கைவிடப்பட்டவர்களா நாங்கள்?
கனவு காண்பவர்களாய்
பொய்யான சமாதானத்தால்
திசை திருப்பப்பட்டவர்களாய்
பூமியின் எல்லாப் பாகங்களிலும்
புலம் பெயரிகளாய்
அகதிகளாய்
அவமதிக்கப்பட்டவர்கள் நாங்கள்
எங்களுக்காக
எங்கள் பாவங்களுக்காக
நீ உண்ணாமல் இருக்கிறாய்
தாகமாய் இருக்கிறாய்
நீ அருந்த மறுக்கின்ற ஒவ்வொரு துளி நீரும்
உனக்காகச் சொர்க்கத்தில் சேகரிக்கப்படலாம்
நீ அருந்த மறுக்கின்ற ஒவ்வொரு பிடி சோறும்
உனக்காக சொர்க்கத்தில் சேகரிக்கப்படலாம்
இதோ,
உனது குரலையும் எடுத்துக் கொண்டு பறக்கும் புறாக்கள்
திரும்பி வரப்போவதில்லை.
உன்னைக் காப்பாற்றவே முடியாதா?
காற்றை, கடலை, கதிரவனை
உனது மக்கள் மன்றாடுகிறார்கள்.
காற்றே
அவனுக்காக மெதுவாக வீசு
கதிரவனே
அவனுக்காகக் குளிர்ந்து விடு
அவனைச் சாக விட முடியாது
அவனுக்குத் தாய் இல்லை
கசியும் விழிகளோடு
தலை முடியைக்
கோதி விடச்
சகோதரியும் இல்லை ;காதலியும் இல்லை.
சூதான சமாதானத்தின் பலியாடுகள் ஆக்கப்பட்ட
அவனுடைய ஜனங்களின்
பசியும் தாகமும்
அவனைத் தின்று கொண்டிருக்கின்றன.
அவனைக் காப்பாற்றவே முடியாதா?
உயிர்ப் பசை இழந்த அவனது விழிகளைப் பாருங்கள்
அவனைச் சாக விட விரும்பும்
ஒவ்வொருவரும் கேளுங்கள்
அவனது பசி வலியது
அவனது தாகமும் வலியது
அவற்றிலும் வலியது
அவனது ஜனங்களின் கோபம்
திலீபன் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் அவருக்காக எழுதப்பட்ட கவிதை. துண்டுப் பிரசுரமாக விநியோகிக்கப்பட்டது.