நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள்,சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள்.உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப வெற்றிகளைக் கொண்டாடும் மக்களாக சிறுத்துப் போய்விட்டார்கள்? தமிழரசுக் கட்சி என்பது 75 வயதான ஒரு கட்சி. தனது உட்கட்சிப் பகையை பிரதிபலிக்கும் ஒரு வெற்றியைக் கொண்டாடக்கூடாது என்று தனது தொண்டர்களுக்குச் சொல்லும் மாண்பை அந்தக் கட்சி இழந்து விட்டதா? ஏற்கனவே மாவையின் இறுதி நாள் நிகழ்வில் சுடலை வரை மோதல் வந்தது. அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் அந்த மோதல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு சாணக்கியன் நியமிக்கப்பட்டதை கிழக்கில் உள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்கவில்லை என்று தெரிகிறது.மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.சிறீதரனை அகற்றும் பொழுது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது,அவர் அரசியலமைப்பு பேரவையில் ஒரு படை அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதுதான்.ஆனால் சாணக்கியன் யார்? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சக்களோடு நின்றவர். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர்களோடு காணப்பட்டவர்.அவர்களுடைய கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டவர்.
அவருடைய ஆதரவாளர்கள் உட்கட்சி மோதலில் கிடைத்த வெற்றியை வெடி கொளுத்தி,இனிப்புக் கொடுத்து,பனர் கட்டி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு உணர்த்துவது எதை என்றால், உட்கட்சிப் பகை எந்த அளவுக்கு கூர்மையானதாக இருக்கிறது;எந்த அளவுக்கு நாகரீகமற்றதாக மாறியிருக்கிறது என்பதைத்தான்.அது தவறு என்று சாணக்கியனுக்கோ அல்லது தொண்டர்களுக்கோ சொல்லக்கூடிய மூப்பும் முதிர்ச்சியும் உள்ள ஆட்கள் கட்சிக்குள் இல்லை என்று தெரிகிறது.
75 வயதான கட்சிக்குள் முதன் முதலாக தலைவர் தெரிவிற்காக நடந்த ஒரு தேர்தல்.அதில் தெரிவு செய்யப்பட்டவர்,கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பை ஏற்கவிடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். படிப்படியாக கட்சிக்குள்ளேயே முடக்கப்பட்டு வருகிறார். 75 வயதான ஒரு கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை விளங்கிக் கொள்ள இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா ?
இதன் பொருள்,சிறீதரன் கிளிநொச்சியில் ஜனநாயகச் செழிப்பான ஒரு சூழலைப் பேணி வருகிறார் என்பதல்ல. அங்கே அவர் தன்னுடைய அரசியல் எதிரிகளை அணுகும் விதமும், அவருடைய ஆதரவாளர்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் விதமும் பண்பானவைகளோ அல்லது அரசியல் நாகரீகத்தைப் பேணுகின்றவையோ அல்ல.தன்னுடைய எதிரிகளை மேடைகளில் பகிரங்கமாக பெயர் சொல்லி விமர்சிக்கிறார்.அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் சமுக வலைத் தளங்களில்,முகத்தைக் காட்டியும், முகத்தைக் காட்டாமலும் வந்து, தமது அரசியல் எதிரிகளின் குடும்பத்தை இழுத்து, சகோதரர்களை இழுத்து விமர்சிக்கிறார்கள்.தமிழரசுக் கட்சியின் உட் கட்சி ஜனநாயகத்தில் குற்றம் காண்பது என்பது அதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் காணப்படும் அரசியல் விமர்சனச் சூழலையும் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதுதான்.
எந்தத் தேசியவாதத் தராசில் வைத்து சிறீதரன் தனது எதிரிகளை நிறுத்தாரோ, அதே தேசியவாதத் தராசில் வைத்து சுமந்திரன் அணி அவரை நிறுக்கிறது.அதன்மூலம் அவருடைய வாக்காளர்கள் மத்தியில் அவரை மதிப்பிறக்கம் செய்வதே அவர்களுடைய நோக்கம்.அதை கஜேந்திரக்குமார் அணி செய்தால் அதற்கு ஒரு பொருள் இருக்கும். ஆனால் சுமந்திரன் செய்தால் அதற்குப் பொருள் இருக்காது. ஏனென்றால் சுமந்திரன் ஏற்கனவே தமிழ்த் தேசிய நீக்கத்துக்கு தலைமை தாங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் எவ்வளவு கெட்டிடித்தனமானவராக இருந்த போதிலும்,எத்தனை சதி சூழ்ச்சிகளைச் செய்த போதிலும்,கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டு வரும் சிறீதரனும் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறிவிட்டார்.அவரை நம்பி வாக்களித்த கட்சிக்காரர்களுக்கும் அவர் தலைமை தாங்கவில்லை.மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அவர் நடந்து கொள்ளவில்லை.அண்மையில் யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில் நடந்த பெப்ரவரி நான்கு நிகழ்வின் போது, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசசன் சிறீதரனை குறித்து உள்ளூர் பழமொழி ஒன்றை எடுத்துக் காட்டினார்.”பனங்கிழங்கு முத்தினால் நாராகிவிடும்” என்பதே அந்தப் பழமொழி.சிறீதரனின் தலைமைத்துவத்தின் நிலைமையும் அப்படித்தானா? தனது கடைசிக் கட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் அப்படித்தான் காணப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர் கட்சிக்குள் பலமாக இருக்க முடியாது என்ற வாதம் சரியாக இருந்தால்,சுமந்திரன் எப்படி கட்சிக்குள் தீர்மானிக்கும் சக்தியாக மேலெழ முடிந்தது? அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.அங்கேயும் உட்கட்சிப் பூசல்கள் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின.மாவை துணிச்சலாகவும் மிடுக்காகவும் முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக, தானும் தோற்று கட்சியையும் தோற்கடித்து விட்டார்.அவர் இறந்து ஓராண்டின் பின்னரும் கட்சி ஒரு சீருக்கு வரவில்லை என்பதைத்தான் அண்மையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.
மாவையோடு ஒப்பிடுகையில் சிறிதனிடம் தலைமைப் பண்பு அதிகம். மாவை அளவுக்கு அவர் நசிய மாட்டார்.தனது மாவட்டத்தில் கட்சிக் கட்டமைப்பை பலமாகக் கட்டி எழுப்பி வைத்துள்ளார். அவருடைய வாக்கு வங்கி போரால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் பிரதிபலிப்பது.அதைவிட மேலகமாக,தீவு மைய,கிளிநொச்சி மைய வாக்குகளும் அங்கே உண்டு.கட்சியை விட்டு நீங்கினாலும் கிளிநொச்சியில் சிறீதரன் ஒரு பலமான சவாலாக இருப்பார். ஆனால் இங்கே பிரச்சனை அதுவல்ல. தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இலக்கு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டி,பலமான பேரம் பேசும் சக்தியாக கொழும்பிலும் உலக சமூகத்தின் முன்னும் முன்னிறுத்துவதுதான்.அதை சிறீதரன் செய்வார் என்று நம்பத்தக்கதாக கடந்த இரண்டு ஆண்டுகளும் அமையவில்லை.
அண்மையில் ஒரு காணொளி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் முன்னுதாரணமாக கட்சிக்குள் தொடர்ந்தும் இருக்கப்போவதாக பொருள் கொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறியிருந்தார்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதனால் அவர் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுந்தான் தக்கவைத்துக் கொண்டார்.கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தனது தலைமைத்துவத்தை எந்தளவுக்கு ஸ்தாபித்திருக்கிறார்?
சுமந்திரனைப் பொறுத்தவரை இப்பொழுதும் கட்சியை முழுமையாக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.சிறீதரனை கட்சிக்குள் இருந்து அகற்றினால் மட்டும்தான் அவருக்கு முழு வெற்றி. ஆனால் அதை அவரால் இன்றுவரை செய்ய முடியவில்லை.சிறீதரன் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து, அவமானப்படுத்தி அவராக கட்சியை விட்டு விலகும் அளவுக்கு நிர்பந்திப்பது என்று சுமந்திரன் சிந்திக்க கூடும். ஏனென்றால் இதே விதமான உத்தியைத்தான் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த போது பங்காளிக் கட்சிகள் மீதும் பிரயோகித்தார்.பங்காளிக் கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்து அவர்களாக விலகப் பண்ணினார்.அப்படித்தான் விக்னேஸ்வரனின் விடையத்திலும்.ஆனால் அவருடைய உத்திகளின் விளைவுகள் என்ன? முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் சிதைக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டு கால கயிறு இழுத்தல் போட்டியில் யாரும் முழு வெற்றி பெறவில்லை.இது 75 வயதான கட்சியின் உள்விவகாரங்களை முழுமையாக தனது கைக்குள் கொண்டு வரத்தக்க தலைவர் யாரும் இப்பொழுது கட்சிக்குள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் சுமந்திரனால் கட்சியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 2024 இல் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதையும் அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
கொழும்பில் அவர் சவால்கள் மிகக் குறைந்த ஒரு சட்டவாளராகக் காணப்படுகிறார்.ஆங்கிலம் பேசும் உயர் குழாத்தின் மத்தியிலும்,அரசியல் சமூகம்,ராஜதந்திர சமூகம்,ராணுவ சமூகம் மற்றும் சிவில் சமூகங்களின் மத்தியிலும் மதிக்கப்படும் தமிழ் அரசியல்வாதியாக அவர் காணப்படுகிறார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று கொழும்பில் ஒரு தீர்மானகரமான சக்தியாக அவர் வலம்வந்தார்.2024 அவரைப் பொறுத்த வரை ஒரு கெட்ட ஆண்டு. தோல்விகரமான ஆண்டு. அந்த ஆண்டில் கிடைத்த தோல்விகளால் கொழும்பில் அவருடைய மதிப்பு குறைந்து போய் விடக்கூடாது என்று அவர் அந்தரப்படுகிறார்.ஆனால் அவருடைய தந்திரமான,புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின்மூலம் கட்சியை அவருடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்றுவரை முடியவில்லை.
சிறீதரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் எதிர் அணி ஒரு புதிய அணியாக மேலெழக்கூடும். தமிழரசுக் கட்சியானது வெல்லும் கட்சி என்ற நம்பிக்கை உடைக்கப்படுமாக இருந்தால் அக்கட்சிக்குள் இப்பொழுது ஒட்டிக் கொண்டிருக்கும் பலரும் கழண்டு போய் விடுவார்கள்.அந்த நம்பிக்கை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உடைக்கப்பட்டது.தேசிய மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்ப் பகுதிகளில் ஒரே எண்ணிக்கையான ஆசனங்கள்தான். இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தீராத உட் பகையை தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது,மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படுமா என்று எதிர்பார்ப்போடு.





