காலக் கொடுமை ?

 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரைக் காற் சட்டை போட்டுக்கொண்டு வீட்டு வேலைகள் செய்கிறார்… அதைப் படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த அவருடைய மனைவி தன் கணவன் எளிமையானவர்,தன்னடக்கம் உள்ளவர் என்று புகழ்ந்து எழுதுகிறார்.அதை வைத்துக்கொண்டு தமிழ் சமூக வலைத்தள ஊடக உலாவிகள் அந்தக் குடும்பத்தையே மீம்ஸ் ஆக்கிவிட்டார்கள்.

ஒரு காலம் எளிமைக்கும் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் முன்னுதாரணம் மிக்க அரசியலை முன்னெடுத்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில், இப்பொழுது எது எளிமை? எது சுய தாழ்ச்சி? எது தன்னடக்கம்? என்று சொல்வதற்கு கிடைத்த முன்னுதாரணங்கள் இவை.

இது தமிழ் அரசியலில் குறுக்கு வெட்டு முகத்தோற்றத்தை காட்டுகிறது. ஈழத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வின் புதிய குறுக்கு வெட்டு முகத்தோற்றம் இது.தமிழ் மக்கள் எங்கே நிற்கிறார்கள்? எதை நோக்கிப் போகிறார்கள் ?

ஒரு சமயச் சொற்பொழிவாளர் அல்லது இலக்கியச் சொற்பொழிவாளர் மேடையில் வைத்துச் சொல்கிறார், “தமிழ் மக்கள் தமது போராட்டத்தை மறந்தால்தான் உய்யலாம்” என்று. “அதைச் சொல்லிச் சொல்லியே தமிழ் மக்களை கொதிநிலையில் வைத்திருந்து தங்கள் வாழ்வை சிலர் வாழப் பார்க்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.அவர் அப்படிக் கூறும்போது அரங்கில் இருந்த ஒரு பகுதியினர் கைதட்டுகிறார்கள்.ஆனால் முகநூல் உலாவிகள் அவருக்கு மின்கம்பத் தண்டனை வழங்குகிறார்கள்.

கடந்த காலத்தின் காயங்களை வைத்து அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்றால் அந்தக் காயங்களை சுகப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு?அது தனிய அரசியல்வாதிகளுடைய பொறுப்பு மட்டுமா? சுகப்படுத்தப்படாத காயங்கள் உள்ளவரை அதை வைத்து யாருமே அரசியல் செய்வார்கள்.காயங்களுக்கு மருந்து வேண்டும். அரசியலில் மறதி ஒரு மருந்து அல்ல.

மறக்கச் சொல்லி சொல்வதற்கு தமிழ் மக்களுக்கு போதகர்கள் தேவையில்லை. சொற்பொழிவாளர் தேவையில்லை.காயங்களை சுகப்படுத்துவதற்குத்தான் ஆன்மீகத் தலைவர்கள் தேவை. சமயப் பெரியார்கள் தேவை.

யாருடைய காலில் தமது சுமைகளை இறக்கலாம்? யாரிடம் போய் தமது குறைகளைச் சொல்லி அழலாம்? யாருடைய காய் படடால் காயங்கள் ஆறும்? என்று தவிக்கும் ஒரு சமூகத்துக்கு,தமது கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் கிடந்து உழலும் ஒரு சமூகத்துக்கு,மகா மருத்துவராகக் காணப்படும் சன்னியாசிகள்,ஆன்மீகவாதிகள் எத்தனை பேர் உண்டு இந்தக் குடா நாட்டிலே?

தனித்துவம்மிக்க நகர்ப்புறச் சித்தர் மரபொன்றைக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் மூத்த ஆதீனத்துக்கு இன்னமும் வாரிசைக் கண்டுபிடிக்க முடியவில்லை.அதன் குரு முதல்வர் இறந்தபோது தனக்கு ஒரு வாரிசை வளர்த்தெடுக்காமல் வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.இந்த வெற்றிடம் ஆன்மீக வெற்றிடம் மட்டுமில்லை,சமயப் பண்பாட்டு வெற்றிடம் மட்டுமல்ல, சமூகப் பொருளாதார அரசியல் வெற்றிடமுந்தான்.

அரசியல் தலைமைகள் ஒழுங்காக இல்லை என்றால், சமூகத் தலைமைகளும், உள்ளூர் தலைமைகளும் ஒழுங்காக இருக்காது. சிலசமயங்களில் நூதனமாக அரசியல் தலைமைகள் விடும் பெற்றிடத்தை சமயத் தலைமைகள்,சிவில் தலைமைகள் நிரப்புவதுண்டு. ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலைமை அப்படியில்லை.

அரசியல் தலைமைகள் சீராக இல்லாத போது, அடுத்தடுத்த கட்டத் தலைமைகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றன.வாலாட்டிகளின் காலம். யாருக்கு வாலாட்டினால் பதவியைத் தக்க வைக்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலம்.இதனால் மேலிருந்து கீழ்நோக்கிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று விழுந்து விட்டது.இது சமூகத்தின் ஆகச்சிறிய அலகு ஆகிய குடும்பங்களில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகிறதா?

முழு இலங்கைத் தீவிலும் தற்கொலை செய்பவர்களின் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 15 ஆகக் காணப்படுகிறது. ஆனால் வடக்கில் அது ஒரு லட்சம் பேருக்கு 38என்ற எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.குடும்பங்களின் செயலலிழப்பு அல்லது குடும்பங்களின் சிதைவு தற்கொலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

ஒரு முன்னணிப் பாடசாலையின் அதிபர் கூறியிருக்கிறார்,தனது மாணவர்களில் கிட்டத்தட்ட 50 விகிதமானவவர்கள், தலைமைத்துவம் சீராக இல்லாத,அல்லது செயலிழந்த,அல்லது செயலிழந்து கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருகிறார்கள் என்று.

மற்றொரு முன்னணிப் பாடசாலையின் அதிபர் தனது நண்பருக்குக் கூறியிருக்கிறார். ஒரு பையன்  ஒழுங்காகத் தலை முடியை வெட்டிக்கொண்டு வரவில்லை என்பதற்காக ஆசிரியர் அவரை அருகில் உள்ள சலூனுக்கு அனுப்பி முடியைத் திருத்துமாறு கட்டளையிட்டிருக்கிறார்.பின்னர் ஆசிரியரே சலூனுக்கு காசு கொடுத்து விட்டு,ரசீதை மாணவனிடம் கொடுத்து அடுத்த நாள் மாணவனின் தகப்பனை அழைத்து வருமாறு கூறியிருக்கிறார்.தகப்பன் பாடசாலைக்கு வந்து  காசைக் கொடுத்து விட்டு வெளியே போய் வீதியில் நின்று உரத்த குரலில் கத்தினாராம் “நான் பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு விட்டது படிக்கத்தான், தலை முடி வெட்ட அல்ல” என்று.

யாழ்ப்பாணத்தின் பாடசாலை ஒன்றின் வாசலில் ஓர் அறிவுறுத்தல் எழுதப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட தலைமுடி அலங்காரங்களோடு பாடசாலைக்குள் வரலாம் என்று. பிரதேச சபைகள் சலூன்களுக்கு அவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.பிள்ளைகளுக்கு, குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளுக்கு எப்படித் தலைமுடியை வெட்டவேண்டும்; வெட்டக்கூடாது என்று சலூன்களுக்குப் பிரதேச சபைகள் அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

பிள்ளைகளின் தலைமுடியை எப்படி வெட்ட வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது? பெற்றோர்தான்.பாடசாலைகளின் அறிவுறுத்தலுக்கு அமைய பிள்ளைகளின் தலைமுடியை எப்படி வெட்டுவது என்பதை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்.பிள்ளைகளின் தலைமுடி பெற்றோருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால்தான் பிரதேச சபை அதை சலூன்களுக்கு அறிவுறுத்த வேண்டி வந்ததா? அப்படியென்றால் தமது பிள்ளைகளின் தலைக்கு மேல் இருப்பதைத் தீர்மானிக்க முடியாத பெற்றோர் எப்படிப் பிள்ளையின் தலைக்குள் இருப்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள்?குடும்பத் தலைமைத்துவம், குடும்ப முகாமைத்துவம் சீராக இல்லை என்பதை இது காட்டுகிறதா? அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி?

அண்மையில் கிராம மட்டச் சந்திப்பு ஒன்றின்போது அங்கு வந்திருந்த 60க்கும் குறையாதவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.”உங்களுடைய மிகப்பெரிய நம்பிக்கை எது?” என்பது ஒரு கேள்வி.பெரும்பாலானவர்கள் கடவுள் என்றார்கள்.ஒரு பகுதியினர் தங்களைத் தாங்களே நம்புவதாகக் கூறினார்கள். ஒருவர்கூட ஒரு அரசியல்வாதியின் பெயரைச் சொல்லவில்லை.

அடுத்த கேள்வி, “உங்களுடைய பெரிய பயம் எது?” பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்,எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறோம் என்று. எங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய முழுமையான செல்வாக்கு வலையத்துக்குள் இல்லை என்ற பயம் மேலெழுகிறது என்று சொன்னார்கள்.

