கடந்த மாத இறுதியில் கொழும்பில் அனைத்துலக இலக்கியப் பெருவிழா இடம் பெற்றது. இதில் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஹரிணி பேசினார்.அது நல்ல பேச்சு. அது ஜூலை மாதம் என்பதை நினைவூட்டிய அவர்,அந்த நினைவுகளும் உட்பட இறந்த காலத்தின் பல நினைவுகள் மறக்கப்படும் ஒரு பின்னணியில் இலக்கியம் நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்தும் என்ற பொருள்பட பேசினார்.
மறக்கப்படும் இறந்த கால வரலாற்றை நினைவு கூர இலக்கியம் உதவும் என்று பிரதமர் கூறினார்.நாட்டின் கல்வி முறைக்குள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு இந்த வரலாறு கற்பிக்கப்படுவதில்லை என்பதை துரதிஷ்டவசமானது என்றும் கூறினார்.“நாங்கள் பிள்ளைகளுக்கு 83 ஜூலை எப்படி நடந்தது என்று கூறுவதில்லை.89 எப்படி நடந்தது என்று கூறுவதில்லை.யாழ்.நூலகம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை கூறுவதில்லை. இந்த விடியங்கள் கற்பிக்கப்படாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது.ஆனால் எங்களிடம் புத்தகங்கள் உண்டு.புத்தகங்கள் அந்த அவலங்களை அழகாக வெளியே கொண்டு வருகின்றன.இருண்ட இறந்த காலத்தைக் குறித்து நமது உத்தியோகபூர்வ எடுத்துரைப்புகளில் இல்லை. ஆனால் இலக்கியம் அதை எடுத்துக் கூறுகிறது.இந்த அவலங்களில் இருந்து தப்பி பிழைத்தவர்களின் கதைகளை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.இந்த மாதத்தில் அந்த விடயங்களை நினைவு கூறுவது முக்கியமானது” என்ற பொருள்பட ஹரிணி பேசினார்.
ஜூலை மாதத்தின் பின்னணியில், தமிழ் மக்கள் 43ஆவது ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தின் பின்னணியில், ஓர் அனைத்துலக இலக்கிய விழாவில், அதுவும் நாட்டின் தலைநகரில்,நாட்டின் பிரதமரால் ஆற்றப்பட்ட உரை என்ற அடிப்படையில் அது ஒரு முக்கியமான பேச்சு.அதேசமயம் இவ்வளவும் பேசிய பிரதமர் ஜூலை 83க்கு மன்னிப்புக் கேட்கவில்லை.
இறந்த காலத்துக்கு மன்னிப்பு கேட்பதென்றால் தமிழ் மக்களும் கேட்க வேண்டும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. பொறுப்புக்கூறல் என்று வரும்போது அரசுடைய தரப்புத்தான் முதலில் பொறுப்புக்கூற வேண்டும். இன முரண்பாடுகளின் தொடக்கம் இன ஒடுக்குமுறைதான்.இன ஒடுக்கு முறையை தொடக்கி வைத்த பெரிய இனம்,பெரிய மதம்தான் அதற்கு முதலில் பொறுப்புக் கூறவேண்டும்.அதேசமயம் போர்ப் பரப்புக்குள் நடந்த விடயங்களுக்கு தமிழ்த் தரப்பும் பொறுப்புக்கூற வேண்டும்;முஸ்லிம் தரப்பும் பொறுப்புக்கூற வேண்டும்.
வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட சமூகங்கள்தான் பொறுப்புக் கூறும்.வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாத சமூகங்கள் பொறுப்புக் கூறாது மட்டுமல்ல,திரும்பத்திரும்ப அதே தவறை விடும்.இந்த அடிப்படையில் பிரதமர் ஹரிணி கூறியதுபோல வரலாறு இனரீதியாக திரிக்கப்படாமல் அதன் மெய் விவரங்களோடு அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டும்.
இறந்த காலத்துக்குப் பொறுப்புக்கூறத் தயாராக இருந்தால்தான் வரலாறை தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டிய தேவை ஏற்படும். இறந்த காலத்தை ஒரு புதிய தலைமுறை மறக்கவேண்டும் என்று சிந்தித்தால், வரலாற்றைக் கடத்த வேண்டிய தேவை இல்லை மட்டுமல்ல, வரலாற்றை அழிக்க வேண்டிய ஒரு தேவைதான் வரும்.
அரசு வரலாற்றை மறைக்க அல்லது திரிக்க முற்படும்போது படைப்பாளிகள் இன்னொரு வரலாற்றை எழுத வேண்டிய தேவை ஏற்படுகிறது.உலகம் முழுவதும் படைப்பாளிகள் எழுதிய வரலாறு அத்தகையதுதான்.பிரதான நீரோட்ட வரலாற்று எடுத்துரைப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுடைய எடுத்துரைப்புகளை மறைக்கும்போது படைப்பாளிகள் பாதிக்கப்பட்ட மக்களுடைய கூட்டுத்துயரங்களை;கூட்டுக் காயங்களை,கூட்டுப் பயங்களை படைப்பாக்குகிறார்கள்.அதை அவர்கள் எதிர்ச் சுவடியாக்கம -counter archive- என்று அழைக்கிறார்கள்.கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தனது படைப்புலகத்தை எதிர்ச் சுவடியாக்கம் என்றே கூறுகிறார்.
ஓர் இளம் தலைமுறைக்கு வரலாறு கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவ்வாறு வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாத ஓர் இளம் தலைமுறை என்ன செய்யும் ?
அண்மை மாதங்களாக ஒரு போக்கு சமூக ஊடக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது.அது என்னவென்றால், தமிழ் மக்கள் தங்கள் நினைவு நாட்களைக் குறித்து அல்லது தங்களுடைய போர்க்கால அவலங்களைக் குறித்தோ பதிவுகளை போட்டால் அதற்கு கீழ் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சிங்களப் பெயர்களைக் கொண்ட முகநூல் பயனாளர்கள் வெறுப்பை உமிழும் பதிவுகளை அல்லது ஆபாசப் பதிவுகளை எழுதி வருகிறார்கள்.
அண்மையில் செம்மணியில் அமர்ந்த நிலையில் ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்த ஒளிப்படத்தை தனது முகநூலில் பதிந்த ஒரு சிங்கள முகநூல் பாவனையாளர் அந்த எலும்புக்கூட்டை இகழ்ந்து ஒரு பதிவைப் போட்டிருந்தார்.அதிலவர் “அமர்ந்த நிலையில் சுய மைதுனம் செய்தல்” என்ற பொருள்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார்.
அதைக் கண்டு ரத்தம் கொதித்த தமிழர்கள் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷொட்டை எடுத்துப் பிரசுரித்து அதன் கீழ் தாங்களும் பதிலுக்கு எழுதத் தொடங்கினார்கள்.அந்தப் பதில்களில் மிகச் சிலதான் நாகரீகமானவை. பெரும்பாலானவை பொதுவெளியில் எழுத முடியாத ஆபாசக் குறிப்புகள்; வெறுப்புக் குறிப்புகள்.அந்தச் சிங்களப் பதிவரின் தாயை,சகோதரியை, காதலியை,மனைவியை… என்று அவருடைய குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களையும் முகநூல் சந்திக்கு இழுத்து,கீழ்த்தரமாகப் பதிவுகள் எழுதப்பட்டன.
அப்படித்தான் இசைப்பிரியாவின் ஆடைகள் இல்லாத படம் முகநூலில் பிரசுரிக்கப்பட்ட போதும் அதற்கு கீழ் சிங்களத்தில் எழுதப்பட்ட பதில்களில் அநேகமானவை ஆபாசமானவைகளாக.கீழ்த்தரமானவைகளாக,வெறுப்பை உமிழ்பவைகளாகக் காணப்பட்டன.
இவ்வாறு முகநூலில் சிங்களத்தில் எழுதுபவர்கள் தொடர்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த சஞ்சுளா என்ற அரசியல் செயற்பாடாளர் முகநூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்…“நான் அவதானித்திருக்கிறேன்,அண்மை காலங்களில்,சமூக ஊடக வலைத்தளங்களில்,போர்க் குற்றங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களில் அனேகமானவர்கள் சிங்கள இளையோர்தான்.அவர்கள் அனைவரும் தகவல் யுகம்,செயற்கை நுண்ணறிவு யுகம் என்பவற்றில் பிறந்தவர்கள்.செய்யப்பட்ட குற்றங்களை அவர்கள் நிராகரிக்கவில்லை.இறுதியிலும் இறுதியாக அவர்கள் அதைக் ஏற்றுக்கொள்கிறார்கள்,அதைக் குறித்து பெருமைப்படுகிறார்கள்….இங்கே பிரச்சனை என்னவென்றால், தகவல்கள்,கிடைக்கக்கூடிய தரவுகள்,சான்றுகள் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதல்ல.பிரச்சினை அதற்குமப்பாலானது.யூத சியோனிசத்தைப்போல அது அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது;ஆழமாக வேரோடிப்போய் உள்ளது…”
எனவே இங்கே கேள்வி,அவர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுக்கப்படவில்லையா ?அல்லது அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லையா? என்பதுதான்.அல்லது ஹெகல் கூறியதுபோல,”வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரே விடயம் என்னவென்றால்,வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்” சரியா?




