கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் உயிர் துறந்த நாள் என்ற அடிப்படையில் அந்த நாளும் புலிகள் இயக்கத்துக்கு உரிய ஒரு நினைவு நாளாக கருதும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுதான் மே 18இற்கான பொதுக்கட்டமைப்பு குறித்த முரண்பாடுகளும் ஆகும்.
இவ்வாறான கடந்த 13 ஆண்டு கால முரண்பாடுகளின் பின்னணியில்தான் இம்முறை திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை தவிர்ப்பதற்காகத்தான் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் திலீபனின் நினைவு நாட்களுக்கு முன்னரே இரண்டு தரப்புக்களோடும் உரையாட முற்பட்டார்கள். அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்காவும் ஒருவர்.சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளையும் அவர்கள் சந்தித்தார்கள். ஆனால் திலீபனின் நினைவு நாளில் இந்த இரண்டு தரப்புக்களும் நினைவுத்தூபிக்கு முன் முரண்படுவதை தடுக்க அவர்களால் முடியவில்லை.அதுமட்டுமல்ல இந்த முரண்பாடுகளுக்குள் அவர்களும் இழுக்கப்பட்டு விட்டார்கள். அதன் விளைவாக முன்னாள் புலிகள் இயக்கத்தவர் இந்த இரண்டு அணிகளுக்குள்ளும் சிக்கி அவமதிக்கப்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது.
இது தொடர்பில் டான் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தொழிற்சங்கவாதி பின்வருமாறு தெரிவித்தார்…”போராளிகள் என்ற போர்வையில் நீங்கள் எங்களுக்கு வகுப்பெடுக்க கூடாது. காரணம் என்னவென்றால்,இந்தப் போராட்டம் வளர்ந்ததே மக்கள் ஆதரவினால்தான். மக்கள் ஆதரவு இல்லாமல் போராட்டம் வளர்ந்திருக்குமா? எனவே போராட்டம் தொடர்பாக நாங்கள்தான் தியாகம் செய்தோம் எங்களுக்குத்தான் உரிமை இருக்கு என்று யாரும் கதைக்கேலாது…”
இதுபோன்ற கருத்துக்களால் ஆத்திரமூட்டப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களின் கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியானது கடுமையான எதிர்வினைகளை காட்டியிருக்கிறது. கட்சியின் முக்கியஸ்தரான கதிர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக மிகக்கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.அதாவது தொகுத்து பார்த்தால்,ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடானது முன்னாள் இயக்கத்தவர்களையும் அந்த முரண்பாட்டுக்குள் இழுத்து அவமதிக்கும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது.
கட்சி அரசியல் என்று வந்தால் இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். வாக்கு வேட்டை அரசியலுக்கு முன் எதுவுமே புனிதம் இல்லை. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காணப்படும் பலரும் பாதுகாப்பான இறந்த காலத்தைக் கொண்டவர்கள்தான். பாதுகாப்பற்ற இறந்த காலத்தைக் கொண்ட பலரும் வெளிப்படையாகச் செயல்படத் தயங்குகிறார்கள்.அதாவது சமூகத்துக்காகப் போராட முன்வந்த பலரும் பாதுகாப்பற்ற இறந்த காலத்தை கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். இலங்கைத்தீவில் அதிகம் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஒரு தரப்பாக அவர்கள் காணப்படுகிறார்கள்-most vulnerable.
அதேசமயம் போராட்டம் நடந்த ஒரு காலகட்டத்தில் தம்மையும் தமது கல்வியும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொண்ட பலரும் நிகழ்காலத்தின் பிரமுகர்களாக வலம் வருகிறார்கள்.தமது இறந்த காலத்தைப் பாதுகாத்துக் கொண்ட காரணத்தால் அவர்கள் பெற்ற பட்டம்,அந்தஸ்து,பதவி,பணம், செல்வாக்கு,பிரபல்யம் காரணமாக அவர்கள் சமூகத்தின் பிரமுகர்கள் ஆகியிருக்கிறார்கள்.தமிழ் அரசியலில் இப்பொழுது துருத்திக் கொண்டு தெரியும் பெரும்பாலான ஆளுமைகள் அவ்வாறு தமது இறந்த காலத்தை பாதுகாத்துக் கொண்டவர்கள்தான்.
இவ்வாறு பாதுகாப்பான இறந்த காலத்தைக் கொண்டவர்கள் அந்த இறந்த காலத்தை தத்தெடுக்க பார்ப்பதுதான் நினைவு கூர்தல் தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.
இப்பொழுது நினைவு கூர்தல் தொடர்பாக ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் விடுதலைப் புலிகளின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை. அதாவது புலிகள் இயக்கத்தின் தியாகத்துக்கும் வீரத்துக்கும் யார் உரிமை கோரலாம் என்பது பற்றிய சர்ச்சைதான்.தமது இறந்தகாலத்தை பாதுகாத்துக் கொண்டவர்கள் பலர் அந்த இறந்த காலத்தைத் தத்தெடுக்கப் பார்க்கிறார்கள். எந்த ஒரு இறந்த காலத்தில் தங்களை தற்காத்துக் கொண்டார்களோ,அதே இறந்த காலத்திற்கு உரித்து கொண்டாடுகிறார்கள். தமது வாக்குவேட்டை அரசியலுக்கு இறந்த காலத்தின் தியாகத்தையும் வீரத்தையும் எப்படி முதலீடு செய்யலாம் என்று அவர்கள் சிந்திக்கின்றார்கள்.அந்த தியாகத்தையும் வீரத்தையும் வழிபடுவது போலவும் போற்றுவது போலவும் கொண்டாடுவது போலவும் ஒரு தோற்றத்தை அவர்கள் கட்டியெழுப்புகிறார்கள்.ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்னவென்றால்,அந்த தியாகத்தையும் வீரத்தையும் எப்படி தமது வாக்கு வேட்டை அரசியலுக்கு பயன்படுத்தலாம் என்பதுதான்.
விசுவாசமாகவே அந்த வீரத்தின் தியாகத்தின் தொடர்ச்சியாக செயற்பட்டிருந்திருந்தால் அவர்களை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்திருக்கும். கடந்த 13 ஆண்டுகளில் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? சிறைக்கு சென்றவர்கள் எத்தனை பேர்? தங்கள் சொத்துக்களை,சுகங்களை, உறவுகளை இழந்தவர்கள் எத்தனை பேர்? கட்சிகளின் அடிமட்ட உறுப்பினர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் அதிகம் சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் கட்சிப் பிரமுகர்கள் யாருமே அவ்வாறு கைது செய்யப்படவில்லை. இன்னும் கூர்மையாகச் சொன்னால் பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவர்கள் நிகழ்காலத்திலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்ட ஒரு இறந்த காலத்தை தமது தேர்தல்மைய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.இந்த அடிப்படையில்தான் நினைவு கூர்தல் தொடர்பான சர்ச்சைகள் மேலெழுகின்றன.
இந்த சர்ச்சைகளின் பின்னணியில் அண்மையில், என்னுடைய நண்பர் ஒருவர் என்னோடு கதைத்தார். அவர் ஒரு கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் என்னிடம் கேட்டார் “டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவைப் பெற்ற ஒரு முதல்வர் எப்படி திலீபனை நினைவு கூறலாம்?” என்று. நான் சொன்னேன் தியாகியான ஒருவரை அவருடைய எதிரி நினைவு கூர்கிறார் என்பது அந்தத் தியாக அரசியலுக்கு கிடைத்த வெற்றிதானே? என்று. அவர் மேலும் கேட்டார் “அப்படியல்ல, திலீபனை விசுவாசமாக நினைவு கூர்வது வேறு, வாக்குவேட்டை அரசியல் நோக்கங்களுக்காக நினைவு கூர்வது வேறு. வாக்குவேட்டை அரசியல் தேவைகளுக்காக சிவப்பு மஞ்சள் கொடிகளை பயன்படுத்துவது, ஆயுதப் போராட்டத்தின் தியாகத்தை பயன்படுத்துவது, என்பது உண்மையான நினைவு கூர்தல் இல்லைத்தானே ?” என்று.
