பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும்

 

பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், சில வாரங்களுக்கு முன்னதாக ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதிக்கப்பட்ட ஒரு காணொளியை இங்கு குறிப்பிடவேண்டும்.இக்காணொளி வெளிவந்து இரண்டு ஆண்டுகள்.காணொளியில் பேசியிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்.ஜெயந்தஸ்ரீ.அவர் சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.இங்கு அவர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமூட்டும் உரைகளை ஆற்றியிருக்கிறார்.

தன்னுடைய யாழ் விஜயத்தின் விளைவாக அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில்,தமிழ்நாடு,கோவையில் ஓரிடத்தில் உரையாற்றும்போது அவர் “யாழ்ப்பாணத்து ஆசிரியர்களுக்கு வோல்டேஜ் குறைவு” என்று கூறியிருக்கிறார்.அதைக் குறித்து யாழ்ப்பாணம்,கோப்பாய் ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் அவரிடம் கேள்வி கேட்கிறார்.அந்தக் கேள்விக்கு ஜெயந்தஸ்ரீ கூறும் பதில் அக்காணொளியில் உண்டு.

தனது உரையில் ஜெயந்தஸ்ரீ வோல்டேஜ் என்று தான் கருதுவது “அறிவு ரீதியான வோல்டேஜ் மற்றும் மொழி அறிவு ஆகிய இரண்டையும்” என்று கூறுகிறார். அதாவது தொடர்ச்சியாக வாசிப்பதன்மூலம் பரந்துபட்ட தளத்தில் தமது அறிவையும் மொழி அறிவையும் ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.மேலும் “உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியர்களிடம் அனுப்பாமல்,படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் அனுப்புங்கள்” என்றும் கூறுகிறார்.அதாவது தன்னைத்தானே அப்டேட் செய்து கொள்ளும் ஆசிரியரிடம் அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்திருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் பிள்ளைகள் பெற்ற வெற்றிகளைத் தொகுத்துப் பார்க்கும்போது  ஆசிரியர்களின் வோல்டேஜ் கவலைப்படும் அளவுக்குக் குறையவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?அல்லது அது பொருத்தமான வோல்டேஜ்ஜா என்று கேட்கலாமா ?

நாட்டில் நடப்பில் இருப்பது ஒரு பரீட்சைமையக் கல்விமுறை.தேசிய அளவிலான போட்டிப் பரீட்சைகளை நோக்கி பிள்ளைகளைத் தயார்படுத்த வேண்டும்.அதைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் பிரயோக உளவியல்  அர்த்தத்தில்  சொன்னால்,பந்தயக் குதிரைகளை பந்தயத்திற்குப் பழக்கி எடுக்க வேண்டும்.இவ்வாறு பந்தயக் குதிரைகளை பழக்குவதற்கு தேவையான  வோல்டேஜ்ஜும் பேராசிரியர் கூறும் வோல்டேஜ்ஜும் ஒன்றுதானா?

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞருடைய நேர்காணலை பல ஆண்டுகளுக்கு முன்னுக்கு வாசித்த ஞாபகம்.அவருடைய பெயர் மறந்து விட்டது.அவர் ஒரு கவிஞரும் ஆசிரியரும் ஆவார்.அவரை நேர்கண்டவர் கேட்கிறார், “நீங்கள் ஆசிரியராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது கவிஞராக இருக்க விரும்புகிறீர்களா?” என்று.அதற்கு அவர் பின்வரும் பொருள்பட பதில் கூறுகிறார்.”ஆசிரியராக இருப்பது என்பது தனக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்காக,ஏனைய பல விடயங்களும் தனக்குத் தெரியும் என்பதுபோல ஒரு தோற்றத்தைக் காட்டுவது.ஆனால் கவிஞராக இருப்பது என்பது இயல்பானது.எனக்கு எது தெரியும் தெரியாது என்ற அவஸ்தை இன்றி இயல்பாக இருப்பது.எனக்கு தோன்றுவதைக் கூறுவது,எழுதுவது.எனவே நான் இயல்பாக இருப்பது என்ற அடிப்படையில் ஒரு கவிஞராக இருப்பதைத்தான் அதிகமாக விரும்புகிறேன்”என்று.ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார் “தெரியாததை தெரியாது என்று சொன்னால்தான் தெரிந்ததைச் சொல்லும்போது நம்புவார்கள்”என்று.

பிள்ளைகளை ஆகர்சிக்கவும் அவர்களுடைய அகத்தைத் தூண்டவும் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி ஊக்கப்படுத்தவும் ஆசிரியர் பரந்தபட்ட அறிவைக் கொண்டிருக்க வேண்டும். ஜெயந்தஸ்ரீ கூறுவதுபோல சார்ஜ் அதிகமாக இருக்க வேண்டும்.ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால்,இலங்கை போன்ற நாடுகளில் பரீட்சை மைய,போட்டிக் கல்விச் சூழலுக்குள் ஆசிரியர்கள் பரிட்சையை நோக்கித்தான் பிள்ளைகளை தயார்படுத்துவார்கள்.பந்தயக் குதிரைகளை தயார்படுத்துவது போல.ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இருந்து இந்தப் பந்தயம் தொடங்குகிறது.எனவே பந்தயக் குதிரைகளைத் தயார்படுத்தும் ஓர் ஆசிரியர் அந்தக்குதிரையை பரீட்சையை நோக்கித்தான் பயிறுவிக்கலாம்.அதற்கு வெளியே போனால்,சிறுவர் வகுப்புகளில்,பெற்றோர் அதை அனுமதிப்பார்களா?அல்லது வளர்ந்த பிள்ளைகளின் வகுப்புக்களில் பிள்ளைகள் அது பாடத் திட்டதுக்கு வெளியே போகிறது என்று கருதினால்?தனது கற்றல் வேளை வீணாக்கப்படுகிறது என்று முறைப்பாடு செய்தால்?

அதுமட்டுமல்ல பந்தயக் குதிரைகளை அதிகம் பயிற்றுவிப்பது தனியார் கல்வி நிறுவனங்கள்தான்.தேசியப் பரீர்ட்சைகளில் போட்டியிடும் பந்தயக் குதிரைகள் பெருமளவுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில்தான் தங்கியிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் குறைந்த அளவுக்கே பாடசாலைகளில் தங்கியிருக்கிறார்கள்.

சில பாடசாலைகளில் மிக அரிதான புறநடைகள் உண்டு.அங்கெல்லாம் சில ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளை முழுமையாகப் பொறுப்பெடுத்து பரீட்சைகளுக்குத் தயார்படுத்துகிறார்கள்.தங்களிடம் படிக்கும் பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் அனுமதிப்பதில்லை.அதை ஒரு தவம்போல அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் ஆனால் அது ஒரு பொதுவான தோற்றப்பாடு அல்ல.இந்த ஆசிரியர்களும்கூட எந்தவகை வோல்டேஜ்ஜை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இங்கு முக்கியம்.ஏனென்றால் நாட்டின் கல்வி முறைமை எதுவோ அதற்கு வேண்டிய வோல்டேஜ்ஜைத்தான் கல்விக் கட்டமைப்பு ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கும்.அதுபோலவே மாணவர்களும் பெற்றோர்களும் அதாவது பந்தயக் குதிரைகளும் அவற்றின் பெற்றோரும் அந்த வால்டேஜ்ஜைக் கொண்டிருக்கும் ஆசிரியரைத்தான் தேடிப்போவார்கள்.இங்கே எது பொருத்தமான வால்ட்டேஜ் என்பதனை கல்வியின் பிரயோக நோக்கந்தான் தீர்மானிக்கிறது. அதைமீறி ஆசிரியர்களால் அதைத் தீர்மானிக்க முடியுமா?

பரீட்சை மைய,போட்டிக் கல்வியில் கரணம் தப்பினால் மரணம் என்று வாழ்க்கை வெறுத்துப் படிக்கும் பிள்ளைகள் பந்தயத்தில் எப்படி ஜெயிப்பது என்றுதான் சிந்திப்பார்களே தவிர ஒரு முழுமனிதப் பிறவியாக தமது ஆளுமையை முழுமையாகக் கட்டியெழுப்பும் விடயங்களைக் குறித்து சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் உண்டா?அவ்வாறு சிந்திப்பதற்கு கல்விமுறையும் பெற்றோரும் அவர்களை விடுவார்களா?

இதில் விதிவிலக்கான பெற்றோரும் பிள்ளைகளும் உண்டு.அசாதாரணமான பிள்ளைகளும் உண்டு.அவர்கள் ஒரே சமயத்தில் பந்தயத்திலும் ஜெயிக்கிறார்கள்;வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய அறிவையும் திரட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் இது ஒரு பொதுப்போக்கு அல்ல.இப்படிப்பட்டதோர் கல்விச் சூழலுக்குள் பந்தயக் குதிரைகளைப் பயிற்றுவிப்பதற்கும் குதிரைகளின் முழுமையான ஆளுமையைச் செதுக்குவதற்குமிடையில் எதோ ஒரு  சமநிலையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பாடசாலைகள்தான் முழு மனித ஆளுமையைச் செதுக்கத் தேவையான வாய்ப்புகளையும் வளங்களையும் கொண்டிருக்கின்றன.தனியார் கல்வி நிறுவனங்கள் அல்ல.தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவுக்கு வணிக நோக்கங்களைக் கொண்டவை.அங்கே குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தயக் குதிரைகளைப் பழக்கி எடுக்க வேண்டும்.அங்கே நோக்கம் பந்தயம்தான். ஆனால் பாடசாலையின் நோக்கம் அதுவல்ல.ஆனால் துயரம் என்னவென்றால் போட்டிக் கல்வி முறைமையானது பாடசாலைகளின் மதிப்பை பெருமளவுக்கு குறைத்துவிட்டது.அதாவது ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளைப் பழக்கும் பயிற்றுவிப்பாளர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.கல்விமுறையின் தேவை அப்படித்தான் உள்ளது.மாறாக பரந்த தளத்தில் தனது அறிவைக் கட்டியெழுப்பி,தன்னை எப்பொழுதும் அப்டேட் செய்துகொண்டு தனது வோல்டேஜ்ஜை உயர்வாக வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்தக் கல்விமுறையில் எவ்வளவு தேவை உண்டு?

தமது பிள்ளைகள் தம்மைப் போலவே ஆசிரியர்களாக வர வேண்டும் என்று ஏன் பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை?போட்டிக் கல்வி முறைமைக்குள் ஆசிரியருக்குள்ள மதிப்பு குறைந்து போய்விட்டது காரணமா? அல்லது சில தனியார் கல்வி நிறுவனங்களில் வெற்றிபெற்ற, கோடீஸ்வரர்களாக உள்ள ஆசிரியர்களைவிட ஏனைய பெரும்பாலான ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்பதனாலா?தன் பிள்ளை தன்னைப்போல ஆசிரியராக வரவேண்டும் என்று கனவு காணும் ஆசிரியர்களை அதிகமாகக் கொண்டிராத ஒரு கல்வி முறைமைக்குள் எது சரியான வால்ட்டேஜ்?

இப்படிப்பட்டதோர் கல்விச் சூழலில் கடந்த வாரம் வெளிவந்த பரீட்சை முடிவுகளில் சில அரிதான புறநடைகளைத்தவிர பெரும்பாலான வெற்றிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும் காரணம்.இதில் ஆசிரியரின் வோல்டேஜ் என்பது எது என்பதை போட்டிக் கல்விச்சூழல்தான் தீர்மானிக்கின்றது.பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால்,நமது ஆசிரியர்களின் வோல்ட்டேஜ் கவலைப்படுமளவுக்குக் குறையவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளப்படும்.போட்டிப் பரீட்சைதான் பிரதான இலக்கு என்றால் நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.கல்வி முறைமையில் மாற்றத்தைச் செய்துவிட்டு  புதிய அளவு கோல்களுடன் வரலாம்.

நாட்டை இப்பொழுது ஆட்சி செய்வது மாற்றத்தை வாக்களித்து வந்த ஓர் அரசாங்கம்.அதில் பிரதமராகவும் கல்வி மந்திரியாகவும் இருப்பவர்,அரசாங்கத்தின் லிபரல் முகமாகக்  கருதப்படும் ஹரிணி அமரசூரிய. ஆனால் அவரால் இன்றுவரை பாடசாலைகளில் ஆசிரியைகளின் ஆடை விவகாரத்தில் காணப்படும் பால் அசமத்துவத்தை நீக்க முடியவில்லை.பிள்ளைகளின் உளவியலை பாரதூரமான விதங்களில் பாதிப்பது என்று கல்வி உளவியலாளர்களால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையான தேசிய சித்திரவதையை நிறுத்த முடியவில்லை.இதுதான் அரசியல் சூழல் என்றால் ஆசிரியருக்கு எது பொருத்தமான வோல்டேஜ் என்பதனை போட்டிப் பரீட்சைக் கல்வி முறைமைதான் இனியும் தீர்மானிக்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *