பொதுநலவாய மாநாடும் சனல் நாலும்

அரசாங்கம் கற்பனை செய்வதைப் போலன்றி கொமென்வெல்த் மாநாடு எனப்படுவது அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற தொனிப்பட தயான் ஜெயதிலக சில மாதங்களிற்கு முன்பு எழுந்தியிருந்தார்.

அண்மையில் மனோ கணேசனும் இதே தொனிப்பட கொமென்வெல்த் மாநாட்டை ஒரு பொறி என்று வர்ணித்திருந்தார்.

அந்த மாநாட்டையும், அதன் தலைமைப் பொறுப்பையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம் அரசாங்கத்தை சுற்றிவளைக்க முற்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு எனது கட்டுரையொன்றில் பிரஸ்தாபித்திருந்தேன். அதாவது, அரசாங்கத்தை முறிக்காமல், வளைத்தெடுப்பதே இந்தியாவினுடையதும், மேற்கு நாடுகளினுடையதும் இப்போதைக்கான நிகழ்ச்சி நிரலாகும். கொமென் வெல்த் மாநாட்டை இங்கு நடாத்துவதன் மூலம் அனைத்துலக அரங்கில் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வது என்று அரசாங்கம் முடிவெடுத்தபோது அனைத்துலக சமூகத்திற்கு ஒருபிடி கிடைத்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம் பலமாக இருந்த வரை தமிழ் அரசியலானது வெளிச் சக்திகளால் இலகுவாகக் கையாளப்பட முடியாத படிக்கு மூடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்ப தன் மூலம் அதைத் திறக்க முடியும் என்று அனைத்துலக சமூகம் நம்பியது. அவர்கள் நம்பியதுபோலவே விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு தமிழ் அரசியலானது வெளித்தரப்புக்களிற்கு திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதேசமயம், சிங்கள அரசியலானது ஒப்பீட்டளவில் மூடப்பட்டுவிட்டது.

chogm-flagsபெருமளவுக்குச் சீனாவுக்கும், ஓரளவுக்கு இந்தியாவுக்கும் சில ஆசிய நாடுகளிற்கும் திறக்கப்பட்டிருக்கும் அளவுக்கு இச்சிறுதீவு மேற்கு நாடுகளிற்குத் திறக்கப்பட்டிருக்கவில்லை. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான மரபு ரீதியிலான ராஜிய இடை ஊடாட்டங்களைப் பொறுத்தவரை மேற்கு நாடுகள் இந்த அரசாங்கத்தை ஓரளவுக்குக் கையாளக் கூடியதாக இருந்தாலும்கூட மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலைத் தங்கு தடையின்றி நிறைவேற்றக்கூடிய நிலைமைகள் இன்னமும் உருவாகவில்லை. இத்தகையதொரு பின்னணியில் இச்சிறுதீவில் மேற்கு நாடுகளிற்குரிய தெரிவுகள் ஒப்பீட்டளவில் சுருங்கியே காணப்பட்டன.

ஆனால், கடந்த ஜெனிவாக் கூட்டத் தொடரையடுத்து, கொமென்வெல்த் மாநாட்டின் மூலம் அனைத்துலகில் தனது அந்தஸ்தை உயர்த்துவதற்கு இந்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தொடங்கியபோது மேற்கு நாடுகளிற்கும், இந்தியாவுக்கும் ஒருபிடி கிடைத்தது போலாகியது. இலங்கைத்தீவை ஆகக்கூடிய பட்சம் திறக்கலாமா என்று அவை முயற்சிக்கத் தொடங்கின. மேற்கு நாடுகள் தன்னை முறிக்காமல் வளைக்க முற்படுகின்றன என்று இந்த அரசாங்கம் ஓரளவுக்கு நம்பக் கூடிய நிலைமைகள் கடந்த ஜெனிவாக் கூட்டத் தொடரில் காணப்பட்டன. எனவே, தன்னை முறிக்க விரும்பாத மேற்கு நாடுகளிற்கு ஒரு கட்டம் வரையிலும் முறியாமல் வளைந்து கொடுப்பது என்று அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இதனால், மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை ஒப்பீட்டளவில் முன்னரை விடக் கூடுதலான புதிய தெரிவுகளை உருவாக்கத் தேவையான ஒரு ராஜியச் சூழல் கனியத் தொடங்கியது. இதன் உடனடி விளைவாக கொமென் வெல்த் மாநாட்டை நோக்கியும் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரை நோக்கியும் அரசாங்கம் வீட்டு வேலைகளை வேகமாகச் செய்யத் தொடங்கியது.

கொமென் வெல்த் மாநாட்டையும், அதன் அடுத்த தலைமைப் பொறுப்பையும் ஒரு தூண்டிலாகப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் தன்மையை மேலும் உயர்த்துவதே இப்போதுள்ள அனைத்துலக நிழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் அரசாங்கத்தை மெல்ல மெல்ல வளைத்தெடுத்து ஒரு கட்டத்தில் திரும்பச் செல்லவியலாத ஒரு வளர்ச்சிக்கு நிலைமைகளைக் கொண்டு போக முடியுமா என்று அனைத்துலக சமூகம் சிந்திக்கிறது (Irreversible – Point) இது ஏறக்குறைய 2002இல் இணைத் தலைமை நாடுகள் சிந்தித்ததிற்கு நிகரானது. சமாதான முயற்சிகளைத் திரும்பிச் செல்லவியலாத ஒரு புள்ளியை நோக்கிச் செலுத்துவதே அப்போதைய திட்டமாக இருந்தது.

இப்பொழுது அரசாங்கத்தையும் அப்படியொரு திரும்பிச் செல்லவியலாத எல்லையை நோக்கிச் செலுத்துவதற்கான பிரதான தூண்டிலாகவே கொமென் வெல்த் மாநாடு பார்க்கப்படுகின்றது. சில நாட்களிற்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இதைப் பிரதிபலிப்பனவாகக் காணப்பட்டன.

இப்படியாக, அரசாங்கத்தை முறிக்காமல், வளைத்தெடுக்கும் ஒரு அனைத்துலக நிகழ்ச்சி நிரலை அண்மையில் சனல் நாலு வெளியிட்ட காணெளியானது குழப்பியிருக்கிறதா? அல்லது அதுவும் அந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியா?

சனல் நாலு ஒரு சுயாதீன ஊடகம்தான். ஆனால், நிதி மூலதனப்படர்ச்சியாலும், தகவற் புரட்சியாலும் ஓரலகாக்கப்பட்டிருக்கும் இவ்வுலகில் எந்தவொரு ஊடகமும் முழு நிறைவான சுயாதீனத்துடன் செயற்படுவது கடினம். ஒன்றில் சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்கள் குறுக்கிடும் அல்லது உலகளாவிய கோப்பரேட் கொம்பனிகளின் நிகழ்ச்சி நிரல் குறுக்கிடும்.

எனவே, பக்கச்சாராத முழு நிறைவான சுயாதீன ஊடகம் என்று எதுவும் இப்பொழுது கிடையாது. கெடுபிடிப் போர்க் காலத்தில் ஒரு பிரசாரப் போர் நிகழ்ந்தது. அந்தப் பிரசாரப் போர் எனப்படுவது ஒரு ஊடகப் போர்தான். இதனால், உலகில் அநேகமாக எல்லாத் தரப்பையும் ஏதோ ஒரு விகிதமளவுக்காவது பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஊடகப் பரப்பு அப்பொழுது பேணப்பட்டது. ஆனால், கெடுபிடிப் போரின் முடிவுடன் உலகளாவிய பேரூடகங்களின் ஏகபோகம் உருவாகியது. இதனால், ஒரு துருவ உலக ஒழுங்கிற்கு எதிரான தரப்புக்களை குவிமையப்படுத்தாத ஒரு ஊடகச் சூழல் பலமடையத் தொடங்கியது. உலகளாவிய பேரூடகங்கள் உருவாக்கிய மாயத் தோற்றத்திற்கு முன்னால் சிற்றூடகங்களாகக் காணப்பட்ட மாற்று ஊடகங்கள் ஒரு எல்லைக்கும் மேல் பரவ முடியவில்லை. உலகளாவிய பேரூடகங்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு குறைந்த பட்சம் பிராந்திய மட்டத்திலாவது சக்திமிக்க ஊடகங்களின் தேவை உணரப்பட்டது.

இத்தகைய ஒரு காலச் சூழலில்தான் அல்ஜசீரா தோன்றியது. பெருமளவுக்கு பி.பி.சி.யின் அரபு சேவையிலிருந்து வந்தவர்களை வைத்தே அது உருவாக்கப்பட்டது. கட்டார் அரசு குடும்பத்தின் நலன்களையே அது பிரதிபலித்தது. எனினும், உலகளாவிய ஊடகப் பரப்பில் அது தொடக்கத்தில் ஓர் அரபு அதிசயமாகவே பிரகாசித்தது. பேரூடகங்களின் குவிமையத்துக்குள் வராத ஒரு பிராந்தியத்தை அது பிரதிபலித்தது. இதனால், ‘பச்சை ஆபத்துக்கு” எதிராக மேற்குலகம் கொடுத்த யுத்தத்தில் பச்சைத் தரப்பின் குரலாகவும் அது காணப்பட்டது. ஆனால், கட்டார் அரசாங்கத்தின் மீது சக்திமிக்க மேற்கு நாடுகள் தொடர்ச்சியாகப் பிரயோகித்த அழுத்தங்களின் விளைவாக அல்ஜசீராவின் செயற்பாடுகளில் பின்னாளில் ஒருவித தளம்பல் காணப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

அல்ஜசீராவினால் அருட்டப்பட்டு உருவாக்கப்பட்டதே ரெலிசர் (வுநடநளுருசு) ஆகும். அது லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தை குவிமையப்படுத்தும் ஓர் ஊடகமாகும்.

ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழான ஊடகப் பரப்பில் அல்ஜசீராவையும் சனல் நாலையும் ஒப்பிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அது தனியாக, விரிவாகப் பார்க்கப்படவேண்டும். ஆனால், ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழான உலகளாவிய ஊடகப் பரப்பில் ஈழத் தமிழர்களை நோக்கி அனைத்துலகின் கவனத்தைக் குவியச் செய்ததில் சனல் நாலின் பங்களிப்பை வேறெந்த ஊடகங்களுடன் ஒப்பிட முடியாது. அது தமிழ் டயஸ்பொறாவின் ஒரு பகுதியல்ல. அதன் உள் ஆளுமல்ல. (ஐளெனைநச) ஆனால், அது உலகளாவிய தமிழ் லொபியின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகவே காட்சி தருகிறது.
தனது பார்வையாளர் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடனான ஒரு வணிக உத்தியாகவே அது ஈழத் தமிழர் பிரச்சினையைக் கையாண்டு வருகிறது என்று ஒரு விமர்சனம் உண்டு. நிதிப்பலமுடைய தமிழ் டயஸ்பொறாவின் பின்னணியில் வைத்தே இதை விளங்கிக் கொள்ளவேண்டும் என்று மேற்படி விமர்சனத்தை முன் வைப்பவர்கள் கூறுவதுண்டு. அதேசமயம், அரசாங்கத்தை முறிக்காமல், வளைக்க முற்படும் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலிற்குரிய ஒரு ஊடகக் கருவியே அது என்றொரு விமர்சனமும் உண்டு.

சனல் நாலின் வணிக இலக்குகள் வெளிப்படையானவை. ஆனால், அதன் அரசியல் இலக்குகள் முழுக்க முழுக்க மேற்கின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றனவா?

ஏனெனில், மேற்குலகமும், இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தை முறிக்க முற்படவில்லை. வளைக்கவே முற்படுகின்றன. ஆனால், சனல் நாலு வெளியிட்டுவரும் காணொளிகள் அரசாங்கத்தை முறிக்க முற்படும் தரப்புகளையே மேலும் கொதிப்படையச் செய்கின்றன. அது வெளியிடும் ஒவ்வொரு காணொளியும் தமிழ்க் கோபத்தை ஆய்சலுக்கு ஆய்ச்சல் புதுப்பித்து வருகிறது. தமிழ்க் கோபம் புதுப்பிக்கப்படுவது என்பது இங்கு உற்றுக் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயப் பரப்பு ஆகும்.

ஏனெனில், தமிழ்க் கோபம் புதுப்பிக்கப்படும்போது முக்கியமாக அது டயஸ்பொறாவிலும் தமிழ் நாட்டிலுமே வெடித்துக் கிளம்பும். தாயகத்தில் வாழும் தமிழர்கள் தமது மெய்விருப்பங்களை தேர்தல்களின்போது தான் ஓரளவிற்கு வெளிக்காட்ட முடியும். மற்றும்படி, தமது மனக்கொதிப்பை முழுமையாக வெளிக்காட்ட முடியாத ஒரு சூழலே நாட்டில் உண்டு. ஆனால், டயஸ்பொறாவிலும், தமிழகத்திலும் நிலைமைகள் அப்படியல்ல. இத்தகைய பொருட்படக் கூறின் தமிழகத்தையும், டயஸ்பொறாவையும் இப்போதைக்கு தமிழ்த் தேசியத்தின் இரு கூர் முனைகள் எனலாம்.

இவ்வாறு இவ்விரு கூர்முனைகளும் கொந்தளிக்கும்போது முக்கியமாக மூன்று தரப்புக்களை அது நெருக்கடிக்குள்ளாக்கும். முதலாவது இந்திய மத்திய அரசாங்கம். இரண்டாவது மேற்குலம். மூன்றாவது மென்சக்திகள் போலத் தோன்றும் தமிழ் மிதவாதிகள்.

முதலாவதாக, இந்திய மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்திய அரசியலானது தேர்தல் ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு காலச்சூழலில் தமிழ் நாட்டின் உணர்ச்சிகளை முழுக்கப் புறக்கணித்துவிட்டு முடிவுகளை எடுப்பது கடினம். போன ஆண்டில் பாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய கொதிப்புடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இசைப்பிரியாவின் படம் ஏற்படுத்திய கொதிப்புக் குறைவாகவே காணப்படுவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த ஆண்டில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் மாநில அரசாங்கமும், மைய அரசாங்கமும் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியதும் ஒரு காரணம்தான். தவிர தன்னியல்பான வெகுசன எழுச்சி எதுவும் உரிய தலைமைத்துவத்துடன், நிறுவன மயப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாதவிடத்து அது காலகதியில், நீர்த்துப்போகவோ அல்லது அதன் நூதனத் தன்மையை இழக்கவோ அல்லது கூர் கெடவோ கூடிய வாய்ப்புகளே அதிகரிக்கின்றன.

இம்முறை இசைப்பிரியாவின் காட்சிகள், தாயகத்திலும், தமிழ்நாட்டிலும் இதுவரையிலும் கருத்துத் தெரிவிக்காத தரப்புக்களையும் பேச வைத்திருக்கிறது. குறிப்பாக, தமிழ் நாட்டில் ஆளுங்கட்சியின் பிரதானிகள் சிலர் பொதுசன மனோநிலையை பிரதிபலித்திருக்கின்றார்கள். எனவே, சனல் நாலின் காணொளி இந்திய ராஜதந்திரிகளையும், கொள்கை வகுப்பாளர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கின்றது.

இரண்டாவதாக மேற்கத்தையத் தலைவர்களையும் அது மனித உரிமைகள் குறித்து முன்னரைவிடக் கூடுதலாகப் பேசுமாறு தூண்டியிருக்கிறது. அவர்கள் சிலவேளை கொமென் வெல்த் மாநாட்டை இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் தொடர்பில் வகுப்பெடுக்கப் பயன்படுத்தக்கூடும்.
ஆனாலும், ஏனைய எல்லா கொமென் வெல்த் நாடுகளை விடவும் இந்தியாவுக்கே சனல் நாலும், கொலம் மக்ரேயும் சோதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இதனால்தான் இந்தியா கொலம் மக்ரேக்கு விசா வழங்க மறுத்ததா?

தமிழ் நாட்டைத் தாண்டி இலங்கைக்கு வந்தால் அது சிலசமயம் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும். அதேசமயம் வராமல் விட்டால் அது மேற்கிற்கும் இந்தியாவுக்குமான பொது நிகழ்ச்சி நிரலை நெருக்கடிக்குள்ளாகும். இந்தியா பங்குபற்றவில்லையென்றால் அந்த மாநாடு அதன் பொலிவை இழந்துவிடும் உலகின் மிகப் பெரிய கொமென் வெல்த் நாடு இலங்கை மாநாட்டைப் புறக்கணிப்பதானது இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும். அதோடு மாநாட்டின் அந்தஸ்தையும் குறைக்கும்.

இது இலங்கை அரசாங்கத்தை மேலும் சீனாவை நோக்கி உந்தித் தள்ளுவதில் முடியும் என்று கேர்ணல் ஹரிஹரன், சிவ்சங்கர் மேனன் போன்றவர்கள் எச்சரிக்கின்றார்கள். அதாவது இந்தியத் தலைவர் பங்குபற்றாவிட்டால் அது இலங்கை அரசாங்கத்தை வளைப்பதற்குப் பதிலாக முறிக்கும் தரப்புக்களையே பலப்படுத்தும் என்ற ஓர் அச்சம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

மூன்றாவது, தமிழ் மிதவாதிகள். மென்சக்திகளைப் போலத் தோன்றும் தமிழ் மிவாதிகளைப் பலப்படுத்துவதே இப்போதுள்ள அனைத்துலக நிகழ்ச்சி நிரல் ஆகும். ஆனால், பொதுத் தமிழ் மனோநிலை கொதிப்படையும் போதெல்லாம் தமிழ்மிதவாதத்தின் இயலாமையும், கையாலாகாத்தனமும் வெளிப்படையாகத் தெரியவரும். புதுப்பிக்கப்படும் தமிழ்க் கோபமானது மென்சக்திகளையல்ல, வன்சக்திகளையே ஊக்குவிக்கும். பழிவாங்கும் உணர்ச்சியும், ஆற்றாமையும் கலந்துருவாகும். பொதுத் தமிழ் மனோநிலையானது எப்பொழுதும் மிதவாதிகளில் பிழை கண்டுபிடிக்கவே முற்படும். மிதவாதிகளால் என்றைக்குமே அந்தக் கோபத்திற்குத் தலைமை தாங்க முடிந்ததில்லை.
இசைப்பிரியாவின் காட்சிகள் வெளிவந்ததை, உடனடுத்து, கூட்டமைப்பு சாதித்த மௌனம் சில ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அது ஒரு கள்ள மௌனமாயுமிருக்கலாம். அல்லது ஓய்வூதியர் தேசியத்தின் இயல்பான மந்தத் தனமாகவும் இருக்கலாம். எதுவாயினும், ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் வரை அறிக்கை விடக் காத்திருந்தமையானது பொதுத் தமிழ் மனோநிலைக்கு எரிச்சலூட்டும் ஒன்றாகவே காணப்பட்டது. அதாவது, ஈழத்தமிழ் அரசியலில் மென்சக்திகள் போலத் தோன்றும் மிதவாதிகளைப் பலப்படுத்த எத்தனிக்கும் ஓர் அனைத்துலக நிகழ்ச்சி நிரலைப் பொறுத்த வரை கொலம் மக்ரேயின் படம் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

எனவே, கூட்டிக்கழித்துப் பார்த்தால், சனல் நாலும் கொலம் மக்ரேயும் ஈழத்தமிழ் அரசியலில் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். முதலாவது தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக அபிப்பிராயத்தை திரளச் செய்வது.

இரண்டாவது தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்து இந்தியாவின் வெளியுறவுகு; கொள்கைக்கு சோதனைகளை ஏற்படுத்துவது.

மூன்றாவது தமிழ் மிதவாதிகளின் கையாலாகாத் தனத்தை நிரூபிப்பது.

இம்மூன்று விளைவுகளையும் தொகுத்துக் கூறின் அது அரசாங்கத்தை வளைக்க நினைக்கும் ஓர் அனைத்தலக நிகழ்ச்சி நிரலைவிட அரசாங்கத்தை முறிக்க நினைக்கும் நிகழ்ச்சி நிரலுக்கே கிட்டவாகக் காணப்படுகிறது.

ஆனால், காலத்துக்குக் காலம் புதுப்பிக்கப்பட்டுவரும் தமிழ்க்கோபமானது ஒரு வெகுசன சக்தியாக உருத்திரட்டப்படாத ஒரு வெற்றிடத்தில்… தாயகம், புலம், தமிழகம் மூன்றையும் ஒரே கோட்டில் இணைக்கும் பொதுவான நிகழ்ச்சி நிரல் எதுவும் தமிழ் தரப்பில் இல்லாத ஒரு வெற்றிடத்தில்… அவ்வப்போது துண்டப்படும் தமிழ்க் கோபமானது அவ்வப்போது பொங்கி வடியும் ஒரு சோடாக் காஸ் போலாகிவிடுமா?

08-11-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *