கடந்த மாதம் 25 ஆம் திகதி பௌர்ணமி நாளன்று தையிட்டியில் இடம்பெற்ற விசேஷ பூசைக்கு பூஜைப் பொருட்களோடு பக்தர்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். அந்த வீதியின் ஓரங்களில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் அந்த விகாரை சட்டவிரோதமானது என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.உலகில்,தேரவாத பௌத்தத்தின் சிறப்பான சேமிப்பிடம் என்று கொண்டாடப்படுகின்ற ஒரு சிறிய தீவின் ஆகப்பிந்திய காட்சிகளில் ஒன்று அது.
இது நடந்து சரியாக 14 நாட்களில்,அடுத்த காட்சி கடந்த வாரம் பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்று ஆகிய அனுராதபுரம் ரூவன் வெலிசயவில் இடம்பெற்றது. காவி உடை தரித்த இரண்டு பிக்குகள் மோதிக் கொள்கிறார்கள்.ஒரு பொதுமகன் அவர்களை விலக்குப் பிடிக்கிறார்.எனினும் மற்றொரு பிக்கு உடல் பெருத்த பிக்குவின் தலையில் தடியால் அடித்து விடுகிறார்.ரத்தம் சிந்தப்படுகிறது.சுற்றி இருந்த பௌத்தர்கள் அதைக் காணொளியாக கைபேசியில் படம்பிடிக்கிறார்கள்.ஒன்றில் மோதலில் கலந்து கொள்கிறார்கள்,அல்லது வேடிக்கை பார்க்கிறார்கள்.இதுவும் தேர வாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடமாகிய இலங்கைத் தீவின் ஆகப்பிந்திய காட்சிகளில் ஒன்று.
அரசாங்கத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த தேரரை அகற்றுவதற்கு மற்றொரு அணியை இறக்கியது அரசாங்கத்தின் தந்திரமான நடவடிக்கை என்று அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். “முள்ளை முள்ளால் எடுப்பது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.இந்த விடயத்தில் அதாவது ஞானசார தேரருக்கு ஆதரவான அணிகளை தனிமைப்படுத்துவதிலும் அவமானப்படுத்துவதிலும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது உண்மை.
அநுராதபுரதில் தாக்குதலுக்கு உள்ளான தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.தனக்கு இன்னமும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமாரவுக்குத் தனது ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள அவர், அநுராதபுரத்தில் மீண்டும் குழப்பநிலை அல்லது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அங்கு தான் திரும்பிச் செல்வார் என்றும் சமூக ஊடகவலைத்தளக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.பிக்குகளிடமிருந்து பிக்குகளைப் பாதுகாக்க வேண்டியுள்ள ஒரு நாட்டில்,பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்க வேண்டியுள்ளதா?
பிக்குகள் அனுராதபுரத்தில் மோதிக்கொண்ட நாளில்,தமிழ் மக்களின் கவனம் கம்பன் கழகத்தின் மீதும்,செம்மணி இடைக்கால அறிக்கையின் மீதும், மாவீரர் நாளின் மீதும், மேய்ச்சல் தரைகளின் மீதும், பலாலி,மயிலிட்டி காணி மீட்புப் போராட்டங்களின் மீதும், குவிக்கப்பட்டிருக்கும் ஒரு காலச்சூழலில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் நோக்கு நிலையில் சாதகமான விடயங்களும் உண்டு; பாதகமான விடயங்களும் உண்டு.பாதகமானவற்றில் முக்கியமாக இரண்டு விடயங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வோடு சம்பந்தப்பட்டவை. முதலாவது வடக்கில் உள்ள நான்கு மாவட்ட வைத்திய சாலைகளை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கான முன்மொழிவு. அதாவது இப்பொழுது மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள அந்த வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவு.
ஏற்கனவே மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும் என்று மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயர் கேட்டிருக்கிறார்.அக்கோரிக்கை மாகாண நிர்வாகத்தின் கீழ் இருப்பதை மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பது என்ற அடிப்படையில் ஏற்கனவே கோறையாக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தை மேலும் கோறையாக்கும் என்பது வெளிப்படையானது. தன்னுடைய குழந்தையாகிய மாகாண சபை மேலும் வெட்டிக் குதறப்படுவதை விரும்பாத இந்தியா,மாகாண சபை நிர்வாகத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்கியது.
இந்த நிதி உதவியின் கீழ் புதிய கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன் அங்கு தொடங்கின. அதற்காக மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி குறிப்பிட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.ஆனால் தான் அடிக்கல் நாட்டவில்லை.ஆளுநரை அழைத்து, தூதரக அதிகாரிகளோடு சேர்ந்து அதைச் செய்யவிட்டார். அந்த நேரத்தில் அதனை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் எளிமை என்று பாராட்டினர். ஆனால் அங்கே எளிமை இருக்கவில்லை.ஜேவிபியின் மிகத் தெளிவான தீர்மானம் ஒன்று இருந்தது. மாகாண சபைகளைப் பலப்படுத்துவதற்கான இந்தியாவின் உதவியை தன் கையால் தொட்டுத் தொடங்க அனுர விரும்பவில்லை என்ற செய்திதான் அது.
மாகாண மருத்துவமனையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவி செய்த பின்னரும் அரசாங்கம் அதன் முடிவை மாற்றவில்லை என்பதைத்தான் புதிய வரவு செலவுத் திட்டம் உணர்த்துகின்றதா? மாகாண அதிகாரத்தை மேலும் கோதி எடுத்து மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கிலான இந்த நடவடிக்கையானது இனப்பிரச்சனைக்கான தேசிய மக்கள் சக்தியின் தீர்வு எத்தகையது என்பதனைக் கட்டியம் கூறுகின்றதா?
இது முதலாவது. இரண்டாவது விடயம்,வழமை போல பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்பீட்டளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது. ஆட்சியில் யார் இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஏனென்றால் இலங்கைத் தீவின் படைக் கட்டமைப்பானது நாட்டின் கொள்ளளவு,சனத்தொகை போன்றவற்றோடு ஒப்பிடுகையில் அளவுப்பிரமாணத்துக்கு அதிகமாக வீங்கிப் போயிருக்கிறது. அதைப் பராமரிப்பதற்கு அதிகளவு நீதித் தேவை.அந்த நிதியை வெட்ட முடியாது.வெட்டுவது என்றால் படைக் குறைப்புச் செய்ய வேண்டும்.படைக் குறைப்புச் செய்வதென்றால்,நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை மாற்ற வேண்டும்.யாரிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது என்று தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை மாற்றுவது என்பது இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுபிடிப்பதுதான். ஆனால் நாடு இப்பொழுதும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைக் குறித்துப் பயப்படுகிறது. அதனால்தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக 2024க்கு முன்புவரை ஏனைய கட்சிகளோடு குறிப்பாக தமிழ்,முஸ்லிம் கட்சிகளோடு இணைந்து போராடிய ஜேவிபி, இப்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில் கொண்டுவர முயற்சிக்கின்றது.தேசிய மக்கள் சக்தியின் அடித்தளமாகக் காணப்படுவது ஜேவிபி.அது சீன சார்பு இடதுசாரிப் பாரம்பரியத்திலிருந்து தோற்றம் பெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை ஜேவிபி அதன் தியாகிகளை நினைவு கூர்ந்தது.அந்த இடம் அதிகம் சிவப்பாகக் காணப்பட்டது.சிவப்புச் சட்டைகள்,சிவப்புப் பூக்கள்,சிவப்புக் கொடிகள்.மார்க்சியத்தின் நிறம் அது. மார்க்சிஸ்ட்டுகள் தெளிவாகக் கூறுவார்கள்,”அரசு உதிர்ந்து போதல்’ (Withering away of the state) ” என்று. அரசு உதிர்ந்து விழும்போதுதான் கம்யூனிசம் மலரும் என்று. உலகில் இதுவரை தோன்றிய எல்லா மார்க்சிஸ்ட் அரசுகளும் அரசை நீக்கவில்லை.அரசைப் பலப்படுத்தின.ஜேவிபியும் விதிவிலக்கல்ல.உதிர்ந்து போக வேண்டிய அரசைப் பாதுகாப்பதற்கு, பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கு ஒரு சட்ட முன்மொழிவு?
எனவே தேசிய மக்கள் சக்தியின் அடித்தளமாக உள்ள ஜேவிபியின் மேடைகளிலும் நிகழ்வுகளிலும் காணப்படும் சிவப்பு நிறத்தில் உண்மை இல்லை.அனுராதபுரத்தில் தங்களுக்கு இடையே மோதிக்கொண்ட இரண்டு அணிகளைச் சேர்ந்த பௌத்த மத குருக்கள் அணிந்திருந்த காவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் விரும்பி அணியும் சிவப்புக்கும் இடையே வேறுபாடு உண்டா? ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நினைவு கூர்வதற்கு வந்திருந்த முதிய அன்னையரின் கண்ணீரில் பொய்யில்லை.இந்த மாத இறுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களில் திரளப் போகும் அன்னையர்கள் சிந்தும் கண்ணீரிலும் பொய் இல்லை.அன்னையரின் கண்ணீரில் உப்புண்டு; பொய்யில்லை.




