யாழ்ப்பாணத்தில் கடந்த கிழமை நடந்த கம்பன் விழாவில், நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் பேசும்போது அக்கழகத்தின் தலைவராகிய ஜெயராஜ் இரண்டு சர்ச்சைக்குரிய விடயங்களைக் கூறியிருக்கிறார்.அவை சர்ச்சைக்குரியவை என்பதனையும் முன்கூட்டியே கூறி விடுகிறார்.அந்த இரண்டு விடயங்களும் வருமாறு.முதலாவது ஈழத் தமிழர்கள் தமது போராட்டத்தை மறந்து விட வேண்டும்.இரண்டாவது புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளில் இருந்து விடுபட வேண்டும்.
ஜெயராஜ் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை மேடைகளிலும் தனது கேள்வி பதில்களிலும் ஏற்கனவே கூறி வந்திருக்கிறார்.சர்ச்சைகளால் பிரபலமடைய முடியும் என்பது ரீல்ஸ்களின் காலத்தில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட ஓருண்மை.அர்ஜுனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றி பலரும் அவ்வாறு சர்ச்சைகளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
கம்பவாருதி ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய நிறுவன உருவாக்கிகளில் ஒருவர்.தங்கம்மா அப்பாக்குட்டியைப் போல ஆறு.திருமுருகனைப் போல அவரும் ஒரு பண்பாட்டு நிறுவன உருவாக்கி.தங்கமா அப்பாக்குட்டியின் பெண்கள் சார்ந்த பண்பாட்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கலாம்.ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய பெண் நிறுவன உருவாக்கிகளில் அவர் முதன்மையானவர்.ஆறு.திருமுருகனின் பண்பாடு சார்ந்த கருத்துகளிலும் நடவடிக்கைகளிலும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள மிகப்பலமான பண்பாட்டு நிறுவன உருவாக்கி அவர்.
கம்பன் கழகம் ஒரு பண்பாட்டு நிறுவனம்.ஆனால் அந்த நிறுவனம் தமிழ் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பண்பாட்டு அரசியல் விழுமியங்களைக் கட்டி எழுப்ப முற்படுகிறது? அது தமிழ் மக்களின் நோக்கு நிலையில், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியா?
கம்பவாரரதிக்கென்று தெளிவான அரசியல் நிலைப்பாடுகள்,அரசியல் சாய்வுகள் உண்டு.அவருடைய கேள்வி-பதில் நிகழ்ச்சிகளிலும் சில மேடைப் பேச்சுகளிலும் அது தெளிவாகத் தெரியும்.அதைவிட முக்கியமாக,அவர் கொண்டாடும் விழாக்களில் யாரை சிம்மாசனத்தில் அமர்த்துகிறார் என்பதிலும் அவரிடம் தெளிவான தெரிவுகள் உண்டு.அவை ஆன்மீகத் தெரிவுகள் அல்ல.அரசியல் தெரிவுகள்தான்.
கடந்த திங்கட்கிழமை கம்பன் விழாவில் அவர் கூறிய கருத்துக்கள் தமிழ் மக்களைத் தோற்கடிக்க விரும்பும் தரப்புகள் செய்யத் துடிக்கும் விடயங்கள்தான் என்பது அவருக்கு தெரியுமா?
ஒரு மக்கள் கூட்டத்தை நிரந்தரமாக தோற்கடிக்க முயற்சிக்கும் சகலருமே அந்த மக்கள் கூட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை அறுக்க முயற்சிப்பார்கள்.அல்லது அதன் வேர்களை அறுக்க முயற்சிப்பார்கள். அதனால்தான் “அதிகாரத்திற்கெதிரான மனிதனின் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாகும்.” என்று, மிலன் குந்தேரா கூறியுள்ளார்.
கம்பவாருதி ஏன் போராட்டத்தை மறக்க வேண்டும் என்று கூறுகிறார் ? ஏனென்றால், “அதைச் சொல்லிச் சொல்லியே தமிழ் மக்களைக் கொதிநிலையில் வைத்திருந்து தங்கள் வாழ்வை சிலர் வாழப் பார்க்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.இதை அவர் கூறும்போது அந்த மண்டபத்தில் நிறைந்திருந்த ஒரு பகுதியினர் கை தட்டினார்கள்.ஒரு பகுதி அரசியல்வாதிகள் காயங்களைக் கிண்டி அரசியல் செய்கிறார்கள் என்பதற்காக கூட்டுக் காயங்களை மறந்துவிட வேண்டும் என்று கூற முடியாது.
இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மன வடுக்களையும் வைத்து ஒரு பகுதியினர் அரசியல் செய்யும் நிலைமை ஏன் தோன்றுகிறது ? ஏனென்றால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதனால்தான்.தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக இப்பொழுதும் “அண் செற்றில்ட்” ஆன கொந்தளித்த,கொதிப்பான மனநிலையோடு காணப்படுகிறார்கள்.தமிழ் மக்களின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுப் பயங்களுக்கும் சந்தேகங்களுக்கும் மருந்தாக அமையவல்ல தீர்வு கிடைக்கவில்லை.அதனால் இப்பொழுதும் “அண் செற்றில்ட்” ஆன கூட்டும் மனோநிலையை அரசியல்வாதிகள் தேர்தல் நோக்கு நிலையில் கொந்தளிக்க வைக்கிறார்கள்.
கடந்த 17 ஆண்டுகளாக இனப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கு தமிழ் மக்கள் காரணமில்லை.தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பவில்லை என்பதுதான் உண்மை.அண்மையில் சிஎன்என்னுக்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் ஹரிணி அதைப் பின்வருமாறு கூறுகிறார்..”எங்களிடம் நமது நாட்டில் முரண்பாடுகளின் வரலாறு ஒன்று உண்டு.அரசியலமைப்புத்தான் அந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.அந்த முரண்பாட்டின் வேர்களை கண்டுபிடித்து அந்த விடயத்துக்கு தீர்வு காண வேண்டும்.போர் முடிந்து விட்டது.நாடு முன்னோக்கி செல்வதற்கு முரண்பாட்டின் வேர்களில் கவனம் செலுத்த வேண்டும்…”
அதாவது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமே அதை ஏற்றுக்கொள்கிறது,இனப் பிரச்சினைக்கு தீர்வு தேவை என்பதை.எனவே ஆறாத காயங்களை, சுகப்படுத்தப்படாத காயங்களை மறக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா? அல்லது அந்த காயங்களுக்கு மருந்தைக் கண்டுபிடிக்கத் தயாரில்லாத சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை குற்றச்சாட்ட வேண்டுமா?அந்த அரசுக் கட்டமைப்பின் ஜனாதிபதியை கம்பன் விழாவிற்கு விருந்தினராக அழைக்க வேண்டுமா?
சில அரசியல்வாதிகள் இறந்த காலத்தை கையாள்வது தவறு என்பதற்காக, இறந்த காலத்தை மறந்து விடுங்கள் என்று கூறும்போது, அது தமிழ் மக்களை தோற்கடிக்க விரும்பும் சக்திகளுக்கு உற்சாகமூட்டும். அதைக் கேட்டு தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை கை தட்டுகிறார்கள் என்றால், தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே தோற்கடிக்க தொடங்கி விட்டார்கள் என்றுதான் பொருள்.
காணாமல் போன தனது பிள்ளையின் ஒளிப்படத்தோடு தெருவில் நிற்கும் ஒரு தாயிடம் போய் அந்தப் பிள்ளையை மறந்து விடு என்று சொல்ல முடியுமா ? இறந்தவர்களை நினைவுகூரும் களங்களில் அழுது கொண்டிருக்கும் உறவினர்களிடம் இறந்தவர்களை மறந்து விடுங்கள் என்று கூற முடியுமா?
நவீன வரலாற்றுக்கு முற்பட்ட இதிகாச காலம் ஒன்றின் இலக்கியம் ஆகிய கம்ப ராமாயணத்தை மறக்காத காரணத்தால் கம்பன் விழாவுக்கு வரும் மக்களிடம் உடனடி இருந்த காலத்தை மறந்து விடு என்று கம்ப வாருதி கேட்கிறாரா?
அடுத்தது,புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உதவி.இது டயாஸ்பொரா யுகம். ஆயுத மோதல்களுக்குப் பின்னரான காலகட்டத்தில் ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலை நிமிர்த்தியதில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பெரிய பங்கு உண்டு.உளவியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் தாயகத்தில் உள்ள மக்களை நிமிர்த்தியது புலம்பெயர்ந்த தமிழர்கள்தான்.
கடந்த 17ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரின் நிதி அதிகாரம் தாயக அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.உள்ளூர் காணிச் சந்தையின் சமநிலையைக் குழப்புகிறது என்பதும் உண்மை.ஆனால் அதற்குக் காரணம் தாயகத்தில் பலமான அரசியல் தலைமைத்துவம் எழுச்சி பெறாமைதான்.கம்பன் மேடைகளில் பொன்னாடை போர்க்கப்படும் அரசியல்வாதிகளும் அதற்குப் பொறுப்பு.
புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகள் இல்லை என்றால் தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 17 ஆண்டுகளில் கிடைத்த அற்பசொற்ப வெற்றிகளும் கிடைத்திருக்காது.புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ரத்தமும் சதையும் ஆனவர்கள்.அவர்களை தாயகத்திடமிருந்து எப்படிப் பிரிப்பது என்பதுதான் தமிழ் மக்களைத் தோற்கடிக்க விரும்பும் சக்திகளின் பிரதான மூலோபாயங்களில் ஒன்று.புலம்பெயர்ந்த தமிழர்களையும் தாயகத்தையும் பிரித்துவிட்டால் ஈழத் தமிழர்கள் பெருமளவுக்கு பலவீனமடைந்து விடுவார்கள் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்தை “ரிமோட் கண்ட்ரோல் அரசியலை” அதாவது தொலை இயக்கி அரசியலை விமர்சிக்க வேண்டும்; கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.ஆனால் அதற்காக ஈழத் தமிழர்களைத் தோற்கடிக்க விரும்பும் சக்திகள் செய்ய விரும்புவதை நாங்களே செய்யலாமா? அதாவது தமிழ் மக்கள் தங்களை தாங்களே தோற்கடிக்கலாமா?
ஆறு.திருமுருகனின் அறக்கட்டளைக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகம் கிடைக்கிறது.அதுபோலவே கடந்த ஜூலை மாதம் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் திறக்கப்பட்ட “அரவணை” என்று பெயரிடப்பட்ட, இறுதிக்கட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையம்(Palliative Care) திறக்கப்பட்டது.அதுவும் புலம் பெயர்ந்த தமிழர்களின் தொண்டுதான்.மிக அண்மையில் சரசாலையில் திறக்கப்பட்ட இலவச நோய் தணிப்பு பராமரிப்பு நிலையமும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிதான்.
எனவே புலம் பெயர்ந்த தமிழர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்கள் தமது தேசத்தைக் கட்டி எழுப்பவே முடியாது.அப்படித் தமிழ் மக்கள் தமது தேசத்தைக் கட்டியெழுப்பக் கூடாது என்று சிந்தித்துச் செயற்படும் தரப்புகளின் ஆசைதான் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தாயகத் தமிழர்களையும் பிரிக்க வேண்டும் என்பது.
அத்தகைய நோக்குநிலையில் இருந்து தான் அதைக் கூறவில்லை என்பதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு கம்பவாருதிக்கு உண்டு.அவருக்கு மட்டுமல்ல,அவருடைய மேடைகளை அலங்கரிப்பவர்களுக்கும் உண்டு.கம்பன் விழாக்களில் வழமையாகக் காணப்படும் பல்கலைக்கழக அறிவு ஜீவிகள், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள்,யாழ்ப்பாணத்தின் சொற்பொழிவாளர்கள், சமயப் பிரசங்கிகள்,கலைஞர்கள் போன்றோர் இதுதொடர்பாக தமது நிலைப்பாட்டைத் வெளிப்படுத்த வேண்டும்.தாயகத்து தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.