“ஆம். அது சரிதான். ஆனால் ஒரு தேர்தல்மைய அரசியலில் யார் உண்மையாக நினைவு கூர்கிறார் யார் நடிப்புக்கு நினைவு கூறுகிறார் என்பதனை எப்படிக் கண்டுபிடிப்பது? கடந்த 13 ஆண்டுகளில் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மக்கள் எவ்வாறு வாக்களித்திருக்கிறார்கள்? குறிப்பாக அனந்தி கூட்டமைப்போடு நிற்கும் பொழுது கிடைத்த வாக்குகளுக்கும் அவர் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பின் கிடைத்த வாக்குகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் எதைக் காட்டுகிறது? அது போலவே கடந்த 13 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நினைவு கூர்தலை ஒரு தனி மனிதராக முன்னெடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் வாக்குகள்தானே கிடைத்தன ? அது கூடப்பரவாயில்லை. திருகோணமலையில் முன்பு அந்த மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த ரூபனுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? ஏன் அதிகம் போவான்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஜனநாயக மக்கள் கட்சியானது இன்றுவரை தேர்தலில் வெற்றி பெறவே இல்லை. அப்படி என்றால் மக்கள் எதற்கு வாக்களிக்கிறார்கள்? இறந்த காலத்தின் தியாகங்களுக்கும் வீரத்துக்கும் யார் உண்மையான வாரிசு என்பதை கண்டுபிடிக்க கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் வழங்கிய தீர்ப்பை எடுத்துப் பார்த்தால் அது தலைகீழாக அல்லவா தெரிகிறது?” என்று கேட்டேன். அவர் அதை ஒப்புக்கொண்டார்.
எனவே இந்த விடயத்தில் இறந்த காலத்தின் தொடர்ச்சியாக அரசியலை முன்னெடுப்பதாக கூறிக் கொள்ளும் எவரும் தாங்கள் முன்னெடுப்பது ஒரு மிதவாத அரசியல் என்பதனை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.ஆயுதப் போராட்டமும் தேர்தல் மைய அரசியலும் ஒன்று அல்ல.இது முதலாவது.
இரண்டாவது, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான தேசிய இயக்கம் கிடையாது. அந்த வெற்றிடத்தில்தான் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க முடியாதுள்ளது.அந்த வெற்றிடத்தில்தான் கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவுகளும்,ஒரே கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் நினைவு நாட்களை அசிங்கப்படுத்துகின்றன. இது இரண்டாவது.
மூன்றாவது,இறந்த காலத்தின் தொடர்ச்சியாக அரசியலை முன்னெடுப்பது என்பது ஓர் ஆயுதப் போராட்டத்தை பொய்யாகத் தத்தெடுப்பது அல்ல. அதை அப்படித் தத்தெடுக்கவும் முடியாது. இப்போது இருப்பது மிதவாத அரசியல். எனவே இறந்த காலத்தின் தொடர்ச்சியாக அரசியலை முன்னெடுக்க விரும்பும் எவரும் முதலில் செய்ய வேண்டியது ஒரு தமிழ்த் தேசிய பேரியக்கத்தை கட்டி எழுப்புவதுதான். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் தமிழ்த் தேசிய பேரியக்கம்தான் இப்பொழுது தேவை. கட்சிகளுக்கு இடையே அடிபடுவதோ அல்லது ஒரு கட்சிக்குள்ளே அடிபட்டு நினைவுத்தூபிகளை அவமதிப்பதோ அல்ல.
25.9.2022.அன்று ஆதவன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.