“பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர் கூறியது ஒரு குரேஷிய யதார்த்தமாக இருக்கலாம்.ஆனால் ஈழத்தமிழ் யதார்த்தம் அதுவல்ல.
தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சிங்களத் தரப்போடு பேசி வருகிறார்கள். கடந்த நூற்றாண்டின் முற்கூறில் தொடங்கி இந்த நூற்றாண்டின் முற்கூறு வரையிலுமான ஒரு நூற்றாண்டு கால அனுபவம் அது.இதில் ஆகப் பிந்திய அனுபவம் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் நிலை மாறுகால நீதிக்கான உடன்படிக்கையை முறித்தமை ஆகும்.
எனவே தமிழ்மக்கள் தமது கடந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். இதில் தமிழ் மிதவாதிகளின் பேச்சுவார்த்தை அனுபவம்,தமிழ் ஆயுதப் போராட்டத்தின் பேச்சுவார்த்தை அனுபவம் இரண்டையும் தொகுத்துப் பார்க்க வேண்டும்.தமிழ் மிதவாதிகளின் பேச்சுவார்த்தை அனுபவம் எனப்படுவது இரண்டு கட்டங்களுக்குரியது.முதல் கட்டம்,ஆயுதப் போராட்டம் வரையிலுமானது. இரண்டாம் கட்டம்,ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரானது. அதாவது 2009 க்கு பின்னரானது.
முதலாம் கட்டத்தில் தமிழ்த் தரப்பு சிங்களத் தரப்புடன் பல உடன்படிக்கைகளை செய்து கொண்டது. எவையும் வெற்றி பெறவில்லை. எல்லா உடன்படிக்கைகளும் ஒன்றில் ஏமாற்றத்தில் முடிவடைந்தன.அல்லது சிங்களத்தரப்பால் கிழித்தெறியப்பட்டன.வட்டமேசை மாநாடுகள்,சதுர மேசை மாநாடுகள்,அனைத்துக் கட்சி மாநாடுகள்,நாடாளுமன்றத் தெரிவிக்குழுச் சந்திப்புகள்…என்று எல்லா மாநாடுகளுமே காலத்தை கடத்தும் உத்திகளாகத் தான் காணப்பட்டன.இவ்வாறு தமிழ் மிதவாதம் பேச்சு வார்த்தைகளில் பெற்ற தோல்விகளின் விளைவாகத்தான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது.
ஆயுதப்போராட்டம் ஒரு கட்ட வளர்ச்சிக்கு பின் பேச்சுவார்த்தைக்கு போனது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை உள்நாட்டில் நடக்கவில்லை. அது திம்புவில் இடம் பெற்றது.முதன் முதலாக இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை ஒரு வெளிநாட்டில் வைத்து பேசப்பட்டது.அதிலிருந்து தொடங்கி பல்வேறு வெளிநாட்டு தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன.ஆனால் அப்பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றினதும் முடிவு யுத்தமாகவே இருந்திருக்கிறது. அதாவது தமிழ் ஆயுதப் போராட்டமும் பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெறவில்லை.
இப்பொழுது ஆயுதப் போராட்டம் இல்லை. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு சிங்களத் தரப்போடு பேசிவருகிறது. ஆனால் எதைப் பெற்றிருக்கிறது ?மஹிந்த ராஜபக்ஷவோடு பல தடவைகள் தான் பேசியதாகவும் ஆனால் அச்சந்திப்புக்களின் முடிவில் நாம் ஏமாற்றம் அடைந்ததாகவும் சம்பந்தர் கூறுகிரார்.ஒரு கொடூரமான போருக்கு பின்னரும் சிங்களத் தரப்பு எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அது காட்டுகிறது. மிகக்குறிப்பாக போரில் வெற்றி பெற்ற சிங்களத் தரப்பு அந்த வெற்றியை அதாவது ராணுவ வெற்றியை ஓர் அரசியல் வெற்றியாக மாற்ற வேண்டும் என்று சிந்திக்கவில்லை.அதனால் தான் மஹிந்த ராஜபக்ஷ ஐநாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு வாக்களித்தபடி பொறுப்பு கூறலுக்குரிய பொருத்தமான வெளிப்படையான கட்டமைப்புகளை உருவாக்கத் தவறினார். இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். 2009 இல் பெற்ற வெற்றி என்பது ஒரு இனப்படுகொலை மூலம் பெறப்பட்ட வெற்றியே. அதை அரசியல் வெற்றியாக மாற்றமுடியாது என்பதனால்தான் கடந்த 13ஆண்டுகளாக அதை அரசியல் வெற்றியாக மாற்றக்கூடிய பேச்சுவார்த்தைகளை தொடங்க முடியவில்லை.
2009க்கு பின் ஐநாவின் தலையீடு வந்தது. ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையால் ஒரு பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் தீர்மானம் பொறுப்பு கூறலுக்கானது. அவ்வாறு பொறுப்பு கூறுவதில் தனக்குரிய பங்கின் பிரகாரம் அரசாங்கம் யாப்பை மாற்ற வேண்டும். ஆனால் அந்த யாப்புருவாக்க முயற்சிகளை,பொறுப்புகூறலின் பெற்றோரில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு காட்டிக் கொடுத்தார். ஓர் அனைத்துலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்பில் இருந்து சிங்களத்தலைமைகள் எவ்வாறு பின்வாங்கும் என்பதற்கு அது 2009க்கு பின்னரான ஆகப்பிந்திய உதாரணம் ஆகும்.
“நாங்கள் நிலைமாறுகால நீதியின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பரிசோதனையைச் செய்து பார்த்தோம். அதில் வெற்றி பெறவில்லை” என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்து பகிரங்கமாகச் சொன்னார்.மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு சந்திப்பு வவுனியாவில் இடம் பெற்றபொழுது அவர் அதை ஒப்புக்கொண்டார்.நிலைமாறுகால நீதியின் பங்காளியாக கூட்டமைப்பு செயற்பட்ட பொழுது நிலைமாறுகால நீதியை நியாயப்படுத்தியவர் அவர்.அவரே அப்படிச்சொன்னார்.
எனவே தமிழ் சிங்களதரப்புக்கள் தங்களுக்கு இடையே பொருந்திக் கொண்ட உடன்படிக்கைகள் யாவும் எங்கே முறிந்தன?யாரால் முறிக்கப்பட்டன?என்ற கடந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்தை தொகுத்து பார்த்தால்,மிகத் தெளிவாக ஒரு விடயம் தெரியும்.அது என்னவெனில்,சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது,எல்லா பேச்சுவார்த்தைகளையும் காலம்கடத்தும் உத்தியாகவும்,வெளித் தரப்புகளை ஏமாற்றும் உத்திகளில் ஒன்றாகவும், தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான காலஅவகாசத்தை பெற்றுக் கொள்ளும் ஓர் உத்தியாகவுந்தான் அமைந்திருக்கின்றன.மாறாக விசுவாசமாக ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அந்த பேச்சுவார்த்தைகள் அமையவில்லை.
அதை அவர்கள் செய்யவும் மாட்டார்கள்.ஏனென்றால் இலங்கைத்தீவை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியதாகக் கருதும் ஒரு மனோநிலை அது. அந்த மனோநிலையானது ஏனைய சிறிய தேசிய இனங்களை,தேசிய இனங்களாக ஏற்றுக் கொள்ளாது. எனவே கூட்டாட்சிக்கு அங்கே இடமில்லை. சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சிந்தனையானது ஒற்றையாட்சிதான் தனக்குப் பாதுகாப்பானது என்று கருதுகின்றது.சிறிய தீவை ஏனைய இனங்களுடன் பங்கிட தயாரற்ற ஒரு மனோநிலை அது.எனவே பல்லினத்தன்மை மிக்க,பல சமயப்பண்புமிக்க, இரு மொழிகளை ஏற்றுக்கொள்ளுகின்ற,ஒரு கூட்டாட்சிக்குப் போக அவர்களால் முடியாது. அவர்கள் கூட்டாட்சிக்கு தயார் இல்லை என்ற காரணத்தால்தான்,எல்லா பேச்சுவார்த்தைகளையும் குழப்பினார்கள்.அல்லது பேச்சு வார்த்தைகள் குழம்பின.ஏனென்றால் முழுமையான சமஷ்டி வழங்கப்பட்டிருந்திருந்தால் தமிழ்த்தரப்பு எப்பொழுதோ சமாதானம் அடைந்திருக்கும். ஆயுதப் போராட்டத்திற்கு தேவை ஏற்பட்டிருக்காது.
இதில் ஆயுதப் போராட்டம்தான் சிக்கல் என்றால் கடந்த 13 ஆண்டுகளாக ஒரு அரசியல் தீர்வை பெற முடியாமல் போனதற்கு யார் காரணம்?
எனவே கடந்த ஒரு நூற்றாண்டுகால பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தமிழ் தரப்பு மிகக் கவனமாக அடிகளை எடுத்து வைக்க வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது.இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ்த் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்கும் இடையிலான ஓர் அரசியல் உடன்படிக்கையில் இருந்துதான் தொடங்குகிறது.அவ்வாறு ஓர் உடன்படிக்கை முதலில் எழுதப்பட வேண்டும்.தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன் மொழிவில் அது தெளிவாககக் கூறப்பட்டிருக்கிறது. எனவே தமிழ்-சிங்கள-முஸ்லிம் தரப்புகளுக்கு இடையே ஓர் அரசியல் உடன்படிக்கை முதலில் எழுதப்பட வேண்டும்.அந்த அடிப்படையில்தான் யாப்பை மாற்றவேண்டும்.ஆனால் அவ்வாறான ஏற்பாடுகள் அவையும் நடப்பதாகத் தெரியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்பொழுது இரண்டு விடயங்களை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.ஒன்று ,வெளித்தரப்புகளின் தலையீடு இன்றி நாங்களாக பேசித் தீர்ப்போம் என்று.இரண்டாவது முன் நிபந்தனைகள் விதிக்க வேண்டாம் என்று. ஆனால் இவை இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் முன் நிபந்தனைகள்தான்.ஏனெனில் ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இன்றி இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பது கடந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவம் ஆகும். அவ்வாறு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இல்லையென்றால் அது தமிழ்மக்களுக்கு பாதகமாக முடியும்.ஏனென்றால் எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளும் புவிசார் அரசியல் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு புவிசார் அரசியல் தீர்வுதான் உண்டு.அல்லது அனைத்துலகத் தீர்வு தான் உண்டு.எனவே ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையை உள்நாட்டு பிரச்சினையாக குறுக்குவது என்பது அடிப்படையில் ஓர் அரசியல் உத்திதான். திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் வெளிநாட்டுக் களங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் கொழும்புக்குள் குறுக்குவது என்பது ஒரு “ரிவேர்ஸ்” நடவடிக்கைதான்.அதற்கு தமிழ்த் தரப்பு ஒத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது முன் நிபந்தனை முன் நிபந்தனை விதிக்ககூடாது என்று கூறுவது.
தமிழ்மக்களில் இப்பொழுது மிஞ்சியிருக்கும் அனைவரும் ஒரு இனப்படுகொலையில் இருந்து தப்பி பிழைத்தவர்கள்தான். அந்த அனுபவத்தில் இருந்துதான் அவர்கள் சிந்திப்பார்கள்.கடந்த ஒரு நூற்றாண்டு கால பேச்சுவார்த்தை அனுபவத்தின்படி பேச்சுவார்த்தைகள் ஒரு பொறியாக மாறக்கூடாது.எனவே அரசாங்கம் விசுவாசமாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகிறது என்பதனை நிரூபிக்கும்விதத்தில் இனங்களுக்கு இடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.அது கடந்த ஒரு நூற்றாண்டு கால தமிழ் அனுபவத்தில் இருந்து முன்வைக்கப்படும் ஒரு முன்நிபந்தனை ஆகும்.பேச்சுவார்த்தைக்கு தேவையான ஒரு நல்லெண்ணச் சூழலை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முதலில் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும். ஒருபுறம் அரச திணைக்களங்கள் நிலத்தைப் பிடிக்கின்றன.பிடிப்பட்ட நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.நிலத்தை விடுவிப்பதென்றால் ராணுவமய நீக்கம் செய்ய வேண்டும்.காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதியும் பொருத்தமான நிவாரணமும் கிடைக்கவேண்டும். அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.
எனவே இந்த நிபந்தனைகளை தமிழ்த் தரப்பு இறுக்கமாக வலியுறுத்த வேண்டும்.ஏனெனில் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பலஸ்தீனர்கள் கூறுவது தமிழ்த் தரப்புக்கும் பொருத்தமானது. பலஸ்தீனர்கள் பின்வருமாறு கூறுவார்கள்” நாங்கள் பீசாவை எப்படிப் பங்கிடுவது என்று அவர்களோடு-யூதர்களோடு- பேசிக் கொண்டிருப்போம்.ஆனால் நாங்கள் இரண்டு தரப்பும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள்-யூதர்கள்-பீசாவைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்”
ஆதவன் இணையத்தளத்தில் 11.12.22 அன்று பிரசுரிக்கப்பட்டது