மாவீரர் நாள் 2023 

 

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான பதினைந்தாவது மாவீரர் நாள் இது.கடந்த 15 ஆண்டுகளாக மாவீரர் நாள் போன்ற நினைவு நாட்களை ஒரு கட்டத்துக்கு மேல் பரவலாக மக்கள் மயப்படுத்துவதில் சட்டப் பிரச்சினைகள் இருந்தன.நீதிமன்றங்கள் நினைவு கூர்தலுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கும் போது,நினைவு கூர்தலை ஒப்பீட்டுளவில் மக்கள் மயப்படுத்த கூடியதாக இருந்தது.எனினும் கடந்த 15 ஆண்டுகளிலும் மக்கள் மத்தியில் இருந்து பயத்தை முழுமையாக அகற்ற முடியவில்லை. அது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. அரசியல் பிரச்சினையுந்தான். அரசியல் தலைமைத்துவப் பிரச்சினையுந்தான்.

விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட நினைவு நாட்களின்போது நீதிமன்றங்களின் முடிவுகளே பெருமளவுக்கு நினைவு கூர்தலைத் தீர்மானிக்கும் ஒரு நிலைமைதான் கடந்த 15 ஆண்டுகளாகக் காணப்படுகின்றது.

இம்முறை வடக்கிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் பெரும்பாலான நீதிமன்றங்கள் நினைவு கூர்தலுக்குச் சாதகமாக முடிவெடுத்துள்ளன.இந்த விடயத்தில் சட்டவாளர்களாகக் காணப்படும் தமிழ் அரசியல்வாதிகள் ஒப்பீட்டளவில் நிரந்தரமான ஒரு சட்ட ஏற்பாட்டைக் குறித்துச் சிந்தித்திருக்கக்கூடிய ஒரு காலகட்டம் இருந்தது என்று ஒரு சட்டவாளர் சில ஆண்டுகளுக்கு முன் சுட்டிக்காட்டினார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான 30/1 தீர்மானத்தின்படி மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டு. தனிப்பட்ட அல்லது பொது நினைவுச் சின்னங்களை உருவாக்கும் உரிமையும் உண்டு.நிலை மாறுகால நீதியின் நான்கு பெரும் தூண்களில் ஒன்று ஆகிய இழப்பீட்டு நீதியின் கீழ் அது குறித்து பேசப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க இழப்பீட்டு நிதிக்கான அலுவலகத்துக்குரிய சட்ட வரைவைக் கொண்டு வந்த பொழுது அதில் நினைவு கூர்தல் தொடர்பாக தமிழ் நோக்கு நிலையில் இருந்து சில ஏற்பாடுகளைத் தமிழ் அரசியல்வாதிகள் இணைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அவ்வாறு முன் யோசனையோடு செயற்பட்டு இருந்திருந்தால், இப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றம் ஏறும் நிலைமை ஒப்பீட்டளவில் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதி உயர் சட்டமாகிய யாப்பில் இருப்பதையே அதாவது 13-வது திருத்தத்தையே முழுமையாக அமல்படுத்தாத ஓர் அரசியல் பாரம்பரியமுடைய நாட்டில், நினைவு கூர்தல் பொறுத்து உருவாக்கப்படும் சட்ட ஏற்பாடுகள் எந்தளவுக்கு மதிக்கப்படும் என்ற கேள்வியும் இங்கு உண்டு.

எதுவாயினும் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயற்பட்ட அக்காலகட்டத்தில்,தென்னிலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உழைத்த அக்காலகட்டத்தில்,தமிழ் மக்களின் நினைவு கூரும் கூட்டுரிமை தொடர்பில் ஏன் முன்யோசனையோடு செயல்பட்டிருக்க வில்லை என்று மேற்படி சட்டவாளர் கேள்வி எழுப்பினார்.

அரசியல்வாதிகளாக உள்ள தமிழ்ச் சட்டவாளர்கள் இந்த விடயத்தில் மட்டுமல்ல நினைவு கூர்தல் சம்பந்தப்பட்ட வேறு ஒரு விடயத்திலும் பொருத்தமான,தாக்கமான விதங்களில் செயல்பட்டிருக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அது என்னவேனில் படை முகாம்களாக மாற்றப்பட்டிருக்கும் துயிலுமில்லங்கள் பற்றிய விவகாரம் ஆகும்.

1996 இல் யாழ் குடாநாடு முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்,கடந்த 28 ஆண்டுகளாக நடைமுறையில்  உள்ள ஒரு விடயம் இது .யாழ்.குடாநாட்டில் கோப்பாய்,கொடிகாமம், வடமராட்சி,எள்ளங்குளம் ஆகிய மூன்று துயிலுமில்லங்கள் படைத்தளங்களாக மாற்றப்பட்டன.அதுபோலவே 2009க்கு பின் வன்னியில்,கிளிநொச்சியில்,தேராவில் துயிலுமல்லத்திலும் முல்லைத் தீவில் ஆலங்குளம்,முள்ளியவளை,அளம்பில் ஆகிய துயிலுமில்லங்களிலும் படைக்கட்டுமாணங்கள் உண்டு. மட்டக்களப்பில் தாண்டியடி துயிலுமில்லம், வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லம் ஆகியவற்றில் படை முகாம்கள் உண்டு. மொத்தம் ஒன்பதுக்கும் குறையாத துயிலுமில்லங்களில் படைமுகாம்கங்கள் உண்டு.

போரில் வெற்றி கொள்ளப்பட்டவர்களின் புதை மேட்டை அவமதிப்பது என்பது நவீன அரசியலில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நடைமுறை. மன்னர்களின் காலத்தில்கூட துட்டகெமுனு தோற்கடிக்கப்பட்ட எல்லாளனுக்கு அனுராதபுரத்தில் ஒரு நினைவுத் தூபியைக் கட்டினான்.அதைக் கடந்து போகின்றவர்கள் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.மன்னர் காலத்தில் பேணப்பட்ட அந்த அரசியல் மாண்பைக்கூட நவீன காலத்தில் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியல் பேணவில்லை.

தோற்கடிக்கப்பட்டவர்களின் புதைகுழிகளின் மீது வெற்றி பெற்றவர்கள் தமது படை முகாம்களைகக் கட்டுவது என்பது எதிரியை இறந்த பின்னரும் தண்டிக்க விரும்பும் ஒரு கூட்டு மனோநிலையின் வெளிப்பாடுதான்.இறந்த பின்னும் அவர்களை நிம்மதியாகத் துயில விடக்கூடாது,இறந்த பின்னும் அவர்களுடைய நெஞ்சை மிதித்து கொண்டு நடக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்ச்சியை அது வெளிப்படுத்துகின்றது.போரில் உயிர்நீத்தவர்களின் மார்பின் மீது குந்தியிருப்பது என்பது போர் வெற்றியைக் கொண்டாடுவதில் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும் அவமதிக்கும் ஒரு நடைமுறைதான்.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொது நினைவு சின்னத்தை உருவாக்குவதற்கான நிபுணர் குழு ஒன்றை உருவாக்கினார்.அக்குழுவினர் திலீபனின் நினைவு நாட்களின்போது யாழ்.கச்சேரியில் ஒரு சந்திப்பை ஒழுங்கு படுத்தினார்கள்.யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இரண்டு சிங்கள நிபுணர்களும் அழகியல் துறை பேராசிரியர்கள் ஆகும் .அவர்களிடம் இவ்வாறு துயிலுமில்லங்களில் படைத்தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறு இறந்தவர்களையும் அவமதிக்கும் ஓர் அரசியல் ராணுவச் சூழலில்,எப்படி பொதுவான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கலாம் என்றும் அவர்களிடம் கேட்கப்பட்டது.

இந்த விடயத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு விவகாரமாக எழுப்பியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக அதை அவர்கள் செய்திருக்கிறார்களா? குறிப்பாக நிலை மாறுகால நீதியின் பங்காளியாக கூட்டமைப்பு செயற்பட்ட காலகட்டங்களில் ஏன் அந்த விவகாரத்தை ஐநாவில் எழுப்பவில்லை? ஏனைய உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுப்பவில்லை? அண்மையில் சிறீதரன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருக்கிறார்.அந்த உரையில் இதுதொடர்பான புள்ளி விபரங்கள் உண்டு  .

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களை தத்தெடுக்க முற்பட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த விடயத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டியிருக்கிறது? பெரும்பாலான கட்சிகள்  இறந்த காலத்தைத் தத்தெடுக்க முயற்சிக்கின்றன. தமிழ் அரசியலில் பெரும்பாலானவர்கள் தங்களை இறந்த காலத்தின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள். துயிலுமில்லங்களை எப்படித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திக்கிறார்கள்.ஆனால் மேற்சொன்ன விடயத்தில் அவர்கள் பயன் பொருத்தமான விதங்களில் அக்கறை காட்டியிருக்கிறார்களா?

அண்மையில் விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தை விடுவிக்க கோரி ஒரு போராட்டம் இடம்பெற்றது. அத்துயிலுல்லத்தின் ஒரு பகுதி இப்பொழுதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதை விடுவிக்க வேண்டும் என்று போராடியது சரி. ஆனால் அந்தப் போராட்டத்தை மாவீரர் நாளுக்கு சில கிழமைகளுக்கு முன்னதாக முன்னெடுப்பது என்பது, வளமையான தமிழ் அரசியலின் மந்தத்தனத்தையே காட்டுகிறது.

இது துயிலுமில்லங்களை அல்லது நினைவுத் தூபிகளை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக சென்று துப்புரவாக்குவதற்கு நிகரானது. கடந்த 15ஆண்டுகளாக பெரும்பாலும் அதுதான் நடந்து வருகிறது.துயிலுமில்லங்களை நொவம்பர் மாதங்களில் மட்டும் துப்புரவாக்குவதும்,நொவம்பர் மாதங்களில் மட்டும் அவற்றைப் புனிதமான இடங்களாக உருவகிப்பதும் சரியா? புனிதமான நினைவிடங்கள் என்றால் அவை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் அப்படித்தான் அவை பராமரிக்கப்பட்டன.ஆனால் இப்பொழுது எத்தனை துயிலுமில்லங்கள் அவ்வாறு தொடர்ச்சியாகப்  பராமரிக்கப்படுகின்றன? அவ்வாறு பராமரிக்கத் தேவையான கட்டமைப்புக்கள்,ஏற்பாடுகள் உண்டா? அப்படித்தான்,மாவீரர்களின் குடும்பங்கள்,புனர்வாழ்வு பெற்ற போராளிகள்,உடலுறுப்புக்களை இழந்த போராளிகள்,யுத்த விதவைகள்,யுத்த அனாதைகள் போன்றோரைத் தொடர்ச்சியாகப் பராமரிக்கும் கட்டமைப்புகள் எத்தனை உண்டு?

மாவீரர்களின் பெற்றோரை மாவீரர் மாதத்தில் மட்டும் அழைத்து அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குவதும் உதவிப் பொதிகளை வழங்குவதும் போதாது. அவர்களுக்கு தொடர்ச்சியாக உதவி வழங்க வேண்டும். அல்லது அவர்கள் உழைத்து சம்பாதிக்க கூடிய விதத்தில் பொருத்தமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.அப்படித்தான் மாவீரர்களின் குடும்பங்கள்,புனர்வாழ்வு பெற்ற போராளிகள்,உடலுறுப்புக்களை இழந்த போராளிகள்,யுத்த விதவைகள், யுத்த அனாதைகள்…போன்றோரின் விடயத்திலும்.ஆனால் அவற்றுக்குரிய கட்டமைப்புகள் அதிகரித்த அளவில் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட கிழமையில் மட்டும் தியாகிகளையும் தியாகிகளின் குடும்பங்களையும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் கௌரவிப்பது அல்லது அவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு விதத்தில் அரசியல் சடங்கு தான்.அதை அதற்குரிய புனிதத்தோடு விசுவாசமாகச் செய்வது என்று சொன்னால்,அதைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும்.புனிதம் என்பதே தொடர்ச்சிதான்.அதைத் தொடர்ச்சியாகச் செய்வது என்று சொன்னால்,அதற்கு வேண்டிய கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களில் கோடிக்கணக்கான காசு புரள்கிறது.உதாரணமாக அண்மையில் சிட் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட தொகை மிகப்பெரியது.இருபது லட்ஷம் கனேடிய டொலர்கள். அதில் சிறு துளி போதும்.மாவீரர்களின் குடும்பங்களையும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளையும் பராமரிப்பதற்கு.எனவே தமிழ் அரசியல்வாதிகள் காசு இல்லை என்ற ஒரு காரணத்தை கூற முடியாது. உரிய கட்டமைப்புகளை பொருத்தமான விதங்களில் உருவாக்கினால்,காசை வெளியில் இருந்து எடுக்கலாம்.நினைவு நாட்களுக்கும்,நினைவுகூரும் நிகழ்வுகளுக்கும், நினைவிடங்களுக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள், இந்த விடயத்தில் நினைவு கூர்தலின் புனிதத்தைத் தொடர்ச்சியைப் பேணத்தக்க விதத்தில் கட்டமைப்புகளை உருவாக்குவார்களா? கட்டமைப்புகளை கட்சிசாரா பொதுக் கட்டமைப்புகளாக உருவாக்கினால். அது மேலும் பொருத்தமாக இருக்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *