17 ஆண்டுகளாகிவிட்டன.2009க்கு முன்தமிழ் மக்களின் போராட்டம் தனி நாட்டுக்கான போராட்டமாகப் பார்க்கப்பட்டது.ஆனால் 2009க்குப் பின் தமிழ் மக்கள் அதனை நீதிக்கான போராட்டம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இன அழிப்புக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான போராட்டம் என்ற பொருளில். கடந்த 17ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் தமிழ்மக்கள் எதுவரை முன்னேறியிருக்கிறார்கள்?
ஈழத் தமிழர்கள் என்று கூறும்போது இப்பொழுது இரண்டு தமிழ்ப் பரப்புகளை கவனத்தில்கொள்ள வேண்டும்.ஒன்று,தாயகம்.மற்றது,புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம்.
முதலில் தாயகத்தை எடுத்துக் கொள்வோம்.தாயகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எதுவரை முன்னேறியிருக்கிறார்கள்? நீதிக்கான போராட்டம் என்பது நிச்சயமாக கட்சி அரசியல் அல்ல.இலங்கைத் தீவின் சட்டச் சூழலுக்குக்குள் தாயகத்தில் அதை முன்னெடுப்பதில் அடிப்படையான நெருக்கடிகள் இருக்கும்.எனவே சட்ட ரீதியாகப் போராட முடியாது.சட்ட மறுப்பாகத்தான் போராட வேண்டும்.அவ்வாறு போராட்டத்தக்க ஏற்பாடுகள் எவையாவது தமிழ்மக்கள் மத்தியில் உண்டா?அவ்வாறு எத்தனை போராட்டங்கள் இதுவரையிலும் நடந்திருக்கின்றன?
சில “எழுக தமிழ்கள்”,ஒரு “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை”யான பேரணி,தமிழ்ப் பொது வேட்பாளர்,தையிட்டிப் போராட்டம்,நிலப் பறிப்புக்கு எதிரான ஏனைய போராட்டங்கள் போன்றவற்றிற்கும் அப்பால் தமிழ் அரசியலானது கட்சிமைய அரசியலாகப் பெட்டி கட்டப்பட்டுவிட்டது.
அந்தக் கட்சிமைய அரசியலும்கூட தமிழ் மக்களை,கட்சிகளாக,கட்சிக்குள் குழுக்களாக,வடக்குக்-கிழக்காக,முகநூல் குழுக்களாக,இன்னபிறவாகப் பிரித்து வைத்திருக்கிறது. 2009இல் தமிழ்மக்கள் மத்தியில் பலமான ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு இருந்தது.அது படிப்படியாக உடைந்து இப்பொழுது தமிழரசுக் கட்சி உள்ளவற்றில் பெரிய கட்சியாகக் காணப்படுகிறது.அங்கேயும் இரண்டு அணிகள்.கண்டி வீதியில், மாங்குளத்தில் ஒரு மே தினம்,கிளிநொச்சியில் ஒரு மே தினம்.
கடந்த 17 ஆண்டுகால தேக்கத்துக்கும் தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.ஏனென்றால் அதுதான் தன்னையே முதன்மைக் கட்சி,பிரதான கட்சி என்று கூறிக்கொள்கிறது. தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுச்சி பெறவில்லை.ஆனால்,கொள்கை ரீதியாக மாற்றாகக் காணப்படுகிறது.கடந்த 17 ஆண்டுகளில் தங்களை ஒரு பலமான மாற்று அணியாகக் கட்டி எழுப்ப அவர்களால் முடியவில்லை.
எனவே தாயகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் நிலவரத்தை கடந்த 17 ஆண்டு கால பரப்புக்குள் தொகுத்துப் பார்த்தால்,தெளிவாகத் தெரிவது என்னவென்றால் தமிழ் மக்கள் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்கும்ஒரேயளவு ஆசனங்கள் கிடைத்தன என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
கட்சிமைய அரசியலுக்கூடாக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது மட்டுமல்ல,இனப்பிரச்சினைக்கான தீர்வையும் பெறமுடியாது என்பதைத்தான் கடந்த 17 ஆண்டுகால அரசியல் நிரூபித்திருக்கிறது.கடந்த 17 ஆண்டுகளிலும் 2015ல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது தமிழ் மக்களின் பேரம் ஒப்பீட்டுளவில் உயர்வாக இருந்தது.ஆனால் இப்பொழுது அப்படியல்ல. தமிழ் மக்களின் பேரம் குறைந்து வருவதைத்தான் ஐநாவின் நடவடிக்கைகளும் உணர்த்துகின்றன.என்பிபி அரசாங்கம் பொறுப்பேற்ற பின், அந்த அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐநா சிந்திப்பது தெரிகிறது.
கடந்த 17 ஆண்டுகால ஐநா மைய அரசியலில் என்ன கிடைத்தது? 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகந்தான். அதுகூட மனிதஉரிமைகள் பேரவையின் அலுவலகத்துக்குள்தான் இயங்குகிறது. மனித உரிமைகள் பேரவைக்குள்ள வரையறுக்கப்பட்ட ஆணைதான் அதற்கும் உண்டு.
அந்த அலுவலகத்தின்மூலம் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சிகளும் அடுத்த கட்டமாக எந்த அனைத்துலக நீதிமன்றத்தில் உரிய சட்ட ஆவணங்களாக மாற்றப்பட்டு முன்நகர்த்தப்படும் என்பது தொடர்பில் யாரிடமும் தெளிவான தரிசனங்கள் இல்லை. இதுதொடர்பாக கஜேந்திரக்குமார் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருக்கிறார்.இந்த அலுவலகத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீலங்காவின் படைப் பிரதானிகள் சிலருக்கு எதிராக,சில வெளி நாடுகள் பயணத் தடை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐநாவில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலானவையா?அல்லது சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறக்கூடிய அதிகளவு வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் இச்சிறிய தீவின் அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நோக்கிலானவயா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.ஐநா மைய அரசியலில் கடந்த 17 ஆண்டுகளிலும் கிடைத்தது இது.
இது தாயக நிலவரம்.புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பை இனி பார்க்கலாம். நீதிக்கான போராட்டத்திலும் ஐநா மைய அரசியலிலும் ஒப்பீட்டளவில் வினைத்திறனோடு,சுயாதீனமாக நகர்வுகளை முன்னெடுப்பது பெருமளவுக்கு புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். 2009க்குப் பின்னரான நீதிக்கான போராட்டத்தின் கூர்முனைபோல அவர்களே தோன்றுகிறார்கள். அவர்களுடைய உழைப்பின் விளைவாகவே குறிப்பாக கனடாவில் இன அழிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோலவே பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இனஅழிப்பை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
தாயகத்தைப் போலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உடைவுகள் அதிகம். இறந்தவர்களை உயிர்பிக்கும் அரசியல் ஒருபுறம். பொதுச் சொத்தை தனிச் சொத்தாக அனுபவிக்கும் போக்கு ஒருபுறம். தங்களுடைய விடுதலையை வேறு யாராவது பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களை நோக்கிக் காசை விசுக்கும் போக்கு ஒரு புறம்,தாயகத்தில் உள்ள போராட்ட அமைப்புகளை நிதி உதவிகளின் மூலம் கையாளும் போக்கு ஒருபுறம்….என்றிவ்வாறாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏதோ ஒருவிதத்தில் தாயக அரசியலின் மீது அதிகரித்த ஈடுபாட்டைக் காட்டி வருகிறது. கடைசியாக நடந்த தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தலிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தீவிரமாகத் தலையிட்டது.அதிகளவு நிதி முதலீடுகளைச் செய்தது. தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்கள் அதிகளவு ஈடுபட்ட ஒரு தேர்தலாக கடந்த மாதம் நடந்த தேர்தலைக் குறிப்பிடலாம்.இது வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலின் ஒரு பகுதிதான்.
எனவே இப்பொழுது இரண்டு தமிழ்ப் பரப்புக்களையும் தொகுத்துப் பார்ப்போம்.கடந்த 17ஆண்டு காலப் பகுதியிலும்,தாயகத்தில்,தமிழ்த் தேசிய அரசியல் மெலிந்துகொண்டே போகிறது.சனத் தொகையும் மெலிந்து கொண்டே போகிறது.கட்சி அரசியலில் ஏற்பட்ட விரக்தியின் விளைவாக தமிழ் மக்கள் என்பிபிக்கும் அர்ஜுனாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.அதில் ஒரு பகுதியினர் கடந்த மாதம் நடந்த தமிழ்நாட்டின் தேர்தலில் அளவுக்கு மிஞ்சி ஈடுபாடு காட்டினார்கள்.
நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் பொருத்தமான விதங்களில் திருப்தியான விதங்களில் முன்நகரவில்லை.கட்சிமைய அரசியலிலும் தேசமாகத் திரளக்கூடிய நிலைமைகள் இல்லை.மாறாக தேசம் திரைந்து கொண்டேபோகிறது.”வேர்ச்சுவல்”- மெய்நிகர் அரசியல் பரப்பில் தமிழ்த் தலைவர்கள் கதாநாயகர்களாக இல்லை. அனுரதான் ரீல்ஸ்களை ஆக்கிரமிக்கிறார்.இப்பொழுது விஜய்.
இதுதான் கடந்த 17ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் பெற்றவை;பெறாதவை. ஒவ்வொரு மேமாதம் 18ஆம் திகதியும் தமிழ்மக்கள் கட்சி கடந்து,தேச எல்லைகளைக் கடந்து, ஒரே உணர்ச்சிப் புள்ளியில் ஒன்று திரள்கிறார்கள். ஆனால் அந்தத் திரட்சியும் உணர்ச்சி வேகமும் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றப்படவில்லை.அவ்வாறு மாற்றத்தக்க அரசியல் தரிசனங்களோடு தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் அமைப்புகளும் இல்லை; கட்சிகளும் இல்லை. கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றினால்தான் நீதிக்கான போராட்டத்தை செலுத்தும் விசையாக அது மாறும்.மே 18 எனப்படுவது ஒவ்வொரு ஆண்டும் கூடி அழுது பின் கலைந்து போகும் ஒரு சடங்கு அல்ல.




