பங்களிக்காத் தேசிய வாதிகள் எனப்படும் ஒரு தரப்பு மே 18இற்குப் பின்னர்தான் எழுச்சி பெற்ற ஒன்றுமல்ல. அது ஏற்கனவே, இருந்து வந்த ஒன்றுதான். தமிழ் மிதவாதப் பாரம்பரியத்தின் மையப் போக்கெனப்படுவதே அதுதான். இது முதலாவது. இரண்டாவதுஇ பங்களிக்காத் தேசியவாதிகள் எனப்படுவோர் தான்தோன்றிகள் அல்ல. அவர்கள் ஏற்கனவே, சமூகத்தில் உள்ள ஒரு வர்க்கத்தினரைப் பிரதிபலிப்பவர்கள்தான். அதாவது படித்த தமிழ் நடுத்தர வர்க்கம். எனவே, இவை இரண்டடையும் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
முதலாவது, தமிழ்மிதவாதப் பாரம்பரியத்தின் மையப் போக்கே இதுதான் என்பது. இதை விளங்கிக்கொள்ள ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துக்காட்டலாம். ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் எழுச்சி பெறுவதற்கு முன்னரான ஒரு கால கட்டத்தில் இது நடந்தது. இதில் சம்பந்தப்பட்டவர் அந்நாட்களில் தமிழ் மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர தொண்டராக இருந்தவர். பின்னானில், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு இயக்கத்தின் பிரதானிகளில் ஒருவருமாகியவர். குறிப்பாக, இலங்கை – இந்திய உடன்படிக்கைக்குப் பின் வடமாகாண சபையில் முக்கிய பொறுப்பு ஒன்றை வகித்தவர். இவர் மிதவாதிகளுடன் நெருக்கமாக இருந்த காலங்களில் ஒரு நாள் சுவரொட்டி ஓட்டச் சென்றிருக்கிறார். கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து மிதவாதத் தலைவர்களில் ஒருவருடைய மகனும் சுவரொட்டி ஓட்டச் சென்றுள்ளார். சுவரொட்டி ஓட்டி முடிந்ததும் எல்லாரும் வீடு திரும்பி குறிப்பிட்ட தலைவரின் இடத்திலேயே உறங்கியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட மிதவாதத் தலைவரின் மகனும் சுவரொட்டி ஓட்டச் சென்ற தொண்டர்களும் சேர்ந்து உறங்கியிருக்கிறார். சிறுது நேரம் கழித்து மகனைத்தேடிக் கொண்டு தலைவரின் மனைவி வந்திருக்கிறார். தொண்டர்கள் மத்தியில் மகன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரை தட்டியெழுப்பி அழைத்துச் சென்றிருக்கிறார். அப்படி அழைத்துச் செல்லும்போது அவர் பின்வரும் தொனிப்பட மகனைக் கண்டித்திருக்கிறார். ”இதெல்லாம் உன்னுடைய வேலையல்ல. இதைச்செய்ய அவர்கள் உண்டு. இதற்கெல்லாம் போகக் கூடாது அப்பாவுக்குத் தெரிந்தால் கோவிப்பார். வந்து உள்ளே படு’ என்று இந்த உரையாடலை அங்கு உறக்கத்திலிருந்த பலரும் கேட்டிருக்கவில்லை. ஆனால், உறங்காமலிருந்த முன்சொன்ன தொண்டர் மட்டும் அதைக் கேட்டுவிட்டார்.
அவரைப் போலவே, வேறு பல இளந்தொண்டர்களும் மிதவாதத் தலைவர்களிடமிருந்து விலகிச் செல்லக் காரணமாக இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆயுதம் ஏந்திய தமிழ் அரசியல்; எனப்படுவதே தமிழ் மிதவாதத்தின் இயலாமை அல்லது செயலற்றதனம் அல்லது பாசாங்கு போன்றவற்றிற்கு எதிராக உருவாகியவைதான். தமிழ் மிதவாதமானது தான் உருவேற்றிவிட்ட இளைஞர்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் தலைமை தாங்க முடியாதுபோய்விட்டது. தளபதி என்று பெயரைச் சூடிக்கொண்ட தலைவர் வாய்ச்சொல் வீரராக மட்டும் இருப்பது தெரிய வந்தபோது இளைஞர்கள் விரத்தியும் கோபமும் அடைந்தார்கள்.
இதனாற்தான் பெரும்பாலான ஆயுதமேந்திய இயக்கங்கள் ‘அரசியல்’ என்பதை இகழ்ச்சியாகப் பார்த்தன. விடுதலைப்புலிகள் அல்லாத சில இயக்கங்களில் அரசியற் பிரிவுக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரை ஆரம்ப கட்டங்களில் அரசியல் எனப்படுவது கதைகாரர்களின் வேலை அல்லது செயலுக்குப் போகத் திராணியற்ற கோழைகளின் செயல் என்ற விதமாகவே ஒரு விளக்கம் இருந்தது. இது காரணமாகவே அரசியல் பிரிவுக்கு ”லோலோ குறூப்’ என்று ஒரு பட்டப் பெயரும் கிடைத்தது. அதாவது லோலோ என்று கத்துபவர்கள் என்று அர்த்தம். உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனை அவருடைய நண்பர்கள் அப்பாப்பிள்ளை என்று அழைப்பதுண்டு. அப்பாப்பிள்ளை எனப்படுவது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்பதன் சுருங்கிய வடிவம்தான். ஒரு அரசியற்துறைப் பொறுப்பாளராக இருப்பது என்பது அமிர்தலிங்கம் செய்த வேலையைச் செய்வது தான் என்று இதற்குப் பொருள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை இப்பூமியில் உள்ள எல்லாமும் படைத்துறை முடிவுகளிற்கு உட்பட்டவைதான். இதற்குள் அரசியற் பிரிவும் அடங்கும். தாங்கள் செய்வது அரசியல் அல்ல. அது ஒரு போராட்டம் என்று அவர்கள் விளக்கம் கூறுவதுண்டு. அதாவது போராட்டம் வேறு அரசியல் வேறு என்று அவர்களிடம் ஒரு விளக்கம் இருந்தது. பின்னாளில் ஒரு அரசுக்குரிய கட்டமைப்புக்களை உருவாக்கியபோது அரசியற் பிரிவுக்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாத ஒரு முக்கியத்துவத்தை அவர்கள் வழங்கினார்கள். எனினும் அது ஒரு சுயாதீணமான பிரிவு அல்ல. படைத்துறை முடிவுகளுக்குக் கீழ்படிகின்றதும், ஓப்பீட்டளவில் படைத்துறை, புலனாய்வுத்துறை என்பவற்றைவிட முக்கியத்துவம் குறைந்த ஓரலகுதான்.
எனவே, அரசியல் என்றால் என்ன என்று ஆயுதமேந்திய இயக்கங்களிடமிருந்த விளக்கம் எனப்படுவது அதிக பட்சம் தமிழ் மிதவாதிகளிடமிருந்து பெற்ற கசப்பான அனுபவங்களைப் பிரதிபலிக்குமொன்றாகவே காணப்பட்டது. அதாவது, தமிழ் மிதவாதிகளின் மையப் போக்காயிருந்து வந்த செயலற்ற தனம் அல்லது ரி;ஸ்க்; எடுக்கத் தயாரற்ற தீவிரம் என்பவற்றால் ஏற்பட்ட விரக்தி அல்லது கோபம் எனலாம். இது முதலாவது.
இரண்டாவது தமிழ் மிதவாதப் பாரம்பரியம் எனப்படுவது தான்தோன்றி அல்ல என்பது. அது தமிழ் நடுத்தர வர்க்கத்தையே அதிகமதிகம் பிரதி பலித்தது. படித்த கல்வீட்டுத் தமிழர்களை அதிகமுடையதும், தமிழ்ச் சமுகத்தின் அபிப்பிராயத்தை உருவாக்கவல்லதுமாகிய தமிழ் நடுத்தர வர்க்கமானது பொதுவான மத்திய தர வர்க்கத்திற்குரிய சுபாவங்களையே கொண்டிருந்தது. அதோடு ஈழத்தமிழர்களின் சமூக கலாசார பண்பாட்டுப் பின்னணிகளிற்கேற்ப தனக்கேயான தனிச்சிறப்பான குணங்களையும் கொண்டிருந்தது. சில விமர்சகர்கள் இதை யாழ். மைய வாதம் என்று அழைப்பர். வேறு சிலர் இதைச் கந்தபுராண கலாசாரம் என்று அழைத்தனர்.
தமிழ் நடுத்தர வர்க்கமானது எப்பொழுதும் தற்காப்பு நிலையிலிருந்தே சிந்திக்கும். தனது நிலையான நலன்களையும் தனது சந்ததியின் நிலையான நலன்களையும் பாதுகாக்கும் அதேசமயம், சாகச உணர்வுமிக்க தீவிர இனமான அரசியலை அது பேசும். தனது பிள்ளைகளை படிப்புக்கு மேல் படிப்பு படிக்க வைத்து அவர்களுக்கொரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்த விளையும் அதேசமயம் யாருடையதோ பிள்ளைகளின் தியாகத்தையும் வீரத்தையும் அது தலைமேல் வைத்துக்கொண்டாடும். தங்களுடைய பிள்ளைகளுக்கு புலமைப்பட்டம் யாருடையதோ பிள்ளைகளுக்கு தியாகிப் பட்டம்- இது தான் படித்த தமிழ் நடுத்தரவர்க்கம்.
மிதவாத அரசியல் முன்னணியில் இருந்தது வரை படித்த நடுத்தர வர்க்கம் ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்தது. சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிராக பதவிகளையும், பதவி உயர்வுகளையும் துறந்தமை, சத்தியாக்கிரகிகளாகியமை போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். மிதவாத அரசியலில் உயிராபத்து இருக்கவில்லை. ஆனால், ஆயுத அரசியல் அத்தகையது அல்ல. ஆயுதப் போராட்டத்தின் போது நடுத்தர வர்க்கத்தில் ஒரு சிறுபகுதி நேரடியாகப் பங்களித்தது. இதில் ஒரு பகுதியே அதிருப்தியாளர்களாகிப் பின்னர் வெளியேறியது. இவை தவிர ஆயுத மேந்திய இயக்கங்கள் கேட்டபோதெல்லாம் ஒரு வரையறைக்குட்பட்டு அதாவது, தனக்குரிய பாதுகாப்பு வேலிகளைக் கடக்காமல் ரிஸ்க் எடுப்பதற்கு மத்திய தர வர்க்கத்தின் கணிசமானபகுதி தயாராகக் காணப்பட்டது. சமாதான காலத்தில் வரும் எல்லாத் தேர்தல்களின்போதும் அது தேசியவாதிகளுக்கு தனது பெருமளவு ஆதரவைக் கொடுத்தது.
ஆனால், எதைச் செய்தாலும் அது தனது நிலையான நலன்களைப் பாதுகாப்பதில் அக்கறையாகக் காணப்பட்டது. அது அவாவி நின்ற தீவிர அரசியலுக்கும் அதன் நடைமுறைச் சாத்தியமான பங்களிப்புக்கும் இடையில் சுயநலம் மிக்கதொரு இடைவெளியிருந்தது. இப்பொழுதுமிருக்கிறது. தான் ஒரு கட்டத்துக்கும் மேல் ரி;ஸ்க் எடுக்காமலும் அதேசமயம் ரிஸ்க் எடுப்பவர்களிடம் தனது அரசியலை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நிற்கும் இத்தகைய ஒரு போக்கிற்கு எதிராக அநேகமாக எல்லா ஆயுத இயக்கங்களும் தாக்குதல் தொடுத்தன. வீடு கேட்டும், காசு கேட்டும், வாகனம் கேட்டும் சாப்பாட்டுப் பார்சல் கேட்டும், நகை கேட்டும் இறுதிக் கட்டத்தில் தலைப்பிள்ளைகளைக் கேட்டும் மேற்படி மத்தியதர வர்க்கத்தை அரங்கிற்குள் இழுக்க முற்பட்டார்கள். நாலாம் கட்ட ஈழப்போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டகட்டாய ஆட்சோர்ப்பு நடவடிக்கையானது தமிழ் நடுத்தர வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட ஆகப்பெரிய தாக்குதல் எனலாம்.
ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்தாலும் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் அடிப்படைத் குணத்தை மாற்ற முடியவில்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் பின்னாட்களில் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் சில இயல்புகளைஅந்த இயக்கமும் பாதுகாக்கத் தொடங்கியது எனலாம். இதை இன்னும் கவித்துவமாகச் கூறின், யாழ்ப்பாணத்தின் கிடுகு வேலிக்கு மேலும் சில அடுக்கு கிடுகுகளை உயர்த்தியதோடு அல்லது தகரங்களை உயர்;;த்தியதோடு, இருந்த வெளி வேலியோடு சேர்த்து மேலும் புதிய பாதுகாப்பு உள்வேலிகளை விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கியது எனலாம். அவர்களுடைய அநேகமாக எல்லா முகாம்களிலும் இதைக் காண முடிந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம் பலமாக இருந்த வரையிலும் அந்த இயக்கத்துக்கும் படிந்த நடுத்தர வர்க்கத்திற்கும் இடையிலான உறவானது ஊடலும் கூடலுமாகவே இருந்து வந்தது. (love and hate) அந்த இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமாதானங்களின்போது அந்த இயக்கத்தால் முன்னிறுத்தப்பட்ட அல்லது அந்த இயக்கத்தின் மறைமுக ஆசிர்வாதத்தைப் பெற்ற மிதவாதக் கட்சியை நடுத்தர வர்க்கம் ஆதரித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றியும் இத்தகையதே. ஆனால், அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் கூட்டமைப்பில் முதலாவது உடைவு ஏற்பட்டது. இவ்வுடைவுக்குக் காரணம் 2009மே யிற்கு முந்திய அரசியலை எந்தளவுக்கு தொடர்வது என்பது பற்றிய சர்ச்சையே. இதன்படி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இணக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் ஒரு கட்சியாகக் கருதப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே பின் வந்த தேர்தலில் வென்றிருந்திருக்க வேண்டும். ஆனால், அக்கட்சியால் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தைப் பெயர்த்தெடுக்க முடியவில்லை. மக்கள் புலிகளின் அரசியலை நிராகரித்துவிட்டதே இதற்குரிய பிரதான காரணம் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், உண்மை நிலை அதைவிட ஆழமானது.
தமிழ் நடுத்தர வர்க்கம் அதன் அடிப்படை இயல்பின் பிரகாரம் ரிஸ்க் எடுக்காத் தீவிர வாதத்திற்கு ஆதரவளித்து என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்பது அதுவும் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சூழலில் அதைச் செய்வது என்பது ரிஸ்க் ஆனது என்று நடுத்தர வர்க்கம் அஞ்சுகிறது. ஏனெனில், அந்தக் கட்சியானது ஒப்பீட்டளவில் ஆபத்துக்குக் கிட்ட நிற்கிறது என்று நடுத்தர வர்க்கம் நம்புகின்றது. எனவே, பங்களிக்காத் தேசிய வாதிகளை அதிகமுடைய படித்த தமிழ் நடுத்தர வர்க்கமானது பங்களிக்காத் தேசியவாதிகளை அதிகமுடைய ஒரு கட்சிக்கே வாக்களித்தது.
எனவே, மேற்கண்டவைகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது பங்களிக்காத் தேசியவாதம் எனப்படுவது படித்த தமிழ் நடுத்த வர்க்கத்தின் பிரதான பண்பாகும். இதைத்தான் தமிழ் மிதவாதிகளில் ஒரு பகுதியினர் பிரதிபலிக்கிறார்கள். அல்லது அதற்குத் தலைமை தாங்குகிறார்கள் எனலாம்.
பொதுவாக ஆசிய ஜனநாயகங்களைப் பொறுத்தவரை சமுகத்தில் என்ன இருக்கின்றதோ அதற்குத்தான் கட்சிகளும் அமைப்புகளும் தலைமை தாங்குகின்றன. அல்லது வெற்றி பெற்ற எல்லாக் கட்சிகளும் சமுகத்தில் ஏற்கனவே இருந்தஒன்றிருந்த தலைமை தாங்குவதன் மூலமே அந்த வெற்றிகளைப் பெற்றன என்றும் கூறலாம். ஆனால், ஒரு சமுகத்தை அப்படியே பிரதிபலிப்பதன் மூலம் அல்ல, மாறாக, அந்த சமுகத்தை அதன் அடுத்த கட்ட அரசியற் கூர்ப்பிற்கு இட்டுச் செல்வதன் மூலமே ஒரு கட்சியோ அல்லது அமைப்போ வரலாற்றில் தனக்குரிய மகத்துவத்தை நிறுவிச் செல்ல முடியும்.
சரிக்கும், பிழைக்குமப்பால் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் அபிபிராயத்தை உருவாக்கவல்ல படித்த நடுத்தர வர்க்கத்தின் இதயத்தில் அமர்ந்திருக்கிறது. எனவே, மாற்றம் எதுவும் அங்கிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். கூட்டமைப்பானது ஒரு பிரதிபலிப்பானாக இருக்கப்போகிறதா அல்லது புதிய மாற்றங்களுக்கான மகத்தான ஒரு நெம்புகோலாகத் தொழிற்படப்போகிறதா?
14-06-2013
2 Comments