இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம்.
இச் சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களையும் பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப் பணிகளைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. யாப்புருவாக்கப் பணிகளில் கடந்த சில மாதங்களாக தேக்கமும், தடங்கலும் ஏற்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாப்புருவாக்கப் பணிகளில் இருந்து பின்வாக்கத் தொடங்கியமையே என்றும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவராகிய சுரே~; பிரேமச்சந்திரன் வடக்கு கிழக்கு இணைப்பை அதிகம் வற்புறுத்தி கதைத்திருக்கிறார். இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாக்கப்பட்ட பின் மாகாண சபைகளை ஸ்தாபித்த பொழுது அதற்காக இந்தியத் தரப்பும், ஈழத்தமிழ்த் தரப்பும் இரத்தம் சிந்த வேண்டி ஏற்பட்டது என்றும் அந்த உடன்படிக்கையின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் இப்பொழுது பிரிக்கப்பட்டு விட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இது விடயத்தில் இந்தியாவிற்கு ஒரு தார்மீகக் கடப்பாடு உண்டு என்பதை அவர் அழுத்திக் கதைத்துள்ளார். அப்பொழுது ஜெயசங்கர் கேட்டாராம் “ஏன் வடக்கு கிழக்கு இணைப்பை மட்டும் தனித்தெடுத்து கதைக்கிறீர்கள்?” என்று
“இது 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு விடயம்.1987-ஆம் ஆண்டு உடன்படிக்கைக்குப் பிறகு நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்து விட்டன. அதனால் தற்போது நடைமுறை சாத்தியமாக எது முடியுமோ அதைச் செய்ய வேண்டும் அதற்கு ஏற்றவாறு மாற்று யோசனையைப் பரிசீலிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்” என்றும் ஜெயசங்கர் கூறியுள்ளார.;தற்போது வட கிழக்கு இணைப்பை தாம் வலியுறுத்த முடியாது எனவும் ஆனால் தமிழர்கள் இப்பிரச்சனையை தொடர்ந்து பேச்சுவார்த்தை மேசையில் வைத்திருப்பதை இந்தியா ஆட்சேபிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே சமயம் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாப்புருவாக்கப் பணிகளில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களை நீக்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு; இவ்வாறாக யாப்புருவாக்கச் செயற்பாடுகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட தாங்கள் அதில் நம்பிக்கையோடு இருப்பதான (optimistic) தொனிப்பட கதைத்துள்ளார்கள்.
இந்தியத் தரப்பு அச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களுக்கூடாக அதிகம் உணர்த்தப்பட்ட விடயம் எதுவெனில் அவர்கள் அதிகபட்சம் கொழும்பைக் கையாளுவதற்கூடாகவே இலங்கை விவகாரங்களை கையாள முற்படுகிறார்கள் என்பதுதான் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதோடு வடக்கு கிழக்கில் இந்தியா மேற்கொண்டு வரும் முதலீடுகளுக்கு கூட்டமைப்பு தடையாக இருக்கக்கூடாது என்பதையும் ஜெயசங்கர் உணர்த்த முற்பட்டுள்ளார்.
அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவானது இலங்கை அரசாங்கத்தின் மீது அதிகரித்த அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய நிலமைகள் இப்பொழுதும் இல்லை என்பதையே மேற்படி சந்திப்பு உணர்த்தியிருக்கின்றது. இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கைதான். ஆனால் அதில் தமிழர்கள் ஒருதரப்பு அல்ல. எனினும் உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்ட போது ஈ.பி.ஆர்.எல்.எவ் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இப்படிப் பார்த்தால் இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பில் இந்தியாவிற்குள்ள தார்மீகக் கடப்பாட்டை உணர்த்துவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் ற்கு கூடுதல் தகுதி உண்டு. எனினும் மேற்படி சந்திப்பில் இந்தியாவிற்குள்;ள தார்மீகக் கடப்பாட்டை உணர்த்துவதில் கூட்டமைப்பானது போதிய வெற்றியைப் பெறவில்லை என்றே தெரிகிறது.
இலங்கைத் தீவைக் கையாள்வது என்பது கொழும்பைக் கையாள்வதுதான் என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கையின் மாறாத ஓர் அம்சமாக காணப்படுகின்றது. கொழும்பைக் கையாள முடியாத நிலமைகள் வரும் பொழுதே தமிழர்களை ஒரு தரப்பாகக் கையாண்டு கொழும்பின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது கொழும்பை வழிக்கிக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாகவே தமிழர்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தவிர்க்கப்படவியலாத தரப்பாக கட்டியெழுப்புவது எப்படி? இது தொடர்பில் கூட்டமைப்பிடமோ அல்லது அதற்குள் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சியிடமோ பொருத்தமான ஒரு வெளியுறவுக் கொள்கைத் தரிசனம் உண்டா?
கடந்த பொதுத் தேர்தல் வெற்றிகளின் பின் கூட்டமைப்பின் தலைவர் இனி ராஜ தந்திரப்போர்தான் என்று பிரகடனம் செய்தார். ஆனால் அப்படி ஒரு போருக்கான வழி வரைபடம் எதனையும் அவர்கள் இன்று வரையிலும் வெளிப்படுத்தவில்லை. ஒரு ராஜதந்திரப் போரை நடத்துவது என்று சொன்னால் அதற்கு முதலில் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும். ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுப்பது என்று சொன்னால்; அதற்கு முதலில் கொள்கை ஆய்வுகளும் அக் கொள்கை ஆய்வுகளை அரசியல் தீர்மானங்களாக மாற்றவல்ல வெளியுறவுக் கொமிற்றியும் வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்கள் மத்தியில் கொள்கை ஆய்வு மையங்கள் எத்தனை உண்டு? மு.திருநாவுக்கரசு போன்ற அரசறிவியலாளர்கள் இது தொடர்பில் ஏராளமாக எழுதி இருக்கிறார்கள். குறிப்பாக மு.திருநாவுக்கரசு உட்சுற்று வாசிப்பிற்காகவும், பகிரங்க வாசிப்பிற்காகவும் இது தொடர்பில் பல கொள்கை ஆய்வுகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆனால் நிறுவனமயப்பட்ட கொள்கை ஆய்வு மையங்கள் என்று பார்த்தால் ஈழத்தமிழர்கள் மத்தியில் மிக ப்பாரதூரமான ஒரு வெற்றிடத்தையே காண முடியும்.
இது விடயத்தில் அண்மை மாதங்களாக யாழ்;ப்பாணத்தில் செயற்படத் தொடங்கியிருக்கும் அடையாளம் என்ற பெயரைக் கொண்ட கொள்கை ஆய்வு மையத்தைக் ஒரு நல்ல தொடக்கமாக சுட்டிக் காட்டலாம்.
இவ்வாறான கொள்கை ஆய்வு முடிவுகளோ அல்லது வெளியுறவுக் கொள்கை வரைபடமோ இல்லாத ஒரு வெற்றிடத்தில் தான் கூட்டமைப்பானது ராஜதந்திரப் போரை முன்னெடுத்துச் செல்கிறதா?
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்த பொழுது கூட்டமைப்பு அவரைச் சந்தித்தது. இச் சந்திப்பின் போது சம்பந்தர் வடக்கு கிழக்கு இணைப்பைக் குறித்து அழுத்திக் கதைத்ததாக சுமந்திரன் என்னிடம் தெரிவித்தார். இது பற்றி உரையாடிய பொழுது ஒரு மூத்த அரசறிவியலாளர் என்னிடம் சொன்னார் “இலங்கைக்கு வந்த மோடி ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடுதான் வந்திருப்பார். ஒரு சந்திப்பின் மூலம் அவருடைய முடிவுகளை அதிரடியாக மாற்றி விட முடியாது. மேலும் அவர் ஒரு தனி நபர் அல்ல. அவர் ஒரு கொள்கை வகுப்புக் கட்டமைப்பின் பிரதிநிதி. அக்கொள்கை வகுப்புக்; கட்டமைப்பை நோக்கித்தான் ஈழத்தமிழர்கள் “லொபி” செய்ய வேண்டும். அக்கட்டமைப்பின் முடிவுகளில் மாற்றம் வந்தால்தான் அது இராஜதந்திர வெற்றி” என்று.
ஆனால் அப்படிப்பட்ட “லொபி” எதுவும் கடந்த ஈராண்டுகளில் செய்யப்பட்டதாக தெரியவில்லை. இந்தியாவைக் கையாள்வதில் மட்டுமல்ல ஐ.நாவைக் கையாள்வதிலும் கூட ஈழத்தமிழர்களின் லொபி போதாமல் இருக்கின்றது என்று ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்; கடந்த ஆண்டு குறைபட்டுக் கொண்டார். ஜெனீவாவைக் கையாள்வது என்பது நட்பு நாடுகளைக் கையாள்வது மட்டுமல்ல நடுவில் நிற்கும் நாடுகளை நட்பாக மாற்றுவதும்தான். இது விடயத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார்கள்? என்றும் அவர் கேட்டார். “உதாரணமாக லத்தீன் அமெரிக்காவில் சில நாடுகளை நாங்கள் வெற்றிகரமாக கையாளலாம். ஆனால் அந்த நாடுகளின் தலைநகரங்களுக்குப் போக வேண்டும். அங்கே உள்ள கொள்கை வகுப்பாளர்களோடு கதைக்க வேண்டும். அவர்களை நோக்கி “லொபி” செய்ய வேண்டும். மாறாக அந்த நாடுகளின் ஜெனீவாப் பிரதிநிதிகளோடு கதைத்துப் பிரயோசனமில்லை. ஏனெனில் அவர்கள் கொள்கை வகுப்பாளர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்தும் அலுவலர்கள் மட்டும்தான்” என்று.
எனவே இராஜதந்திரப் போர் எனப்படுவது கொள்கை வகுப்புக் கட்டமைப்புக்களை நோக்கி முன்னெடுக்கப்படும் லொபியும் தான். இது பற்றி கூட்டமைப்பிடமோ குறிப்பாக தமிழரசுக் கட்சியிடமோ ஏதாவது தரிசனங்கள் உண்டா? ஜெய்சங்கர் மேனனுடனான சந்திப்பின் பொழுது அவர் கூடுதலாக கவனம் செலுத்திய விடயங்களில் ஒன்று இந்திய முதலீடுகளைப் பற்றியது என்று தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பு அவற்றை எதிர்க்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. எதை மனதில் வைத்து அவர் அப்படிச் சொன்னார்? சம்பூரில் இந்தியாவின் கைவிடப்பட்ட அனல் மின் நிலையத்தை மனதில் வைத்தே அவர் அவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது. இது விடயத்தில் சம்பந்தரையும், புதுடில்லியையும் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமாக மோத விட்டுள்ளதாக ஓர் அவதானிப்பு உண்டு. “சம்பூர் திட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கு சம்பந்தர் விடுகிறார் இல்லை” என்று ரணில் இந்தியத் தரப்பிடம் கூறியதாக ஒரு தகவல் உண்டு. நாங்கள் பிரச்சினை இல்லை. சம்பந்தர்தான் பிரச்சினையாக்குகிறார் என்று புதுடில்லிக்கு தெரிவிக்கப்பட்டதாம். இதனால் புதுடில்லி சம்பந்தரோடு முன்னரைப் போல மகிழ்ச்சியாக இல்லை என்றும் ஓர் அவதானிப்பு உண்டு.
கடந்த ஒரு வருடத்தோடு ஒப்பிடுகையில் அதற்கு முன்னைய ஆண்டுகளில் சம்பந்தர் அடிக்கடி புதுடில்லிக்கு போய் வருவதுண்டு. ஆனால் கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் அவர் ஒப்பீட்டளவில் குறைந்த அளவே புதுடில்லிக்கு போய் வந்திருக்கிறார். இது ஏன்? என்பது குறித்து ஒரு கூட்டமைப்புப் பிரமுகர் வடக்கில் நிலை கொண்டிருக்கும் இந்திய இராஜதந்திரி ஒருவரோடு உரையாடியிருக்கின்றார். சம்பூர் விவகாரத்தில் புதுடில்லிக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக் காரணமாக அங்கே அடிக்கடி செல்வதை இவர் தவிர்க்கிறாரோ தெரியாது என்ற தொனிப்பட அந்த இராஜதந்திரி கருத்துக் கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில் கூட்டமைப்பினரும் ஈழத்தமிழரும் ஒன்றை உற்றுக் கவனிக்க வேண்டும். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின்னரும் கூட தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளையும், இந்தியாவையும் முரண்பட வைக்கும் விதத்தில் கொழும்பில் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தந்திரமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள். அமெரிக்க அரசுத் தலைவராக ட்ரம் தெரிவாகிய பின் டயான் ஜெயதிலக எழுதிய ஒரு கட்டுரையை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். ட்ரம்பை யாருக்கூடாகக் கையாளலாம்? பிரித்தானிய பிரதமரை யாருக்கூடாகக் கையாளலாம்? என்று டயான் ஆலோசனை கூறுகிறார். ட்ரம்புக்கும் பிரித்தானியப் பிரமருக்கும் நெருக்கமான சிங்களப் புத்திஜீவிகள் யார்? யார்? சிங்களப் பிரபல்யங்கள் யார்? யார்? என்று தேடிப் பிடித்து தயான் கட்டுரை எழுதியுள்ளார்.
2002ல் நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது ரணிலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் மிலிந்த மொறகொட. அவர் அப்பொழுது அமெரிக்காவின் இராஜாங்க செயலராக இருந்த றிச்சர்ட் ஆமிரேஜ் இற்கு nருக்கமானவர். அந்த நெருக்கத்தை அப்பொழுது இலங்கை அரசாங்கம் நன்கு பயன்படுத்தியது. அப்படித்தான் இப்பொழுதும் தனிப்பட்ட நெருக்கங்களைப் பயன்படுத்தி கொள்கைத் தீர்மானங்களின் மீது செல்வாக்கைச் செலுத்த வேண்டும் என்று தயான் ஜெயதிலக போன்றவர்கள் ஆலோசனை கூறுகின்றார்கள்.
அவர்கள் ஓர் அரசுடைய தரப்பு. எனவே ஓர் அரசுக்குரிய பண்போடு நிறுவனமயப்பட்டே சிந்திப்பார்கள். கட்டமைக்கப்பட்ட உறவுகளுக்கூடாகவே சிந்திக்கிறார்கள். ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களும் அவர்களுடைய பிரதிநிதிகளும் எப்படி சிந்திக்கிறார்கள்? தேர்தல் வெற்றிகளைக் கண்டதும் ஒரு மன எழுச்சியில் இனி இராஜதந்திரப் போர்தான் என்று பிரகடனப்படுத்தி விட்டார்கள். ஆனால் அதற்குத் தேவையான கொள்கை ஆய்வு மையங்களோ வெளியுறவுக் கொமிற்றியோ எதுவுமே உருவாக்கப்படவில்லை. அரசாங்கத்தின் பங்காளிகளாக தங்களை அவர்கள் நினைத்துக் கொண்டால் அவர்களுக்கென்று வெளியுறவுக் கொள்கையோ, வெளியுறவுக் கொமிற்றியோ தேவையில்லைத்தான். தங்களை ஒரு தனித் தரப்பாக சிந்திக்கும் பொழுதுதான் அல்லது ஒரு தேசமாக சிந்திக்கும் பொழுதுதான் அதற்குரிய அடிப்படைகளை கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். இல்லையென்றால் இராஜதந்திரப் போர் எனப்படுவது ஒரு வெற்றுக் கோசம்தான்.
மெய்யான பொருளில் கூறின் கடந்த ஈராண்டுகளாக இராஜதந்திரப் போர் என்ற ஒன்றே நடக்கவில்லை. தமிழரசுக்கட்சித் தலைவர்கள் போர், போராட்டம் போன்ற வார்த்தைகளை ஒரு கவர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அவை மிகவும் அடர்த்தியான வார்த்தைகள்.தமிழ் மக்களின் இரத்தத்தினாலும் தியாகத்தினாலும் செதுக்கப்பட்ட வார்த்தைகள். இந்த வார்த்தைகளை பயன்படுத்திவரும் தலைவர்கள் எந்தப் போரையும் நடத்தவில்லை, எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. உண்மையாகவே போராடிக்கொண்டிருப்பது பிலக்குடியிருப்பிலும், புதுக்குடியிருப்பிலும், பனியிலும், வெயிலிலும், மழையிலும் தரையில் படுத்துறங்கும் அந்த அப்பாவிச் சனங்கள்தான்.