கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், ஊடக அமையத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20பேர் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ்.ஊடக அமையம்.இச்சந்திப்பில் அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டார்கள்.
கடந்த சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட மூன்றாவது நகர்வு இதுவாகும்.ஏற்கனவே கொழும்பு தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.அதன்பின் தமிழ் ஆயர்களின் அமைப்பு அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது.அதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது.இப்பொழுது யாழ் ஊடக அமையம் அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முயற்சிக்குப் பின்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஈடுபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்க இடம் உண்டு.சட்டத்தரணிகள் சங்கத்தில் பிரதான பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது தீவிரமாக செயல்படுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே முன்னணிக்கு நெருக்கமாகக் காணப்படுகின்ற சிவில் சமூகங்களுக்கு நெருக்கமாகக் காணப்பட்டவர்கள்.எனினும் இந்த முயற்சிக்கு, தான் முழுமையாக ஆதரவு தரப்போவதாக சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.கடந்த வார இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வழமையான மாதாந்தச் சந்திப்பு அது என்று கூறப்பட்டது.சந்திப்பின் முடிவில் நடந்த ஊடகச் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.அதாவது சட்டத்தரணிகள் அமைப்பின் செயற்பாட்டுக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தரப்போவதாகவும்,இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டை அடைவதற்காக தமிழரசுக் கட்சி உழைக்கும் என்பதையும் அவருடைய பதிலிலிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
மேலும் சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி சுமந்திரன் இந்த விடயத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர்களுக்கு எந்த விதமான தடையுமின்றி ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது. அதேசமயம்,சட்டத்தரணிகளின் முயற்சிக்கு ஆதரவாக முன்னணியில் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையும் ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.ஏற்கனவே சில கிழமைகளுக்கு முன் நடந்த இளங் கலைஞர் மன்றச் சந்திப்பின்போது குழு ஒன்று உருவாக்கப்பட்டது.அந்த குழுவுக்குள் அரசியல்வாதிகள்.அரசியல் செயற்பாட்டாளர்கள்,அரசியல் விமர்சகர்கள்,அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.அந்தக் கட்டமைப்பு விரைவில் ஒரு பொது ஆவணத்தைத் தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் ஆயர்களும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் இறங்குவதற்கு ஆர்வமாகக் காணப்படுகிறார்கள். இப்பொழுது யாழ் ஊடக அமையம் அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறது.
இந்த நகர்வுகள் தன்னியியல்பாக முன்னெடுக்கப்படுகின்றவையா? அல்லது இவற்றின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்று தமிழ்ப் பொது மனம் சந்தேகிக்கும்.அந்தச் சந்தேகம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளின் பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கலாம் என்று பொதுவாக ஊகிக்கப்படுகின்றது.அதனால் ஆயர்களின் சங்கம் மற்றும் யாழ்.ஊடக அமையும் என்பவற்றின் பின்னணியில் யாராவது உண்டா என்ற சந்தேகம் இயல்பாகவே தோன்றும்.கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சந்திப்பின் பின் யாழ்.ஊடக அமையம் வெளியிட்ட அறிக்கையின் மொழிநடை அந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துவது.
யாரும் பின்னணியில் இருந்து விட்டுப் போகட்டும்.ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அவசியம்.அதுவும் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தால்-கவனிக்கவும் முயற்சித்தால்- தமிழ்மக்கள் அதை எதிர்கொள்ளத் தேவையான தயாரிப்புகளோடு காணப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் தற்போது லண்டனில் இருந்து செய்யப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்செயற்பாட்டாளர் ஒருவரின் ஊக்குவிப்போடு முன்னெடுக்கப்படுகின்ற திருமலைப் பிரகடனமும் அதன் பின்னரான கருத்தரங்குகளும் அவசியமானவை.மேற்படி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் அப்படி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் அந்த ஆவணம் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கத்தை பிரதானமாக கொண்டிருக்க வேண்டும்.அதாவது புதிய யாப்பை நோக்கி அந்தமுயற்சி முன்னெடுக்கப்பட்டால் நல்லது.மாறாக, முன்னணிக்கு ஆப்பு வைப்பது என்று சிந்தித்துச் செயற்படாமல் இருந்தால் சரி.
திருமலைப் பிரகடனம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில்,சட்டத்தரணிகள் அமைப்பு ஒருங்கிணைப்பு முயற்சிகளைக் கையில் எடுத்தது.சட்டத்தரணிகள் அமைப்பு கட்சித் தலைவர்களை அழைத்து முதலாவது சந்திப்பை நடத்தியிருந்த பின்னணிக்குள், தமிழ் ஆயர்கள் சங்கம் அந்த முயற்சியில் இறங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.ஆயர்கள் சங்கத்தின் அறிவிப்பு ஊடகங்களில் வெளிவந்திருந்த ஒரு பின்னணிக்குள்,கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையும் இந்த விடயத்தைக் கையில் எடுத்திருக்கிறது.
ஒரு புதிய யாப்பை நோக்கி மட்டுமல்ல, வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலை நோக்கியும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைப்பது நல்லது.பல்வேறு தரப்புக்களும் தங்கள் சக்தியைப் பிரயோகித்து கட்சிகளை ஒரு மேசைக்குக் கொண்டுவர முடிந்தால் அது மிகவும் நல்லது. ஆனால் இந்த முயற்சிகள் தங்களுக்கு இடையே பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.இந்த விடயத்தில் யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால்,இப்பொழுது நான்கு உரல்களில் நான்கு விதமாக அரிசி குத்தப்படுகிறது. இதில் ஒரு உரல்,தான் குத்துவதுதான் அரிசியாக வரும் அடுத்தவர் குத்துவது மண்ணாக வரும் என்று கூறாமல் இருக்க வேண்டும்.
அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா என்பது சந்தேகந்தான்.சில சமயம் அரசாங்கம் அந்த முயற்சியைத் தொடங்கலாம். ஆனால் அதை இழுத்திழுத்துக் கொண்டுபோய் ஒன்றில் தனது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அதை முடுக்கிவிடலாம்.அல்லது அடுத்த முறையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதினால் அதை மேலும் ஒத்தி வைக்கலாம்.டித்வா புயல்,மேற்காசியப் போர் போன்றவற்றின் பின்னணியில், பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தடங்கல்களுக்கு உள்ளாகியுள்ளன.போரை ஒரு காரணமாக முன்வைத்து அரசாங்கம் யாப்புருவாக்க முயற்சிகளை ஒத்திப்போடும் வாய்ப்புகள் உண்டு.யாப்புருவாக்க முயற்சி என்பது ஒரு வாழ்வா சாவா பிரச்சினை.அதில் இப்பொழுது கையை வைத்து தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை இழப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ?
ஆனால் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் விரைந்து நடத்தக்கூடும். ஏனென்றால் இந்தியாவை சந்தோஷப்படுத்த வேண்டும்.இப்பொழுது மேற்காசியப் போரின் பின்னணியிலும் இந்தியா அரசாங்கத்துக்கு அதிகம் உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டி வரலாம். அப்படி நடந்தால்,அத்தேர்தலை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தவறினால்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த விளைவுகள்தான் கிடைக்கக்கூடும்.அதாவது தமிழ்க் கட்சிகள் ஆளுக்காள் வாக்குகளைப் பங்கிடடால், தமிழ் வாக்குப் பலம் சிதறடிக்கப்படலாம். மாகாண நிர்வாகத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது சவால்கள் மிகுந்ததாக மாறலாம்.
மாகாண சபைத் தேர்தலில் அவ்வாறு வாக்குச் சிதறும் வாய்ப்புகள் அதிகரித்தால்,அது அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும்.நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததுபோல ஒரு ஆணை அங்கு கிடைக்குமாக இருந்தால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்மக்கள் தனக்கும் ஆணை வழங்கியிருப்பதாகக் கூறும்.
எனவே மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒருமைப்பாடும் அவசியம்.அந்த ஒருமைப்பாட்டை அடுத்த கட்டமாக யாப்புருவாக்க முயற்சியை நோக்கியும் திருப்பலாம். எதைச் செய்தாலும் எல்லாருமாகச் சேர்ந்து ஒரே பெரிய உரலுக்குள் அரிசியைப் போட்டு இடிப்பதுதான் தமிழ் மக்களுக்கு நல்லது;கட்சிகளுக்கும் நல்லது.





