அ.இரவி எழுதிய காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள ஆயுதவரி (நெடுங்கதைகளின் தொகுப்பு) நுாலில் எழுதிய முன்னுரை
படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம் அவரைத் துரத்திக் கொண்டுவரும் அல்லது அவரைச் சுற்றி வளைக்கும். அல்லது அவரைத் தோற்கடிப்பதுமுண்டு. படைப்பாளியின் வாழ்க்கை படைப்பைத் தோற்கடிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. அதேசமயம் மாறக்கூடிய படைப்பாளி தனது மாறாப்படைப்பை கடந்து புதிய உச்சங்களை நோக்கிப் போவதும் உண்டு.
ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரான இரவியும் ஒரு மாறிலி அல்ல. இதுவரையிலுமான அவருடைய வாழ்க்கைத் தடத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதலாவது, அவர் இடது சாய்வுடைய ஓர் இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்த காலம்.
இரண்டாவது, அவர் அந்த இயக்கத்துடன் அதிருப்தியுற்றவராகவும், அதேசமயம் அந்த இயக்கம் அரங்கில் தொடர்ந்தும் செயற்பட முடியாத ஒரு நிலை தோன்றியபோது, அதாவது விடுதலைப்புலிகள் இயக்கம் ஏகப்பெரும் இயக்கமாக மேலெழுந்தபோது அதன் மீது அதிருப்தியுற்றவராகவும் காணப்பட்ட காலம்.
இக்காலப்பகுதியில் அவர் கொழும்பிலிருந்து வந்த சரிநிகர் பத்திரிகையில் எழுதினார்.
அதன் பின் மூன்றாவது கட்டம் இரவி புலம்பெயர்ந்தார். புலம்பெயர்ந்த நாடுகளில் அவர் விடுதலைப்புலிகளின் விசுவாசியாக மாறினார்.
நான்காவது கட்டம் நந்திக் கடல் வீழ்ச்சிக்குப் பின்னரானது. அதன் பின் இரவி விட்டுக்கொடுப்பற்ற அதி தீவிர தேசியவாதியாக காட்சி தருகிறார்.
இந்நான்கு கட்டங்களுக்கு ஊடாகவும் இரவியை விளங்கிக் கொள்வதே இம்முன்னுரையின் நோக்கமாகும். அதாவது ஒரு அரசியல் கலை இலக்கிய ஊடகச் செயற்பட்டாளராக இரவியை அவருக்கேயான மாற்றங்களுக்கூடாக விளங்கிக்கொள்வது. மாறாக, அவருடைய படைப்பாற்றலை பகுப்பாய்வு செய்வது என்னுடைய பிரதான நோக்கமல்ல. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது இரவி ஏற்கனவே, ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கீர்த்திமிக்க கதை சொல்லி. ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் அவருக்கொன்று ஒரு தனித்துவம் உண்டு. முதலில் அவரை புதுசு இரவியாகத்தான் எனக்குத் தெரியும். புதுசு சஞ்சிகை எனப்படுவது ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் ஒரு தனியான ஆய்வுப் பரப்பு. அதை ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டு இயக்கம் என்று சொல்லலாம். ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் ‘‘அலை” காலத்தைப் போலவே ‘‘புதுசு” காலமும் முக்கியத்துவமுடையது. மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் கணிசமான கவிதைகள் புதுசுவிலிருந்து எடுக்கப்பட்டவைதான். எனவே, புதுசு இரவியின் படைப்பாளுமை எனப்படுவது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒன்று. இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம், ஒரு போரிலக்கியவாதியின் அரசியல் ஒழுக்கத்தை அவருடைய படைப்பாக்க ஒழுக்கத்திலிருந்தும் பிரித்துக்காண முடியாது. இந்த அடிப்படையில் பார்த்தால் இரவியினுடைய அரசியல் ஒழுக்கத்தை அவருக்கேயுரிய நான்கு கட்டங்களுக்கூடாகவும் விளங்கிக்கொண்டால்தான் ஒரு போரிலக்கியவாதியாக அவருடைய வகிபாகத்தை சரியாக மதிப்பிடவும் முடியும். எனவே, மேற் சொன்ன இரு காரணங்களின் அடிப்படையில் இரவியின் அரசியல் ஒழுக்கத்தை விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம்.
முதலில் கேள்வி கேட்போம். ஒரு படைப்பாளி அல்லது பொதுவாழ்வில் செயற்படுபவர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளலாமா? அல்லது இதை வேறுவிதமாகவும் கேட்கலாம். ஒரு படைப்பாளியின் வாழ்க்கைத் தடம் எனப்படுவது மாற்றங்களற்ற ஒரு நேர் கோடாக இருக்க வேண்டுமா? என்பது.
ஒரு படைப்பாளியின் வாழ்க்கைத் தடம் மாறாத நெடுங்கோடாய் இருப்பதற்கு அவர் ஒன்றும் ஜெற் விமானம் அல்ல. அவர் ஓர் உயிரியும் வளரியும் ஆவார். பருவங்கள் மாறும்போதும் அனுபவங்கள் பெருகும்போதும் வாழ்க்கை பற்றிய தரினங்கள் மாறும்போதும் நம்பிக்கைகள் சிதையும்போதும் விசுவாசம் இடம்மாறும் போதும் அல்லது சரணடையும் போதும், சோரம்போகும் போதும் இது போன்ற வேறு பல காரணங்களிற்காகவும் ஒரு படைப்பாளி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதுண்டு.
இவையெல்லாம் ஆன்மீக உதாரணங்கள். இனி அரசியல் மற்றும் கலை இலக்கியத்துறைகளைப் பார்க்கலாம். அன்னா அக்மத்தோவா ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுதியபோது அதிகம் தேசியத்தன்மை மிக்கவராகக் காணப்பட்டார். ஸ்ராலினியமே அவரை மாற்றியது.‘‘மலைகளையும் கூனச்செய்யும் துக்கம்” அவரைத் தாக்கியபோது ‘‘வீணான லெனின் கிராட்” என்று எழுத வேண்டி வந்தது. ஸ்ராலினின் எழுச்சி வரையிலும் சோவியத் புரட்சியை ஆதரித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படைப்பாளிகளிற் பலர் பின்னாளில் ஸ்ராலினுக்கு எதிராகத் திரும்பி அதிருப்தியாளர்களாக மாறினர்.
ஈழப் போர்ப் பரப்பில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் நான்காம் அகிலத்துடனும், ரொட்ஸ்கியுடனும் ஈடுபாடுடையவராகக் காணப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சேர்ந்தியங்கியபோது அவர் எழுதிய நூல்கள் இடதுசாய்வுடையவை. ஆனால், 2002இல் கிளிநொச்சியில் பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகளின் பொருளாதாரக் கொள்கை எதுவென்று கேட்டபோது Tiger Economy அதாவது தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படுவது போன்ற அரசின் கட்டுப்பாடு அதிகமுடைய திறந்த சந்தைப் பொருளாதாரம் என்ற அர்த்தப்பட பதில் கூறியிருந்தார். மற்றவர் புதுவை இரத்தினதுரை. இவர் 1985 வரையிலும் அனைத்திலங்கைத் தேசியத்தை ஆதரித்து எழுதியவர். ஆனால், 2009இல் நந்திக் கடற்கரையில் காணாமற்போனபோது அவர் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாக இருந்தார்.
எனவே, படைப்பாளிகளும் கோட்பாட்டாளர்களும் பொதுவெளியில் செயற்படுவோரும் நிலைப்பாட்டை மாற்றுவது ஒரு வாழ்நிலை யதார்த்தம். ஆனால், ஈழப்போர்ப் பரப்பில் அது ஒரு பெருங் குற்றமாக அல்லது சாவுக்கேதான துரோகமாக ஏன் பார்க்கப்படுகிறது?
விடுதலைப்புலிகளின் எழுச்சியே இதற்குக் காரணம். தனிப்பெரும் இயக்கமாக அவர்கள் எழுச்சி பெற்ற பின் ஈழப்போர் எனப்படுவது புலிகளின் போர் என்றானது. போரிலக்கியம் எனப்படுவது ஒன்றில் புலிகளை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதே பெரும்போக்காயானது. இத்தகைய பொருள்படக் கூறின் 1986 மே மாதத்தை ஈழப்போர் வரலாற்றில் ஒரு முக்கிய பிரிகோடெனலாம். இக்காலப் பகுதியில்தான் விடுதலைப்புலிகள் ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இங்கிருந்து தொடங்கி படிப்படியாக ஏனைய எல்லா இயக்கங்களையும் அரங்கிலிருந்து அகற்றி அல்லது உள்ளுறுஞ்சி ஏகப்பெரும் இயக்கமாக விடுதலைப்புலிகள் மேலெழுந்தார்கள்.அதன் பின் ஈழப்போர்ப் பரப்பில் எதுவும் விடுதலைப்புலிகள் என்ற மையத்தைச் சுற்றியே நிகழ்வதாக மாறிற்று. இலக்கியமும் இதற்குள் அடங்கும்.
குறிப்பாக, புலிகள் இயக்கத்தின் சயனைட் ஆனது ஒருபுறம் நிகரற்ற தியாகம், சரணடையா வீரம் என்பவற்றின் குறியீடாக காணப்பட்டது. அதே சமயம் அது இன்னொரு புறம் நெகிழ்வின்மையின் குறியீடாகவும் மாறியது. ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக உயிரை மாய்க்கலாம் எனின் இலட்சியம் உயிரை விடவும் பெரியதாகியது. அதாவது இலட்சியம் வாழ்க்கையை விடவும் புனிதமானது என்று பொருள். எனவே, இலட்சியத்தில் சறுக்குவது அல்லது பின்வாங்குவது அல்லது தடம்புரள்வது என்பது சாவுக்கேதான ஒரு பாவமாகக் கருதப்பட்டது. போராளிகளுக்கும் அரசியற் செயற்பாட்டாளுமைகளுக்கும் பிரயோகிக்கப்பட்ட இவ்வளவுகோலானது படைப்பாளுமைகளுக்கும் பிரயோகிக்கப்படும் ஒரு நிலைவரும்போது தன் நிலைப்பாட்டில் மாறும் ஓர் படைப்பாளி துரோகியாக முத்திரை குத்தப்பட்டார்.
ஆனால், படைப்பாளி அவரியல்பில், சதா மாறுபவர்தான். ஆனாலிங்கு, மாற்றம் எனப்படுவது வளர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை. வீழ்ச்சியும் தேய்வும்கூட ஒரு மாற்றம்தான். அங்கிடுதத்திகளும் அண்டிப்பிழைப்போரும் வாலாட்டிகளும், கும்பிடு பூச்சிகளும் பிழைப்புவாதிகளும் மாற்றம்தான் நிரந்தரம் என்ற கோட்பாட்டின் மறைவில் ஒளிய முடியாது. கௌதம புத்தர் மாற்றமே நிரந்தரம் என்று சொன்னார். ஆனால், மாறா நிரந்தரமான பரிநிர்வாணத்தை அவர் அடைந்தார் ஆயின் புத்தர் கூறிய நிரந்தரமான மாற்றம் எது? இங்கு மாற்றம் அல்லது நிச்சயமின்மை என்று அழைக்கப்படுவது ஆங்கிலத்தில் becoming என்று கூறப்படுவதுண்டு. இங்கு becoming– உருவாகுதல் என்ற சொல் மிக விரிந்த அர்த்தச் செறிவுடையது. அதாவது புத்தர் மாற்றம் என்று கருதுவது ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருவாகுவதைத் தான். எனவே, ஒரு படைப்பாளுமையில் நிகழும் மாற்றங்களானவை உன்னதமான உச்சங்களை நோக்கி நிகழும் உருவாக்கங்களாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் படைப்பாளியின் வாழ்க்கை அவருடைய படைப்பை மகிமைப்படுத்தும்.
மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் நாமினி இரவியிடம் வருவோம். செழிப்புமிகு மகாஜனாப் பாரம்பரியத்திலிருந்து இரவியின் வேர் தொடங்குகின்றது. புதுசு காலம் எனப்படுவது ஒரு மாண்புமிகுந்த காலம். அந்நாட்களில் தமிழ்த்தேசியம், தேசியத் தலைவர் போன்ற பெருங்கதைகள் அரங்கில் முதன்மை பெற்றிருக்கவில்லை. இன்ன இயக்கத்தின் ‘‘தலைவரும் பிரதான தளபதியுமான” என்றே தலைவர்கள் விளிக்கப்படார்கள். போராட்டத்துக்குள் ஒரு போராட்டத்தை நடத்தக்கூடிய வெளி ஓரளவுக்கேனும் அன்றைக்கு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அகஜனநாயக வெளியெனப்படுவது ஓப்பிட்டளவில் செழிப்பாயிருந்த காலம் அது. அதாவது 1986 மே வரையான காலம். புதுசு சஞ்சிகை தனது ஜனங்களின் கூட்டுக்கனவைப் பிரதிபலித்தது. ஒரு மக்கள் திரள் அதன் கூட்டு அடையாளங்களுக்காக வதைக்கப்படும்போது உண்டாகிய கூட்டுக் காயங்களுக்கு எதிராக புதுசு சஞ்சிகை எழுதியது. தேசியம் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் ஒரு கூட்டுப் பிரக்ஞையே என்ற அடிப்படையில் கூறின் புதுசு தேசியத் தன்மை மிக்க ஒரு சஞ்சிகையே. எனவே, இரவியும் அந்நாட்களில் கொஞ்சமாகவோ அல்லது கூடுதலாகவோ தேசியத் தன்மை மிக்க ஒரு படைப்பாளுமை தான்.
அதன் பின் அதிருப்தியாளராக இருந்த காலம் அல்லது சரிநிகர் காலம். அதிருப்தியாளர்கள் எப்பொழுதும் ஒரு போராட்டத்தின் அகஜனநாயக வெளியைச் சோதிப்பவர்கள். ஒரு போராட்டம் எவ்வளவுக்கெவ்வளவு அதிருப்தியாளர்களைச் சகித்துக் கொள்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் அகஜனநாயக வெளியும் மாண்புடையதாகத் திகழும். ஒரு போராட்ட அமைப்புக்கு வெளியே அதிருப்தியாளர்களாக இருப்பவர் எல்லாம் அந்தப் போராட்டத்தின் எதிரிகள் அல்ல. அல்லது தீவிர ஆதரவாளர்களாக இருப்பவர்கள் எல்லாம் தேசியவாதிகளும் அல்ல. லெனின் தனது கடைசிக் காலத்தில் தன்னைப் பராமரித்த பெண்ணிடம் மனம்விட்டுக் கதைத்த சந்தர்ப்பத்தில் சில கட்சி உறுப்பினர்களைப் பற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘‘சிலர் எங்களோடு நிற்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்களுடையவர்கள் அல்லர். சிலர் எங்களுக்கு வெளியே நிற்கிறார்கள் ஆனால் அவர்கள் எங்களுடையவர்கள் ” என்று.இது எல்லா விடுதலைப் போராட்டங்களுக்கும் பொருந்தும். ரவியினுடைய ‘காலமாகி வந்த கதை” நூல் யுத்த நிறுத்த காலத்தில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் வெளியிடப்பட்டபோது நான் ஆற்றிய மதிப்பீட்டுரையில் மேற்படி லெனினுடைய கூற்றினை மேற்கோள்காட்டியிருந்தேன்.
சரிநிகர், தொடக்கத்தில் அதிருப்தியாளர்களை அதிகம் பிரதிபலித்தது. ஆனால், பின் நாட்களில் அது எதிர்ப்பின் தொனியைக் குறைத்துக் கொண்டது. ஆனால், எப்பொழுதும் அது சனங்களின் கூட்டுக் கனவை ஆதரித்தது. தமிழ் மக்களின் கூட்டு விருப்பங்களுக்கு எதிராக அது சென்றதில்லை. எனவே, கொஞ்சமாகவோ அல்லது கூடுதலாகவோ அது ஒரு தேசியத்தன்மை மிக்க ஒரு பத்திரிகைதான். இரவி சரிநிகரில் எழுதினார். அந்நாட்களில் அவர் அதிதீவிர அதிருப்தியாளராகக் காட்சியளித்தார். ஆனால், இப்பொழுது தீவிர விசுவாசியாகக் காட்சி தருகிறார்.
புதுசுவிலிருந்து தொடங்கி சரிநிகரிற்கூடாக இன்றுள்ள தீவிர தேச பக்த நிலை வரையிலுமாக இரவி வெவ்வேறு தீவிர நம்பிக்கைகளைப் பிரதிபலித்திருக்கிறார். ஆனால், எப்பொழுதும் கொஞ்சமாகவோ அல்லது கூடுதலாகவோ விகித வேறுபாடுகளோடு தேசியத்தன்மை மிக்கவராகவே காணப்படுகிறார். எல்லா மாற்றங்களின்போதும் மாறாத ஓர் அடிச்சரடாக அது காணப்படுகிறது. இரவியின் பலம் அது. ஆனால், பலவீனமும் அதுதான்.
இரவி அவரியல்பில் ஓர் உணர்ச்சிப் பெருக்கான ஆள். ஒரு கதை சொல்லி உணர்ச்சிப் பெருக்காயிருப்பது ஒரு மகத்தான பலம். இரவி அதிகபட்சம் இதயத்தால் கதை சொல்பவர். இதயத்தால் கதை சொல்லும்போதெல்லாம் அவர் ‘சீரியஸ்” ஆனதை ஜனரஞ்சகப்படுத்திவிடுவார். இது மிக அரிதான ஒரு கலைநுட்பம். சீரியஸானதை ஜனரஞ்சகப்படுத்துவது என்பது. ஒரு போரிலக்கியவாதிக்கு அதற்கு வேண்டிய அதிகபட்ச வாய்ப்புக்கள் உண்டு. போர் எப்பொழுதும் சீரியஸானது. உயிர்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் அது அதன் வீச்செல்லையைப் பொறுத்து ஜனமயப்பட்டது. அதாவது அது சகலரையும் பாதிப்பது. எதுவொன்று சீரியஸானதாகவும் வெகுசன மயப்பட்டதாகவும் காணப்படுகிறதோ அதைச் சீரியஸாக எழுதினாலும் அது வெகுசனத்தன்மை பெற்றதாகவும் இருக்கும். எனவே, போரிலக்கியவாதிக்குள்ள இந்தப் பிரகாசமான வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திய ஒருவராக இரவி காணப்படுகிறார். அதிலும் குறிப்பாக, அவர் இதயத்தால் கதை சொல்லும் போது ஒரே நேரத்தில் கனதியானவராகவும் இலேசானவராகவும் காணப்படுகிறார். அவருடைய மொழியும் அத்தகையதே.
இது அவருடைய பிரதான பலம். அதாவது ஒரு கதை சொல்லி ஓர் உணர்ச்சிப் பிழம்பாயிருப்பது ஓர் அடிப்படைப் பலம். ஆனால், ஒரு தேசியவாதி உணர்ச்சிப் பிழப்பாயிருப்பது மிகப் பெரிய பலவீனம். தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பலவீனங்களில் இதுவுமொன்று. தமிழ்த்தேசியத்தின் அடித்தளம் எனப்படுவது அதிகபட்சம் உணர்ச்சிக் கொதிப்பான அம்சங்களாலேயே வனையப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டத்தின் அகஜனநாயக வெளி குறுகிக் காணப்பட்டதும் இதனாற்தான். நந்திக் கடல் வீழ்ச்சிக்குப் பின் இக்கொதிப்பான உளவியல் மேலும் கொந்தளிப்பானதாக மாறியிருக்கிறது. பொதுவான ஈழத்தமிழ் மனோநிலை எனப்படுவது இப்பொழுது அதுதான். வெகுசன வெளிக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு சீரியஸான கதை சொல்லியான இரவியும் அதன் தர்க்கபூர்வ விளைவாக ஒரு கொந்தளிக்கும் தேசியவாதியாக காணப்படுகிறார். அவருடைய அரசியல் தீவிரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட அவருடைய உணர்ச்சிப் பெருக்கான கதை சொல்லியை பிரமிப்போடு இரசிப்பதை நான் கண்டிருக்கிறேன். ஆனால், அவரை ஒரு கீர்த்திமிக்க கதை சொல்லியாக நிறுவியிருக்கும் கதைகளில் அநேகமானவை கொஞ்சமாகவோ அல்லது கூடுதலாகவோ அவருடைய தேசிய அடித்தளத்தில் வேர்விட்டெழுபவைதான். இதுதான் இரவி. புதுசுவிலிருந்து இன்று வரையிலும் அவர் வௌ;வேறு நம்பிக்கைகளைப் பிரதிபலித்திருக்கிறார். மிகத் தீவிர துருவ நிலைகளுக்குச் சென்றுமிருக்கிறார். ஆனால், எல்லாக் காலங்களிலும் அவர் கொஞ்சமாகவோ அல்லது கூடுதலாகவோ தேசியத் தன்மை மிக்கவராகவே காணப்பட்டிருக்கிறார். கடந்த சுமார் மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக கலை இலக்கிய மற்றும் அரசியல் ஊடகச் செயற்பாட்டு வெளி;களிற்கூடாக அவரில் நிகழ்ந்த உருவாக்கமாக இதைக் கருத முடியுமா?
அவரைப் போலவே, விடுதலைப்புலிகளுடையது அல்லாத வேறு பாரம்பரியங்களிலிருந்து வந்து தேசிய உருவாக்கம் பெற்ற ஒளிவீசும் ஆளுமைகள் வேறு சிலவும் உண்டு. குறிப்பாக, தராகி சிவராமை இங்கு எடுத்துக் காட்டலாம். தராகிசிவராமை மறுவாசிப்புச் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம் அவரது இறுதி நிகழ்வின் போது சரிநிகர் சிவகுமார் பேசியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.1987 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் மட்டக்களப்பில் ஒரு தாக்குதல் நிகழ்ந்தது. அதில் புளொட் இயக்கப் பிரதானிகளில் ஒருவரான வாசுதேவாவும் அவருடைய அணியினரும் கொல்லப்பட்டார்கள். இத்தாக்குதலில் தராகிசிவராமும் சிக்கியிருந்திருந்தால் அவருடைய பெயர் விடுதலைப்புலிகளின் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், அதிற்தப்பிய தராகிசிவராம் சுமார் 18 ஆண்டு கால தொடர்ச்சியான மாற்றங்களுக்கூடாக உருவாக்கம் பெற்று 2005இல் கொழும்பில் கொல்லப்பட்டபோது விடுதலைப்புலிகள் இயக்கம் அவரை மாமனிதராக கௌரவித்தது. அதாவது, ‘துரோகியாக’ கொல்லப்படுவதில் இருந்து தப்பிய ஒருவர் பின்னாளில் ‘மாமனிதரானார்.’ ஆயின் இதுவரை கொல்லப்பட்ட ‘துரோகிகளில்’ எத்தனை பேர் பின்னாளில் ‘மாமனிதர்களாக’ உருவாக்கம் பெற்றிருப்பார்கள்?
அதைப் போலவே சரிநிகரில் எழுதியவருக்கெல்லாம் மரணத் தீர்ப்பு எழுதப்பட்டிருந்திருந்தால் புதுசு இரவி என்ற மகத்தான ஒரு கதை சொல்லி எமக்கு மிஞ்சியிருந்திருப்பாரா?
1983இல் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்களில் இணைந்த எவருமே பிறகொருநாள் புலிகளால் தடை செய்யப்பட வேண்டிவரும் என்று எதிர்பார்த்து குறிப்பிட்ட இயக்கங்களில் இணைந்ததில்லை. அல்லது மட்டக்களப்பில், போராடப்போனவர்கள் எல்லாரும் பிறகொரு நாள் வெருகலாற்றின் தீரங்களில் எதிரும் புதிருமாக நின்று ரத்தம் சிந்தவேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்தா இணைந்திருப்பார்கள்?
1983இல் ஓர் அலையடித்தது. அதில் அள்ளுண்டு போனவர்களே அதிகம். ஏன் போகிறோம் எந்த இயக்கத்துக்குப் போகிறோம் என்றெல்லாம் கொள்கைத்தெளிவோடு போனவர்கள் குறைவு. இனமான உணர்வு அல்லது சாகச உணர்வு போன்றவற்றால் உந்தப்பட்டுப்போனவர்களே அதிகம். இதில் எந்த இயக்கத்தில் இணைவது என்பது அநேகமாக நட்பின் அடிப்படையில் அல்லது உறவின் அடிப்படையில் அல்லது ஊரவர் என்ற அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட்டது. பெரும்பாலானவர்களின் விஷயத்தில் அதுவொரு கொள்கை முடிவு அல்ல. அற்ப காரணங்களுக்காக இயக்கத்தில் சேர்ந்து பின்நாளில் அற்புதமான ஆளுமைகளாக உருவாக்கம் பெற்ற பலரை நாம் கண்டிருக்கின்றோம்.
1986 மேயிலிருந்து தொடங்கி ஈரோஸ் இயக்கம் தவிர புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்கள் அரங்கில் செயற்பட முடியாத ஒரு நிலை தோன்றியது. அவ்வியக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றில் அரசியல் அஞ்ஞாதவாசம் பூண்டனர். அல்லது அரங்கைவிட்டகன்று தென்னிலங்கை போயினர். அல்லது நாடு நீங்கிப் புலம்பெயர்ந்தனர். அல்லது அரசாங்கத்துடன் இணைந்தனர்.
இது அவரவருடைய தனிப்பட்ட அரசியல் அறத்தைப் பொறுத்து அமைந்தது. எனவே, அரங்கிலிருந்து அகற்றப்பட்ட வேர் கொள்ளவியலா ஒரு வாழ்க்கைச் சூழலில் அவர்களிற் பலர் தேசிய நீரோட்டத்தில் இணைவதோ அல்லது கொஞ்சமாகவோ கூடுதலாகவோ தேசியத் தன்மையோடு வாழ்வதோ ஏறக்குறைய ஒரு தவத்தைப் போலிருந்தது. அதாவது தன்னைத் துரத்தும் ஒரு அமைப்பினால் முன்னெடுக்கப்படும் ஒரு போராட்டத்தை ஆதரிப்பது என்பது. இதை போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அதேசமயம் போராட்ட அமைப்புடன் உடன்படாமை என்று வியாக்கியானம் செய்வோரும் உண்டு.இத்தொகுப்பிலுள்ள ‘சகபயணி’ என்ற கதையில் வரும் இருபிரதான பாத்திரங்களில் ஒன்று இதே நிலைப்பாட்டை பிரதிபலிக்கக் காணலாம். கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும் ஒரு மனம் இதை விளங்கிக் கொள்ளாது.
இரவியும் இத்தகைய கண்டங்களைக் கடந்து உருவாகியவர்தான்.
அரசியலில் தத்துக்களையும் கண்டங்களையும் கடந்துருவாகிய ஒருவருக்குத்தான் அக ஜனநாயகத்தின் அருமை தெரியும். இரவிக்கு இடது பாரம்பரியம் தெரியும். அதிருப்தியாளர்களின் அலை வரிசை தெரியும். தமிழ்த் தேசியப் பரம்பரியம், குறிப்பாக, விடுதலைப்புலிகளின் பாரம்பாரியம் தெரியும். இம்மூன்று பாரம்பரியங்களின் உருவாக்கமாகக் காணப்படும் இரவியைப் போன்ற ஒருவருக்கே பல்வகைமையின் – Diversity இன் அருமை தெரிந்திருக்கும்.
பல்வகைமைதான் பன்மைத்துவத்தின் அடித்தளம். பன்மைத்துவம் தான் ஜனநாயகத்தின் அடித்தளம். தமிழ்த் தேசியம் அதன் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்தினாற்றான் ஈழத்தமிழர்களுக்கு அடுத்த கட்டம் என்று ஒன்று வெளிக்கும்.
நந்திக் கடல் வீழ்ச்சிக்குப் பின் ஈழத்தமிழர்கள் தொடர்பில் அனைத்துலக அனுதாப அலை ஒன்று திரண்டு வருகிறது. இந்த அனுதாப அலையை தமிழர்களிற்கு நீதியைப் பெற்றுத்தரவல்ல கொள்கைத் தீர்மானங்களாக பண்பு மாற்றம் செய்யவேண்டும். அதற்குத் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்த வேண்டும். ஒரு தேசிய இனத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்துவது என்பது அதிலும் குறிப்பாக, தோல்விக்குப் பின்னரான காலங்களில் அதைச் செய்வது என்பது, ஏறக்குறைய ஒரு பண்பாட்டுருவாக்கம்தான். அரசியல் வாதிகளால் மட்டும் அதைச் செய்ய முடியாது அறிஞர்கள், படைப்பாளிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசியத் தன்மை மிக்க ஆன்மிக வாதிகள் என்றெல்லாரும் இதில் இணைய வேண்டும்.
ஒப்பீட்டளவில் மிக விசாலமான ஜனநாயகச் சூழலில் தேவையான நிதிப்பலத்துடன் காணப்படும் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இது விசயத்தில் கூடுதல் பொறுப்புண்டு. ஏனெனில் ஜனநாயகத்தின் ருசி என்னவென்று அவர்களுக்கே அதிகம் தெரியும்.
எமது காலத்தின் அரசியல்வாதிகளிற்பலர் இடைமாறு காலகட்டமொன்றின் உப ஆளுமைகளாகவே காட்சி தருகின்றார்கள். எமது காலத்தின் மூத்த படைப்பாளிகள் சிலருக்கு வாக்கு மாறிவிட்டது.
அரசியலில் மட்டுமல்ல, அநேகமாக ஏனைய எல்லாத் துறைகளிலும் உப ஆளுமைகளின் பெருக்கத்தைக் காண முடிகிறது. பேராளுமைகளை அரிதாகவே காணக்கிடைக்கின்றது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கப்பட்டபோது அவர் சொன்னாராம், மந்தர்களே, – Mediocre – எல்லாத்துறைகளிலும் முன்னணிக்கு வருவார்கள் என்று. வீழ்ச்சிக்குப் பின்னரான ஈழத்தமிழ் அரங்கெனப்படுவது ஏறக்குறைய அப்படித்தான் காணப்படுகிறது. ஈழப்போரானது சிங்களத் தலைமைத்துவத்தின் மிகச் செழிப்பான பகுதியை – Cream – மட்டும் அழிக்கவில்லை. அது தமிழ்ச் சமூகத்தின் மிகச் செழிப்பான பகுதியையும்தான் அழித்திருக்கிறது அல்லது புலம்பெயர்த்திருக்கிறது அல்லது நீர்த்துப்போகச்செய்திருக்கிறது. எல்லாத்துறைகளிலும் வீரத்தையும் அறிவையும் ஒன்றை மற்றதால் இட்டு நிரப்பவல்ல தீர்க்க தரிசனமும், தியாக சிந்தையும் ஜனவசியமும் மிக்க பேராளுமைகளின் வருகைக்காக காத்திருக்கிறது நாடு.
பேராளுமைகள் பெரும் செயல்களின் மூலம் உருவாக்கம் பெறுகின்றன. ஈழத் தமிழ்த் தேசிய அரங்கில் இப்பொழுது பெரும்செயல் எனக் கூறத்தக்கது யாதெனில் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தைப் பாதுகாத்து பலப்படுத்துவதுதான். அப்பொழுதுதான் அறிவுக்கும், வீரத்திற்கும் இடையில் அனைத்துலக கவர்ச்சி மிக்க ஒரு புதிய தமிழ்ச் சமன்பாட்டை உருவாக்கலாம். எனவே, ஆயுத வரியும் வரவேண்டும்.காதல் வரியும் வரவேண்டும் கானல் வரியும் வரவேண்டும். ஜனநாயக வரியும் வரவேண்டும்.
புதுசு கலை இலக்கியச் செயற்பாட்டின் மைய ஆளுமையும், மூன்று வேறு பராம்பரியங்களின் கூட்டுருவாக்கமும், மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக அரசியல், கலை, இலக்கியம், ஊடகம் என்றெல்லாப் பரப்புகளிலும் சலியாது தொடர்ச்சியறாது செயற்பட்டு வருபவருமாகிய இரவியாலும் அவரைப் போன்றவர்களாலும் அது முடியும்.
ஒரு புதிய தமிழ் ஜனநாயக வரியை எழுதுவது என்பது.
ஏனெனில், மாற்றம் என்பதே உருவாக்கம் தான்.
06-04-2013
யாழ்ப்பாணம்
3 Comments