தொடக்கத்திலிருந்தே அர்ஜுனா சர்ச்சைகளின் மையமாக இருந்தார். சர்ச்சைகள்தான் அவரை வைரல் ஆக்கின. சர்ச்சைகள்தான் அவரை பிரபல்யம் ஆக்கின.சர்ச்சைகள்தான் அவருடைய அரசியல் பிரவேசத்துக்கான முதலீடு.
அரசியலில் மிகக் குறுகிய காலத்துக்குள் எழுச்சி பெற்றவர் அவர். இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் ஊடகக் கவனிப்பை பெற்ற ஒருவராக குறிப்பாக,சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் குவிமையப்படுத்தப்படும் ஒருவராக அவர்தான் காணப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும் எதையாவது வில்லங்கமாகச் செய்து விடுகிறார். பின்னர் அதை அவரே பெருமிதமாகப் பகிரவும் செய்கிறார்.அவருக்கு இப்பொழுது கிடைக்கும் ஊடக கவர்ச்சி நெகட்டிவானது.ஆனால் அவர் அதை ரசிக்கிறார்.கிட்டத்தட்ட சுமந்திரனும் தமிழரசியலில் அப்படி ஒரு நெகட்டிவ் கவர்ச்சியைத்தான் அதிகமாகப் பெற்றார். அதன் மூலமே தமிழரசியலில் எப்பொழுதும் பேசப்படும் ஒருவராக விளங்கினார். இப்பொழுது அர்ஜுனா.
அர்ஜுனா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து அவரையும் கிண்டல் செய்து அவரைத் தெரிவு செய்த யாழ்ப்பாணத்தவர்களையும் கிண்டல் செய்து விமர்சனங்கள், மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரைப் போன்ற ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன்மூலம் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்து விட்டதாக, தமிழ் மக்களுக்குள் ஒரு பகுதியினர் கருதுவதாகத் தெரிகிறது.
ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் உலகப் பேரரசும் ஆகிய அமெரிக்காவில் ஒரு ட்ரம்ப் தெரிவு செய்யப்படலாம் என்றால்,ஏன் அர்ஜுனாவை யாழ்ப்பாணத்தவர்கள் தெரிவு செய்யக்கூடாது என்று கேட்டால் அதற்கு என்ன பதில்?
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப்பும் ஒரு சர்ச்சைகளின் நாயகன்தான். வழமையான அரசுத் தலைவருக்குரிய பாரம்பரியங்களை அவர் பெருமளவுக்கு கட்டுடைக்கின்றார். ஒரு அரசுத் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பவித்திரமான வரையறைகளை உடைத்துக் கொண்டு அவர் வெளியே வருகிறார். உலகப் பேரரசு ஒன்றின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலிந்து நடிப்பதில்லை. சில சமயங்களில் அவர் பிரித்தானியத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் நகைச்சுவை நாயகன் “மிஸ்டர் பீன்”என்ற கதாநாயகரை ஞாபகப்படுத்துவார்.
“மிஸ்டர் பீன்” மேற்கத்திய பண்பாட்டின் நடுத்தர வர்க்கத்தின் நவநாகரீக பிம்பங்களை உடைப்பவர். “டீசன்ட்” என்று கருதப்படும் விடயங்களில் வழமைக்கு மாறாக நடப்பதுதான் அவருடைய வழமை.
நவநாகரிக நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடியும் எதையெல்லாம் டீசன்ட் என்று கருதுகின்றனவோ,பாதுகாக்கின்றனவோ,அவற்றையெல்லாம் மிஸ்டர் பீன் கேள்விக்கு உள்ளாக்குவார்;சிரிக்கத்தக்கவையாக்குவார்.அல்லது சிரிப்புக் கிடமாக்குவார். அவர் நவநாகரீக உலகின் புனிதங்களை உடைப்பார்,பௌத்திரமான வரையறைகளை உடைப்பார்.மிஸ்டர் பீனின் சேட்டைகளைப் பார்த்துச் சிரிப்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிப்பவர்கள்தான்.தங்களுக்குள் இருக்கும் நடுத்தர வர்க்க சுபாவத்தை சுயவிமர்சனம் செய்து கொள்பவர்கள்தான்.
அர்ஜுனாவின் நடவடிக்கைகளிலும் அந்தப் பண்பு உண்டு. அவர் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.யாரையுமே சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. எதுவெல்லாம் சீரியஸ் ஆனவையாக , டீசன்ட் ஆனவையாக , இங்கிதமானவையாகக் கருதப்படுகின்றனவோ அவற்றையெல்லாம்ல்லாம் அவர் கட்டுடைக்கின்றார். அவற்றையெல்லாம் அவர் வேடிக்கையாகுகின்றார். அவர் எதிலுமே ஒளிவுமறைவு இல்லாதவர்போல தன்னை வெளிப்படுத்துகிறார்.அவர் வெட்கப்படுவது குறைவு. தன் தவறுகளையும் தன் வாயாலே சொல்கிறார். அவருடைய சொந்த வாக்குமூலங்களே எதிர்காலத்தில் அவருக்கு எதிராகத் திரும்ப முடியும். ஆனால் அவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளத் தெரியாத அல்லது தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு பிரபல்யம்.
ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், இவருடைய வேடிக்கையான நடவடிக்கைகள் அவருடைய அடிப்படை இயல்பா? அல்லது அவர் வேண்டுமென்று அவ்வாறு நடிக்கின்றாரா? என்று.ஏன் அவர் நடிக்க வேண்டும்? என்று கேட்டேன். அவர் கண்டபடி எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்கிறார். எனவே அந்த எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு ஒரு கோமாளி வேடத்தை அவர் பூண்டிருக்கலாம் அல்லவா? என்று கேட்டார். நான் சொன்னேன், அவர் நடிக்கவில்லை அதுதான் அவருடைய இயல்பு. இயல்பாக இருப்பதுதான் அவருடைய பலமும் பலவீனமும். அவர் நேரலையில் எப்பொழுதும் இயல்பாகத் தோன்றுகிறார். கமராவுக்கு முன் நிற்கிறேன் என்பதற்காக நடிக்கவோ அல்லது இறுக்கமாக,சீரியஸாகத் தன்னை காட்டவோ அவர் முயல்வதில்லை. அதை வெளிப்படைத் தன்மையாக ஏற்றுக் கொள்பவர்கள் அவரை ஆர்வத்தோடு பார்க்கின்றார்கள்.
தமிழரசியலின் சீரியசான, இறுக்கமான, சிரிப்புக் குறைந்த பண்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அவர் நிற்கிறார். எல்லாவற்றையுமே சிரிப்பாக்குகிறார். தானும் ஒரு சிரிப்புப் பொருளாக “மீம்சாக”, மிஸ்டர் பீன்” ஆகத் தோன்றுகிறார்.
பத்தாவது நாடாளுமன்றத்தில் தொடக்க அமர்விலேயே அவர் எங்களைச் சிரிக்க வைத்து விட்டார்.தொடக்கமே பரபரப்புத்தான்.அர்ஜுனா நாடாளுமன்றத்துக்கு ஒரு அதிர்ச்சி.அவர் நாடாளுமன்றத்தையும் அது புனிதம் என்று கருதும் நடைமுறைகளையும் அபத்தமாக்கி விட்டார். தமிழ் மக்களின் கடந்த சுமார் 75 ஆண்டு கால அனுபவத்தின்படி நாடாளுமன்றத்துக்குள்ளால் மீட்சி கிடைக்கப் போவதில்லை. நாடாளுமன்றம்தான் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புச் சட்டங்களை நிறைவேற்றியது.ஜி.ஜி.பொன்னம்பலத்தில் தொடங்கி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரையிலும் மூன்று தலைமுறைகளின் காலப்பகுதிக்குள் ஆற்றப்பட்ட எல்லா உரைகளும் ஹன்சாட்டில் பதிவு செய்யப்பட்டதற்குமப்பால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவந்ததற்குமப்பால் தமிழ் மக்களுக்கு திருப்தியான,பாதுகாப்பான எதையுமே பெற்றுத்தரவில்லை. நாடாளுமன்றத்தை ஒரு அபத்த மேடையாக மாற்றிய சிங்கள பௌத்த அரசியல் பாரம்பரியத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஒரு தண்டனையாக அர்ஜுனாவைக் கருத வேண்டும் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார்.
அர்ஜுனாவின் வெற்றியும் தோல்வியும் அவர் இறுக்கமின்றி இயல்பாகத் தோன்றுவதுதான்.அவருடைய வெளிப்படைத் தன்மைதான்.அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் எதிரிகளைச் சம்பாதிக்கிறார்.தன்னை தற்காத்துக் கொள்ளாமல் நேரலையில் வருகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் கண்டபடி கதைக்கிறார்.நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து, அவ்வாறு தற்காப்புணர்வற்ற ஒருவர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
அதற்கு முதலாவது பிரதான காரணம், அவர் ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மருத்துவத்துறைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தமை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொண்டமை.
இரண்டாவது காரணம், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம். தங்களுடைய உடனடிப் பிரச்சினைகளைப் பேசவல்ல, தங்களுடைய வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டவல்ல தலைவர்களுக்காகத் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏக்கத்தின் விளைவாகவே அர்ஜுனா வெற்றி பெற்றார்.
மூன்றாவது காரணம், சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் யூட்யூப்களின் பெருக்கமும். செய்தி இப்பொழுது பணம். பரபரப்பு இப்பொழுது பணம். யூடியுப்கள் பார்வையாளர்களை எப்படி அதிகப்படுத்தலாம், வருமானத்தை எப்படிக் கூட்டலாம் என்றுதான் அதிகமாகச் சிந்திக்கின்றன.இதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் யூடியுப்கள் எத்தனை? இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலும் அர்ஜுனாவை வீங்கச் செய்தது. சமூக வலைத்தளங்கள் ஊதிப் பெருப்பித்த ஒரு பலூன் அவர்.
நாலாவது காரணம், அவருடைய வெளிப்படைத் தன்மை,இறுக்கமில்லாத,வெட்கப்படாத,அப்பாவித்தனமான வெளிப்படைத்தன்மை. தமிழ்த் தேசிய அரசியலின் சீரியஸான,இறுக்கமான,சிரிப்பில்லாத பண்புக்கு எதிராக அர்ஜுனா சீரியஸான எல்லாவற்றையுமே சிரிப்புக்கிடமாக மாற்றுகிறார்.அதுவும் அவருக்குக் கவர்ச்சியைக் கொடுத்தது.
பத்தாவது நாடாளுமன்றம் அவரை எவ்வளவு காலத்துக்குச் சகித்துக் கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றுக்கு கணிசமான அளவுக்கு நேரடியாக வாக்களித்திருக்கும் ஒரு பின்னணிக்குள், தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் கடந்த நாடாளுமன்றத்தை விடவும் இந்த முறை மேலும் இரண்டு ஆசனங்களால் குறைந்து போயிருக்கும் ஒரு பின்னணிக்குள், அதாவது சீரியசான, பின்னடைவான ஓர் அரசியல் சூழலுக்குள், தமிழ் மக்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, எல்லாவற்றையும் சிரித்துக் கடக்கும் ஒரு அனுபவத்தைத் தர ஒரு மிஸ்டர் பீன் கிடைத்திருக்கிறாரா? சிரிப்போம்.கடப்போம்.
2 Comments