தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கே போனபோது அங்கே விஜயினுடைய தகப்பன் இருந்திருக்கிறார். விஜய்க்கு பதிலாக அவர்தான் பதில் கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் விஜயின் பெயரில்தான் வரும். விஜயின் படங்கள்தான் காணப்படும்.
அந்த அலுவலகத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்து விஜய்யின் இலக்கத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் மேற்படி செயற்பாட்டாளர் கவனித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் விஜய்யின் குரலில் விஜய்யின் பாணியில் விஜய்யைப் போலவே கதைக்கிறார்களாம்.அழைப்பை எடுப்பவர்கள் தமக்கு விஜய்தான் பதில் கூறுகிறார் என்று நம்புவார்கள்.
மேலும் நமது ஈழத்துச் செயற்பாட்டாளர் அங்கிருந்த வேளையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்றால் விஜய்க்கு தன்னுடைய அன்பை தெரிவிப்பதற்காக தன்னுடைய சுண்டு விரலை அறுத்து கூரியரில் அனுப்பியவர்.அவரை அங்கு அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.அப்பொழுது நமது செயற்பாட்டாளர் விஜய்யின் தகப்பனிடம் கேட்டிருக்கிறார்…”இது போன்ற விடயங்களை நீங்கள் புரொமோட் பண்ணுவது சரியா?” என்று. அதற்கு விஜய்யின் தகப்பன் சொன்னாராம், அப்படிச் செய்ய வேண்டும். ஏனென்றால் விஜய்யின் படத்தை ஒரு முறை பார்ப்பவர் அடுத்தடுத்த படங்களையும் தொடர்ந்து பார்க்குமாறு தூண்ட வேண்டும். அப்படித் தூண்டினால்தான் படங்கள் ஓடும், அதற்கு இதுபோன்ற புரமோஷன்கள் தேவை என்று.அதாவது ரசிகரைப் பக்தராக மாற்றுவது. அதற்கு ரசிகர் செய்யும் தியாகங்களைப் புரமோட் பண்ணுவது.
இது நடிகர் விஜய்யை பேட்டி காணச்சென்ற ஈழத்துச் செயற்பாட்டாளர் ஒருவருடைய தொகுக்கப்பட்ட அனுபவம்.
ரசிகர்களை பக்தர்கள் ஆக்கிய விஜய் இப்பொழுது பக்தர்களை வாக்காளர்களாக்க முயற்சி செய்கிறார். கரூரில் அந்த முயற்சி அவருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திரையில் கிடைத்த பிரபல்யத்தை அரசியலில் முதலீடு செய்ய முனைவோர்களுக்கு தமிழகத்தில் எம்ஜிஆர் ஒரு பிரகாசமான முன்னுதாரணம். அதே சமயம் எம்ஜிஆர் ஒரு திரை நாயகன் மட்டுமல்ல. இயல்பிலேயே ஒரு வள்ளல். விஜயகாந்த் போல;சூர்யாவைப் போல.
எம்ஜிஆரரின் காலத்தில் துணை நடிகர்கள் பட்டினி கிடந்தது இல்லை என்று ஒரு விமர்சகர் சொல்லியிருந்தார். துணை நடிகர்கள் வறுமையில் வாடினால் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியிருக்கிறார். ஒரு பிரமுகர் அவர் காலை ஊன்றி நிமிர்ந்த துறைக்குள் அதிகம் உதவி தேவைப்படும் தரப்புகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான் அவர் உண்மையான வள்ளல் ஆகிறார். விஜய் அவ்வாறு துணை நடிகர்களைக் கவனித்ததில்லை என்று அந்த விமர்சகர் கூறுகிறார்.தன் துறையில் உள்ள ஒப்பீட்டளவில் வசதி குறைந்த தரப்பினருக்கு உதவாத ஒருவர் தன் துறைக்கு வெளியே,அரசியலில், சமூகத்தில் நலிவுற்ற தரப்பினரை மேலுயர்த்துவார் என்று எப்படி எடுத்துக்கொள்வது? என்றும் அந்த விமர்சகர் கேட்கிறார்.
இதே கேள்வியை மேலும் ஆழமாக திரைத் துறைக்குரிய கோட்பாட்டுத் தளத்தில் நின்று கேட்கலாம். விஜய் யார் ? விஜய் தமிழ் வணிக சினிமாவுக்கு ஊடாக தனது கதாநாயகப் பிம்பத்தை கட்டி எழுப்பிய ஒருவர். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் வளர்ந்தது வணிக சினிமாவுக்கு ஊடாக. அவர் நடித்த படங்களில் சீரியஸான கலைத்தரம் மிக்க படங்கள் என்று பார்த்தால் மிகக்குறைவு. சூர்யாவைப்போல; விக்ரமைப்போல; விஜய் சேதுபதியைப் போல புதுமையான பரிசோதனைகளை அவர் அனேகமாக நாடுவதில்லை.அவருடைய பாத்திரங்கள் பெரும்பாலும் ஒரே வகை மாதிரியானவை. தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களிலும் உடுப்பிலும் நடிப்பிலும் அவர் படைப்புத்திறன் மிக்க பரிசோதனைகளில் ஈடுபட்டது குறைவு.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை நேர்காணல் செய்த ஒருவர் கேட்கிறார், “நீங்கள் ஏன் வெரைட்டியான பாத்திரங்களில் நடிப்பதில்லை?” என்று. அதற்கு விஜய் கூறிய பதிலை அதே வார்த்தைகளில் இப்பொழுது என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஏற்கனவே ஸ்தாபிதமாக இருக்கின்ற ஃபோர்மியூலாவை அதாவது சூத்திரத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர அவர் தயாரில்லை என்பது அவருடைய பதிலில் தொனித்தது மட்டும் எனது நினைவில் இருக்கிறது. அதைவிட முக்கியமாக அந்தப் பேட்டியில்,”உங்களுக்குப்பிடித்த ஆடை?” என்று கேட்ட போது,விஜய் கூறுகிறார் வட்டக்கழுத்து ரிசேர்டை உள்ளே அணிந்து கொண்டு, அதற்கு மேல் ஒர் ஓவர் கோர்ட்டை போடுவது. அந்த ஓவர் கோர்ட்டின் பட்டன்களை மூடாமல் திறந்து விடுவது.. என்று.
இதுதான் விஜய். தனது துறையில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த வணிக சூத்திரத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வராத ஒருவர், தமிழகத்தின் பிரதான நீரோட்ட அரசியல் சூத்திரத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்து ஏதும் புரட்சி செய்வார் என்று எதிர்பார்க்கலாமா? அதை அவர் இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியுள்ளது.
அவர் வளர்ந்த தளம் அல்லது அவரைக் கட்டி எழுப்பிய தளம் வணிக நோக்கு நிலையைக் கொண்டது. அங்கு உரையாடப்படும் எல்லா சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களும் இறுதியிலும் இறுதியாக வணிக இலக்கைக் கொண்டவை. எனவே முதலாவதாக, விஜய் வணிக சினிமாவால் உயர்த்தப்பட்ட பிம்பம். அவர் சீரியஸான புரட்சிகரமான கலகக்குணம் மிகுந்த போராட்ட ஆளுமை அல்ல. சினிமாவில் அவர் கட்டியெழுப்பிய கதாநாயக பிம்பத்தை அரசியலில் தலைமைத்துவ பிம்பமாகக் கட்டியெழுப்புவதற்காக அவர் கையாளும் வழிமுறைகளை, அவருடைய உடல் மொழியை,அவருடைய பேச்சுக்களை, கரூர் சம்பவத்தின் பின் அவர் நடந்து கொண்ட விதத்தை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் சினிமாத்தனமே தெரியும்.
இவ்வாறு அரசியல் மேடைகளில் அவருடைய நடை,உடை,பாவனை,பந்தா, அவரைச் சுற்றி இருக்கும் மெய்க்காவலர்கள் கட்டியெழுப்பும் நாடகத்தனமான பந்தா… போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்பொழுது விஜய் இப்பொழுதும் ஒரு திரை கதாநாயகனாகத்தான் தெரிகிறார்.அவருடைய உடல் மொழியில் ஒரு தலைவனுக்குரிய முதிர்ச்சியோ பேரமைதியோ குறைவு.அவர் தன்னை ஒரு தலைவனாகக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.கரூர் சம்பவத்தின் பின் அவர் நடந்து கொள்ளும் விதமும் அதைத்தான் நிரூபிக்கிறது.
வணிக சினிமாவின் மாயைக்குள் இருக்கும் அப்பாவி ரசிகர்களை அப்பாவி வாக்காளர்களாக மாற்றுவதுதான் அவருடைய நோக்கம். அந்த ரசிகர்களை விழிப்படைய வைப்பது அவருடைய நோக்கமாக இதுவரை தெரியவில்லை. ஏற்கனவே அரசியலில் நன்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தை அவர் உடைப்பார் என்று எதிர்பார்க்கத்தக்க இறந்த காலம் அவருக்கு இல்லை.
இதை எப்படி எழுதுவது அவருடைய ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். ரசிக மனோநிலை வேறு, வாக்காளர் மனோநிலை வேறு. அதிலும் விழிப்புற்ற வாக்காளர் மனோநிலை முழுக்க முழுக்க வேறு.
வணிக சினிமாவின் ரசிகர்கள் கனவில் மிதப்பவர்கள்;மாயையில் உழல்பவர்கள்;விழிப்பில்லாதவர்கள்.ரணா படத்தில் வரும் ஒரு போலீஸ் அதிகாரி கூறுவது போல “சென்டிமென்டல் இடியட்ஸ்”.இந்த ரசிகர்களின் அறியாமையை,குருட்டுப் பத்தியை,விழிப்பின்மையை,மயக்கங்களை கட்சி அரசியலுக்கு மடை மாற்றுவது ஆபத்தானது. அது ஜனநாயகத்தின் உள்ளுடனைக் கோறையாக்கி விடும்.பொருளாதார ரீதியாக முன்னேறிவரும் தமிழ் நாட்டின் வாக்காளர்களை அவ்வாறு பக்தர்களாகப் பேணுவது சரியா? கரூர் சம்பவம் விஜய் ஒரு தலைவருக்குரிய தகமைகளை கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
விஜய்யின் முதலாவது பெருங்கூட்டம் நடந்தபின் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல் ஆய்வாளர் கூறிய கருத்து உற்று நோக்கத்தக்கது.விஜய் இப்பொழுதுதான் கட்சியை தொடங்கியுள்ளார்.ரசிகர்கள் எல்லாம் வாக்காளர்கள் அல்ல. ரசிகர்களை எப்படி வாக்காளர்களாக மாற்றுவது என்று அவர் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் அவற்றின் உட்பிரிவுகளிலும் கட்சிக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு கிராமங்களை நோக்கிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஆகக் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு மேல் செல்லும் என்று அந்த ஆய்வாளர் கூறுகிறார். அவ்வாறு தனக்குரிய கட்சிக் கட்டமைப்பை உருவாக்கிய பின் விஜய் தேர்தல்களை எதிர்கொள்வது தான் விவேகமானது என்றும் அவர் கூறியிருந்தார்.அந்த அடிப்படையில் உடனடியாக வரக்கூடிய சட்டசபை தேர்தலில் விஜய் வேண்டுமானால் தனித்துப் போட்டியிடலாம். ஆனால் கட்சியாகப் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்.
ஆனால் விஜய் அவசரப்படுகிறார்.தன்னை அரிதான “செலிபிரிட்டியாக” பேணிக் கொள்ளும் அதேசமயம் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகவும் கட்டியெழுப்ப அவசரப்படுகிறார்.வில்லன் சாகும்வரை அடித்த பின்னும் சாகாவரம் பெற்ற கதாநாயகனாக மேலெழுவது சினிமாவில் நடப்பது. ஆனால், அரசியலில் அதற்கு உண்மையும் தியாகமும் வீரமும் அதிகம் தேவை.காலமும் தேவை.