மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார்.அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை.திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை.
இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில்,அதைவிட குறிப்பாக ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால், நிலைமாறு கால நீதிக்குரிய-பொறுப்புக் கூறலுக்குரிய – தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசாங்கத்தின் காலத்தில், குற்றஞ் சாட்டப்பட்ட அதிரடிப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
மருத்துவர் மனோகரன் உயிர் பிரியும்வரை போராடினார்.அவருடைய ஏனைய பிள்ளைகளுக்கும் அவருக்கு ஆபத்து வந்தபோது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவரை நினைவு கூரும் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு செம்மணி வளைவில் “அணையா விளக்கு” போராட்டத்தை ஒருங்கமைத்த “மக்கள் செயல்” என்ற அமைப்பு அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியது.
அது ஒரு நினைவு கூரலாகவும் அதேசமயம் நீதிக்கான மக்களின் போராட்டம் தொடர்பான ஆய்வு அரங்காகவும் அமைந்தது. அதில் அரசியல் விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் உரையாற்றினார்கள்.குறிப்பாக அதில் உரையாற்றிய கஜேந்திரகுமார்,மருத்துவர் மனோகரன் தொடர்பான தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார்.
லண்டனில் இருந்து மனோகரன் கஜேந்திரகுமாருடன் கதைப்பதற்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.ஆனால் கதைக்கத் தொடங்கியதும் அழத் தொடங்கிவிட்டார்.கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் அழுதிருக்கிறார். அதன் பின்னர் சுதாகரித்துக் கொண்டு சிறிது உரையாடியிருக்கிறார்.அவரை மீண்டும் ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்தித்ததாக கஜேந்திரகுமார் தனது உரையில் கூறினார்.அச்சந்திப்பின் போதும் கிட்டத்தட்ட அரை மணித்தியாளத்துக்கு மேலாக மருத்துவர் மனோகரன் அழுதிருக்கிறார்.
அன்றைய நிகழ்வில் அவருடைய மார்பளவு உருவப்படம் பெருப்பிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தது.துக்கமும் விரக்தியும் நிறைந்த மனோகரனின் கண்கள் அதைப் பார்ப்பவர்களிடம் எதையோ எதிர்பார்ப்பது போலிருந்தது.
அந்த நிகழ்வு நடந்த அடுத்த நாள் திங்கட்கிழமை ஜெனிவாவில் அறுபதாவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வாக்கெடுப்பு இன்றி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நாடும் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை.
அந்தத் தீர்மானம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல நீர்த்துப்போன ஒரு தீர்மானமாகக் காணப்படுகிறது. வழமைபோல அதில் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும், 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற திரும்பத் திரும்ப வரும் விடையங்கள் உண்டு. அதுபோலவே போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும், அரச படைகளும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பொறுப்புக்கூற வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயமும் அதில் உண்டு.
கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவையில் இதுதான் நடந்து வருகிறது. இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும்,13ஐ முழுமையாக அமல்படுத்தி மாகாண சபைகளை இயங்க வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம் புதிய ஆட்சிகள் வரும் பொழுது குறிப்பாக ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சிகள் வரும்போது அவற்றை அரவணைத்துப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐ நா முயற்சித்து வருகிறது. இம்முறை தீர்மானமும் அந்த நோக்கத்திலானதுதான்.
ஆனால் அரசாங்கம் தெளிவாகக் கூறுகிறது,உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைதான் உண்டு. வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று. அதேசமயம் ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலிருந்து ஒரு பன்னாட்டுப் பொறிமுறை மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வந்து விசாரணைகளை செய்து சான்றுகளையும் சாட்சிகளையும் உறுதிப்படுத்துவதற்கு இதுவரையிலும் இருந்த எந்தவொரு அரசாங்கமும் விசா வழங்கவில்லை க.டந்த ஓராண்டு காலமாக அநுர அரசாங்கமும் விசா வழங்கவில்லை.
அதேசமயம் உள்நாட்டுப் பொறி முறையைப் பொறுத்தவரையிலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ரிங்கோ5 என்று அழைக்கப்படுகின்ற ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் உட்பட இன்றுவரையிலும் நடந்த எத்தனை படுகொலைகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது? கடந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டு காலப் பகுதிக்குள் மாணவி கிருசாந்தியின் கொலை வழக்கில்தான் குற்றவாளிகள் ஓரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதிலும் ஒரு குற்றவாளி இன்றுவரை தலைமறைவாக இருக்கிறார். மற்றொரு குற்றவாளியாகிய லான்ஸ் கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அக்குற்றங்களில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், தனக்கு மேலதிகாரிகள் இட்ட கட்டளைகளையே தான் நிறைவேற்றியதாகவும் பகிரங்கமாகக் கூறி வருகிறார்.இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அவர் அவ்வாறு கூறி வருகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்டிருக்கும் அதிகாரிகள் யாரும் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அனுர அரசாங்கம் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் 80க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது.இவர்களில் தரைப்படை, கடற்படை பிரதானிகள், போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல வகையினரும் அடங்குவர்.ஆனால் கைது செய்யப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த யாருமே இன முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களில் சிலர் மீது இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு.
உதாரணமாக ஒரு கடற்படைப் பிரதானி மீது அவ்வாறான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றுவரை அரசாங்கம் கைது செய்திருக்கும் எந்த ஒரு படைத் தரப்பைச் சேர்ந்தவர் மீதும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் அந்த விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறது.
ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலம் உண்மையைக் கண்டடையலாம்,அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐநா நம்புகின்றதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் அதைத்தான் பிரதிபலிக்கின்றது.
திங்கட்கிழமை மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த மனோகரன் நினைவு நிகழ்வில் பேசியவர்களில் ஒருவர் திருக்கோணமலையைச் சேர்ந்த ரஜீவ் காந்த். அவர் ஓர் அரசியல் செயற்பாட்டாளர். தென்னிலங்கையில் நடந்த “அரகலய” தன்னெழுச்சிப் போராட்டங்களில் காணப்பட்ட தமிழர்களில் முக்கியமானவர்.
இவர் மருத்துவர் மனோகரனின் மகனின் பாடசாலையில் சமகாலத்தில் படித்தவர். அந்த ஐந்து மாணவர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் அரும்பொட்டில் உயிர் தப்பியவர்.அந்த மாணவர்கள் வழமையாக ஒரு சிமெண்ட் கட்டில் உட்கார்ந்திருந்து கதைப்பதுண்டாம். அவர்களோடு சேர்ந்து இருந்திருக்க வேண்டிய ரஜீவ் அன்றைக்கு வேறொரு அலுவல் காரணமாக அங்கே வரப் பிந்திவிட்டது. அதற்குள் எமன் அவரை முந்திக் கொண்டு விட்டான்.
அந்த நினைவு நிகழ்வில் பேசும் பொழுது அவர் சொன்ன பல விடயங்களில் ஒன்று அந்த ஐந்து மாணவர்களில் ஒருவராகிய யோகராஜா ஹேமச்சந்திராவின் மூத்த சகோதரனைப் பற்றியது. கொல்லப்பட்ட தனது தம்பியின் பூத உடலை அழுதழுது தூக்கி கொண்டு வரும் அவருடைய அண்ணனை இப்பொழுதும் அதில் சம்பந்தப்பட்ட ஒளிப்படங்களில் காணலாம் என்று ரஜீவ் சொன்னார். ஆனால் அந்த அண்ணனும் இப்பொழுது இல்லை.
ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரன் திருக்கோணமலையில் இயங்கிய “அக்சன் பெய்ம்” (Action Against Hunger) என்று அழைக்கப்படுகின்ற பிரான்ஸை மையமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்தவர். நாலாம் கட்ட ஈழப் போரின் தொடக்க நாட்களில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பதினேழு உள்ளூர் ஊழியர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஹேமச்சந்திரா கொல்லப்பட்ட ஐந்தே மாதங்களில் அவருடைய அண்ணனும் மூதூரில் தனது சக ஊழியர்களோடு கொல்லப்பட்டு விட்டார். அந்த குடும்பத்துக்கு ஐந்து மாதங்களில் இரண்டு இழப்பு.
அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு இழப்புக்களுக்கும் இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் ஐநாவும் பெரும்பாலான உலக நாடுகளும் நம்புகின்றனவா, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக இலங்கையில் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டலாம் என்று?
ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் கூடிய கருத்தரங்கில் பேசிய யாருமே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை நம்பவும் இல்லை.அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடையில் பின்னணியில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவர் மனோகரனின் விழிகள்,அழுதழுது களைத்துப் போன அந்த விழிகள்,அங்கிருந்து எல்லாரையும் எதிர்பார்ப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தன.