பிள்ளைகள் யார் சொன்னால் கேட்பார்கள்? யாரை முன்னுதாரணமாகப் பார்க்கின்றார்கள்? குடும்பங்களில் இருந்து தொடங்கி சமூகத்தில், பள்ளிக்கூடத்தில்,சமயப் பரப்பில்,அரசியலில், முன்னுதாரணம் என்று அவர்கள் யாரை பிரமிப்போடு அண்ணாந்து பார்க்கிறார்கள் ?

அறிவுஜீவிகள்,சான்றோர்,தொழில் முனைவோர்,ஆன்மீகத்தலைவர்கள்,மதத் தலைவர்கள்,உள்ளூர்த் தலைவர்கள் என்று யாரை சமூகம் முன்னுதாரணமாகப் பார்க்கின்றது ? ஒரு இளைய தலைமுறை விரும்பிப்பார்க்கும், விரும்பி ரசிக்கும், விரும்பிக் கேட்கும் விடயங்களுக்குள் மினுங்கிக் கொண்டு தெரிவது யார் யார்?

அப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் இல்லாத காரணத்தால்தான் இளைய தலைமுறையினரின் ஒரு பகுதி புலப்பெயர்ச்சியை ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கின்றதா? இளைய தலைமுறையை மண்ணில் வேரூன்றிப் பூத்துக் காய்க்குமாறு தூண்ட வல்ல ஜனவசியம் மிக்க தலைவர்கள் எத்தனை பேர் நமது சமூகத்தில் உண்டு? ஈழத் தமிழ் சமூகம் முன்னுதாரணங்கள் குறைந்த ஒரு சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறதா?

முழு உலகத்தையும் திரும்பிபார்க்க வைத்த ஒரு சமூகம், மாண்புமிகு சமூகம், இப்பொழுது அதன் மாண்பை எல்லாம் இழந்து எது எளிமை? எது தன்னடக்கம்? எது சுய அடக்கம்? எது மாண்பு? எது மகிமை ? எது தெய்வீகம்? எது கபடம்? எது தலைமைத்துவம்? எது முன்னுதாரணம்? என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறதா?

சமயப் பிரசங்கிகளையும் பேச்சாளர்களையும் சன்னியாசிகள் ஆகவும் ஞானிகள் ஆகவும் கண்டு மயங்கும் ஒரு காலம். யூடியூப்பர்கள் கதை சொல்லிகளாக மாறிவிட்டார்கள்.யூடியூப்பர்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதற்காக;கவர்ச்சியாகக் கதைக்கத் தெரிகிறது என்பதற்காக; எல்லாவற்றையும் பற்றி வகுப்பெடுக்கிறார்கள்.யூடியூப்பர்களை வைத்து வியாபாரத்தைப் பெருக்கலாம் என்று முதலாளிகள் சிந்திக்கிறார்கள். வாக்குகளைப் பெருக்கலாம் என்று அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நடக்கும் போராட்டங்கள் 3500ஆவது நாட்களைக் கடந்துவிட்டன.கிழக்கில்,மேய்ச்சல் தரைகளை மீட்பதற்கான போராட்டம் ஆயிரம் நாட்களை எப்பொழுதோ கடந்துவிட்டது.செம்மணி புதைகுழி  தொடர்பான இடைக்கால அறிக்கையின் மீது வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலில்;தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய இரண்டு சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கும் ஒரு காலச் சூழலில், பலாலி,மயிலிட்டி ஆகிய இடங்களில் 36 ஆண்டுகளுக்கு முன் இழந்த தமது காணிகளை மீட்பதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலில்,தமிழ் மக்கள் போராட்டத்தை மறக்க வேண்டுமா? இல்லையா? என்று பட்டிமன்றம் திறக்கப்படுள்ளது.

பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவர் எல்லாம் நிகழ் காலத்தின் பேச்சாளர்கள் ஆகிவிட்டார்கள்.சமயச் சொற்பொழிவாளர்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆகிவிட்டார்கள். இதிகாச பிரசங்கிகளும் விவாதிகளும் ஞானிகள் போல காட்சி கொடுக்கிறார்கள்.மாண்புமிகு இறந்த காலத்தைப் பெற்ற சமூகம் ஒன்று,நகர்ப்புறச் சித்தர் மரபைக் கட்டிக் காத்த சமூகம் ஒன்று,எங்கே போய்க் கொண்டிருக்கிறது? யாழ்ப்பாணமே உனது மகிமைகள் எங்கே? பெருமைகள் எங்கே? உன்னதங்கள் எங்கே?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *