தான் நம்பிய ஒன்றுக்காக கடைசிவரை தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மிகச் சில அசலான தொழிற்சங்கவாதிகளில் சிவராசா மாஸ்டரும் ஒருவர்.
சிவராசா மாஸ்டர் இறந்தபோது கொம்யூனிசம் என்றால் என்ன? தொழிற்சங்க வாதம் என்றால் என்ன? என்று சில நிமிட ரீல்ஸ்களுக்குள் தேடும் ஒரு தலைமுறை கைபேசிகளோடு எழுச்சி பெற்றுவிட்டது.சிவராசா மாஸ்டர் இறந்தபோது சர்வதேச பாட்டாளித்துவம் எழுச்சி பெற்றிருக்கவில்லை. உலகளாவிய இணைய வலைப்பின்னல் எழுச்சி பெற்றுவிட்டது.திறந்த சந்தைப் பொருளாதாரம் உலகின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீமையாக எழுச்சி பெற்று விட்டது.சிவராசா மாஸ்டர் இறந்தபோது தமிழகத்தில் மக்களை “அரசியல் மயப்படுத்தியதை விடவும் ரசிக மயப்படுத்தியதால்” வெற்றி பெற்ற ஒரு நடிகர் முதலமைச்சராக எழுச்சி பெற்றிருந்தார்.
கடந்த நூற்றாண்டில் மார்க்சியத்தை ஓர் அரசியல் நடைமுறையாகப் பயில்வதில் ஏற்பட்ட தோல்விகள்,ஏமாற்றங்கள் என்பவற்றின் பின்னணியிலும் தனது நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை வாழ்ந்த ஒரு தொழிற்சங்கவாதி அவர்.நோயும் முதுமையும் தமிழ் அரசியல் சூழலும் அவரை மனந்தளரச் செய்த போதிலும் அவர் கடைசி வரை பெருமளவுக்கு சமரசம் செய்யாமல் வாழ்ந்தார்;இறந்தார்.
அவர் அங்கத்துவம் வகித்த இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கம் இலங்கைத் தீவின் தொழிற்சங்க வரலாற்றில் தனக்கென்று சமரசம் இல்லாத ஒரு வரலாற்றைக் கொண்டது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு,அதன் அடிப்படையில் உச்சபட்ச தன்னாட்சியைத் தீர்வாக முன்வைத்த ஓர் ஆசிரியர் தொழிற்சங்கம் அது.
அதன் துணிச்சலான சமரசத்துக்கு இடமில்லாத அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக 1985இல் அத்தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எச்.என்.பெர்னாண்டோவுக்கு தென்னிலங்கை பாதுகாப்பாக இருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருந்தது.
அப்பொழுது யாழ்ப்பாணத்தில் பல்வேறு இயக்கங்கள் இருந்தன. பெரும்பாலான இயக்கங்கள் யாழ்ப்பாணம் அவருக்குப் பாதுகாப்பானது என்பதனை உறுதிப்படுத்தின.எச்.என்.பெர்னான்டோ இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மட்டுமல்ல,ஜேவிபியின் ஸ்தாபகத் தலைவர் ரோகன விஜயவீரவின் மனைவியினுடைய உடன்பிறந்த சகோதரரும்கூட.ஆனால் அவருக்குத் தென்னிலங்கையை விடவும் யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருந்தது.
அக்காலகட்டங்களில் ராஜநாயகம் மாஸ்டர்,சிவராசா மாஸ்டர், மு.திருநாவுக்கரசு,ஏஜே.கனகரட்டினா,குகமூர்த்தி போன்றவர்கள் எச்.என். பெர்னாண்டோவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்.சிவராசா மாஸ்டர் தாய்க்கோழி அதன் குஞ்சைப் பாதுகாப்பது போல பெர்னாண்டோவை பொத்தி பொத்தி பாதுகாத்தார்.நேர்மையான துணிச்சலான அர்ப்பணிப்புமிக்க ஒரு சிங்கள இடதுசாரிக்கு யாழ்ப்பாணத்தில் அப்போதிருந்த விடுதலை இயக்கங்கள் பாதுகாப்பை வழங்கின என்பது தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றில் மகிமைக்குரிய ஒரு விடயம்.ஒரு சிங்களத் தொழிற்சங்கவாதிக்கு பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலும் ஆசிரியர் தொழிற்சங்க அரசியலும் செழிப்பாக இருந்தன.
இலங்கைத் தீவின் தொழிற்சங்க வரலாறு எனப்படுவது ஒருவிதத்தில் இலங்கைத் தீவின் இன முரண்பாட்டின் வரலாறுதான்.ஏ.ஈ.குணசிங்காவில் தொடங்கி சிங்கள தொழிற்சங்கவாதிகளில் ஒரு பகுதியினர் எப்படி இன முரண்பாட்டைப் பிரதிபலித்தார்கள் என்பது அந்த வரலாற்றில் உண்டு.இடது பாரம்பரியத்தில் வந்த தொழிற்சங்கவாதிகள் எப்படி முதலில் இனப்பிரச்சினையில் நீதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதும்,எப்படிப் பின்னாளில் தலைகீழாக நின்று “தோசே மசால வடே” என்று கோஷம் எழுப்பினார்கள் என்பதும் அந்த வரலாற்றில் உண்டு.மலையாகத் தமிழர்கள் விடயத்தில் சிங்கள இடதுசாரிகள் எப்படி முதலில் முற்போக்காகவும் பின்னாளில் பிற்போக்காகவும் நடந்து கொண்டார்கள் என்பதும் அந்த வரலாற்றில் உண்டு.இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அவர்கள் தொடக்கத்தில் எவ்வளவுதான் முற்போக்காக காணப்பட்டாலும் பின்னாளில் குறிப்பாக போர்காலங்களில் அவர்களில் அதிகமானவர்கள் எப்படி இனவாதத்தின் பக்கம் நின்றார்கள் என்பதும் அந்த வரலாற்றில் உண்டு.
இப்பொழுதும் தமிழ் இடதுசாரிகளில் ஒரு பகுதியினர் தேசிய மக்கள் சக்தியை எதிர்பார்ப்போடு பார்ப்பதும் அவர்களுடைய மேடைகளில் ஏறி அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் அந்த வரலாற்றின் தொடர்ச்சிதான்.
இவ்வாறு தென்னிலங்கையில் பாரம்பரிய சிங்கள பௌத்த கட்சிகள் பலவீனமடைந்து லிபரல் முகமூடி அணிந்த அல்லது சமூக விடுதலை முகமூடி அணிந்த புதிய அரசியல் கூட்டுக்கள் ஆட்சியைக் கைப்பற்றும்போது, சிங்கள இடதுசாரிகளும் சரி தமிழ் இடதுசாரிகளில் ஒரு பகுதியினரும் சரி அதனை எதிர்பார்ப்போடு பார்ப்பது ஒரு வரலாற்று வழமை.
தமிழ் இடதுசாரிகளில் ஒரு பகுதியினர் அவ்வாறு தென்னிலங்கையில் உருவாகும் புதிய ஆட்சியின் மீது நம்பிக்கையை வைப்பது என்பது இப்பொழுது உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் மட்டும் நிகழவில்லை இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் இடது சாரிகளில் ஒரு பகுதியினர் ஏன் அவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள்?
ஏனென்றால் அவர்கள் தமிழ்த் தேசிய வாதத்தை குறுந்தேசிய வாதமாகவே பார்க்கிறார்கள்.அல்லது இனவாதமாகவே பார்க்கிறார்கள்.அதனால் அது பிற்போக்கானது,குட்டி முதலாளித்துவப் பண்புமிக்கது என்றும் நம்புகிறார்கள். அதனால் தமிழ்த் தேசிய வாதத்துக்கு மாற்றாக தென்னிலங்கையில் ஏதாவது சிறிய சிவப்பு ஒளிக்கீற்று தோன்றும்போது அல்லது லிபரல் ஒளிக்கீற்று தோன்றும்போது அவர்கள் அதனை ஆர்வத்தோடு பின்தொடர்கிறார்கள்.இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,அவர்கள் தமிழ்த்தேசிய அரசியலை எதிர்ப்பதற்கு தென்னிலங்கையில் ஏதாவது ஒரு பற்றுக்கோடு தேவைப்படுகிறது.இப்பொழுதும் ஒருபகுதி தமிழ் இடதுசாரிகள் தேசிய மக்கள் சக்தியுடன் நிற்பதை அப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆனால் சிவராசா மாஸ்டர் இன முரண்பாடுகள் தொடர்பிலும் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பிலும் அவருடைய தொழிற்சங்கத்தைப் போலவே மிகத் தெளிவான விட்டுக்கொடுப்பற்ற கறாரான நிலைப்பாடுகளோடு வாழ்ந்தார்.தமிழ் இயக்கங்கள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்ட அரசியலுக்கு இருக்கக்கூடிய வரையறைகள் தொடர்பாகவும் அவரிடம் கூர்மையான ஒரு பார்வை இருந்தது.அது கட்டுப்பெட்டியான இடதுசாரிகளிடம் இருக்கக்கூடிய வறண்ட பார்வை அல்ல.மாறாக நடைமுறைச் சாத்தியமான ஒரு பார்வை.
11.06.2026
யாழ்ப்பாணம்.




