பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று.கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல் ஓர் அபினா?
சமூக வலைத்தள “அல்கோரிதம்” எனப்படுவது ஒருவகை போதை ஊக்குவிப்புத்தான். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடி வரும். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று கண்டு அதை நோக்கி உங்களை ஊக்குவிப்பது. ஒரு போதைப்பொருள் பாவனையாளர் எந்தப் போதைக்குப் பழக்கப்படுகிறாரோ, அதே போதையை அவருக்குத் தொடர்ந்து ஊட்டுவதன் மூலம் அவரை அதற்கு அடிமையாக்கிவிடுவது.அதாவது இலத்திரனியல் அடிமைகள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் உலகளாவிய பரந்த மாய வலைப் பின்னலுக்குள் சிக்கிய ரெண்டு கால் பூச்சிகள்.
தகவல் ஒரு போதை மட்டும் அல்ல. கவிஞரும் திசை வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமாகிய மு.பொன்னம்பலம் கூறுவார் “தகவல் ஒரு மாயை” என்று. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியோடு அது இப்பொழுது மகா மாயையாக உருவெடுத்துவிட்டது.தகவல் புரட்சியின் ரெண்டுகால் பூச்சிகள் ஒரே சமயத்தில் மாயப் போரின் பலியாடுகளாகவும் இருக்கிறார்கள்;பரிசோதனைக்கூட எலிகளாகவும் இருக்கிறார்கள்; தம்வசமிழந்த பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள்.
இஸ்ரேல் அண்மை ஆண்டுகளாக ஈரானிய தலைவர்கள் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பெருமளவுக்கு மாயத் தொழில்நுட்ப வகைப்பட்டவைதான். இப்பொழுதும் மேற்காசியாவில் திறக்கப்பட்டிருக்கும் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெரியது.அந்த மாயப் போர்க்களத்தில் அதிகம் பலியாவது ஆசியர்கள்தான். மேற்கு நாடுகள் தங்களுடைய நவீன தொழில்நுட்பத் திறன்களையும் புதிய போர்த் தளபாடங்களையும் கண்டுபிடிப்புகளையும் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்கள் பெருமளவுக்கு ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க,கிழக்கு ஐரோப்பியப் போர்க் களங்கள்தான்.மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அனேகமாகப் பாதுகாப்பாக இருக்கும்.ஏனைய பகுதிகள்தான் புதிய யுத்தத் தளபாடங்களின் பரிசோதனைக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும்.குறிப்பாக உலகப் பேரரசு அமேரிக்கா எல்லா யுத்த அரங்குகளுக்கும் வெளியே ,தொலைவில் பத்திரமாக இருக்கிறது.ஒசாமா பின் லேடன்தான் அமெரிக்காவை அதன் வாசற்படிவரை சென்று தாக்கினார்.
அணுகுண்டை தூய விஞ்ஞானத்தின் வார்த்தைகளில் சொன்னால் அது ஒரு யூதக் குண்டு. அதற்குரிய சமன்பாட்டை கண்டுபிடித்தது யூதரான ஐன்ஸ்டீன். அதனை ஒரு செய்முறையாக மாற்றியவர் யூதராகிய ஓபன் ஹெய்மர். அதனால் பிரயோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் கூறினால் அது முதலில் அமெரிக்க யூதக் குண்டு.ஆனால் அதை அவர்கள் பரிசோதித்த இடம் ஆசிய ஜப்பானில்தான்.அணுகுண்டின் முதலாவது பரிசோதனைக் கூட எலிகள் ஆசியர்கள்தான்.இப்பொழுது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு முன்னெடுக்கப்படும் மாயப் போரிலும் முதல் பலிகளும் பரிசோதனை கூட எலிகளும் பெருமளவுக்கு ஆசிரியர்களும் ஆபிரிக்கர்களும் உக்ரேனியர்களும்தான்.ஆளில்லா விமானங்களின் மாயத் தாக்குதல்கள் அதிகம் நடந்த இடங்கள் ஆசிய,ஆப்பிரிக்க,கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியங்கள்தான்.
மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று இதுவரை நடக்கவில்லை.ஆனால் பனிப் போர் நடந்தது.அந்தப் பனிப் போரானது மேற்கு ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளுக்கு நிழல் போராக இருந்தது.ஆனால் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் நிஜப் போராக இருந்தது. பேரரசுகளின் நிழல் போரை ஏனைய நாடுகள் நிஜப் போராக முன்னெடுத்தன.
ஈழப்போரும் அப்படித்தான்.ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நண்பனாக இருந்தார்.இந்தியா, ரஸ்சியாவின் கூட்டாளியாக இருந்தது.1983க்குப் பின் ஈழப் போர் எனப்படுவது பனிப்போரின் ஒரு பகுதியாக மாறியது.அதனாலேயே வளர்ந்தது. ஆசிரியர்களாகிய சிங்களவர்களும் ஆசிரியர்களாகிய தமிழர்களும் ஐரோப்பியர்களின் நிழல்போரை நிஜப்போராக முன்னெடுத்தார்கள்.
ஆசியர்களாகிய,அரசில்லாத, சிறிய ஈழத் தமிழர்கள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் உசார் மனோ நிலையிலிருந்தும் தற்காப்பு உணர்விலிருந்து விடுபடவில்லை.அதனால்தான் மேற்காசியாவில் போர் வெடித்தபோது யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக வரிசைகள் நின்றன.அதைப் பலரும் நக்கல் அடித்தார்கள்.ஆனால் அது யாழ்ப்பாணத்து நோக்கு நிலையில் தவிர்க்க முடியாதது.
ஒரு குடா நாட்டு மனோநிலை அப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தவர்களின் தற்காப்பு உணர்வின் விளைவுதான் சேமிப்பு பண்பாடு. அது குடா நாட்டு மனோநிலையின் பிரதான அம்சம். போர் இந்த சேமிப்பு பண்பாட்டை மேலும் பலப்படுத்தியது. ஒருவகையில் போருக்குள் நின்று நிலைத்தமைக்கு அதுவும் காரணம்.
போருக்குப் பின்னரும் அந்த மனோநிலை அப்படியே மாறாமல் இருக்கிறது. ஏனென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.அதனால் யாழ்ப்பாணத்தவர்களின் மனோநிலை மட்டுமல்ல முழு ஈழத் தமிழர்களின் மனோநிலையும் ஒருவிதத்தில் அமைதியுறாத,கொந்தளித்த,”அண்செற்றில்ட்” மனோநிலையாகத்தான் காணப்படுகிறது.சதா உஷாராகவும்,அளவுக்கு மிஞ்சிய தற்காப்பு உணர்வோடும் காணப்படுகிறது. எனினும் மேற்காசியாவில் யுத்தம் வெடித்த உடனே வரிசையில் நின்ற பலரும் இப்பொழுது தாங்கள் செய்தது சரிதான் என்று திருப்திப்படுகிறார்கள்.ஒரு சிறிய மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வோடு இருப்பதில், முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில் தவறில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ராஜதந்திரி என்னிடம் கேட்டார் யாழ்ப்பாணத்தை “ஒரு தூங்கா நகரமாக மாற்ற முடியுமா?” என்று. யாழ்ப்பாணம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல நகரங்கள் இரவு கிட்டத்தட்ட எட்டு மணிக்கு பின் தூங்கும் நகரங்கள்தான். விசேஷமாக வடக்கு கிழக்கில் உள்ள நகரங்கள் அதிகாலையில் சூரியனோடு சேர்ந்து விழித்தெழுவதில்லை.இரவானதும் ஒன்பது மணிக்கு முன்னரே பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுவிடும். அதற்குக் காரணம் தமிழ்மக்களின் கூட்டு உளவியலில் ஒருவித “உளவியல் ஊரடங்குச் சட்டம்”தொடர்ந்தும் அமுலில் இருப்பதுதான் என்று எனது நண்பன் ஒருவர் கூறுவார்.
இந்த “உளவியல் ஊரடங்குச் சட்டம்” என்பது முன்சொன்னதுபோல அண்செற்றில்ட்டான ஒரு கூட்டு உளவிகளின் விளைவு.இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவரை அது தொடர்ந்தும் இருக்கும்.2009க்குப் பின்னரான தொடர்ச்சியான புலப்பெயர்ச்சிக்கு அதுவும் ஒரு பிரதான காரணம்.
அரசில்லாத சிறிய,ஆசிய மக்கள் கூட்டம் ஆகிய ஈழத் தமிழர்கள் மேற்காசியப் போரில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை.ஆனால் அமெரிக்கா போரை இலங்கை கடற்கரையில் இருந்து 19 கடல் மைல்வரை கொண்டு வந்துவிட்டது. ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர் மூழ்கியால் தாக்கப்பட்டது.எனவே இலங்கை போர்க்களத்துக்கு வெளியே இருக்கிறது என்று கூறமுடியாது. மேலும் எரிவாயுவுக்கும் எரிபொருளுக்குமாக வரிசையில் நிற்கும் ஒரு நிலை வந்திருக்கிறது.புதன் கிழமை விடுமுறையாக்கப்பட்டிருக்கிறது. அதாவது போர் நமது குசினி,அலுவலகம் ,பாடசாலை வரை வந்துவிட்டது.
அமெரிக்கா எதிர்பார்த்ததுபோல ஈரான் துவண்டு விடவில்லை.தலையை நசக்கினால் பாம்பு செத்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்பியிருக்கலாம். ஆனால் ஈரான் நின்று பிடிக்கின்றது.இந்தப் போரில் சீனாவும் ரஷ்யாவும் நேரடியாக போர்க்களத்தில் இறங்கவில்லை.ஆனால் ஈரானின் பின்னணிப்பலம் அந்த நாடுகள்தான். நிகழும் போரில் சீனா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளினதும் பங்களிப்பின் அளவும் பங்களிப்பின் தன்மையும்தான் புதிய உலக வலுச் சமநிலையைத் தீர்மானிக்கும்.
அவ்வாறு உலக வலுச்சமநிலையில் ஏற்படும் தளம்பல்கள் சிறிய ஈழத் தமிழர்களின் அரசியலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.பனிப்போர் எப்படி ஈழப் போரில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியதோ அப்படி. கடந்த 16 ஆண்டு காலமாக சீனாவுக்கு எதிரான மேற்கத்திய வியூகத்தின் ஒரு பகுதியாக ஈழத் தமிழர்கள் ஐநாவில் கையாளப்படுவதையும் அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே பிராந்தியத்தில்,கண்டத்தில், பூகோள அளவில் ஏற்படும் திருப்பகரமான மாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடும். சில சமயம் இருக்கின்ற வாய்ப்புகளை மூடவும்கூடும்.
ஆனால் அவ்வாறு ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஈழத் தமிழ் அரசியலில்,இலங்கை அரசியலில் என்னதான் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கையாள்வதற்கு ஈழத் தமிழர்கள் தயாராக இருக்கிறார்களா ?




