ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்

சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் யானை வந்தது;மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது; இன்னியம் என்று அழைக்கப்படுகின்ற நடை பவனி அணி வந்தது. ஒரு யூடியூப்பரை வேலைக்கு அமர்த்தி அந்த நிகழ்வுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தமது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யானையை,குதிரையை,ஹெலிகாப்டரை,பல்லக்கை வாடகைக்கு அமர்த்துவது புதியதல்ல.தேவையான காசு இருக்கிறது.சினிமாப் பாணியில்,சினிமாத் தனமாக நிகழ்வை ஒழுங்கமைத்து படம்பிடித்து படங்காட்டி மகிழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தனிப்பட்ட வைபவங்களில் மட்டுமல்ல பொது வைபவங்களில்,அரசியலில்,குறிப்பாக சமய நம்பிக்கைகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.2009க்குப் பின்னரான பெரும்பாலான ஆலயப் புனரமைப்பு வேலைகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி உண்டு. ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரையிலும் அந்த உதவி கிடைக்கிறது. வடக்கு-கிழக்கு ஊடாகப் பயணம் செய்த ஓர் அமெரிக்கப் புலமையாளர் என்னிடம் கேட்டார் “வழியெல்லாம் காணப்படும் சிறிய மற்றும் பெரிய கோயில்களைப் புனமைக்கும் நிதி புலம்பெயர்ந்த தமிழர்களுடையதா ?” என்று

தாம் பிறந்து வளர்ந்த அல்லது திருமணம் புரிந்த கிராமங்களில்,திருவிழாக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தாராளமாக செலவழிக்கப்படுகிறது.ஊர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களோடு தொடர்புடைய உபயகாரர்கள் தமது திருவிழாவை நமது பண பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கிறார்கள்.அதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.தென்னிந்தியாவை நோக்கி பலாலியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் வான்வழியூடாக இந்திய சினிமாப் பண்பாடு வேகமாகப் பரவி வருகிறது.ஏற்கனவே அது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது.

கோவில் திருவிழாக்களில் மயிலாட்டம் முதல் கொண்டு பெயர் தெரியாத பலவிதமான ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.அவற்றில் சில போருக்கு முந்திய தசாப்தங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சின்ன மேளக் கச்சேரிகளை நினைவூட்டுகின்றன.

தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் கொண்டாடுவது என்பது புலப்பெயர்ச்சிக்குப் பின்னரான புதிய போக்கு அல்ல.அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது.தமிழகத்திலிருந்து நடனக் கலைஞர்கள், சின்னமேளக் கச்சேரிகள்,பிரபல சினிமாப் பாடகர்கள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள்.எனவே அது புலம்பெயர்ச்சியின் விளைவு அல்ல. புலப்பெயர்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட ஒரு விளைவு.

அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தனிப்பட்ட வைபவங்களை சினிமாத்தனமாக ஒழுங்கமைப்பதிலும் சமயச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் மட்டும் தமது செல்வத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதல்ல. மேற்சொன்ன அனைத்தையும் விட முக்கியமாக,தமிழ்ப் பகுதிகளில் தேசத்தை நிர்மாணிக்கத்தக்க செயல் திட்டத்தின் பகுதிகள் என்று வருணிக்கத்தக்க விதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தாராளமாகக் காசு கொடுக்கிறார்கள்.தாயகத்தில் இயங்கும் கணிசமான தொகை தன்னார்வ நிறுவனங்களின் பின்பலமாக புலம்பெயர்ந்த தமிழ் வள்ளல்களை உண்டு.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீர்வேலியில்,”கருவி” நிறுவனத்தின் தலைமைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. “கருவி” என்று அழைக்கப்படுவது விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்தவர்களுக்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.இக்கட்டமைப்பின் தலைமையகத்தை நிர்மாணிக்கத் தேவையான 60விகிதமான நிதியை புலம்பெயர்ந்த தமிழர்களே வழங்கினார்கள்.

அதுபோலவே இம்மாதம் 14 ஆம் திகதி,தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில், “அரவணை” என்று பெயரிடப்பட்ட நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.நோயாளிகள் தமது இறுதிக் காலத்தை கண்ணியமாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வலியோடும் கழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு அதுவாகும்.

ஒஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளான “பாலம்”, “வன்னி ஹோப்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.

எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழ் நிதியானது ஒருபுறம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாணப் பணிகளுக்கு உதவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நிதிப் பலத்தையும் உளவியல் உறுதியையும் கட்டியெழுப்ப உதவுகிறது.

இன்னொருபுறம், தமது பண பலத்தைக் காட்ட விரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள்.தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் தங்களுடைய செல்வாக்கை காட்டும் குறிகாட்டிகளாக மாற்றுகிறார்கள்.ஆலய திருவிழாக்களில், பழைய மாணவர் சங்கங்களில், சன சமூக நிலையங்களில், சமூகத்தின் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தும் நிதி அதிகாரமுடைய உபயகாரர்களாக காணப்படுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒருவர் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நிதி உதவி செய்தார்.ஆனால் அந்தக் கண்காணிப்புக் கமராக்களை இயக்குவதற்கு தேவையான கடவுச் சொல் அவரிடந்தான் இருந்தது.

பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்குள்,பழைய மாணவர் சங்கங்களுக்குள், ஆலய அறக்கட்டளைகளுக்குள்,அரசியல் கட்சிகளுக்குள்,சிவில் சமூகங்களுக்குள்,தங்களால் ரிமோட் செய்யப்படக்கூடிய குழுக்களை,நபர்களை உருவாக்கி மேற்படி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொலை இயக்கி உபயகாரர்களும் உண்டு.

தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி காணப்படுகிறது.ஆயுதப் போராட்டத்தின் காசு காய்க்கும் மரமாக அது இருந்தது.ஆனால் 2009க்கு முன்புவரை தாயகத்தை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.தாயகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் ஒருங்கமைக்கப்பட்டன.

ஆனால் இப்பொழுது தாயகத்தில் அவ்வாறான ஒன்றிணைந்த மையம் எதுவும் கிடையாது.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.அங்கேயும் ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லை. வள்ளல்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.உபயகாரர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.இந்தப் பாரதூரமான வெற்றிடம் உள்ளவரை ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் வாழ்வெனப்படுவது,சினிமாப் பண்பாட்டின் வீச்செல்லைக்கு வெளியே வராது;உருப்படாது.

இந்த நிலை தொடரும்வரை,தமிழ் மக்கள் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் சட்ட லீலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.அல்லது மயிலாட்டத்தை,சின்ன மேளக் கச்சேரிகளை,டிஜே கும்மிகளைப் பார்த்துப் ரசிக்கலாம்.அல்லது,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடக்கும் சண்டைக்கு காட்சிகளை அல்லது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கலாம் அல்லது குருதி அழுத்தத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *