பட்ஜெட் 2027 : அரசியல் ஸ்திரத்தன்மையின்றி பொருளாதார ஸ்திரத்தன்மை சாத்தியமா?

 

புதிய வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு அனுகூலமான அம்சங்கள் இல்லை என்ற விமர்சனங்களின் பின்னணியில்,நாட்டின் கல்வி முறைமை தொடர்பான ஓர் உரையிலிருந்தும்,உரையாடலில் இருந்தும் இன்று இக்கட்டுரையைத் தொடங்கலாம்.

முதலாவதாக ஓர் உரை,இதைப் பேசியவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் துணைவேந்தர்  பேராசிரியர்.வசந்தி அரசரத்தினம்.இப்பொழுது  “நொதேர்ன் யுனி” என்று அழைக்கப்படுகின்ற தனியார் உயிர் கல்வி நிறுவனம் ஒன்றின் நிர்வாகியாக இருக்கிறார்.பல மாதங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரை வருமாறு…

“மார்க்கிங் ஸ்கீமுக்கு ஏற்ற மாதிரித்தான் பிள்ளை மார்க்ஸ் எடுக்கும்;ஆன்சர் பண்ண வேண்டும்….நாங்கள் என்ன செய்கிறம்..? ஆராவது ஒரு பிள்ளை இந்த கேள்வியை இப்படியும் யோசிக்கலாம் இப்படியும் மறுமொழி எழுதலாம் என்று யோசித்தால், அந்தப் பிள்ளைக்கு யூனிவர்சிட்டி என்றன் இல்லை.அப்படி வாற பிள்ளைகள நாங்கள் பல்கலைக்கழகத்தில வச்சு இல்ல பிள்ளை நீங்கள் இப்படியும் யோசிக்கலாம்,இப்படியும் செய்யுங்கோ என்று சொன்னால், பிள்ளைகளுக்கு சரியான கஷ்டமா இருக்கு…..

….நான் படிப்பிக்கிறது ஃபெர்ஸ்ட் இயர் மெடிக்கல் ஸ்டுடன்ட், அவர்களுக்கு அந்த இடத்திலிருந்து தங்களுடைய மூளைய மாற்றி இன்னொரு இடத்துக்கு “ரீ  ஓரியன்ற்” பண்ண கஷ்டமா இருக்கு…..

….நான் இப்படித்தான் பாடமாக்கினான்,எங்களுக்கு லெக்சர்ஸ் வேண்டாம்,எங்களுக்கு டியூடோரியல் வச்சு கேள்விக்கு மறுமொழிய போடுங்கோ, அந்த கேள்விய சோதனையில போடுங்கோ…இதுதான் இன்றைக்கு எங்களுக்க நடந்து கொண்டிருக்கு”

இரண்டாவது ஓர் உரையாடல்.இந்த உரையாடல் கடந்த மாதம் சமூக ஊடக வலைத்தளங்களில் பரவலாகப் பார்க்கப்பட்டது;பகிரப்பட்டது.இந்த உரையாடல் நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கும் ஒரு பள்ளிக்கூடப் பிள்ளைக்கும் இடையிலானது.ஒரு பிரதமர் பள்ளிக்கூடப் பிள்ளையோடு வெளிப்படையாக உரையாடுகிறார்.அந்த அடிப்படையில் இந்த உரையாடலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.சுவாரசியமான அந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு…..

மாணவி: எட்டு பாடங்கள் தினமும் பாடசாலையில் இருக்கிறது. அது தவிர ஐந்து நாட்கள் பாடசாலை செல்கின்றோம்.சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மேலதிகமாக டியூஷன் செல்கின்றோம். கடந்த காலத்தில் இந்த இடத்திற்கு வந்த தலைவர்கள் டியூஷன் போய் தான் இங்கு வந்தார்களா?ஏன் இதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்க முடியாது? எந்தவொரு சுதந்திரமும் இல்லை.ஒன்லைன் கிளாஸ் போடுகிறார்கள் காலையில், இரவில்,…

பிரதமர்: நாங்கள் சொல்லவில்லை டியூஷன் போகுமாறு

மாணவி: அது மாணவர்களுக்கு பெரிய அழுத்தம்…

பிரதமர்: நானும் இதற்கு உடன்படுகிறேன்.அப்படி ஏன் செல்கிறீர்கள்?

மாணவி: பாடசாலையில் போதாது என்று கூறவில்லை.எனினும் ஒரு பாடவேளை 40 நிமிடங்கள்.அது போதுமா…?

பிரதமர்: நீங்கள் நினைக்கிறீர்கள் அது போதாது என்றா?

மாணவி: ஆம் போதாது.

பிரதமர்: அது அப்படியென்றால் டியூஷன் போனால் சரி வரும்?

மாணவி: …

பிரதமர்: கல்விக் கொள்கையில் டியூஷன் செல்லுமாறு கூறப்படவில்லை.யாருமே சொல்லவில்லை.ஆனால் இந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி செல்லாவிட்டால் பிழை என்ற அபிப்பிராயம் உள்ளது. அப்படித்தானே ? போகாவிட்டால் சித்தியடையமாட்டோம். போகாவிட்டால் முடியாது. அதை உருவாக்கேவதுதானே. ஆசிரியர்களிடம் இருந்து வரலாம். பெற்றோர்களிடம் இருந்து வரலாம். நண்பர்களிடம் இருந்து வரலாம். அந்த அழுத்தம் பொய்யும் அல்ல. இந்த கல்வி முறை பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று தானே? பரீட்சை சித்தி மாத்திரம் போதாது. அதிகூடிய புள்ளியும் எடுக்க வேண்டுமே? எமது வெற்றியை பரீட்சை பெறுபேறுகளில் தானே அளவிடுவது? ஏனையவற்றை நாம் கதைப்பதும் இல்லையே?ஒரே கணிப்பு அதுதானே.  பாடசாலையில் பதாகையில் போட்டுக் காட்டுவது கூடிய புள்ளி பெற்ற பிள்ளைகளைத் தானே? உதவி செய்த பிள்ளைகள்,சமூகப் பணி செய்த பிள்ளைகள்  அவர்களின் படத்தை காட்டுவதில்லையே? புள்ளி எடுத்தவர்களைத் தான் காட்டுவோம்.முரண்படாத, பிரச்சினைகளைத் தீர்க்கும்,  பிள்ளைகளை நாம் பாடசாலையில் பாராட்டுவதில்லையே? புள்ளி எடுத்தவர்களைத் தான் பாராட்டுகிறோம். எனவே புள்ளிகளுக்கு ஒரு சண்டையை உருவாக்குகிறோம். எனவே அதனை மாற்ற சட்டம் மூலம் செய்ய முடியாது. டியூஷன் நிறுத்தம் என பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை அங்கீகாரித்தால் என்ன நடக்கும்? பாராளுமன்றம் சுற்றி  வளைக்கப்படும். எனவே சட்டத்தினால் சிலவற்றை மாற்ற முடியாது. மனப்பாங்கு மூலம் அவசியத்தை மாற்றித்தான் எமக்கு அழுத்தம் இன்றி கல்வி கற்கக்கூடிய கல்வி முறை ஒன்றை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

அப்படித்தானே…?”

மேற்கண்ட  உரையும் உரையாடலும் ஒரே விடயத்தைத்தான் வெவ்வேறு விதமாக கூறமுற்படுகின்றன.நாட்டின் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டியது என்பதுதான்.இது ஒரு போட்டிக் கல்விமுறை.போட்டி காரணமாக பிள்ளைகள் அதிகம் தனியார் கல்வியில் தங்கியிருக்கிறார்கள்.தனியார் கல்வித்துறையின் வளர்ச்சியானது இலவசக் கல்வியின் மகிமைகளைக் குறைத்து விட்டது. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலும் இந்த நிலைமை வருகிறது.

போட்டி மனப்பான்மையை வளர்க்கும் கல்வி முறைமையானது சுயநலத்தை,பொறாமையை,சூழ்ச்சிகளைத் தந்திரங்களை வளர்க்கின்றது. போட்டி பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் போது போட்டி போட்டுக் கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுகிறார்கள்.

ஆனால் மேற்கண்ட இரண்டு உதாரணங்களிலும் சம்பந்தப்பட்ட இரண்டு பெண் ஆளுமைகளும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள்;இருப்பவர்கள். இவர்கள் தமது பதவிவழி அதிகாரத்தின்மூலம் செய்த புரட்சிகரமான மாற்றங்கள் என்ன?

இவர்களில் ஒருவர் இப்பொழுது கல்வி அமைச்சர்.அரசாங்கத்தின் லிபரல் முகமாகப் பார்க்கப்படுபவர்.இரண்டு ஆண்டு கால ஆட்சிக்குள் புரட்சிகரமான மாற்றங்களை முழுமையாக முன்னெடுக்க முடியாது என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.மேலும் அண்மையில் அவர் வாக்குறுதியளித்திருக்கும் கல்விச் சீர்திருத்தங்களை இக்கட்டுரையானது ஆர்வத்தோடு பரிசீலிக்கிறது.

குறிப்பாக  அடுத்த ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டிலிருந்து தொழில் முனைவோர் கல்வியையும் நிதிசார் அறிவையும் கற்பிக்கும் நோக்கத்தோடு அவர் முன்னெடுக்கவிருக்கும் சீர்திருத்தங்களைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அண்மையில் ரஜரட்ட பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு முடிவின்படி,இலங்கையிலுள்ள அரச பாடசாலை ஆசிரியர்களில் நூற்றுக்கு 44 வீதமானோர்(44%)கடுமையான மனமுறிவிற்கும்(Burn out)மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.இந்த மன முறிவும் மன அழுத்தமும்  பொருளாதார நெருக்கடியோடு நேரடியாக தொடர்புற்றிருப்பதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்திருக்கும் ஒரு சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அரசாங்கம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

நமது கல்வி முறைமையானது குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் எத்தனை தொழில் முனைவோரை உற்பத்தி செய்திருக்கிறது? இலங்கைத் தீவில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 600000-70000வரை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் அரசாங்க வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகள்தான். அரச வேலை பாதுகாப்பானது,சுகமானது, நம்பகத்தன்மை மிக்கது,நிரந்தரமானது என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு தொழில்சார் “ரிஸ்க்”கை எடுக்கத் தேவையான துணிச்சலை வழங்கத் தவறியிருக்கிறது.அதற்கு முதல் பொறுப்பு கல்வி முறைமைதான்.எனவே அந்தக் கல்விமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஹரிணி முன்னெடுக்கும் சீர்திருத்தங்களை ஆர்வத்தோடு பரிசீலிக்க வேண்டும்.

அவர் கல்வி அமைச்சராக வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் குழந்தைகளுக்கு தேசிய சித்திரவதையாகக் காணப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கைவைக்க முடியவில்லை. பாடசாலைகளில் ஆடை விவகாரத்தில் காணப்படும் பால் அசமத்துவத்தை நீக்க முடியவில்லை.இரண்டு ஆண்டுகள் அவ்வாறான மாற்றங்களைச்  செய்வதற்குப் போதவில்லையா? அல்லது அடுத்தமுறையும் ஆட்சிக்கு வருவது என்றால் அதுபோன்ற மாற்றங்களில் இப்பொழுது கைவைத்து மக்களைக் குழப்பக்கூடாது என்ற முன்னேச்சரிக்கை காரணமா?

பிள்ளைகளை ‘பெட்டிக்கு வெளியே’ சிந்திப்பவர்களாக,”கிரிட்டிக்கலாக” ”விமர்சனபூர்வமாகச்-சிந்திப்பவர்களாக,தொழில் முனைவோராகக் கட்டி எழுப்பும் கல்வி முறைமை தேவை.ஆனால் எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்வதாக இருந்தாலும் முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும். அதைத்தான் சிஎன்என் பேட்டியில் ஹரிணி கூற முற்படுகிறார்.

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது “பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி” அன்று கூறப்படுகிறது.ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லை.அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் எந்த ஒரு புரட்சிகரமான மாற்றத்தையும் செய்யமுடியாது. ஏனென்றால் எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படையான முன் நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மைதான்.அவ்வாறான அரசியல் ஸ்திரத்தன்மையைக் கட்டி எழுப்புவதென்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.அண்மையில் பிரதமர் ஹரிணி கலந்து கொண்ட சிஎன்என் பேட்டியில் கேட்கப்படுவதுபோல,புதிய யாப்பை உருவாக்குவது என்பது “open that can of worms”-சிக்கலான பிரச்சினைகளைக் கிளப்பி விடும்” என்று கருதத்தக்க சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுச் சூழல்தான் நாட்டில் இப்பொழுதும் நிலவுகின்றது.

இந்த விடயத்தில் கைவைக்க அரசாங்கம் தயாராக இல்லை.கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல அரசாங்கம் தன்னுடைய அடுத்த பதவிக் காலத்தைப் பாதுகாப்பது என்ற நோக்குநிலையில் இருந்துதான் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் மாற்றத்தையும் செய்யத் துணியும்.கல்விச் சீர்திருத்தமும் அதற்குள் அடங்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *