“நான் அவதானித்திருக்கிறேன்,அண்மை காலங்களில்,சமூக ஊடக வலைத்தளங்களில்,போர்க் குற்றங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களில் அனேகமானவர்கள் சிங்கள இளையோர்தான்.அவர்கள் அனைவரும் தகவல் யுகம்,செயற்கை நுண்ணறிவு யுகம் என்பவற்றில் பிறந்தவர்கள்.செய்யப்பட்ட குற்றங்களை அவர்கள் நிராகரிக்கவில்லை.இறுதியிலும் இறுதியாக அவர்கள் அதைக் ஏற்றுக்கொள்கிறார்கள்,அதைக் குறித்து பெருமைப்படுகிறார்கள்….இங்கே பிரச்சனை என்னவென்றால், தகவல்கள்,கிடைக்கக்கூடிய தரவுகள்,சான்றுகள் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதல்ல.பிரச்சினை அதற்குமப்பாலானது.யூத சியோனிசத்தைப்போல அது அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது;ஆழமாக வேரோடிப்போய் உள்ளது…”.இக்குறிப்பை கடந்த வாரம் முகநூலில் எழுதியவர் சஞ்சுலா என்ற பெயரைக் கொண்ட,ஒரு தென்னிலங்கையைச் சேர்ந்த ஓர் அரசியல் செயற்பாட்டாளர்.
அண்மை வாரங்களாக,குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு,தமிழ் மக்களும் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்ற சிங்களச் செயற்பாட்டாளர்களும் தமிழிலும் சிங்களத்திலும் சமூகஊடக வலைத்தளங்களில் எழுதும் குறிப்புக்களுக்கு சிங்களப் பெயரைக் கொண்ட ஒரு தொகுதியினர் பதில்வினையாற்றி வருகிறார்கள்.இப்பதில்கள் அநேகமானவை தமிழ் மக்களை அவமதிப்பவை.இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் அல்ல என்று கருத்து தெரிவிப்பவை.அது ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான போர் என்பதனால்,அங்கே கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளே என்று கருத்துரைப்பவை.அங்கே இன அழிப்பு நடக்கவில்லை என்று வாதிடுபவை.குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அதன் தலைவருக்கும் எதிராக வெறுப்பைக் கக்குபவை.
இதேகாலப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் இதே விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.இசைப்பிரியா பற்றிய ஒரு பதிவின் கீழ் வந்த சிங்களப் பெயர் கொண்டவர்கள் எழுதிய பதில் குறிப்புகளை அவர் அங்கே தொகுத்துப் போட்டிருந்தார்.அப்பதில்வினைகளில் ஒரு பகுதி கொல்லப்பட்ட இசைப்பிரியாவை ஆபாசமாகச் சித்தரிப்பவை.இன்னொரு பகுதி அவர் ஒரு பயங்கரவாதி என்ற அடிப்படையில் கொல்லப்பட வேண்டியவர் என்று நியாயப்படுத்துபவை
இன அழிப்புக்கு நீதி கேட்கும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள செயல்பாட்டாளர்களின் பதிவுகளுக்கு எதிராக ஓர் அணி திட்டமிட்டு அந்த டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்துகிறது என்ற ஒரு தொகுக்கப்பட்ட அவதானிப்பு உண்டு.ஆனால் அவ்வாறு திட்டமிட்டு அணியாகச் செயல்படுபவர்களின் பின்னணியில் அரசாங்கத்தின் “டிஜிட்டல் புரோமோஷன்” அணி உண்டு என்ற முடிவுக்கு உடனடியாக வரத் தேவையில்லை. இதுபோன்ற தமிழ் மக்களுக்கு எதிரான,தமிழ் மக்கள் கேட்கும் நீதிக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் நன்கு நிறுவன மயப்பட்டு காணப்படுகிறார்கள் என்பதுதான் இப்போதைக்குத் தெரிய வருவது.
தமிழ் மக்கள் ஓர் அரசு இல்லாத தரப்பு.அதேசமயம் சிங்கள மக்களைப் பொறுத்த வரையிலும் போரில் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு ஓர் அரசாக அவர்களிடம் எல்லா விதமான உபகரணங்களும்,வளங்களும், தளங்களும் வசதி வாய்ப்புகளும் உண்டு.உதாரணமாக ஐநாவிலும் உலக தலைநகரங்களிலும் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் உண்டு. இலங்கை வெளிவரவு அமைச்சு அதனை ஒரு மையத்திலிருந்து திட்டமிட்டு செயல்படுத்தும்.
குறிப்பாக கடந்த 16 ஆண்டுகளிலும் கோத்தபாய ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில்,முன்னாள் கடற்படை பிரதானி ஆகிய சரத் வீரசேகர ஐநாவுக்கு சென்றிருந்தார்.தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான பதில் குற்றச்சாட்டுகள் அவரிடம் இருந்தன.அதற்கென்று நிறைய வீட்டு வேலை செய்து,தொகுக்கப்பட்ட ஆவணங்களோடு அவர் ஐநாவிற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை என்பது வேறு விடயம்.ஆனால் அப்படி ஒரு ஏற்பாடு அங்கே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது.
இந்த அனுபவத்தின் பின்னணியில் வைத்து அண்மை மாதங்களாக சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற சிங்களத் தரப்பு விமர்சனங்களைத் தொகுத்து பார்க்கலாம் என்று சில தமிழ் செயற்பாட்டாளர்கள்xகருதுகிறார்கள்.அதே சமயம் இது பொதுவான சமூக வலைத்தளச் சூழல் என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள்.
சமூக ஊடக வலைத்தளச் சூழல் என்பது உலகம் முழுவதும் அப்படித்தான் காணப்படுகிறது என்று அவதானிக்கப்பட்டுள்ளது.அது பெருமளவுக்கு சமானியர்களின் தளம்.சமானிர்களிடம் இருக்கக்கூடிய கூட்டு உணர்வுகளையும் கும்பல் மனோநிலையையும் பிரதிபலிப்பது.அதனால்தான் அக்கும்பல் மனோ நிலைக்கூடாக இன்னொரு இனத்துக்கு எதிராக,மதத்திற்கு எதிராக,பால் பிரிவினருக்கு எதிராக கருத்துக்களை நொதிக்க செய்யும் ஒரு தளமாகவும் அது காணப்படுகிறது.அதனால்தான் ரோகியங்கா முஸ்லிம் இனப்படுகொலையில் முகநூலுக்குப் பங்குண்டு என்று ஐநா நிபுணர்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே இது உலகப் பொதுவான ஒரு விஷச் சூழல் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அது பெருமளவுக்கு அறிவாழம் இல்லாதது;மேலோட்டமானது; மேம்போக்கானது;எதையும் அதன் உணர்ச்சித் தளத்திலேயே விளங்கிக் கொள்வது.இதற்கு சிங்கள சமூகத்துக்குள்ளேயே மற்றொரு உதாரணத்தை இங்கு காட்டலாம்.சில ஆண்டுகளுக்கு முன் காலிமுகத்திடலை தம் வசப்படுத்திய இளைய தலைமுறை,அங்கே அரசாங்கத்திற்கு எதிராகப் போராடியது.அப்போராட்டக் கிராமத்தில் புத்திஜீவிகள்,படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் உரையாற்றினார்கள்.ஒருநாள் அங்கே பிரிட்டோ பெர்னாண்டோ உரையாற்றினார்.பிரிட்டோ ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்.தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்.கடந்த வாரம் அவருக்கு இந்த ஆண்டுக்கான”Per Anger Prize” விருது கிடைத்தது.
பிரிட்டோ,காலிமுகத்திடலில் பேசிக் கொண்டிருந்தபோது,அவருடைய பேச்சின் நேரலைக்கு கீழே வந்த நூற்றுக்கணக்கான குறிப்புகளைத் தொகுத்த எனது சிங்கள நண்பர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்…”இந்தப் போராட்டம் சிங்கள இளையோர் மத்தியில் அரசியல் அறிவை(Political literacy)ஓரளவுக்கு வளர்த்திருக்கிறது.ஆனால் வரலாற்று அறிவை(Historical literacy) வளர்த்திருக்கவில்லை”என்று.ஏனென்று கேட்டேன்.அங்கே பிரிட்டோவின் பேச்சை ரசித்த பலருக்கும் அவருடைய மனித உரிமைச் செயற்பாட்டு வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இதுதான் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் உள்ள பொதுப் போக்கு.”தனக்குத் தெரியாத ஒன்றைக் குறித்துக் கருத்துகூறும் துணிச்சல்”.எனவே இப்பொழுது இன அழிப்புக்கு நீதி கேட்கும் தமிழ்,சிங்கள பதிவுகளுக்கு எதிரான குறிப்புகளிலும் அதன் பிரதிபலிப்புகளைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது என்பதுதான் அடிப்படை உண்மை
அதேசமயம்,இங்கு “அரகலய”வுக்குப் பின்னரான உற்சாகமூட்டும் மாற்றம் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் துணிந்து முன்வந்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.அண்மை ஆண்டுகளில் தென்னிலங்கையில் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாளை அனுஷ்டிக்கிறார்கள். அதேசமயம் சமூக ஊடக வலைத்தளங்களிலும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.
இது இனஅழிப்புக்கு எதிரான நீதியைக் கேட்கும் தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு விடயம்.அண்மையில் கத்தோலிக்க மதகுருவும் அரகலய போராட்டத்தின் பிரதானிகளில் ஒருவருமாகிய,அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்த தகவல்களும் அந்த அடிப்படையிலானவைதான்.கடந்த வாரம் மே 18 நினைவு நாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று துணிந்து சொன்னார்.ஏற்கனவே 202 ஆம் ஆண்டு நான்கு தமிழ் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையும் நடந்தது இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொண்டிருந்தது.
ஆனால் அருட்தந்தை ஜீவந்த தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு,அவர் சார்ந்த கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு ஆயர் இல்லத்தின் உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பு ஒன்று மறுப்புத் தெரிவித்திருந்தது.அது இலங்கை கத்தோலிக்கு சமூகத்துக்குள்ளேயே பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைத் தீவின் மதப் பிரிவுகளுக்குள் இனப்பிரச்சினையை அதிகம் ஆழமாக பிரதிபலித்த ஒரு மதப்பிரிவு கத்தோலிக்கத் திருச்சபைதான்.இரண்டு சமூகங்கள் மத்தியிலும் மிகப்பலமாகக் காணப்பட்ட இத்திருச்சபையானது, கடந்த பல தசாப்தங்களாக இன முரண்பாடுகளைக் கூர்மையாக பிரதிபலித்திருக்கிறது. சிங்கள பகுதிகளில் காணப்படும் ஆயர்களும் அருட்தந்தைகளும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் இன உணர்வுகளை அதிகம் பிரதிபலித்தார்கள். இதில் ஜீவந்த போல விதிவிலக்குகள் உண்டு.அதேசமயம் தமிழ்ப்பகுதிகளில் கத்தோலிக்க சமூகத்துக்கு வழிகாட்டிய குருவானவர்களும் ஆயர்களும் தெளிவாக இன அழிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்நின்றார்கள்.அவ்வாறு முன்நின்றவர்களில் மகிமைக்குரிய ஒருவராக முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களைக் கூறலாம்.
இப்பொழுது மட்டுமல்ல யுத்த காலங்களிலும்,கத்தோலிக்கத் திருச்சபை எவ்வாறு இன முரண்பாடுகளைப் பிரதிபலித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் காட்டுவார்கள்.அப்பொழுது “வெரிதாஸ் வானொலி” தமிழ் மக்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்டது.அந்த வானொலிக்கூடாகவே ஒரு ஜெகத் கஸ்பார் என்ற மதகுரு தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பிரபல்யமானார்.வெரிதாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவு செய்தி கூறும்போது,தமிழ் இளையோரை போராளிகள் என்று விழிக்கிறது என்றும்,அதேசமயம் சிங்களப் பிரிவு அவர்களை “ரஸ்தவாதிகள்” அதாவது பயங்கரவாதிகள் என்று அழைக்கிறது என்றும் ஒரு விமர்சனம் அப்பொழுது வந்தது.
இவ்வாறு இன முரண்பாட்டை ஆழமாகப் பிரதிபலித்த ஒரு திருச்சபைக்குள்,17 ஆண்டுகளின் பின்னரும் அந்த முரண்பாடுகள் ஆழமாக வேரோடியுள்ளன என்பதைத்தான் கடந்த முள்ளிவாய்க்கால் நாளிலிருந்து இடம்பெற்று வருகின்ற வாதப் பிரதிவாதங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல,சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை ஆதரித்து குரல் எழுப்புபவர்கள் துணிச்சலாக தமது பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதைத்தான் அருட்தந்தை ஜீவந்த தெரிவித்த கருத்து நமக்குக் காட்டுகிறது.எழுத்தாளர் தீபச்செல்வனின் நூலுக்கு தடை வந்த விடயத்திலும் சிங்கள செயற்பாட்டாளர்கள் தமிழ்மக்களை விடவும் அதிகமாகப் போராடினார்கள்.
இது நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய விடயம்.சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதியை ஏற்றுக்கொள்பவர்களின் தொகை எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ,அந்த அளவுக்கு இனப்பிரச்சனைக்கான தீர்வும் இலகுவாகிவிடும்.இலங்கை இனப் பிரச்சனைக்கு பிரிவினை அல்லாத ஒரு தீர்வைக் காண்பது என்று சொன்னால், சிங்களபௌத்த கூட்டு உளவியலின் குற்றவுணர்ச்சியைத் தூண்ட வேண்டியது ஒரு முன்நிபந்தனை ஆகும்.அதேசமயம் தமிழ்க்கூட்டு உளவியலின் குற்றவுணர்ச்சியும் தூண்ட வேண்டும்.அதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக இதயத்தை நோய் நீக்கும்;செழிப்பாக்கும்.





