விஜயைச் சந்தித்த பேரவை

சில மாத கால இடைவெளிக்குள்,தமிழ்த் தேசியப் பேரவை,இரண்டாவது தடவை தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் தமிழக முதல்வரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஏனைய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.தமிழகத் தேர்தலுக்கு முன் அவர்கள் தமிழகம் சென்றார்கள்.இப்பொழுது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் போயிருக்கிறார்கள்.தேர்தலுக்கு முன் போனபோது அவர்கள் விஜயைக் கண்டிருக்கவில்லை.அதனாலோ என்னமோ விஜய் ஆட்சிக்கு வந்த கையோடு அவரைச் சென்று கண்டிருக்கிறார்கள்.அந்த அணிக்குள் காணப்படும் ஐங்கரநேசன் முன்பு வட மாகாண அமைச்சராக இருந்தவர். விஜயின் ஆதரவாளர்கள் தெருவில் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தபோது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளையவர்களை ஐங்கரநேசன் கடுமையாக விமர்சிக்கும் காட்சி சமூகஊடக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.இப்பொழுது மீண்டும் அந்தக் காணொளிகளைப் பகிர்ந்து முன்பு விஜயை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்பொழுது விஜயைக் கண்டு,மலர்க் கொத்துக் கொடுக்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்த விமர்சனங்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறந்த காலம் ஒரு பிரதான காரணம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அந்தக் கட்சி தன் அரசியல் எதிரிகளை இந்தியாவின் கருவிகள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்றுதான் வருணித்தது. 13ஆவது திருத்தத்திற்கு எதிரான அதன் உரையாடல்கள் இந்திய எதிர்ப் பண்பை கொண்டவை.

வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அவர்களிடம் மிக்க தெளிவான நிலைப்பாடு உண்டு. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை அனுசரித்துப் போகும் ஒரு நிலைப்பாடு அக்கட்சியிடம் உண்டு. ஆனால்,மேடைப் பேச்சுகளில்,மக்கள் சந்திப்புகளில் அக்கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெருமளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவைதான்.குறிப்பாக தங்கள் எதிரிகளை இந்தியாவின் கருவிகள் என்று சித்தரிக்கும்போது அங்கே இந்தியா ஒரு பொது எதிரியாகக் கருதப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறான இறந்த காலத்தைக் கொண்ட ஒரு கட்சியானது,மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் தமிழகத்துக்கு சென்று தமிழக தலைவர்களை சந்தித்திருக்கிறது.இறந்த காலத்தில் அவர்களுடைய நிலைப்பாடுகள் எதுவாகவும் இருக்கலாம்.நிகழ்காலத்தில்,விஜய் இப்பொழுது தமிழக மக்களின் தெரிவு.எனவே தமிழக மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொண்டு விஜயுடன் இடையூடாடுவது தவிர்க்க முடியாதது.அரசியல் என்பது சாத்தியக் கூறுகளின் கலை.இருப்பவற்றின் அடிப்படையில்தான் சாத்தியக்கூறுகள் காணப்படும்.இல்லாதவற்றின் அடிப்படையில் அல்ல.இந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழக விஜயம் சரியானது.

அதேசமயம் இந்த விஜயத்தின்போது தமிழ்த் தேசியப் பேரவை வெளியிட்ட அறிக்கைகளின் சாராம்சம் என்னவென்றால், 13ஆவது திருத்தமும் உட்பட ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட “எக்கிய ராஜ்ய” போன்ற தீர்வுகளை தமிழ்த் தேசியப் பேரவை நிராகரிக்கின்றது.அதேசமயம் முழு அளவு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்கின்றது.அதை நோக்கி இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு தமிழகக் கட்சிகளை உந்தித் தள்ளுவதே பேரவையின் இரண்டு தமிழக விஜயங்களினதும் நோக்கம்.

ஆனால்,தமிழ்த் தேசியப் பேரவைச் சந்தித்த தமிழக முதல்வர் ஒரு முழுச் சமஸ்டி கட்டமைப்பின் முதல்வர் அல்ல. அவர் அரைச் சமஸ்டிக் கட்டமைப்பின் முதல்வர்தான். இந்திய அரசியலமைப்பானது அரைச் சமஸ்டிக் கட்டமைப்புத் தான். அதைவிட முக்கியமாக,மோடி அரசாங்கம் காஷ்மீரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தனிச்சிறப்பு உரிமைகளையும் அகற்றிய ஓர் அரசாங்கம் என்பதை இங்கு குறிப்பாகக் கவனிக்கவேண்டும்.எனவே தன்னுடைய நாட்டுக்குள் தன்னுடைய மக்களுக்கு, தான் வழங்காத ஒரு முழுச் சமஸ்டிக் கட்டமைப்பை, ஈழத் தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்று கொழும்பில் உள்ள அரசாங்கத்தின் மீது இந்திய மத்திய அரசு அழுத்தங்களைப் பிரயோகிக்க வைக்க என்ன செய்யவேண்டும்?

இந்திரா காங்கிரஸ் மட்டுமல்ல,இப்போதுள்ள பாரதிய ஜனதாவின் அரசாங்கமும் அதன் இரண்டு ஆட்சிகளின்போதும் 13ஆவது திருத்தத்தைக் கடந்து கதைக்கவில்லை.ஐநாவில் இந்தியப் பிரதிநிதிகள் 13ஆவது திருத்தத்தைக் கடந்து உரை நிகழ்த்தவில்லை. கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக இந்திய மத்திய அரசாங்கம் 13ஐத்தான் ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக முன்நிறுத்தி வருகிறது.

அதுமட்டுமல்ல,அதைவிட முக்கியமானது,இலங்கைத் தீவில் இப்பொழுது நடைமுறையில் இருப்பது இந்திய-இலங்கை உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தம் அல்ல.அந்த 13ஆவது திருத்தத்தின் உள்ளுடன் பெருமளவுக்குக் கோதி எடுக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது இருப்பது அனேகமாக தோல் இருக்கச் சுளை பிடுங்கப்பட்ட ஒரு மாகாண சபைதான். இந்த விடயத்தில் கடந்த 17 ஆண்டுகளாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கூறி கொழும்பின் மீது டெல்லி பயன்பொருத்தமான நிர்ணயகரமான அழுத்தங்கள் எதையும் பிரயோகித்திருக்கவில்லை என்பதையும் இங்கு ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழக விஜயம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொந்தளிக்கவில்லை.ஐநா கூட்டத் தொடர்களின்போது, ஐநா தீர்மானங்களில் இந்தியா செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்று கேட்டு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் தமிழகம் கொந்தளித்திருக்கவில்லை. சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.என்றாலும்கூட யுத்த காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நொதித்த அளவுக்கு, கொந்தளித்த அளவுக்கு கடந்த 17 ஆண்டுகளாக தமிழகம் கொந்தளிக்கவில்லை. சீமானாலும் அதைச் செய்ய முடியவில்லை.இப்படிப்பட்டதோர் பின்னணியில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் தமிழகத்தை எப்படிக் கொந்தளிக்க வைப்பது?

இந்த இடத்தில்தான் ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. அது என்னவென்றால், ஈழத் தமிழர்கள் தங்களுடைய அரசியல் இலக்குகளுக்காகத் தாங்களே கொந்தளிக்காதபோது அயலில் உள்ள தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?

கடந்த 17 ஆண்டுகளிலும் ஈழத் தமிழர்கள் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய விதத்தில் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி” வரையான பேரணி, “எழுக தமிழ்”கள், சில எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் இந்தப் போராட்டங்கள் யாவும் தெட்டம் தெட்டமானவை, தொடர்ச்சியானவை அல்ல. தமது அரசியல் உரிமைகளுக்காக கொழும்புக்கு நோகக்கூடிய விதத்திலும், வெளியுலகத்தை ஈர்க்கத் தக்க விதத்திலும் ஈழத்தமிழ் அரசியல் கொந்தளிக்கவில்லை என்பதுதான் கடந்த 17 ஆண்டு கால யதார்த்தம் ஆகும். இவ்வாறு தங்களுக்காகத் தாங்களே நொதிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம், கொந்தளிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம், தமிழகம் தங்களுக்காக நொதிக்க வேண்டும்,கொந்தளிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

எனவே இப்பொழுது தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கின்றது. தமிழகம் கொந்தளித்தால்தான் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். தமிழகம் கொந்தளிப்பது என்றால் அதற்கு முதல் ஈழத்தமிழ் அரசியல் கொந்தளிக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களை நமது சொந்த அரசியலின் மீது உணர்திறன் மிக்கவர்களாக,நொதிக்கும் ஒரு மக்கள் கூட்டமாகத் தொடர்ந்து பேண தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளால் கடந்த 17 ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் கசப்பான கொடுமையான யதார்த்தம் ஆகும்.

ஒரு மக்கள் கூட்டத்தை அரசியல் மயப்படுத்துவது, சித்தாந்த மயப்படுத்துவது, இலட்சிய மயப்படுத்துவது,ஒரு கட்சியாக அல்லது மக்கள் இயக்கமாக ஸ்தாபனமயப்படுத்துவது…போன்ற விடயங்களில் இதுவரை காலமும் இருந்து வந்த பாரம்பரிய நம்பிக்கைகள் பலவற்றை நடிகர் விஜயினுடைய வெற்றி தகர்த்திருக்கிறது.அரசியல் மயப்படுத்துதல்,ஸ்தாபன மயப்படுத்துதல், கருத்துருவாக்கம்….போன்ற விடயங்களில் பாரம்பரியமாக இருந்துவந்த நம்பிக்கைகள் பல தகர்ந்து கொண்டிருக்கும் ஒரு காலம்.கைபேசியின் கைதியாக உள்ள ஒரு தலைமுறையின் பார்வைப் புலத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியலோ தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளோ எந்த அளவுக்கு வீரியமாக, கவர்ச்சியாக உள்ளார்கள்?

ஒரு தலைமுறை விரும்பி ரசிக்கும் விடயப் பரப்புகளுக்குள், ஒரு தலைமுறை தொடர்ச்சியாகப் பார்க்கும் விடயப் பரப்புகளுக்குள்,ஒரு தலைமுறை தங்கள் நட்பு வட்டாரத்துக்குள் விரும்பிப் பகிரும் விடயப் பரப்புகளுக்குள்,தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல் பலமாக உண்டா? தமிழ்க் கட்சிகள் எம்ஜிஆர் காலத்துக்குக் கோஷங்களோடு விஜய்யினுடைய காலத்தைக் கையாள முடியுமா? அல்லது எம்ஜிஆரின் காலத்து அணுகுமுறைகளோடு விஜயினுடைய காலத்து அரசியலை அணுக முடியுமா?

நாங்கள் எல்லாரும் பயன்படுத்துவது அப்டேட் செய்யப்பட்ட கைபேசிகளை. எங்களுடைய கணினிகள் அப்டேட் செய்யப்பட்டவை. எங்களுடைய வீடுகளில் வரவேற்பறையில் அல்லது வீட்டின் மையத்தில் உள்ள தொலைக்காட்சிகள் அப்டேட் செய்யப்பட்டவை.எமது குசினிகளில் காணப்படும் இலத்திரனியல் பொருட்கள் அப்டேட் செய்யப்பட்டவை.அதாவது நாங்கள் பயன்படுத்தும் அஃறிணைகள் பெரும்பாலானவை அப்டேட் செய்யப்பட்டவை.ஆனால் உயர் திணைகளாகிய நாங்கள்,எங்களுடைய அரசியலை,கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலான அரசியலை,குறிப்பாக கடந்த 17ஆண்டுகால அரசியலை எந்தளவுக்கு அப்டேட் செய்து வைத்திருக்கிறோம்?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *