வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் 

புதிய ஆண்டு பிறந்த கையோடு  ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

 

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில்  இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *