மருதங்கேணி;வரணி;செம்மணி;கதிர்காமம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

சில நாட்களுக்கு முன் வடமாராட்சி மருதங்கேணிப் பகுதியில் படையினரின் முகாம் அமைந்திருக்கும் நிலப்பரப்பும் உட்பட மொத்தம் 25 ஏக்கர் காணியை படையினருக்கு விலைக்கு கொடுப்பதற்கு ஒரு புலம்பெயர்ந்த தமிழர் முயற்சித்தார்.அதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அந்த இடத்துக்குச் சென்று தடுத்தார்கள். படைத்தரப்பு ஏற்கனவே கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அதையும் சேர்த்து மொத்தம் 25 ஏக்கர் நிலப்பரப்பு குறிப்பிட்ட புலம் பெயர்ந்த தமிழருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய தனிப்பட்ட சொத்து என்றும் கூறப்படுகிறது. அன்றைய சம்பவத்தில் நில அளவைத் திணைக்களம் தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில்தான் செயல்படலாம் என்று கூறியதையடுத்து காணியை விற்பதற்கான அன்றைய முயற்சிகள் அதோடு நிறுத்தப்பட்டன.இது முதலாவது சம்பவம்.

இரண்டாவது சம்பவம், கடந்த மாத இறுதியில் இடம் பெற்றது.அது தென்மராட்சியில்.அங்கே வரணி மத்திய கல்லூரியில் விளையாட்டு மைதானத்துக்கான அரங்கு திறக்கப்பட்டது.அதற்கான நிதி உதவிகளை வழங்கியது புலம்பெயர்ந்து வாழும் வரணி அமைப்பாகும். அந்த அமைப்பினர் வழங்கிய நிதி உதவியை வைத்து இலங்கை படைத்தரப்பின் தொழில்நுட்ப பிரிவு அந்த அரங்கத்தை தன்னார்வமாக கட்டிக் கொடுத்திருக்கிறது.கட்டடத் திறப்பு விழா அன்று ஸ்ரீலங்காவின் படைத் தளபதி நாடாவை வெட்டி அரங்கத்தை திறந்து வைத்தார்.நிதி உதவி செய்த லண்டன்,வரணி அமைப்பின் பிரதிநிதியும் அருகே காணப்பட்டார்.

இது நடந்த சில நாட்களில் வரணியில் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மணியில் தீப்பந்தங்களோடு மக்கள் போராடினார்கள். செம்மணி மனிதப் புதை குழிக்கு நீதி கேட்டு தீப்பந்தங்களை ஏந்தியபடி கண்டிவீதியின் ஓரமாக நின்று மக்கள் போராடினார்கள்.எந்தப் படைத்தரப்பை அந்த மக்கள் குற்றம் சாட்டுகிறார்களோ,அதே படைத்தரப்பின் பிரதான தளபதி ஒரு பாடசாலையின் மைதான அரங்கத்தை திறந்து வைக்கிறார்.20 கிலோமீட்டர் தூரத்துக்குள் நடந்த இரண்டு சம்பவங்கள் இவை.

இவை தமிழ் மக்களின் தற்போதுள்ள அரசியல் நிலவரத்தின் குறிகாட்டிகள். தமிழ் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் போராடுகிறார்கள்.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை வேண்டாம் என்று கேட்டுப் போராடுகிறார்கள்.ஆனால் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரே தமது காணிகளை படைத்தரப்புக்கு காசுக்கு விற்க முற்படுகிறார்கள்.படைத்தளபதியைக் கூப்பிட்டு பாடசாலை மைதானத்தின் அரங்கத்தைத் திறக்கிறார்கள்.இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் சம்பந்தப்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் ஒரு பகுதியினர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசு தரப்போடு இணைந்து செயல்படுவது அல்லது அரச தரப்பை ஒரு பங்காளியாகக் கருதுவது என்பது கடந்த 17 ஆண்டுகளிலும் படிப்படியாக பலமடைந்து வரும் ஒரு போக்காகும்.உதாரணமாக கடந்த டித்வா புயலின்போது கனடாவில் உள்ள சில அமைப்புகளும் தனி நபர்களும் நிதி சேகரித்து அரசாங்கத்திடம் நேரடியாக அதைக் கொடுத்தார்கள். அந்த நிதியை தமிழ்த் தரப்பு ஒன்றுக்கூடாக பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பிக்க கூடாதா? என்று கேட்கப்பட்டபோது,ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் கேட்டார்,”தாயகத்தில் அவ்வாறான அமைப்புகள் எவையாவது உண்டா? புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியைக் கையாள்வதற்கு ஒரு மையத்திலிருந்து செயல்படுகின்ற பலமான கட்டமைப்பு எதுவும் உங்களிடம் உண்டா? என்ற பொருள்பட.

இக்கேள்வி எதை உணர்த்துகிறது என்றால், வெளி நிதியை பொறுப்பேற்கவோ அல்லது கையாளவோ தக்க தகைமையோடு மையமான அமைப்புகள் எவையும் தாயகத்தில் இல்லை என்பதைத்தான்.வெளியில் இருந்து வரக்கூடிய நிதி உதவிகளை கையாள்வதற்கு மட்டுமல்ல,உள்நாட்டிலேயே நிர்ணயகரமான தருணங்களில் பொருத்தமான முடிவுகளை எடுத்து தமிழ் மக்களுக்கு வழி காட்டவல்ல அல்லது தமிழ் மக்களை சரியான பாதையில் செலுத்தவல்ல அமைப்புக்கள் அல்லது கட்சிகள் என்று கூறக்கூடிய கட்டமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டா?

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட மருதங்கேணி பிரதேசத்தில்தான் போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்துக்கு என்று அரசாங்கம் 10 ஏக்கர் காணியை வழங்கியது.அக்காணிக்குச் சுற்றுமதில் கட்டுவதற்கு நிதி உதவியை புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் வழங்கினர்.எனவே தனது சொந்தக் காணியை படையினருக்கு விற்க விரும்பும் ஒரு புலம்பெயர்ந்த தமிழருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அந்தக் காணியை வாங்க புலம்பெயர்ந்த தமிழர்களால் முடியும்.இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தாயக நோக்கு நிலையில் இருந்து பொருத்தமான விதங்களில் வழிகாட்ட யாருண்டு ? அதாவது தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

இவ்வாறான ஒரு தலைமைத்துவ வெற்றிடம் தமிழ்மக்கள் மத்தியில் நிலவுகிறது என்பதைத்தான் அண்மையில் சுப்பிரமணியம் என்ற பாதயாத்திரைக்குப் போன ஒரு நாயில் இருந்து தொடங்கி இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமூக ஊடக வலைத்தள வாதப் பிரதிவாதங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

சுப்பிரமணியம் பாதயாத்திரைக்கு போனதால் வைரலாகியது மட்டுமல்ல. அது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சமூக பொருளாதார அரசியல் மற்றும் சமய தலைமைத்துவ வெற்றிடத்தையும் உணர்த்தியது.தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இப்பொழுதும் நீறு பூத்த நெருப்பாக உள்ளன என்பதனையும் அது உணர்த்தியது.சுப்பிரமணியன் கதிர்காமத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டது.ஆனால் அதைத் தொட்டுத் தொடங்கிய நோய்க்கூறான, விஷம்மிகுந்த விவாதப் பரப்பானது தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியம் ஒரு கடி நாயாகத் தெரியவில்லை. ஆனால் சுப்பிரமணியத்தை வைத்து மோதுபவர்கள் கடி நாய்களைப் போலவோ அல்லது வெறி நாய்களைப் போலவோ கடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதைக் கட்டுப்படுத்த,அவர்களுக்கு சரியான வழியைக் காட்ட,இரண்டு மதப் பிரிவுகளையும் சேர்ந்து சமயப் பெரியார்கள் யாருமே முன்வரவில்லை. ஒரு வாயில்லா ஜீவனை வைத்துக்கொண்டு வாயுடைய,கூர்படைந்த மனித ஜீவன்கள் மிகக்கீழ்த்தரமாக மோதிக்கொள்கின்றன. அதைத் தடுத்து நிறுத்தவோ அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டவோ எந்த ஒரு சமயப் பெரியாரும் அல்லது சமூகப் பெரியாரும் முயற்சிக்கவில்லை.அரசியல்வாதிகளும் அந்தப் பக்கம் வரவில்லை.குறிப்பாக,இதுபோன்ற விடயங்களில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து தலையிடக்கூடிய சமயப் பெரியார்களோ அரசியல்வாதிகளோ,வாய் திறக்கவில்லை.இது கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவரும் அரசியல்,சமூக,சமயத் தலைமைத்துவ வெற்றிடத்தைக் காட்டுகிறதா?

அதுமட்டுமல்ல சுப்பிரமணியன் தொடர்பாக கிடைக்கும் சில செய்திகளின்படி அந்த நாயை வைத்து அரசியல் செய்பவர்கள்,ஆன்மீகம் செய்பவர்களில் ஒரு பகுதியினர் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.சுப்ரமணியன் கதிர்காமத்தைச் சென்றடைவதற்கு முன்னரே அதனுடைய எஜமானர் என்று கூறி ஒரு பாத யாத்திரிகர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்யச் சென்றிருக்கிறார்.அந்த நாய் தன்னுடைய வளர்ப்பு நாய் என்றும் ஆனால் பாதயாத்திரைக்கு தலைமை தாங்கும் சாமியார் ஒருவர் அதனை தனது சம்பாத்தியத்துக்காக பயன்படுத்துகிறார் என்றும் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றிருக்கிறார்.போலீசார் அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் நாயை அவரே வைத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.அதேசமயம் மேற்சொன்ன சாமியாரின் எதிரணியும் ஒரு முறைப்பாட்டு செய்வதற்கு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருக்கிறது. அதற்குப் பதில் கூறிய போலீசார் நாயின் உரிமையாளர் என்று கூறியவர் அந்த நாயுடன் கதிர்காமத்தைச் சென்றடையவில்லை என்றால், நீங்கள் கதிர்காமம் போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டைச் செய்யுங்கள் என்று கூறியதாக ஒரு தகவல்.

எந்த நாயைத் திட்டமிட்டு வைரல் ஆக்கினார்களோ,அதே நாய்க்கு உரிமை கோரி போலீஸ் நிலையம்வரை போகும் ஒரு நிலை.இது தமிழ்த் தேசிய அரசியலின் குறியீடாகவும் தெரிகிறதா?

தமிழ் மக்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளில் தொடங்கி கட்சிப் பிரச்சினைகள்வரை போலீஸ் நிலையத்திற்குப் போகிறார்கள்.நீதிமன்றத்திற்குப் போகிறார்கள்.தமிழ்மக்கள் மத்தியில் உள்ள ஆகப்பெரிய கட்சிக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் உண்டு.நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய திருச்சபைகளில் முக்கியமானது ஆகிய தென்னிந்தியத் திருச்சபை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கிறது.ஒருதொகுதி இந்து ஆலயங்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 80 ஆலயங்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன.தமிழ்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் சிலவற்றின் பழைய மாணவர் சங்கங்கள் போலீஸ் நிலையங்களுக்குச் சென்றுள்ளன.

இவைகூடப் பரவாயில்லை,உள்நாட்டு நீதிப் பொறிமுறை வேண்டாம்,பன்னாட்டு நீதிப்பொறிமுறை தான் வேண்டும்,என்று தமது போராட்டங்களின்போது திரும்பத்திரும்பக் கூறிவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவினர்களின் அமைப்புகள் தங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு முரண்பாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் வவுனியா போலிஸ் நிலையத்துக்கு சென்றதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.அந்த அமைப்புகளைச் சேராத ஒரு முதிய பெண்-அவருக்கு 85வயது என்று சொன்னதாக ஒரு ஞாபகம்- அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நீதி அமைச்சரைச் சந்தித்தபோது,தனது உரையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் குறை கூறியிருந்தார்.நீதி கேட்டுப் போராடும் முதிய அம்மாமார்களுக்கு இடையிலேயே முரண்பாடு.அது கைகலப்பாகி,காயப்பட்டு,போலீஸ் நிலையம் வரை போனது.இந்தப் பரம்பரை வருத்தத்தைத்தான் பாதயாத்திரைக்குப் போன சாமியார்கள் என்று அழைக்கப்பட்ட சிலரும் பிரதிபலிக்கிறார்களா?

சுப்பிரமணியன் கதிர்காமத்துக்குப் போகும் பாதயாத்திரையை முன்னரை விட பிரபல்யப்படுத்தியிருக்கிறது.அதேசமயம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள சமூக, சமய,அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல,தங்களுக்குள் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் சாமியார்களும் போலீஸ் நிலையத்திற்குப் போகும் சீரழிந்த போக்கை, அதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் பொதுப் போக்கை பிரதிபலித்திருக்கிறதா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *