வடமாகாண சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இன்று இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, அத்தேர்தலை நடாத்துவதால் தமிழர்களிற்கும், அரசாங்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் எவை? தீமைகள் எவை என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மாகாண சபை அமைப்பெனப்படுவது தமிழர்களுடைய தெரிவு அல்ல. ஏனெனில், அது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. எனவே, மாகாண சபை உருவாக்கத்தின் போது தமிழர்கள் ஒரு தரப்பாக இருக்கவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது முழு இலங்கைத் தீவுக்குமான அதிகாரப் பகிர்வுக்குரிய ஒரு அமைப்பாகும். இனப்பிரச்சினைக்கு மட்டுமேயான தனிவிசேட தீர்வு அல்ல. அதாவது இனப்பிரச்சினை எனப்படும் ஒரு தனிவிசேட பிரச்சினையின் கூரை மழுங்கச் செய்து, அதை நாடு முழுவதுக்குமான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையாக முக்கியத்துவமிழக்கச் செய்து உருவாக்கப்பட்டதே மாகாண சபை ஆகும்.
இலங்கை – இந்திய உடன்படிக்கை உருவாகிய கால கட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் தமிழ்நாட்டிலிருந்து வந்த பெரியார்தாசன் உரையாற்றினார். தனது உரையின்போது அவர் சொன்னார் ”கட்டை விரலில் காயம் என்று மருந்து கட்டக்கேட்டபோது சின்ன விரலில் மருந்தைக் கட்டிவிட்டு ஐந்து விரல்களுக்குமே இனி இதுதான் மருந்து என்று கூறுவது போன்றதே இது’ என்று.
இலங்கை – இந்திய உடன்படிக்கை எனப்படுவது வன்புணர்வில் தொடங்கி திருமணத்தில் முடிந்த ஒரு உடன்படிக்கையாகும். தன்னை வன்புணர வந்த தன்னால் எதிர்க்க முடியாத ஒரு வெளித் தரப்பை சமயோசிதமாகத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துவிட்டு பின் காலப் போக்கில் அந்தத் திருமணத்தை மதிக்காமல் விட்டதையொத்ததே அது. எனவே, தற்காப்பு நோக்கு நிலையிலிருந்து தந்திரமாக உருவாக்கப்பட்ட ஓரமைப்பே மாகாண சபை ஆகும். ஆனால், காலப்போக்கில் அதன் உள்ளுடனைப் படிப்படியாக உருவி எடுத்து அது இப்பொழுது கோறையாகிவிட்டது.
இலங்கைத்தீவின் இன யதார்த்தத்தின்படி வெளித்தலையீடு இன்றி இரு தரப்பையும் ஏதோ ஒரு இணக்கப்புள்ளியில் சந்திக்கவைக்க முடியாது என்பதே இதுவரையிலுமான அனுபவமாகும். இது வரை உருவாக்கப்பட்ட இரு பெரிய உடன்படிக்கைகளான இந்திய-இலங்கை உடன்படிக்கையும், ரணில்- பிரபா உடன்படிக்கையும் வெளித் தலையீடுகளின் மூலமே சாத்தியமாகின. இனிமேலும் இலங்கையில் இனங்களிற்கிடையில் நிரந்தர அமைதியைக் கொண்டுவரத்தக்க எந்தவொரு தீர்வும் வெளித் தலையீடின்றிச் சாத்தியப்படாது.
இவ்விதமாக, இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தோடு உருவாக்கப்பட்டதே மாகாண சபை. ஆனால், இந்தியப் படைகள் இருக்கத்தக்கதாகவே அதை ஜெயவர்த்தன வெற்றிகரமாகக் கோறையாக்கிவிட்டார். முடிவில் இந்தியப் படை விலகிச் சென்றபோது மாகாண சபையை நிர்வாகித்த ஈ.பி.ஆர்.எல்.எவ்.உம் இந்தியாவுக்குப் பின்வாங்க வேண்டியதாயிற்று. அதிலும் குறிப்பாக, தனிநாட்டுக்கான சுதந்திரப் பிரகடனம் ஒன்றைச் செய்துவிட்டே வெளியேறியது என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். அதாவது, இணைந்த வடக்குக் கிழக்கிற்கான முதலாவது மாகாண சபையானது அதன் தோல்வியின் விளிம்பில் தனிநாட்டுப் பிரகடனம் செய்ய வேண்டியதாயிற்று. இந்தியப் படைகள் இருந்தபோதும் வெற்றிகரமாகச் செயற்படமுடியாது போன ஒரு அமைப்பை அவ்விதம் வெளியாரின் பிரசன்னம் அல்லது அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைந்துபோயிருக்கும் ஒரு அரசியல் சூழலில் வெற்றிகரமாகச் கொண்டு நடத்துவது நடைமுறைச் சாத்தியமா?
எனினும், மாகாண சபை அமைப்பானது கடந்த சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு அரசியல் நடைமுறையாக ஒரு பயில்முறையாக (Practice) மாறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இச்செயன்முறை அல்லது பயில்முறையின் படி வடக்கில் ஒரு மாகாண சபை உருவாக்கப்படுமிடத்து அதில் தமிழர்களிற்கு உடனடியாகவும், நீண்ட கால அடிப்படையிலும் எத்தகைய நன்மைகள் கிடைக்கும்?
ஆனால், தீவிர தமிழ்த்தேசிய சக்திகள் கூறுவது போல ஒரு பெரிய தீமை உண்டு. அதாவது, பிரிந்த வட-கிழக்கை ஏற்றுக்கொள்ளும் ஒரு வாக்கெடுப்பாக இதை வியாக்கியானப்படுத்த முடியும். வட-கிழக்குப் பிரிப்பு எனப்படுவது காலப்போக்கில் ஒரு அரசியல் நடைமுறையாக மாறும் ஆபத்து இங்குண்டு. இவை தமிழர்களிற்குக் கிடைக்கக்கூடிய நன்மையும் தீமையும்.
அதேசமயம் அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்தத் தேர்தல் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கக் கூடிய தீமைகள் என்று அநேகமாக எதுவும் இல்லை. நன்மையே அதிகம். அவை வருமாறு:
முதலாவது நன்மை – இந்தியாவைச் சாந்தப்படுத்தலாம். சந்தோசப்படுத்தலாம்.
இரண்டாவது நன்மை – சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கிக் காட்டலாம். அதாவது தமிழர்களிற்குப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுகின்றன. அவர்கள் தங்களுக்குரிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று காட்டலாம். இது அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரில் அரசாங்கத்திற்கு ஒரு முன் தடுப்பாக (Buffer) அமையக்கூடும்.
மூன்றாவது நன்மை – வடமாகாண சபைக்கான தேர்தல் நடந்தால் தான் பொது நலவாய நாடுகளுக்கான மாநாட்டிற்கு ஒத்துழைக்க முடியும் என்று ஒரு உத்தியோகப் பற்றற்ற அனைத்துலக நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் தேர்தலை நடத்துவதன் மூலம் அந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யலாம். அதனால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடாத்தி நாட்டின் கௌரவத்தை மேலும் உயர்த்தலாம். அதாவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இழந்த கௌரவத்தை மீட்பதற்கான தொடர் முயற்சிகளில் ஒரு முக்கியத்துவம் மிக்க அடிவைப்பாக இது அமையும்.
நாலாவது நன்மை – வட-கிழக்குப் பிரிப்பை ஒரு செயல் முறை வழமையாத மாற்றலாம். இதன் மூலம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பலவீனப்படுத்தலாம்.
ஐந்தாவது நன்மை – தமிழர்களைத் தீர்வல்லாத ஒரு தீர்வுக்குள் பொருத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செயலுக்குப் போகாத் தேசியவாதிகளைப் பலப்படுத்தலாம். செயலுக்குப்போகாத் தேசியவாதிகளை அல்லது பங்களிக்காத் தேசிய வாதிகளைப் பலப்படுத்துவதன் மூலம் காலகதியில் தமிழ் அரசியலை நீர்த்துப்போகச் செய்யலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு தரப்பினர் மத்தியில் ஒரு நம்பிக்கை காணப்படுகிறது. அதாவது, தலைமைத்துவப் பண்பும், திராணியுமுள்ள ஒருவரை முதலமைச்சராக்குவதன் மூலம் ஆளுநரின் அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கலாம் என்று. ஆனால், ஆளுநர் என்ற ஒரு தனிநபர் இங்கு பிரச்சினையல்ல. அவர் ஒரு கருவி மட்டுமே. பிரச்சினையாகவிருப்பது கோறையான கட்டமைப்பே. முதலமைச்சராக யார் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கும் மேல் அவரால் போக முடியாது.
இந்தியப் படைகளின் பின் பலத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எவ். உருவாக்கிய மாகாணசபையை விட ஒரு பலமான மாகாண சபையை யாரும் உருவாக்கிவிட முடியாது. ஆனால், அந்த மாகாண சபைக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு எதிராகப் போராடியதால் தான் மாகாண சபையை வெற்றிகரமாக இயக்க முடியாத ஒரு சூழல் நிலவியது என்று கூறுவோரும் உண்டு. ஆனால், அது ஒரு பகுதி உண்மை மட்டுமே. விடுதலைப்புலிகள் இயக்கம் விட்டுக்கொடாது போராடியதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு யுத்தச் சூழலின் பின்னணியில் மாகாண சபையைப் பலவீனப்படுத்தியது ஜெயவர்த்தன அரசாங்கம் தான். ஆயுதப்போராட்டத்தைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியிருந்திருந்தால் மாகாண சபை அமைப்பை மேலும் பலப்படுத்தியிருந்திருக்க வேண்டும். உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றிய அமைப்புகளைப் பலப்படுத்தியிருந்திருக்க வேண்டும். ஆனாலது நடக்கவில்லை.இந்தியாவுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான மோதலை ஊக்குவிக்கும் விதத்தில் காய்கள் நகர்த்தப்பட்டனவே தவிர ஓர் அரசியல் தீர்வைப் பலப்படுத்தத் தேவையான அரசியல் திடசித்தம் (Political Will) ஜெயவர்த்தன அரசாங்கத்திடம் இருக்கவில்லை. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையை ஒரு வேண்டாப் பெண்டாட்டியாகவே அந்த அரசாங்கம் கருதிக் கையாண்டது. ஜெயவர்த்தன அரசாங்கத்திலிருந்து இன்றுள்ள அரசாங்கம் வரை இதுதான் நிலைமை.
இத்தகைய ஒரு பின்னணியில் இப்பொழுது தேர்தலில் இறங்கத்துடிக்கும் எல்லாத் தமிழ்க் கட்சிகளுக்கும் மாகாண சபை எனப்படுவது நடைமுறையில் ஒரு கோறையான அமைப்பு என்பது நன்கு தெரியும். ஒரு கோறையான அமைப்பை ஏற்றுக்கொண்டு அதிலும் குறிப்பாக, வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட ஒர் அமைப்பை ஏற்றுக்கொண்டு தேர்தலில் இறங்குவது என்பது நிச்சயமாக இலட்சிய வாத அரசியல் அல்ல. அதாவது ஈழத் தமிழர்களின் அரசியலானது இலட்சியவாதத்திலிருந்து வாக்கு வேட்டை அரசியலை நோக்கி தடம் மாறக்கூடிய ஏதுநிலைகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கத்தைப் பொறுத்த வரை நீண்ட கால நோக்கு நிலையில் இது ஒரு மூலோபாய நன்மையாகும்.
எனவே, மேற்கண்ட ஐந்து நன்மைகளையும் கருதிக் கூறுமிடத்து வடமாகாண சபைத்தேர்தலை நடாத்துவது இப்போதுள்ள நிலைமைகளின்படி அரசாங்கத்திற்கே அதிகம் அனுகூலமானது. அரசாங்கம் இப்பொழுது சிக்கிக்கொண்டிருப்பது போலத்தோன்றும் ஒர் அனைத்துலக நெருக்கடியிலிருந்து மீளவும், அதேசமயம் தமிழ் அரசியலை காலகதியில் நீர்த்துப்போகச்செய்யவும் அது உதவக்கூடும்.
ஆனால், தனக்கு அதிகம் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு நகர்வை மேற்கொள்வதற்குக்கூட இந்த அரசாங்கம் தயங்கித் தயங்கி முடிவுகளை எடுப்பது போலத் தோன்றுகிறது. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது – இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைப் போலவே மாகாண அமைப்பைக் குறித்து ஒருவித ஒவ்வாமை உணர்வுடன் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யுத்த வெற்றிகளின் பின்னணியில் அந்த ஒவ்வாமையானது அதிகம் முனைப்புற்றுக் காணப்படுகிறது. இரண்டாவது – இதை ஓர் உத்தியாக அரசாங்கம் மேற்கொள்கிறது என்பது. அதாவது தீர்வு அல்லாத ஒரு தீர்வை அமுலாக்குவதற்கே அதிகம் பிஃகு பண்ணுவதன் மூலம் அந்தத் தீர்வல்லாத தீர்வையே ஒரு கிடைத்தற்கரிய வரப்பிரசாதமாக உருப்பெருக்கிக் காட்டும் ஒரு உத்தியே இது.
ஒரு புறம் இந்த அரசாங்கத்தின் உட்கூறுகளாயுள்ள பிரதானிகளும் சக்திகளும், தரப்புக்களும் 13ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றன அல்லது மாகாண அமைப்பை மேலும் கோறையாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. இச்சக்திகளை ஒன்றில் அரசாங்கம் மறைமுகமாக ஆசீர்வதிக்கின்றது அல்லது கண்டும் காணாமல் விடுவதன் மூலம் கட்டுப்படுத்தாது விடுகிறது. இன்னொரு புறம் அரசாங்கம் இந்த எல்லாக் கண்டங்களையும் கடந்து தேர்தலை நடாத்தி முடிக்கப்போகிறது என்பது போல பாவனை செய்கிறது.
இதன் மூலம் தனக்கு உள்ளேயும் வெளியேயும் அழுத்தங்கள் உண்டு என்ற ஒரு படத்தைப் பெரிதாக்கிக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றது. எவ்வளவோ எதிர்ப்புக்களின் மத்தியில்தான் இத்தேர்தலை நடாத்த வேண்டியிருக்கிறது என்று அனைத்துலக சமுகத்தை நம்பச் செய்வதன் மூலம் இப்போதைக்கு இருப்பதை கொடுத்தாலே போதும் என்று கருதப்படும் ஒரு நிலைமையைக் கனிய வைக்கும் உத்தியே இது. இத்தகைய ஒரு பி;ன்னணியில் தமிழ் மிதவாதிகளும், இந்தியாவும், மேற்கு நாடுகளும் 13 இற்கு மேலதிகமாக எதையும் இப்போதைக்குக் கேட்க முடியாது என்ற ஒரு சூழலை உருவாக்க முடியும். இதற்கு முன்பிருந்த எல்லா அரசாங்கங்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்து இதே உத்தியைத் தான் கையாண்டு வந்திருக்கின்றன.
எனவே, வடமாகாண சபைத் தேர்தல் நடக்குமாயிருந்தால் அதில் அரசாங்கத்திற்கே நன்மைகள் அதிகம். அரசாங்கத்திற்கு நன்மைகள் அதிகம் கிடைத்தால் அது தமிழர்களிற்கு தீமையானது என்றே அர்த்தம் என்று தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் கூறுவார்கள். இலங்கைத்தீவின் இன யதார்த்தம் இவ்வாறுதான் காணப்படுகிறது. அதாவது, அரசியற்தீர்வைப் பொறுத்த வரை சிங்களவர்களிற்கும் தமிழர்களிற்கும் பொதுவான நன்மைகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைக் கண்டு பிடிக்காத வரை இலங்கைத் தீவில் மெய்யான பொருளில் நல்லிணக்கத்திற்கு வாய்ப்பே இல்லை.
20-06-2013