இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்

இலங்கைத்தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த நூற்றாண்டில் 1915ல் இடம்பெற்றன. இத் தாக்குதல்கள் தொடர்பில் முக்கிய சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக சேர்.பொன் இராமநாதன் பிரித்தானியாவிற்குச் சென்று வாதாடி அவர்களை விடுவித்தார். அவர் நாடு திரும்பிய பொழுது சிங்களத் தலைவர்கள் அவர் பயணம் செய்த வாகனத்தை தங்கள் கைகளால் இழுத்துச் சென்றார்கள். இது நடந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னரும் இலங்கைத்தீவில் முஸ்லிம் மக்கள் எப்பொழுதும் தாக்கப்படக்கூடிய பாதுகாப்பற்ற ஒரு நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் அம்பாறையிலும், கண்டியிலும் அண்மையில் நடந்திருக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை சுதந்திரமடைய முன்னரும் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. அதன் பின் பிரித்தானியரிமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற பின்னரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. குறிப்பாக 1970களில் தொடங்கிய ஈழப்போரின் போது சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போரிடும் இரண்டு தரப்புக்களுக்கும் இடையே கிழிபட்டார்கள். 1980களில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். அதில் சிலர் தியாகிகளும் ஆனார்கள். ஆனால் முதலாவது சிறுபான்மைக்கு எதிராக இரண்டாவது சிறுபான்மையைத் திருப்பி விடுவதில் சிங்கள ஆட்சியாளர்கள் இறுதி வெற்றியைப் பெற்றார்கள். முடிவில் முஸ்லிம் மக்கள் தங்களை தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்று அழைப்பதை தவிர்க்கும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டது.

காத்தான்குடிச் சம்பவம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை போன்றவற்றிற்காக புலிகள் இயக்கம் பின்னாளில் வருத்தம் தெரிவித்தது. இரண்டு சமூகங்களுக்குமிடையிலான கசப்பையும், வெறுப்பையும், காயங்களையும் போக்கும் நோக்கத்தோடு பிரபா – ஹக்கீம் உடன்படிக்கை செய்யப்பட்டது. எனினும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் முழுமையாக மீளக்குடியமரவில்லை. மீளக் குடியமர்ந்த தொகையும் மனதளவில் மீளக்குடியமரவில்லை.

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு அளுத்கமையும் உட்பட தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் அதைத்தான் நிரூபித்தன. அச்சம்பவங்களின் விளைவாக முஸ்லிம் வாக்குகள் ராஜபக்ஸ சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பின. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம் வாக்குகளும் ஒரு காரணம். ஆட்சி மாற்றத்தின் பின் உருவாக்கப்பட்ட கூட்டரசாங்கத்தில் முஸ்லிம் தலைவர்கள் பங்காளிகளானார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் பின்வருமாறு கூறினாரர்………“நாங்கள் யானையோடு கூட்டுச் சேர்ந்தாலும் அதன் பாகனாகத்தான் இருப்போம்” என்று. ஆனால் நிலமைகள் அவ்வாறில்லை என்பதைத்தான் கடந்த மூன்று வார காலமாக நாட்டில் நடந்தவை நிரூபித்திருக்கின்றன.

அதாவது மகிந்தவின் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை. நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை. அம்பாறையிலும், கண்டியிலும் நிலமைகள் இப்பொழுது பெருமளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டன. ஆனால் முஸ்லிம் மக்கள் மனதளவில் பாதுகாப்பை உணர்வதாகத் தெரியவில்லை. இலங்கைத்தீவின் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால அனுபவத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் இப்பொழுது தமிழ்தேசியவாதிகளையும் நம்பத் தயாரில்லை. சிங்கள பௌத்த தேசியவாதிகளையும் நம்பத் தயாரில்லை. எனினும் இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தான் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஈழப்போரானது முஸ்லிம் தலைவர்களை சிங்களத் தலைவர்களை நோக்கிக் கூடுதலாகத் தள்ளிவிட்டிருக்கிறது.கடந்த சில தசாப்தகால முஸ்லிம் அரசியல் எனப்படுவது பதவியிலிருக்கும் அரசாங்கங்களோடு இணங்கிப் போகும் ஒன்றாகவே காணப்படுகிறது. இவ் இணக்க அரசியலின் மூலம் முஸ்லிம் தலைவர்கள் கணிசமான அளவிற்கு தமது சமூகத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். இலங்கைத் தீவில் மும்மொழிப் புலமை அல்லது இருமொழிப் புலமை மிக்க ஒரு சமூகமாக முஸ்லிம்களே காணப்படுகிறார்கள். இம் மொழிப்புலமை காரணமாக அவர்கள் வர்த்தகத்தில் செழித்தோங்க முடிந்தது. அதுமட்டுமல்ல. படைகளின் பிரதானியாகிய விஜய குணவர்த்தன அண்மையில் கூறியிருப்பது போல போர்க்காலத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் அவர்கள் பெரும்பங்காற்றியதற்கும் இதுவே காரணம்.

சிங்கள, பௌத்த தலைவர்கள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக ஒரு பகுதி முஸ்லிம்களின் இருமொழிப் புலமையை கெட்டித்தனமாகக் கையாண்டார்கள். அதன் மூலம் போரில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் போரை வெற்றி கொண்டபின் தமது தலைநகரங்களை திரும்பிப் பார்த்த பொழுதே ஓர் உண்மை தெரியவந்தது. சிங்கள – தமிழ் சமூகங்கள் தங்களுக்கிடையே மோதிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள – பௌத்தர்களோடான இணக்க அரசியலின் மூலம் முஸ்லிம் சமூகமானது தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை மிகப் பலமாகக் கட்டியெழுப்பிவிட்டது. இது சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளின் கண்களை உறுத்தியது. அதன் விளைவே 2014ல் அழுத்கமவிலும் கடந்த சில வாரங்களாக அம்பாறையிலும், கண்டியிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகும். அம்பாறையிலிருந்து கண்டிமாநகரம் வரையிலுமான ஒரு பெரும் பரப்பிற்குள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரிய வர்;த்க நிலையங்களும், சிறிய பெட்டிக்கடைகளும் நன்கு திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன. இது 1983ல் தமிழ் மக்களின் சொத்துக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களைப் போன்றது என்று ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார்.

அதாவது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டுத் தாக்கியிருக்கிறார்கள் என்று பொருள். கடந்த சில தசாப்தகால இணக்க அரசியலின் மூலம் பிரமாண்டமாக கட்டியெழுப்பப்பட்டதே மேற்படி பொருளாதாரமாகும். அதுதான் சிங்கள பௌத்த கடும்போக்கு வாதிகளின் கண்களை உறுத்திய விவகாரமுமாகும். போரில் தனது தேவைகளுக்கு பயன்படுத்திய இரண்டாவது சிறுபான்மை சமூகம் ஒன்று பொருளாதாரத்தில் தன்னை முந்திச்செல்வதை சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளால் சகிக்கமுடியாமல் இருக்கிறது. அதே சமயம் தமது இணக்க அரசியலின் மூலம் சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளை அமைதிப்படுத்த முடியவில்லை என்பதும் முஸ்லிம் தலைவர்களுக்குத் தெரிகிறது.

ஆனால் அதற்காக அவர்கள் தமது இணக்க அரசியலைக் கைவிடப் போவதில்லை. பெருமளவிற்கு சந்தைமையச் சமூகமாகக் காணப்படும் ஒரு சமூகமானது அதிகபட்சம் இணக்க அரசியலையே நாடிச் செல்லும். அதுதான் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிகம் பாதுகாப்பானது. மாறாக எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதென்றால் அதற்கு தமிழ்தேசியவாதிகளுடன் கூட்டுச் சேரவேண்டியிருக்கும். தமிழ்த்தேசியம் எனப்படுவது பிரதானமாக ஒரு நில மையச் சிந்தனைதான். தாயகக் கோட்பாடு எனப்படுவது ஒரு நில மையச் சிந்தனைதான். ஒரு நிலமையச் சிந்தனைக்கும் சந்தை மையச் சிந்தனைக்குமிடையே பொருத்தமான பொது இணக்கப் புள்ளிகளைக் கண்டுபிடிப்பத்தில் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இன்று வரையிலும் வெற்றி பெறவில்லை.

வடமாகாணசபையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை நியமன உறுப்பினராக சம்பந்தர் நியமித்தார். இரண்டு சமூகங்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி அது. அதே சமயம் சுமந்திரன் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஓர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு வடமாகாண சபையிலிருக்கும் முஸ்லிம் உறுப்பினரான அஸ்மின் மாகாணசபைக்குள் சுமந்திரன் அணியோடு சேர்ந்து அடையாளம் காணப்பட்டார். தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலை முன்னடுக்கும் விக்னேஸ்வரனுக்கு எதிரான இந்த அணியே அண்மையில் கூட்டமைப்பு பெற்ற பின்னடைவுகளுக்கு ஒரு காரணம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்த்தேசியத் தரப்பினால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத சுமந்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தெரிவித்த ஒரு கூற்று சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு எவ்வளவு தூரம் உதவும்? தனது சொந்த சமூகத்தில் ஜனவசியம்மிக்க ஒரு தலைவரே ஏனைய சமூகங்களை அரவணைக்கும் முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இப்படிப்பார்த்தால் தமிழ்த்தேசியத் தரப்போடு இணைந்து முஸ்லிம் சமூகமானது ஓர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கத் தேவையான ஒரு பொதுத்தளம் இன்று வரையிலும் போடப்படவில்லை. இந்நிலையில் கடந்த காலக் காயங்கள், தழும்புகள், அச்சங்கள், சந்தேகங்கள் என்பவற்றின் தொகுப்பாகவே முஸ்லிம்களும் சிந்திப்பார்கள், தமிழர்களும் சிந்திப்பார்கள். இத்தைகையதோர் பின்னணியில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் சிங்களத் தலைவர்களுக்காக வாதாடப் போன ராமநாதன்களும் இப்பொழுது தமிழ்மக்கள் மத்தியில் இல்லை. அதே சமயம் தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பாரூக் போன்றவர்களும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இல்லை. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆனபின்னரும் இலங்கைத்தீவின் மூன்று சமூகங்களுக்குமிடையே மெய்யான பொருளில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவில்லை. ஐ.நாவால் முன்னெடுக்கப்படும் நிiமாறுகால நீதிச் செய்முறைகளும் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. ஏனெனில் இலங்கைத்தீவு இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *