணிபவர்களுக்கும் ஹெல்மெட் அணிபவர்களுக்கும் இலகுவானது. ஐந்தாவது வாகனம் ஓட்டும் பொழுது அணிந்திருக்க வசதியானது. போன்ற பல காரணங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் இக்காரணங்கள் யாவும் அந்த மாஸ்க் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாவிக்கமுடியாதது என்ற அடிப்படையான சுகாதார விளக்கத்தை புறக்கணிப்பவை.

இது விடயத்தில் ஏனைய நாடுகளில் நிலைமை எப்படியிருக்கிறது என்று இக்கட்டுரைக்கு தெரியாது. பிரான்சில் வசிக்கும் ஒருவர் சொன்னார்….நோய்த்தொற்றின் தொடக்கத்தில் ஒரு பெட்டி வண்டே மாஸ்க் முப்பது யுரோக்களுக்கு விற்ககப்பட்டதாம் ஆனால் இப்பொழுது ஒரு பெட்டி இரண்டரை யுரோக்கு விற்க்கப்படுகிறதாம். முன்பு ஒரு குப்பி சனிடைசர் ஐந்து யூரொ. இப்பொழுது ஒரு லீற்றர் ஐந்து யூரோவாம்.அதாவது பிரெஞ்ச் அரசாங்கம் விலைகளைக் குறைத்திருக்கிறது.ஆனால் நமது நாட்டில் கொரோனாவுக்கு முன் ஒரு பெட்டி வண்டே மாஸ்க் நானூறு ரூபாய்.இபொழுது நல்ல மாஸ்க் ஒரு பெட்டி எழுநூறு ரூபாய்.மாஸ்க்கின் விலை குறைந்தால் அதைத் தோய்த்துப் பாவிப்பது குறையுமா?

எதுவோ,இலங்கைத் தீவின் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை.அதாவது மக்கள் வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக மாஸ் அணிகிறார்களா?அல்லது பொலிசாரிடமிருந்தும் படைத்தரப்பிடமிருந்தும் குறிப்பாக சட்டத்திடமிருந்தும் தங்களை பாதுகாப்பதற்காக மாஸ்க் அணிகிறார்களா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

இப்படித்தானிருக்கிறது வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் மக்கள் மயப்பட்ட தன்மை.இப்படியே போனால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய தொற்று அலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே இதுவிடயத்தில் அரசாங்கம் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்னவென்றால் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆகக்கூடியபட்சம் வெளிப்படைத்தன்மை மிக்கதாக மக்கள் மயப்படுத்துவதுதான்.மாறாக அவற்றை ராணுவ மயப்படுத்துவது அல்ல.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *