ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும்போது,அதில் ஒரு பிள்ளை கேட்டார், ”இனப்பிரச்சினை என்றால் என்ன?” என்று.ஒரு மருத்துவர் கேட்டார், “எனது இருபது வயதுப் பிள்ளை அனுரவின் “ரீல்ஸ்”களைத்தான் அதிகமாகப் பார்க்கின்றது.அது யாரைக் கதாநாயகனாகக் கருதும்?” என்று.
21 வயதுப் பிள்ளை ஒன்று இனப்பிரச்சினை என்றால் என்ன ஒன்று கேட்கும் ஒரு சமூகத்தில்தான், முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுத்து, இறுதிக் கட்டப்போரின் கதைகளை எடுத்துக்கூற வேண்டியிருக்கிறது.“ஜெனரேஷன் ஸற்” அல்லது “ஜென்சி” என்று அழைக்கப்படுகின்ற இளையோரின் கவனக் குவி மையத்துக்குள் தமிழ்த் தேசிய உரையாடல் பெருமளவுக்கு இல்லை.அவர்களுக்கு பார்க்கக் கிடைக்கின்ற;கேட்கக் கிடைக்கின்ற;மிகக் குறைந்த அளவுக்கு வாசிக்க கிடைக்கின்ற விடயங்களில் அந்த உரையாடல் குறைவு.அவர்கள் ரசித்துப் பார்க்கின்ற சில நிமிட ரீல்ஸ்களில் அந்த உரையாடல் குறைவு.
ஒருபுறம் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரவலாக எடுத்துச்செல்லும் பல்கலைக்கழக மாணவர்களும் ஜென்சிதான்.அதேசமயம் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியிடமும் ஜென்சியை அமைப்பாக்கும் பொறிமுறையோ,அல்லது அதற்கு வேண்டிய அரசியல் தரிசனமோ இல்லை.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக பகிரங்கமாக எடுத்துரைக்க முடியாத சட்டச் சூழல் ஒன்று தாயகத்தில் உண்டு. சமூக வலைத்தளங்களிலும் அவ்வாறான சட்டத் தடைகள் உண்டு. அதனால் அதனை அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும்தான் துணிந்து பகிரங்கமாக எடுத்துரைக்கிறார்கள்.
சமூக மட்டத்தில் குறிப்பாக குடும்ப மட்டத்தில் அந்த உரையாடல் குறைவு என்று தெரிகிறது. அவ்வாறான உரையாடல்களை தங்கள் பிள்ளைகள் மத்தியில் ஊக்குவிப்பதற்கு ஒரு பகுதி பெற்றோர் அஞ்சுகிறார்கள்.பிள்ளைகள் ரத்தம் சிந்தும் அரசியலின் பக்கம் போய்விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை ஒரு காரணம். அவ்வாறு தலைமுறைகள் தோறும் போரின் கதைகளை எடுத்துக் கூறத்தக்க ஏற்பாடுகள் தமிழ்க் கட்சிகள் மத்தியிலும் குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் குறைவு என்பது மற்றொரு காரணம்.சமூக வலைத்தளச் சூழலுக்குள்ளும் அதுதொடர்பாக தடைகள் உண்டு என்பது மூன்றாவது காரணம். இதனால் ஈழத் தமிழர்களின் இறந்த காலத்தின் ஒரு பகுதி குறிப்பாக ஆயுதப் போராட்ட காலகட்டம் மறைக்கப்பட்ட ஒரு கதையாகவோ அல்லது மறக்கப்பட்ட ஒரு கதையாகவோ அல்லது நினைக்க விரும்பாத ஒரு கதையாகவோ மாறி வருகிறதா?
“கதை சொல்லிகள் சமூகத்தை ஆள்வார்கள்” என்று கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ கூறினார்.நமது காலத்தின் கதை சொல்லிகள் பெருமளவுக்கு காணொளிக்காரர்கள்தான்.இவர்கள் சொல்லும் கதைகளில் அதிகமானவை டொலர்களை மையமாகக் கொண்டவை.அங்கே வணிக நோக்கம்தான் அதிகமாக இருக்கும்.கருத்துருவாக்கத்துக்கும் தேச நிர்மாணத்துக்குமான கதைகள்,உரையாடல்கள் மிகக்குறைவு.அவ்வாறான உரையாடல்களை உள்ளடக்கமாகக் கொண்ட காணொளிகள் வணிக ரீதியாக வெற்றிபெறுவது குறைவு.
ஒரு தலைமுறை விரும்பிப் பார்க்கும் விடயங்களுக்குள்,விரும்பிக் கேட்கும் விடயங்களுக்குள்,விரும்பி ரசிக்கும் விடயங்களுக்குள்,திரும்பத்திரும்ப கேட்கும் விடயங்களுக்குள்,இனத்தின் கதையை எப்படிக் கொண்டு போய்ச் செருகுவது? என்ற வித்தையைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் போதிய அளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறார்களா?
1970களில் முன்வைக்கப்பட்ட அதே தமிழ்த் தேசிய “நரேட்டிவ்களை”-எடுத்துரைப்புகளை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டின் பின் இப்பொழுதும் முன்வைக்க முடியாது.எம்ஜிஆரின் காலத்தில் முன்வைக்கப்பட்ட எடுத்துரைப்புகளை விஜயின் காலத்தில் முன்வைக்க முடியாது.
இதில் ஜெனரேஷன் ஸற் மட்டுமல்ல,அவர்களால் “பூமர்கள்” என்று அழைக்கப்படுகின்ற நடுத்தர வயது கடந்தவர்கள் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் கைபேசி ஆறாவது புலனாக மாறிவிட்டது.கேபிள் தொலைக்காட்சி வரவேற்றையில் ஒரு நிரந்தர விருந்தினராக மாறிவிட்டது.இளைய தலைமுறை மட்டுமல்ல வயது போனவர்களும் கைபேசிகளில் மெனக்கெடுக்கிறார்கள்.
இப்படிப்பட்டதோர் அரசியல்,சட்டச் சூழல் மற்றும் தொழில்நுட்பச் சூழலில் நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவது எப்படி? “வேர்ச்சுவலாக”- மெய்நிகர் நினைவுச் சின்னங்களை உருவாக்கலாம்.மெய்நிகர் ஆவணக் காப்பகங்களை உருவாக்கலாம். மெய் நிகர் தளத்தில் தலைமுறைகள் தோறும் நினைவுகளைக் கடத்தலாம்.ஆனால் மெய் நிகராக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் காய்ச்ச முடியாது;பகிர முடியாது. அது தூலமானது.
இளைய தலைமுறையினர் போன ஆண்டும் முள்ளிவாய்க்காலுக்கு வந்தார்கள்.மாவீரர் நாளுக்கும் வந்தார்கள்.இந்த ஆண்டும் வருவார்கள்.இங்கே கேள்வி அவர்கள் என் வருகிறார்கள் என்பதல்ல,அவர்களை எப்படி அரசியல் ஆக்க சக்தியாக வார்த்து எடுப்பது? எப்படி நீதிக்கான போராட்டத்தின் கூர்முனையாகத் தீட்டி எடுப்பது? என்பதுதான்.
நடிகர் விஜய் பெற்ற வெற்றியானது பாரம்பரியமாக அரசியலில் நிலவி வந்த நம்பிக்கைகள் சிலவற்றைத் தகர்த்து விட்டது.மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள் “புரட்சிகரமான ஸ்தாபனம் இல்லாமல் புரட்சி இல்லை.புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான ஸ்தாபனம் அல்லது கட்சி இல்லை “என்று.ஆனால் விஜய் அப்படிப்பட்ட தூலமான கட்டமைப்புகள் எவற்றையும் கொண்டிராமல் வெற்றி பெற்றிருக்கிறார்.அவர் மட்டும் வெல்லவில்லை ஏற்கனவே ட்ரம்ப் வந்து விட்டார்;எங்ளூரில் அர்ஜுனா வந்திருக்கிறார்.இப்பொழுது அனுர ஒரு ரீல்ஸ் நாயகனாக வலம் வருகிறார்.
தவிர,இந்த தசாப்தம் முழுவதிலும் நடந்த ஜெனரேஷன் ஸற் உடைய பெரும்பாலான போராட்டங்கள் அவ்வாறான கட்டமைப்பு அடிப்படைகளோ அல்லது தத்துவார்த்த அடித்தளமோ இல்லாதவைதான்.அவர்கள் “கலெக்டிவாக”- திரளாக இருக்கிறார்கள். ஆனால் அரசியல் ரீதியாக இலட்சியத்தால் வார்த்து எடுக்கப்படவில்லை.
இங்கேதான் தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது. தமிழ்த் தேசியவாதம் என்பது ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இலட்சியவாதந்தான்.இலட்சியவாதம் பெரும்பாலும் வணிகவாதத்தோடு சமரசம் செய்யாது.ஆனால் சமூக வலைத்தளச் சூழல் என்பது அதிகபட்சம் வணிக மயப்பட்டதாகவே மேல் எழுகிறது. இவ்வாறு அதிகமதிகம் வணிக மயப்படும் ஒரு சமூக வலைத்தளச் சூழலில் இலட்சிய வாத அரசியலை முன்னெடுப்பவர்கள் புதிய நரேடிவ்களை-எடுத்துரைப்புகளை கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களை விஜயின் வெற்றி அதிகப்படுத்தியிருக்கிறது.
தமிழில் ஏற்கனவே அறிவுபூர்வமானதற்கும் பொதுப்புத்திக்கும் இடையிலான இடைவெளி அல்லது அறிவாழம் மிக்கதற்கும் ஜனரஞ்சகமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகம்.யூடியூப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி முன்னப்பொழுதையும் விட பாரதூரமான விதங்களில் அதிகரித்து வருகிறது. வணிக வேட்கை மிகுந்த மெய் நிகர் வெளிக்குள் தமிழ் மக்கள் தமது புதிய உரையாடல்களைச் செருக வேண்டும். ஜென்சியின் தலைக்குள் இதை எப்படிச் செலுத்துவது என்று புதிதாகச் சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றையும் குளிசை வடிவத்தில் கொடுத்துவிட முடியாது. எல்லாவற்றையும் ரீல்ஸ்களாகக் கூறிவிட முடியாது.ஆனாலும் ரீல்ஸ்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒரு தலைமுறைக்கு ரீல்ஸ்களில்தான் விடயங்களை எடுத்துரைக்க வேண்டியிருக்குமா?
அண்மையில் ஒரு தமிழ்த் தேசிய அரசியல்வாதி பிரபல்யமான ஒரு யூரிப்யூபருக்கு பேட்டி கொடுத்திருந்தார்.அந்த வழியால் சென்றால் ஜென்சிக்களை சென்றடையலாம் என்று அவர் கருதியிருக்கலாம்.ஆனால் ஒரு யுடியூப்பர் எதனால் அதிகம் பிரபல்யம் அடைகிறார்?அவர் எந்தளவுக்கு பொதுப் புத்தியை வசீகரிக்கிறார் என்பதில்தான் அது தங்கியிருக்கிறது.அதாவது பொதுப் புத்தியை வசீகரிப்பது என்றால் உள்ளடக்கம் லேசாக இருக்க வேண்டும்; ஆழமற்றதாக, மேலோட்டமானதாக,சிக்கலற்றதாக இருக்க வேண்டும். அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமற்றதாக இருக்கிறதோ அவ்வளவு அது ஜனரஞ்சகமாகிவிடும்.மேலோட்டமானவைதான் பெரும்பாலும் உடனடிக்கு வைரல் ஆகும். ஒரு யூரியூப்பரின்பிரபல்யத்தை முதலீடாக வைத்து கனதியான அரசியல் உரையாடல்களை வைரல் ஆக்க முடியுமா? இப்படிப்பட்டதோர் மெய்நிகர் அரசியல் பின்னணிக்குள்,தமிழ்த் தேசியவாதம் என்று கூறிக்கொண்டு எம்ஜிஆரின் காலத்து எடுத்துரைப்புகளை ஜென்சிகளின் தலைக்குள் செலுத்த முடியாது.
விஜய் பெற்ற வெற்றியை மகிமைப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.நினைவுகூர்தல் எனப்படுவது கூடித் துக்கிப்பது மட்டுமல்ல.கூட்டுத் துக்கத்தை எப்படி நீதிக்கான போராட்டத்தின் உந்து சக்தியாக மாற்றுவது என்பதுதான்.





