நண்பர் ஒருவர் சொன்னார் “கடந்த ஞாயிற்றுக்கிழமை, முள்ளிவாய்க்காலில், நினைவு கூரும் மைதானத்தில்,ஒரு தாய் நிலத்தில் விழுந்து கதறி அழுகிறார்.அவருடைய முகத்தை கண்ணீரோடு படம்பிடிப்பதற்காக ஒரு கமராக்காரர் தானும் நிலத்தில் தவழ்கிறார்.அந்த நேரத்தில் இந்த மைதானத்தில் பெருகிய துக்கம் கண்ணீர் என்பவற்றின் பின்னணியில் அவர் படப்பிடிப்பில் காட்டிய ஆர்வம் நெருடலாக இருந்தது” என்று. கண்ணீரைப் படம்பிடிக்க வேண்டும். துக்கத்தை ஆவணப்படுத்த வேண்டும். ஆனால் இங்கு கண்ணீரும் துக்கமும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் நினைவுகளைத் தலைமுறைகள் தோறும் கடத்தும் நோக்கத்தோடு சேகரிக்கப்படுகின்றனவா? அல்லது கண்ணீரையும் துக்கத்தையும் நினைவுகளையும் எப்படி கவர்ச்சியான “கொண்டென்ட்”-காணொளிக் கருவாக- அல்லது ஒளிப்படமாக மாற்றலாம் என்று சிந்தித்துப் படம் பிடிக்கப்படுகிறதா? என்ற பொருளில் அவர் கேள்வி எழுப்பினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் துயிலும் இல்லங்கள் இருந்த காலங்களில்,மாவீரர் நாளில் அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டும் படம் பிடிக்கலாம்.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் கைபேசிப் பயன்பாடு பெருமளவுக்கு இருக்கவில்லை.இந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்ற பெரிய இந்து கோவில்களுக்குள் கமராக்கள்,கைபேசிகள் அனுமதிக்கப்படுவதில்லை.வத்திக்கானிலும் சில தேவாலயங்களில் அப்படித்தான்.தாஜ்மஹால் போன்ற பல நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகங்களில் படம் எடுப்பதற்கு வரையறைகள் உண்டு. அமெரிக்காவின் செப்டம்பர் 11 நினைவு வளாகத்தில் படம்பிடிக்க வரையறைகள் உண்டு.உலகின் ஒரு பகுதி நினைவிடங்கள்,நினைவு வளாகங்கள்,நினைவு நிகழ்வுகளில் தனிப்பட்ட தேவைகளுக்காகப் படம் எடுக்க அனுமதி உண்டு. வணிக நோக்கத்தோடு படம் எடுக்க முடியாது .
இந்தக் கட்டுப்பாடுகள் பாரம்பரிய கமராக்களுக்கு பொருந்தலாம்.கைபேசிகளுக்கு முழுமையாகப் பொருந்துமா?பல ஆண்டுகளுக்கு முன் “கொழும்பு டெலிகிராபில்” ஒரு சிங்கள விமர்சகர் எழுதியிருந்தார் “மனிதன் இப்பொழுது நடமாடும் கமராவாக மாறிவிட்டான்” என்று.கைபேசிப் பயன்பாடு குறித்த ஒரு கட்டுரையில்தான் அவர் அவ்வாறு எழுதியிருந்தார்.இதே முள்ளிவாய்க்காலில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலங்காவின் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கைபேசிகளில் எடுத்த படங்கள்தான் இப்பொழுது உலக அரங்கில் அவர்களுக்கு எதிரான சான்றுகளாக மாறியிருக்கின்றன.
இன அழிப்பு,போர்க் குற்றம் தொடர்பான பல சான்றுகளில் அவ்வாறு படைத்தரப்பு எடுத்த படங்கள்தான் மேசையில் வைக்கப்படுகின்றன. போரின் இறுதிக் கட்டத்தில், மிகக்குறிப்பாக போர்க் களத்தில் இருந்து முழு மக்கள் தொகையும் வடித்து அகற்றப்பட்ட நாட்களில்,தமிழ் கமராக்கள் இயங்கவில்லை. பலம் பொருந்திய நாடுகளில் செய்மதிக் கமராக்கள் இயங்கின. இவற்றுடன் களத்தில் நின்ற படை ஆட்களின் கமராக்கள் இயங்கின. வெற்றிக் களிப்பில் தன்னிலை மறந்த படைத்தரப்பினர் தமது சாகசச் செயல்கள் என்று கருதி படம்பிடித்த விடயங்கள்தான் இப்பொழுது குற்றச்செயல்களாக முன்வைக்கப்படுகின்றன. கைபேசியால் தன்னைத்தானே காட்டிக் கொடுத்த ஒரு நாடு.
மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்ட ஒரு சூழலில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் போன்ற பொது நிகழ்வுகளில்,எதை எடுக்கலாம்? எதை எடுக்கக்கூடாது?என்ற கேள்வி நடைமுறைச் சாத்தியமானதா? அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தும் ஏற்பாட்டுக் குழு அதனை ஏதோ ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வர முடியுமா? பாரம்பரிய கமராக்களை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம்.ஆனால் கைபேசிக் கமராக்களை ஒழுங்குபடுத்தலாமா?ஏனென்றால் இதுபோன்ற நிகழ்வுகளில் “கைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம்,தன் படம் எடுக்க வேண்டாம்,அந்த நிகழ்வின் புனிதத்தை,உளவியல் கனதியைக் குறைக்க வேண்டாம்”.. என்று எவ்வளவுதான் வலியுறுத்தினாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது. அதை கட்டுப்படுத்தும் ஆட்பலமும் சக்தியும் முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.
துயிலும் இல்லங்களில்,முள்ளிவாய்க்காலில்,ஏனைய நினைவு கூரும் களங்களில் ஒரு பகுதியினர் துக்கத்தைக் கொட்டி தீர்க்கிறார்கள். இன்னொரு பகுதியினர் அந்த கண்ணீரையும் துக்கத்தையும் ஆவணமாக்குகிறார்கள்.அதில் ஒரு பகுதி அதனை காசு புரளும் காணொளிக் கருவாகப் பார்க்கிறது.
தனது சமூகத்தின் கண்ணீரை,காயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பது அதனை காசாக்குவது அல்ல என்று விளங்கப்படுத்த முடியாத ஒரு தொழில்நுட்பச் சூழல் இது.நினைவு நாட்களுக்கு வரும் எல்லாருமே,குறிப்பாக இளைய தலைமுறை பெருமளவுக்கு இதுபோன்ற நிகழ்வுகளில் அந்த நிகழ்வின் அரசியல் அடர்த்தியை,கனதியை பண்பாட்டுப் புனிதத்தை விளங்கி அதில் சீரியஸாக கலந்து கொள்கிறது என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.அங்கு சிந்தப்படும் கண்ணீரையும் துக்கத்தையும் நீதிக்கான போராட்டத்தைச் செலுத்தும் விசையாக மாற்றவேண்டும் என்று,அங்கே கமராக்களோடு கைபேசிகளோடு காணப்படும் எல்லாருமே சிந்திப்பார்கள் என்றும் எடுத்துக் கொள்ளமுடியாது.
எனது நண்பராகிய ஒரு யூடியூப்பர் சொன்னார், இதுபோன்ற நிகழ்வுகளில் பலரும் படம் பிடிப்பார்கள்.யார் அதனை டொலர்களை உழைக்கும் கொண்டெண்டாக பார்க்கிறார்கள்? யார் அதனை தலைமுறைகள் தோறும் நினைவுகளைக் கடத்தும் தேசியக் கடமையாகப் பார்க்கிறார்கள்?என்று பிரித்தறிவது கடினம் என்று.அங்கே வணிக நோக்கங்கள் இருந்தாலும்,நினைவுகள் கடத்தப்படுகின்றன என்று கூறினார்.மேலும் அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலை நோக்கிச் செல்லும்போது,பரந்தன் புதுக்குடியிருப்புச் சாலையில் இளையோரின் மோட்டார் சைக்கிள் வாகன அணியை அவர் கடந்து சென்றிருக்கிறார்,அந்த மோட்டார் சைக்கிள்களின் வரிசையைக் கடப்பதற்கு தனக்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் எடுத்ததாகவும் சொன்னார்.
அந்த மோட்டார் சைக்கிள் அணியில் காணப்பட்ட இளையோர் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தார்கள்.தலைகளில் கறுப்புப் பட்டிகளைக் கட்டியிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களை அவர்கள் செலுத்திய விதத்தில் ஒருவித சாகச உணர்வு வெளிப்பட்டதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்தச் சாகச உணர்வு எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களின் ஆயுத எதிர்ப்பு தோற்கடிக்கப்பட்ட ஒரு நாளை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்ளச் செல்லும்போது,தாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்று காட்டுவதற்கு அவ்வாறு ஒரு சாகச உணர்வை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அது சாகச உணவை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அல்ல. அதைவிட ஆழமான பொருளில் நினைவுகளை , கூட்டுக் காயங்களை, கூட்டுத் துக்கத்தை எப்படி கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது என்று சிந்திக்கும் ஓர் அரசியல் செய்முறையின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதிதான் அந்த நிகழ்வு.
ஆனால் இளைய தலைமுறைக்கு யார் அதனை அவர்களுக்கு விளங்கும் மொழியில்,அவர்களின் கைகளுக்குள் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு தொழில்நுட்பப் பரப்பிற்குள் எடுத்துக் கூறுவது?
இம்முறை முள்ளிவாய்க்காலில் கடந்த ஆண்டை விட மக்கள் தொகை அதிகம்.நினைவு கூரும் மைதானத்தை நோக்கிச் செல்லும் பெருஞ் சாலையில் வாகனங்களின் நெரிசல் காரணமாக போக்குவரத்துத் தேங்கி நின்றது. வாகனங்களின் நீண்ட வரிசை.இது 17 ஆண்டுகளுக்கு முன் 2009 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில்,அந்த வீதியில் காணப்பட்ட காட்சிகளை இரை மீட்க உதவும்.அப்பொழுது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வழியூடாக இறுதிக்கட்ட யுத்த களத்தை நோக்கி வந்தார்கள்.வாகனங்களும் மனிதர்களுமாக மணித்தியாலக் கணக்காக போக்குவரத்து இறுகிப்போய் நின்றது. 17 ஆண்டுகளின் பின் அந்த நினைவுகளை இரைமீட்கும் நிகழ்வுக்காக அதே காலப்பகுதியில்,அதே வீதியில்,வாகனங்கள் வரிசையில் இறுகி நின்றன.
இம்முறை பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் ஏழு பேருந்துகளில் சென்றிருந்தார்கள்.அவர்களைப் போன்று இளையவர்கள் அதிகமாக வந்திருந்தார்கள். முன் சொன்னதுபோல மோட்டார் சைக்கிள் பேரணியும் வந்தது. அந்த நிகழ்வில்,அந்த இடத்தில் தாங்கள் நிற்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.அந்த விருப்பத்தை, அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டியது கட்சிகளுடைய வேலை.முள்ளிவாய்க்காலுக்கு வரும் இளையோர் அல்லது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வரும் இளையோர் அல்லது ஏனைய நினைவு கூரும் களங்களை நோக்கி வரும் இளையோர் அந்த நினைவுகளின் அரசியல் பெறுமதியை,கனதியை உணர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கத் தேவை இல்லை. அவர்களுக்கு அந்த நினைவுகளின் பின்னால் இருக்கும் அரசியலை எடுத்துக்கூற வேண்டியது மூத்த தலைமுறையின் வேலை.கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் காயங்களையும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தைச் செலுத்தும் உந்துவிசையாக மாற்ற வேண்டும் என்று எடுத்துக்கூற வேண்டியது கட்சிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கடமை. ஆனால் எத்தனை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் பலமான இளையோர் அணி,மாணவர் அணி,மகளிர் அணி உண்டு?
நினைவுகளும் காயங்களும் அடுத்தகட்ட அரசியலைச் செலுத்தும் உணர்ச்சிகரமான,உணர்வுபூர்வமான உந்து விசையாக மாற்றப்பட வேண்டும் என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தெரிகிறது.ஆனால் அதற்குரிய பொறிமுறை யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வெற்றிடம் உள்ளவரை நினைவு கூர்தலை ஒரு சடங்காக, சாகச அரசியலாகப் பார்க்கும் ஒரு போக்கும் இருக்கும்.அந்தக் களத்தில் நிற்பதை; நினைவுச் சுடரின் முன் மலர்களை வைப்பதை; தன் படம் எடுத்து அல்லது படம் எடுத்து அதை ஒரு சான்றாக முன்வைக்கும் ஒரு தரப்பும்அங்கே வரும். அங்கு சிந்தப்படும் கண்ணீரை எப்படி கொண்டென்ட் ஆக மாற்றலாம் என்று சிந்திக்கும் யூடியூப்பர்களும் அங்கே வருவர்.அவர்கள் அதனை வியாபாரமாகச் செய்தாலும் அதன் வழியே நினைவுகள் தலைமுறைகள் தோறும் கடத்தப்படும் என்பதுதான் இப்போதுள்ள யதார்த்தம். நினைவுகளை, கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் காயங்களை, கூட்டு அவமானத்தை, கூட்டு வலியை நீதிக்கான போராட்டத்தைச் செலுத்தும் உணர்ச்சிகரமான உந்துவிசையாக மாற்றத் தேவையான பொருத்தமான அரசியல் தரிசனமும் கட்டமைப்பும் பொறிமுறையும் இல்லாதவரை நிலைமை இப்படித்தான் இருக்கும்.





