எமது பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு நாளும் ராசிபலன் வரும். ஆனால் எந்தப் பத்திரிகைகையிலாவது வானியல் பத்தி என்று ஏதாவது உண்டா? அதுபோலவே எல்லா பத்திரிகைகளிலும் சுற்றுச்சூழலை மாசாக்கும் பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் வரும். எத்தனை பத்திரிகைகளில் சுற்றுச் சூழல் தொடர்பான பத்திகள் வருவதுண்டு?
எனக்குத் தெரிந்தவரை ஈழத் தமிழர்கள் மத்தியில் பொ.ஐங்கரநேசன் தினக்குரல் பத்திரிகையிலும் நங்கூரம் இதழிலும் அவ்வாறான கட்டுரைகளை எழுதினார்.1996 இதிலிருந்து அவர் தொடர்ச்சியாக எழுதிய சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைகள் பின்னர் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. அவருடைய கட்டுரைகள் வாராந்தப் பத்திகளை விட அடர்த்தியானவை.அவர் தினக்குரலில் எழுதுவதை நிறுத்திய பின் ஹுஸ்னா என்ற பெண் சுற்றுச்சூழல் தொடர்பான பத்திகளை எழுதி வருகிறார்.அண்மை ஆண்டுகளில் ராம் வீரகேசரியில் எழுதி வருகிறார்.யாழ்ப்பாணத்திலிருந்து லோகதயாளனும் இடைக்கிடை சூழலியல் பத்திகளை எழுதுவார்.
மு.தமிழ்ச்செல்வன் கடந்த 17 ஆண்டுகளாக கிளிநொச்சியிலிருந்து சூழலியல் பத்திகளை எழுதி வருகிறார்.2006 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்து வெளிவந்த வெள்ளிநாதம் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்த காலத்தில் முதலாவது சூழலியல் பத்தியை எழுதத் தொடங்கினார். 2009க்குப் பின்னிருந்து கொழும்பிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் எழுதி வருகிறார்.கடந்த 17 ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளில் 13 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ச்செல்வனின் பத்திகள் பெருமளவுக்கு அவர் வாழும் கிளிநொச்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.அங்கே உள்ள சுற்றுச்சூழல் விவகாரங்களை அவர் அறிக்கையிடுகிறார்.சில பத்திகள் உலகப் பொதுவானவை.
சுற்றுச்சூழல் எனப்படுவது உலகப் பொதுவானது.முழு மனித குலத்துக்குமானது. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி. எனவே தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை நாசமாக்கினால்,மனிதன் தன்னைத்தானே நாசமாக்குகிறான் என்று பொருள்.சுற்றுச்சூழலுக்கு நடைமுறையில் அரசியல் எல்லைகள், தேசிய எல்லைகள் உண்டு.ஆனால் சூழலியல் விளைவுகளைக் கருதிக்கூறின், சுற்றுச்சூழலுக்கு தேசிய எல்லைகள், அரசியல் எல்லைகள் கிடையாது. காற்றுக்கு எல்லைகள் இல்லை; சூரியனுக்கு எல்லைகள் இல்லை. பேரியற்கைக்குச் சூழலியல் அர்த்தத்தில் எல்லைகள் கிடையாது. கடலுக்கும் வானத்துக்கும் நிலத்துக்கும் அரசியல் அர்த்தத்தில் தேசிய எல்லைகள் உண்டு. ஏனென்றால் நாடு என்பது வரையறுக்கப்பட்ட ஒரு புவியியல் நிலப்பரப்பு. அந்த நிலப்பரப்பிற்குள் வரும் பேரியற்கையின் அம்சங்கள் அனைத்துக்கும் அந்த நாட்டின் அதிகார மையம் ஆகிய அரசு பொறுப்பு. அத்தகைய பொருளில் அங்குள்ள பேரியற்கையின் அம்சங்களுக்கு தேசிய எல்லைகள் உண்டு. ஆனால் அவை மாசாக்கப்படும் பொழுது ஏற்படும் விளைவுகள் அந்த நாட்டை மட்டும் தாக்காது; அயல்நாடுகளையும் தாக்கும்;பூமி முழுதையும் தாக்கும்; முழு மனித குலத்தையும் தாக்கும். அத்தகைய பொருளில் கூறின்,அதாவது சூழலியல் அர்த்தத்தில் கூறின்,அதன் விளைவுகள் உலகம் முழுவதுக்குமானவை. அரசியல், தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை.
அப்படி பார்த்தால்,ஒரே சமயத்தில் உள்ளூர்ப் பரிமாணத்தையும் அல்லது தேசிய அரசியல் பரிமாணத்தையும்,அதே சமயம் உலகளாவிய பரிமாணத்தையும் கொண்டிருக்கும் ஓர் ஆய்வுப்பரப்பு சூழலியல் ஆகும். இந்த அடிப்படையில் சூழலியல் பற்றிய கட்டுரைகள்,பத்திகள் பெரும்பாலும் உலகளாவியவை ஆகவும் உள்ளூர்த் தன்மை மிக்கவைகளாகவும் இருக்கும்.
தமிழ்ச்செல்வனின் பெரும்பாலான பத்திகள் அத்தகையவைதான்.அவை உலகளாவிய அம்சங்களில் இருந்து தொடங்கி, பின் உள்ளூர் அம்சங்களில் வந்து முடியும்.அந்த உள்ளூர் அம்சங்கள் உள்ளூர் அரசியல் சம்பந்தப்பட்டிருக்கும்.தமிழ்ச்செல்வன் அந்த உள்ளூர் அரசியலை பெருமளவுக்குத் தொடவில்லை.சில இடங்களில் தொடுகிறார்.எனினும், பொதுவாக அவரது பத்திகளில் அரசியல் பரிமாணத்தை விடவும் சுற்றுச்சூழல் பரிமாணமே அதிகமாக உண்டு.ஆனால் அரசியல் இல்லாத சூழலியல் கிடையாது.
ஓர் உள்ளூர் பத்திரிகையில் குறிப்பாக,ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,அதிலும் குறிப்பாகப் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் வாழ்ந்தபடி,தமிழ்ச்செல்வன் சூழலியல் பத்திகளை எழுதுகிறார். போர் இயற்கையை அழிக்கின்றது;மாசாக்குகின்றது; சாம்பலாக்குகின்றது. போரின் தேவைகளுக்காக மனிதர்கள் பனை மரங்களை வெட்டுகிறார்கள்;நிலத்தை அகழ்கிறார்கள்;மண் அரண்களை உருவாக்குகிறார்கள்.உருவாக்கப்பட்ட அரண்கள் இயற்கையாக நீர் வழிந்தோடும் வழிகளை தடுக்கின்றன. போர் வெற்றிகளின் மூலம் கைப்பற்றப்பட்ட நிலத்தில் காட்டை, கடலை, காட்டு மண்ணை, கடற்கரை மணலை, கடல் படு திரவியங்களை, கனிப்பொருட்களை, இன்ன பிறவற்றைக் கவர்ந்துசெல்ல முற்படும் சக்திகள் பூமியின் கர்ப்பத்தை விறாண்டி எடுக்கின்றன.போர்க் காலத்தில் வன்னியில் பொருளாதாரத் தடை காரணமாக இரசாயன உரங்கள் கிடைக்கவில்லை. அதனால் வன்னி மண் மாசாகவில்லை.அது பொருளாதாரத் தடை என்ற தீமையால் விளைந்த ஒரு நன்மை, ஆனால் 2009க்குப் பின் அதிகரித்த ரசாயன உரப் பாவனையால் வன்னி மண் மாசாகி வருவதை தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ்ச்செல்வனின் பெரும்பாலான கட்டுரைகள் ஆயுத மோதலுக்கு பின்னரான சூழலியல் அழிவுகள், சேதங்கள் பற்றியவை. தன்னுடைய சூழலியல் விழிப்பு பத்திகளுக்காக அவர் அரச விருதினைப் பெற்றார்.2009 க்கு பின்னரான தமிழ் ஊடகத் துறைக்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது.
தமிழ்ச்செல்வனை அவர் ஊடகத் துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே எனக்குத் தெரியும். சிறிய மெலிந்த தோற்றம்.மேலுதடுவரை நறுக்கப்பட்ட ஐய்தான மீசை.விளைவைப் பற்றிப் பயப்படாமல் கருத்துச் சொல்லும் இயல்பு.அதனாலேயே அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகுபவர்.2009 க்குப் பின்னரான கிளிநொச்சி மைய ஊடகப்பரப்பில், அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகிய ஓர் ஊடகவியலாளராக அவர் கவனிப்பைப் பெறுகிறார். கிளிநொச்சியை மையமாகக் கொண்டு எழுச்சி பெறும் ஓர் ஊடகத் தளத்தில் அவருக்கென்று தனித்துவமான ஓரிடம் உண்டு.
23.12.23, யாழ்ப்பாணம்
தமிழ்ச்செல்வனின் சூழலியல் பத்திகளின் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை