விஜய் வெற்றி பெற்ற பின்,நடிகர் சத்யராஜ் சொன்னார் “தமிழக அரசியலில் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை,ரசிகர் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று.புதுடில்லியை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளராகிய ராஜன்குறை கிருஷ்ணன் கூறுகிறார்…”தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒரு கட்சிக்கு தேவையான கட்டமைப்புகள்,பலமான வேட்பாளர்கள் போன்ற எவையும் தேவையில்லை என்று விஜய் நிரூபித்துள்ளார்…..”வேர்ச்சுவலாக”-மெய்நிகர் பரப்பில் ரசிகர்கள் மத்தியில் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்ற பொருள்பட.
விஜய் கட்சியை தொடங்கிய போது தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல் விமர்சகர்- அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பது மட்டும் அவருடைய பெயரில் இருந்து ஞாபகம் இருக்கிறது -சொன்னார், விஜய் தன்னுடைய ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு காலகட்டம் தேவை என்று.எல்லா மாவட்டங்களிலும் அவர் ரசிகர்களை வாக்காளர்களாய் மாற்றுவதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் எடுக்கும்.எனவே உடனடியாக வரக்கூடிய தேர்தலில் அவர் முழு அளவு வெற்றியை பெரும் வாய்ப்புகள் இல்லை என்று.
விஜய் வெற்றி பெறப் போகிறார் என்பதை “அக்சஸ் இந்தியா”வின் கணிப்பீடு முன்கூட்டியே சொன்னது.பிரசாந்குமார் அதை அடித்துக் கூறினார்.ஆனால் பெரும்பாலான தமிழக ஊடகங்களும்,அரசியல் விமர்சகர்களும் அதை முன்கூட்டியே கணித்திருக்கவில்லை.அதற்கு காரணம்,ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கட்சிகளுக்கு விசுவாசமாகச் சிந்தித்தமைதான் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்த முற்சாய்வு அல்லது முற்கற்பிதம்தான் விஜயின் வெற்றியை அவர்கள் முன்கூட்டியே உணர முடியாமல் போனதற்கு காரணமா? அல்லது குறிப்பாக அரசியல் விமர்சகர்கள் வழமையான பாரம்பரிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்தத் தேர்தலை அணுகியது ஒரு காரணமா?
விஜய் பெற்ற வெற்றிக்கு “ஜெனரேஷன் ஸற்” அல்லது ஜென்சி என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையின் செல்வாக்கே காரணம் என்றொரு விளக்கம் உண்டு.அந்த தலைமுறையினரால் “பூமர் மாமாக்கள்” என்று நக்கலாகக் குறிப்பிடப்படுகின்ற நடுத்தரவயதைக் கடந்த ஒரு தலைமுறையானது இந்த ஜெனரேஷன் ஸற்றுடைய மண்டைக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சரியாகக் கணிக்கத் தவறியது என்றும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிய ஜெயமோகன் விஜயின் வெற்றி தொடர்பாகப் பேசியுள்ளார்,அதில் அவர் தர்மராஜ் என்பவர் எழுதிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான நூலை வாசிக்குமாறு கேட்டிருக்கிறார்.ஜல்லிக்கட்டு எழுச்சியை முன்னெடுத்த ஜென்சி இளையோரின் மனோநிலை தொடர்பாக தர்மராஜ் எழுதியுள்ளார்.ஒரு தலைமுறை போராட்டத்தை,அரசியலை களியாட்டமாகப் பார்க்கிறது,எதையும் “vibe-வைஃப்-அதிர்வாக மாற்றும் ஒரு மனோநிலை.அதாவது சோடா போல பொங்கி வெடித்து எழுவதைத்தான் அவர்கள் அரசியலாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.சீரான தொடர்ச்சியான மாற்றங்களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை…” என்று அந்நூலில் கூறப்படுவதை ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார்.இந்தோனேசியாவில்,பங்களாதேஷில்,நேபாளத்தில்,இலங்கையில் இடம்பெற்ற அரகலயவில்….இப்பண்பு அதிகம் காணப்பட்டதாகவும் ஜெயமோகன் தொகுத்துக் கூறுகிறார்.
தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த பின்னணிக்குள் ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஒரு யுடியூப்பர் பின்வரும் பொருள்பட எழுதியிருந்தார். “எங்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பம்பல்.ஆனால் பூமர் மாமாக்களுக்கு அது சீரியஸாகத் தெரிகிறது” என்று
அப்படியென்றால் விஜய்க்கு விழுந்த வாக்குகள் பெரும்பாலானவை ரசிக மனோ நிலையோடு ஒரு நாயக பிம்பத்தை நோக்கி குவிக்கப்பட்ட வாக்குகளா? தமிழகத்தில் மதுரவாயில் பகுதியில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழர் சொன்னார், தான் கடைக்குப் பொருள் வாங்கப் போனபோது அங்கிருந்த தமிழக வாக்காளர்களோடு உரையாடியதாக.யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டபோது “விசிலுக்கு” என்று கூறியிருக்கிறார்கள்.”உங்களுடைய தொகுதியில் யார் வேட்பாளர்?”என்று கேட்டபோது,அவர்களுக்குத் தெரியவில்லை.பெரும்பாலான ஆய்வாளர்கள் இப்பொழுது அதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். தமது தொகுதி வேட்பாளர் யார் என்று தெரியாமலே வாக்களித்திருக்கிறார்கள்.
விஜயின் வேட்பாளர்களில் அனேகமானவர்கள் ஏற்கனவே பெரிய அளவுக்கு பிரபல்யமானவர்கள் அல்ல.இம்முறை தேர்தலில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதையும் விமர்சகர் சுட்டிக்காட்டுகிறார்கள்.விஜயின் வேட்பாளர்களில் பலர் பெரியளவுக்குக் காசைக் கொட்டி வெற்றி பெறவில்லை. காச கொடுத்து வெல்லலாம் என்ற ஏற்கனவே இருந்து வந்த தமிழக தேர்தல் பாரம்பரியத்தை விஜயின் ஒருபகுதி வேட்பாளர்கள் உடைத்திருக்கிறார்கள்.விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சார உரைகளில் அதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.யார் தந்தாலும் காசை வாங்குங்கள்.ஆனால் வாக்குகளை விசிலுக்குக் கொடுங்கள் என்று.
தமது தொகுதி வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே விஜய்க்குத் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு இரண்டு பிரதான காரணங்கள்தான் இருக்கலாம்.ஒன்று,ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டபடி இலத்திரனியல் பிரஜைகளின் செல்வாக்கு,அவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மூத்தவர்களை விஜய்க்கு வாக்களிக்குமாறு தூண்டியதோடு,தாங்களும் வாக்களித்திருக்கிறார்கள்.
இரண்டாவது,ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி.கிட்டத்தட்ட 60 ஆண்டு கால திராவிட ஆட்சிகளின் மீதான அதிருப்தி.இந்த மாற்றத்தை தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உணர்ந்ததாக சினிமா இயக்குனராகிய தங்கள் பச்சான் தனது முகநூல் தளத்தில் தேர்தலுக்கு முன்னரே பதிவிட்டிருந்தார். தங்கர்பச்சான் வேறு ஒரு கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தவர்.
இவ்வாறு திராவிட மொடலுக்கு மாற்றாக தமிழக வாக்காளர்கள் விஜயைப் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது.அதன் விளைவாக இதுவரை காலமும் தமிழக அரசியலில் நிலவிய இருமுனைப் போட்டி இப்பொழுது மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது.அதேசமயம் திரைத்துறைக்கூடாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாயக பிம்பத்துக்குக் கிடைத்த வெற்றி அது என்று தெரிகிறது.இனி விஜய், தான் ஒரு திரை நாயகன் மட்டுமல்ல,தனக்கு வாக்களித்த மக்களுக்குப் பொறுப்புக்கூறும் ஒரு தலைவனும்தான் என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கும். எம்ஜிஆர் அதை நிருபித்தார்.விஜய் நிருபிப்பாரா?
எம்ஜிஆர் அரசியலில் பெற்ற வெற்றிகளின் அடுத்த கட்ட வெற்றிதான் ஜெயலலிதா.இப்பொழுது விஜய்,என்று ராஜன்குறை கூறுகிறார். எம்ஜிஆரின் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை.கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு எம்.ஜி.ஆருக்கு ஐந்து ஆண்டுகள் எடுத்தன.ஆனால் விஜய் 26 மாதங்களில் அதைச் செய்திருக்கிறாரா?
பாரம்பரிய அளவுகோள்களின்மூலம் அவரை அளந்த விமர்சகர்கள் பலரும் அவர் இக்குறுகிய காலகட்டத்திற்குள் தன் கட்சிக் கட்டமைப்புகளைக் கட்டியெழுப்ப முடியாது என்று ஒரு வழமையான கணக்கை முன்வைத்தார்கள். அது பௌதீகரீதியாக பிழை அல்ல.ஆனால் அதைவிட மேலதிகமாக ஒன்று வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பதைத்தான் விஜயின் வெற்றி உணர்த்துகிறது.
விஜய் மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் தன் கட்சியைக் கட்டியெழுப்பவில்லை என்று ஒருபகுதி தமிழக அவதானிகள் கூறுகிறார்கள்.அவர் கட்சி தொடங்குவதற்கு முன்னரே மக்கள் நலன்புரி அமைப்பு ஒன்றை வைத்திருந்தார் என்றும்,அதனை அவர் ஒரு கட்சிக்குரிய கருநிலைக் கட்டமைப்பாக ஏற்கனவே கட்டியெழுப்பி வைத்திருந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.தவிர கடந்த சில தசாப்தங்களாக தன்னை ஒர் அரசியல் இரட்சகராகச் சித்தரிக்கும் நாயக பிம்பத்தை தனது திரைப்படங்கள் ஊடாக அவர் திட்டமிட்டு படிப்படியாக கட்டமைத்து வந்தார் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.தமிழகத்தின் கூட்டு உளவியலை அடிப்படையாக வைத்துக் கூறின்,எனவே விஜயின் வெற்றி தற்செயலானதோ அல்லது திடீரென்று ஏற்பட்ட ஒன்றோ அல்ல என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.விஜய் அதற்காக பல தசாப்தங்கள் திட்டமிட்டு உழைத்திருக்கிறார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
யார் எதைக் கூறினாலும் தேர்தல் முடிவுகளைக் குறித்த பாரம்பரிய அளவுகோள்களால் விஜய்க்குள்ள மக்கள் ஆதரவை சரியாக மதிப்பிட முடியவில்லை என்பது மட்டும் உண்மை.குறைந்தபட்சம் திராவிட கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு உள்ளுறையும் வெறுப்பு உண்டு என்பதனையும் ஊடகங்களும் விமர்சகர்களும் பெரிய அளவுக்கு கண்டுகொள்ளவில்லையா?
கூட்டத்துக்கு வரும் எல்லாரும் வாக்காளர்களாக மாறுவதில்லை என்ற பாரம்பரிய நம்பிக்கைகள் பொய்த்த இடம் எது? ரசிகர்கள் எல்லாரும் வாக்காளர்களாக மாறுவதில்லை என்ற பாரம்பரிய நம்பிக்கைகள் பொய்த்த இடம் எது? மக்களை அரசியல் மயப்படுத்துவது,அமைப்பாக்குவது தொடர்பான பாரம்பரிய நம்பிக்கைகள் பொய்த்த இடம் எது? திராவிட மொடல் மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியா?அல்லது ஆய்வாளர்களின் அளவுகோள்களுக்குள் வராத இலத்திரனியல் உளவியலா ?




