“சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதை எப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது.மெய்யாகவே,அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது”
– மார்கரட் மீட்
கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில்,”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள்
அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.தனது தலைமை உரையில் அவர் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கிளிநொச்சி மாவட்டத்தின் உளவியல் நெருக்கடிகள் குறித்துப் பேசினார்.பேச்சின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார் “நான் களைத்து விட்டேன்.அதனால் மேற்படிப்புக்காக சற்று ஓய்வெடுக்கப் போகிறேன்” என்று.
உண்மை.ஆயுத மோதல்களுக்குப் பின்னரான தமிழ்ச்சமூகத்தின் அசாதாரணமான கூட்டு உளவியலைக் கையாள்வதற்குத் தேவையான அளவு மனநிலை மருத்துவநிபுணர்கள் இல்லை.இருக்கின்ற கொஞ்சம் மருத்துவர்களிடமே எல்லாச் சுமைகளும் சுமத்தப்படுகின்றன.
கடைசிக்கட்டப் போரில் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு,கிளிநொச்சி, வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு நிரந்தர மனநல மருத்துவ நிபுணர்கள் இப்பொழுது இல்லை.யாழ்ப்பாணத்தில் மூன்று மருத்துவ நிபுணர்கள் உண்டு. கிளிநொச்சி, முல்லைத்தீவு இரண்டையும் ஒரு மருத்துவ நிபுணர் தற்காலிகமாக பார்க்கிறார்.வவுனியாவிலும் அதுதான் நிலைமை. 2009க்குப் பின்,பாதிக்கப்பட்ட தமிழ் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மனநிலை மருத்துவர் நிபுணர்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். எனினும் போரின் உளவியல் விளைவுகளைக் கையாள்வது என்ற அடிப்படையில் தமிழ் மாவட்டங்களை ஒருங்கிணைத்த ஒரு மனநல மருத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.
அதே சமயம்,2009க்கு பின்னரான தமிழ்ச்சமூகத்தின் கூட்டு உளவியல் நெருக்கடிகளைக் கையாள்வதற்கு தனியாக மனநல மருத்துவர்களால் மட்டும் முடியாது. ஆஸ்பத்திரிகளால் மட்டும் முடியாது.அது ஒரு கூட்டுப் பிரச்சினை.அது ஒரு சமூகத்தின் கூட்டு உளவியல் சம்பந்தப்பட்ட விடயம்.மருத்துவர்களோடு அரசியல்வாதிகள்;அரசியல் செயற்பாட்டாளர்கள்;சமூகத் தலைவர்கள்;சமூகப் பெரியார்கள்;மதத் தலைவர்கள்;கருத்துருவாக்கிகள்;அரச சார்பற்ற நிறுவனங்கள் முதலாக பல்வேறு வகைப்பட்ட தரப்பினரும் இணைந்து கூட்டாகச் செயல்பட வேண்டும்.ஒரு கூட்டுச் சிகிச்சையாக,கூட்டுக் குணப்படுத்தலாக அமையவல்ல அரசியல்,சமூகப்பொருளாதாரா வழி வரைபடம் ஒன்று வேண்டும்.ஆனால் அவ்வாறான கூட்டச்செயற்பாடு இல்லாத வெற்றிடத்தில் மருத்துவர்களின் தலையில் மொத்தச் சுமையும் சுமத்தப்படுகிறது.
வயதால் மிக இளைய தமிழ் நகரங்களில் ஒன்று கிளிநொச்சி. ஒரு குடியேற்ற நகரம் என்ற அடிப்படையில் வயதால் இளைய ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டிருக்கிறது.இரணைமடுப் பெருங்குளத்தை மையமாகக் கொண்ட குடியேற்றங்களின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நகரம்.ஆயுத மோதல்களுக்கு முந்திய காலகட்டத்தில் அந்நகரத்தைக் கட்டியெழுப்பியவர்களில் ஆனந்தசங்கரி குறிப்பிடத்தக்கவர்.அதுபோல ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் எல்லா ஆயுதப் போராட்ட இயக்கங்களும் அதைக் கட்டியெழுப்பின.குறிப்பாக மூன்றாங்கட்ட ஈழப்போரின் விளைவாக கிளிநொச்சி சமாதானத்தின் தலைநகரமாக மேலெழுந்தது. அது சமாதானத்தின் காட்சி அறையாகவும் பிரகாசித்தது.ஆனால் நாலாங்கட்ட ஈழப்போர் வெடித்த போது அது ஒரு பேய் நகரமாக மாறியது.
ஏனைய தமிழ் நகரங்களோடு ஒப்பிடுகையில் அதிக சேதமடைந்த ஒரு நகரமும் அது.ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கூட்டுக்காயங்கள்;கூட்டு மனவடுக்கள்;கூட்டு அவமானங்கள்…போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நகரம்.கூட்டுத் தண்டனைக்கு உள்ளாகிய ஒரு நகரம்.அந்த நகரத்தை,மாவட்டத்தை 2009க்குப்பின் சிறீதரனும் சந்திரகுமாரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகளும் தனிநபர்களும் கட்டியெழுப்பினார்கள். சிறீதரனும் சந்திரகுமாரும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தவர்கள்.ஒருவர் உரிமை மைய அரசியல்.மற்றவர் அபிவிருத்தி மைய அரசியல்.இந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடு கிளிநொச்சியின் 2009க்குப் பின்னரான அரசியற் சூழலை பெரிதும் தீர்மானித்தது.அடுத்த ஜனவரி மாதம் தமிழரசுக் கட்சியின் தலைமையைத் தீர்மானிப்பதற்கான ஒரு தேர்தல் நடக்கக்கூடும்.அப்படி நடந்தால்,சிறீதரன் ஒரு போட்டியாளர்.ஆயுத மோதல்களுக்கு பின்னரான தமிழ் அரசியலில் கிளிநொச்சிக்குரிய முக்கியத்துவத்தை இது காட்டுகின்றது.
கிளிநொச்சியும் உட்பட,போரால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் மாவட்டங்களின் மீது அதிகரித்த கவனக்குவிப்பு இருந்திருக்க வேண்டும்.அந்த மாவட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டுச்சிகிச்சையாக அமையவல்ல கூட்டுச் சமூக, அரசியல்,பொருளாதாரத் திட்டங்களை வகுத்திருந்திருக்க வேண்டும். வடமாகாண சபை உருவாக்கப்பட்டபோது அதைக் குறித்து மேலும் ஆழமாகச் சிந்தித்திருக்க வேண்டும்.ஆனால் அது நடக்கவில்லை.ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 14 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக; பொருளாதார ரீதியாக;உளவியல் ரீதியாக;முழுமையாகக் குடியமராத (unsettled) ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.சமூகத்தின் பெரும் பகுதி இப்பொழுதும் கொந்தளிப்பான ஒர் உளவியல் சூழலுக்குள்தான் காணப்படுகின்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மூத்த மனநல மருத்துவர் சிவதாஸ் கூறுவதுபோல,சமூகம் இப்பொழுதும் தப்பிப்பிழைக்கும் வழியைத்தான் தேடுகின்றது.Survival mode.
2009க்குப் பின்னரான புனர்வாழ்வு பெற்ற போராளிகள்;உறுப்புகளை இழந்த போராளிகள்;போர் விதவைகள்;முதியோர்;போர் அனாதைகள்;மாவீரர் குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களுக்கும் கூட்டுச்சிகிச்சை தேவைப்படுகின்றது. கூட்டுக் குணமாக்கல் தேவைப்படுகிறது.தமிழ்ச்சமூகம் இப்பொழுதும் கொந்தளிப்பான ஒரு மனநிலையோடு காணப்படுகிறது. அதைப் பின்வரும் காரணங்கள் தீர்மானிக்கின்றன…
முதலாவது, அரசியல்ரீதியாக நிலைமாற்றம் ஏற்படாமை.அதாவது ஒடுக்குமுறையின் விளைவாகத் தோன்றிய ஆயுதப் போராட்டந்தான் நசுக்கப்பட்டிருக்கிறது.போருக்கு மூல காரணமான இன ஒடுக்குமுறை தொடர்ந்து நீடிக்கின்றது.அது ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கும் நிகழ்ச்சிநிரலோடு காணப்படுகின்றது.
இரண்டாவதாக,மேற்படி நிகழ்ச்சிநிரலை எதிர்கொண்டு,ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு புதிய மிதவாத அரசியலுக்கு,ஒரு புதிய பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்கவல்ல தலைமைகள் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை என்ற வெற்றிடம்.
மூன்றாவது,புலம்பெயர்ந்து வாழும் நிதிப்பலம்மிக்க தமிழர்கள் தாயக அரசியலின் மீது தலையீடு செய்கிறார்கள். அவர்கள் கள யதார்த்தத்திற்கு வெளியே இருந்தபடி, பிரிவேக்கத்தோடு தாயக அரசியலின் மீது ஏதோ ஒரு விதத்தில் தலையீடு செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய நிதி அதிகாரம் நல்லதையும் செய்கின்றது; கெட்டதையும் செய்கின்றது.
நாலாவது, உலகளாவிய தொழில்நுட்ப மாற்றமானது ஒருபுறம் தமிழ் மக்களை இணைய வலையில் பிணைக்கின்றது. இன்னொருபுறம் அது தமிழ் மக்களைச் சிதறடிக்கின்றது.ஒரு தாங்க முடியாத தோல்விக்கு பின், கடந்த 14 ஆண்டுகளாக கொத்தளித்துக் கொண்டிருக்கும் கூட்டு உளவியலின் விளைவாக, தமிழ் மக்கள் இணைய வெளியில் தங்களுடைய கண்களைத் தாங்களே தோண்டுகிறார்கள்; தங்களுடைய கழுத்தைத் தாங்களே அறுக்கிறார்கள்;தங்களுடைய புனிதங்களின் மீது தாங்களே மலத்தைப் பூசுகிறார்கள்.
இறந்த காலத்தில் கல்வியைத் துறந்து சுகபோகங்களைத் துறந்து போராடி,கண்ணை,கையை,காலை, இழந்தவரெல்லாம் ஓரமாகநின்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க,பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மினுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் மற்றவர்களை நோக்கிச் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகிறார்கள்.
ஐந்தாவது காரணம்,ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு தமிழ்ச்சமூகத்தில் இயல்பான சமூகப்,பொருளாதார,அரசியல் கட்டமைப்புக்கள் இருந்தன.ஆயுதப் போராட்டம் புதிய கட்டமைப்புகளையும் புதிய விழுமியங்களையும் புதிய பண்பாட்டையும் கொண்டு வந்தது. ஏற்கனவே இருந்த பலவற்றை நீக்கியது.ஆனால் அது தோற்கடிக்கப்பட்ட போது அது கொண்டு வந்த புதிய கடடமைப்புக்களும் சிதைந்து விட்டன.அதற்கு முன் இருந்த சமூகக் கட்டமைப்புகளும் சிதைந்து போய்விட்டன.அதனால் கடந்த 14 ஆண்டுகளாக நிறுவன உருவாக்கிகளும் அமைப்புருவாக்கிகளும் அதிகரித்த அளவில் தேவைப்படுகிறார்கள்.
மேற்கண்ட பிரதான காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக, ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது,பண்புரு மாற்றத்துக்குத் தேவையான ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தில்,அதற்கு வேண்டிய கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்,தத்தளித்துக் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்டதோர் அமைதியுறாத, கொந்தளிப்பான, காத்திருக்கின்ற கூட்டு உளவியலைத்தான் வெளிச்சக்திகள் வெவ்வேறு வடிவங்களில் கையாளப் பார்க்கின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவருடைய மகள் வருகிறார் என்ற அறிவிப்பும் எதிர்பார்ப்பும் இந்தப் பின்னணிக்குள்தான் நிகழ்ந்தது. ஒரு மீட்பருக்காக காத்திருக்கும் ஒரு நிலை உள்ளவரை, தங்களுக்குள் தீர்க்கதரிசனமும் அர்ப்பணிப்பும் மிக்க தலைமைகளைக் கட்டி எழுப்ப முடியாதவரை ; திரும்பப்பெற முடியாத இறந்த காலத்தை “மம்மியாக்கம்” செய்து காவும்வரை; இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாத வரை;அரசியலை அறிவியலாக விளங்கிக் கொள்ளாதவரை ; இந்த நிலைமை தொடர்ந்துமிருக்கும்
துவாரகாவைக் கொண்டு வருவது எனப்படுவது ஏற்கனவே கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வரும் ஓர் அரசியல் போக்கின் தொடர்ச்சிதான். தலைமையை அல்லது தகைமையை வெளியே தேடுவது.சம்பந்தரும் அதைத்தான் செய்தார்.முதலில் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதன்பின் விக்னேஸ்வரனைக் கொண்டுவந்தார்.அதன்பின் தன் சொந்த மாவட்டத்திற்குக் குகதாசனைக் கொண்டு வந்தார்.பட்டப்படிப்புகள் இல்லாத போராட்டத் தலைமைகள் தமிழ் சிங்கள உறவுகளை பகை நிலைக்கு தள்ளி விட்டன என்று அவர் நம்பினார். எனவே மெத்தப் படித்த, சட்டப் பின்னணியைக் கொண்ட,புதியவர்களை கட்சிக்குள் இறக்கி,சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார்.அந்த அடிப்படையில் கட்சியை முதலில் புலி நீக்கம் செய்தார்.அதன் பின் ஆயுதப் போராட்ட நீக்கம் செய்தார்.அதற்கு வேண்டிய ஆட்களைக் கட்சிக்குள் கொண்டு வந்தார்.ஆனால் அவருடைய சொந்தக் கட்சியே இப்பொழுது இரண்டாக உடையும் நிலை. அவருடைய சொந்த மாவட்டத்திலேயே ஆசனத்தை இழக்கும் ஆபத்து. சம்பந்தரின் அரசியல் வழியானது அவருடைய வாரிசுகளே அவரைத் தூக்கி எறியும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த அரசியலின் தோல்விதான் கடந்த 14 ஆண்டு கால காத்திருப்பு அரசியலும். ஒரு மீட்பரின் வருகைக்காக காத்திருப்பது.அவ்வாறு ஒரு மீட்பரின் வருகைக்காக காத்திருக்கும் நிலைமை தொடரும்வரை வெளியில் இருந்து மீட்பர்கள் உற்பத்தி செய்யப்படுவார்கள்.
இந்த நிலைமையை மாற்றுவதென்றால்,தமிழ்மக்கள் மத்தியில் இருந்து பண்புருமாற்றத்திற்குத் தலைமை தாங்கும் ஆளுமைகள் மேற்கிளம்ப வேண்டும். ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கூட்டுக்காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுக் கொந்தளிப்புக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையத்தக்க கூட்டுச் செயற்பாட்டுகளுக்கு தேவையான பொருத்தமான கட்டமைப்புகளை தமிழ்மக்கள் உருவாக்க வேண்டும்.
கடந்த 29 ஆம் தேதி கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட உளநல வலையமைப்பு அவ்வாறான கட்டமைப்புகளில் ஒன்றாக வளர்ச்சிபெற வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 1987 இலிருந்து “சாந்திகம்” என்ற உளவளத் துணை நிலையம் செயற்பட்டு வருகின்றது.
மேலும்,விதவைகளுக்கான கட்டமைப்பு;முதியோருக்கான கட்டமைப்பு; அனாதைச் சிறுவர்களுக்கான கட்டமைப்பு;உறுப்புகளை இழந்தவர்களுக்கான கட்டமைப்பு;போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டமைப்பு; நினைவு கூர்தலுக்கான கட்டமைப்பு;கலை பண்பாட்டுக் கட்டமைப்பு; முதலீட்டுக் கட்டமைப்பு;உலகளாவிய ஒரு வங்கி, உலகளாவிய ஒரு தொண்டு நிறுவனம்…போன்ற பல்வேறு கட்டமைப்புகளையும் தமிழ்மக்கள் உருவாக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் போதிய நிதி உண்டு;வளங்கள் உண்டு.தாயகத்தில் தேவை உண்டு.இரண்டையும் இணைப்பதற்கு அரசியல் தலைமைகளால் முடியவில்லை என்றால்,நிறுவன உருவாக்கிகள் அதைச்செய்யலாம்.அமைப்பு உருவாக்கிகள் அதைச் செய்யலாம்.
தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது தொண்டுத் தேசியந்தான். முன்னுதாரணம் மிக்க செயற்பாட்டாளர்கள்;முன்னுதாரணம் மிக்க தொண்டர்கள்.ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொருத்தமான நிறுவனங்களை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி மற்றும் துறைசார் அறிவுப் பங்களிப்புடன் கட்டியெழுப்ப வேண்டும்.அதாவது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலுக்கு தலைமைதாங்கத் தக்கவர்கள் மேலெழும் பொழுது சமூகம் வெளியாருக்காக காத்திருக்காது.அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்காது.மாறாக தானே அதிசயங்களையும் அற்புதங்களையும் பெருஞ் செயல்களையும் செய்யத் தொடங்கிவிடும்.