சம்பந்தரின் தலைமைத்துவம்

கடந்த வாரம் எனது கட்டுரையை வாசித்துவிட்டு லண்டனில் இருந்து ஒரு நண்பர் கதைத்தார். டயஸ்பொறாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே நண்பர்கள் அதிகம் என்ற கருத்து சரியா என்று அவர் கேட்டார். எனது கட்டுரையை வாசித்துவிட்டு தனக்குத் தெரிந்த ஐந்தாறு நபர் களுடன் தான் கதைத்ததாகவும் அவர்கள் எல்லாருமே கூட்டமைப்புக்கு ஆதரவாகத்தான் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். கனடாவில் வசிக்கும் மூத்த படைப்பாளியும் சஞ்சிகை ஆசிரியருமான மற்றொரு நண்பர் கேட்டார் ”கூட்டமைப்பை விட்டால் வேறு யாரை ஆதரிப்பது’ என்று.

குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலையொட்டித் தாயகத்தில் எழுந்த கூட்டமைப்புக்கு ஆதரவான அலையெனப்படுவது டயஸ்பொறாவுக்கும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

”உங்களுடைய கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிடும் ”ஈழப் போரிற்கு வரியிறுப்போராக இருந்த டயஸ்பொறாப் பொதுசனங்கள்’ தாயகத்தில் உருவாகியிருக்கும் கூட்டமைப்புக்கு ஆதரவான அலையினால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்’ என்று மற்றொரு நண்பர் கூறினார்.

மாகாண சபை உருவாக்கப்பட்டபோது அமைச்சர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறிகளால் கூட்டமைப்புக்கு வாக்களித்த படித்த வாக்காளர்கள் மத்தியில் ஒருவித சலிப்பும் எரிச்சலும் ஏற்பட்டதை அவதானிக்கக் முடிந்தது. எனினும் எல்லாவிதமான இழுபறிகளையும் சறுக்கல்களையும் தாண்டி கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாக மேலெழுந்திருக்கிறது என்பதே கள யதார்த்தமாகும்.

கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டதுபோல ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது கூட்டமைப்பு மைய அரசியலாக உருவாகிவிட்டது. எப்படி தென்னிலங்கையில் சிங்கள அரசியலானது ராஜபக்ச மைய அரசியலாக மாறியிருக்கிறதோ அப்படி.

சிங்கள அரசியலை ராஜபக்ச மைய அரசியல் என்று ஒரு அரசுத்தலைவரின் அல்லது ஒரு வம்சத்தின் பெயரால் அழைப்பது போல இப்போதுள்ள தமிழ் அரசியலையும் சம்பந்தர் மைய அரசியல் என்று அழைக்கலாமா?

நிச்சயமாக அப்படி அழைக்கலாம் என்றே தோன்றுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான கடந்த நான்காண்டுகளிற்கும் மேலான தமிழ் அரசியலைப் பொறுத்தவரை சம்பந்தரே தவிர்க்கப்படவியலாத ஒரு மையமாக எழுச்சிபெற்று வருகிறார். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் அவரது தலைமைத்துவத்துக்குச் சவாலாக எவரும் இல்லை என்பதே இப்போதுள்ள கள யதார்த்தம் ஆகும்.

Sambathan_CIவடமாகாண சபையின் உருவாக்கத்தோடு கூட்டமைப்பு அரசியலை மூவர் அரசியல் என்று சில விமர்சகர்கள் வர்ணிக்கத் தலைப்பட்டுள்ளார்கள். ஆனாலது சற்றுக் காலத்தால் முந்திய ஒரு கூற்று என்றே தோன்றுகிறது. சம்பந்தர், சுமந்திரன், ஓய்வுபெற்ற நிதியரசர் ஆகிய மூவரும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்களாக தோன்றுகின்றார்கள். கட்சிக்குள் வேறெந்தக் கூட்டையும் விட இவர்கள் மூவருக்கும் இடையிலான கூட்டு ஒப்பீட்டளவில் அதிகம் இறுக்கமானதாகவும் தோன்றுகிறது. ஆனாலும் ஒன்றை இங்கு உற்றுக் கவனிக்க வேண்டும். கட்சிக்குள் மூப்பின் அடிப்படையிலும் அரசியல் அனுபவத்தி;ன் அடிப்படையிலும் கட்சிப் பாரம்பரியத்தின் அடிப்படையிலும் பார்த்தால் சம்பந்தர் தான் உச்சத்தில் நிற்கிறார். மற்ற இருவரும் அவருக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான். மேலும் அவர்களைத் தெரிவு செய்ததே சம்பந்தர்தான். கட்சியை எத்திசை நோக்கிச் செலுத்த வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கின்றாரோ அதற்குத்தோதாகத் தன்னைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே ஏனைய இருவரும். எனவே, தலைமைத்துவத்தைப் பொறுத்த வரை அவர்கள் இருவரும் சம்பந்தருக்குக் கீழ்ப்பட்டவர்களே. அதாவது முடிவுகள் முதன்மையாகச் சம்பந்தரிடமிருந்தே வருவது போலத் தோன்றுகின்றன. ஏனைய இருவரும் அந்த முடிவுகளை செம்மைப்படுத்தவோ, பலப்படுத்தவோ உதவக்கூடும். எனவே, சம்பந்தர் தீர்மானித்த திசையில்தான் கட்சி செலுத்தப்படுகின்றது என்பதே சரி.

இத்தகைய பொருள்படக்கூறின், இப்பொழுது அரங்கிலிருப்பது ஒரு புதிய கூட்டமைப்பாகும். சம்பந்தரை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு புதிய கூட்டமைப்பு அது. புலிகள் இயக்கம் பலமாகக் காணப்பட்டபோது உருவாக்கப்பட்ட பழைய கூட்டமைப்பு அநேகமாகக் காலாவதியாகிவிட்டது. இப்பொழுது இருப்பது சம்பந்தருடைய நிகழ்ச்சி நிரலின்படி மீள ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புதிய கூட்டமைப்பு ஆகும். சம்பந்தருடைய எதிரிகள் அவர் சக்திமிக்க வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். அப்படித்தான் எடுத்துக்கொண்டாலும் கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனது நிகழ்ச்சி நிரலை விட்டுக்கொடுப்பின்றி நிறைவேற்றிவரும் அவருடைய தலைமைத்துவப் பண்பைக் கருதிக் கூறின் தற்போதுள்ள தமிழ் அரசியலை சம்பந்தர் மைய அரசியல் என்றே அழைக்க வேண்டியிருக்கிறது.

முதலில் அவர் கட்சியைப் புலி நீக்கம் செய்தார். இதன்போது புலிகளுக்கு விசுவாசமாயிருந்த அணி கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட்டது. இந்த அணி புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது கட்சிக்குள் செல்வாக்கு அதிகமுடைய அணியாகக் காணப்பட்டது. பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்புகளைப் போல.எனவே, புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பலவீனமுற்றிருந்த அந்த அணியை தருணம் பார்த்து சம்பந்தர் வெளித்தள்ளிவிட்டார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். கஜேந்திரகுமார் அணியை சம்பந்தர் வெளித்தள்ளியபோது அந்த அணியானது கட்சியைவிட்டு வெளியேறாது தொடர்ந்தும் கட்சிக்குள் நின்றுபிடித்து சம்பந்தரை வெளியேற்றும் ஓர் அரசியலை செய்ய முடியவில்லை. அதோடு கட்சியைவிட்டு வெளியேறிய பின்னர் இன்றுவரையிலும் ஓர் அழுத்தக் குழுவாகத்தான் அவர்களால் செயற்பட முடிந்திருக்கிறது. சம்பந்தருக்குச் சவாலான ஒரு மாற்றுத் தலைமையை அவர்களால் இன்று வரையிலும் கட்டியெழுப்ப முடியவில்லை.

கட்சியைப் புலி நீக்கம் செய்த பின், சம்பந்தர் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். சுமந்திரனை புதிய பரமசிவனின் கழுத்திலிருக்கும் புதிய பாம்பாக மாற்றினார். அதைத் தொடர்ந்து சம்பந்தர் ஒப்பீட்டளவில் மிதவாதப் பாரம்பரியம் அதிகமுடைய தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தத் தொடங்கினார். தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவது என்பது மறுவளமாக தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய தோழமைக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதுதான்.

தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதென்றால் கூட்டமைப்பைப் பதிவதை ஒத்திவைக்க வேண்டும் அல்லது பதியாமலே விடவேண்டும். ஏனெனில் கூட்டமைப்பைப் பதிந்தால் அதன் மூலம் சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகளும் பலமடையக்கூடும். எனவே, பதிவை ஒத்திப்போடுவதன் மூலம் தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்த முடியும்.

விடுதலைப்புலிகள் இயக்கமும் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதை விரும்பவில்லைத்தான். கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஒருமுறை வன்னியில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது அமரர் ரவிராஜ் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமையிடம் இது தொடர்பாக கேட்டிருக்கிறார். ”இப்போது இருப்பதுபோலவே இருக்கட்டும்’ என்பதே புலிகளுடைய பதிலாக இருந்ததாம். ஆனால், புலிகள் தமக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது பற்றிக் கூறியபோது ”முன்பு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஒரு பலமான கூட்டாக உருவாகிய பின் ஒரு கட்டத்தில் அதுவே போராட்டத்திற்குத் தடையாக மாறியது. அதுபோலவே கூட்டமைப்பும் மாறக்கூடாது. அதாவது, கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாக உருவாக்கக் கூடாது…’ என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. அதற்குப் பின்னாலிருந்த அரசியல் வேறு. இப்பொழுது சம்பந்தரும் விரும்பவில்லை. அல்லது அதை ஒத்திவைத்து வருகிறார். இதற்குப் பின்னாலிருக்கும் அரசியல் வேறு. ஆனால் அரசியல் அதிகாரம் அல்லது தலைமைத்துவம் தம்மிடமே இருக்க வேண்டும் என்ற வேட்கையைப் பெறுத்தவரை இரண்டுக்குமிடையில் ஒற்றுமைகள் உண்டு.

சம்பந்தர் கூட்டமைப்பைப் பதிய மறுத்த ஒரு பின்னணியில் ஏனைய கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும்? பிரிந்து சென்று ஒரு புதிய கூட்டை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்களை விமர்சிப்பவர்கள் கூறுவதுபோல அவர்களும் சக்தி மிக்க வெளித்தரப்புகளின் ஆலோசனைப் பிரகாரம் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேற விரும்பாதிருக்கக் கூடும்.

எனினும், சம்பந்தரை நெருக்கடிக்குள்ளாக்கவல்ல தலைமைத்துவ ஆளுமைகள் எதுவும் அந்தக் கட்சிகளின் மத்தியில் இல்லை என்பதும் ஒரு அடிப்படை உண்மைதான். பல மாதங்களிற்கு முன்பு மன்னாரில் ஆயர் இல்லத்தின் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது மேற்படி கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூட்டமைப்பைப் பதியுமாறு முறையிட்டவிதம் மேற்படி கருத்தை நிரூபிப்பதாக அமைந்திருந்தது என்று அச்சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.

மேற்படி கட்சிகளைப் பலவீனப்படுத்தும் தொடர் நடவடிக்கைகளில் ஆகப் பிந்தியதே மாகாண அமைச்சர்கள் தெரிவு ஆகும். இது விசயத்திலும் மேற்படி கட்சிகள் சம்பந்தருக்கு எதிராகப் போர்க்;கொடி தூக்கின. ஆனால், வழமைபோல பின்னாளில் அடங்கிப்போய்விட்டன. சக்திமிக்க வெளியாரின் ஆலோசனைப் பிரகாரம் அவை அவ்வாறு அடங்கிப் போயின என்று எடுத்துக்கொண்டாலும்கூட தமது தலைமைத்துவத்தையும், கௌரவத்தையும் விட்டுக்கொடுத்தே ஐக்கியத்தைப் பேண வேண்டியிருப்பது என்பது ஒரு சிறந்த தலைமைப் பண்பு அல்ல.

கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேறினால் உதிர்ந்து திரைந்;துபோக நேரிடும் என்று அஞ்சுவதும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு அல்ல. சிறந்த தலைமைகள் பொதுசன அபிப்பிராயத்தின் பின் செல்வதில்லை. மாறாக, அவை பொதுசன அப்பிராயங்களை உருவாக்குகின்றன. அதாவது பொதுசனங்களை தமக்குப்பின் வரச் செய்கின்றன.
ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. கூட்டமைப்பின் பெயரால் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் அதற்கு வாக்குக் கிடைக்கும் என்று. எனவே கூட்டமைப்பு என்ற வெற்றிக்குரிய பொது அடையாளத்தை சுவீகரிப்பதே மேற்படி கட்சிகளின் இலக்காயிருக்கக்கூடும். தவிர, கட்சியை உடைத்துக் கொண்டு ஒரு புதிய கூட்டை உருவாக்குமிடத்து தமது இறந்த காலம் தம்மைத் துரத்தக்கூடும் என்ற ஓர் அச்சம் அவர்கள் மத்தியிலிருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. குறிப்பாக, கஜேந்திரகுமார் அணி வெற்றிபெறத் தவறியமை எல்லாருக்கும் ஒரு முன் உதாரணமாகக் காணப்படுகின்றது. எனவே, மேற்படி கட்சிகள் கூட்டமைப்பைவிட்டு வெளியேறத் தயாரில்லை என்பது சம்பந்தருடைய பேரம் பேசும் சக்தியை உயர்வாக வைத்திருக்கிறது.

எனவே, சம்பந்தருக்குச் சவாலாக மேலெழக்கூடிய தலைமை எதையும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் காண முடியவில்லை. இதனால், சம்பந்தர் நினைப்பது எதுவோ அதுதான் தமிழ் அரசியல் என்றாகி வருகிறது. சிலசமயம் அவர் நினைப்பதை தமிழரசுக் கட்சி எதிர்த்தாலும் கூட இறுதியிலுமிறுதியாக அவருடைய நிகழ்ச்சி நிரலே நிறைவேறுகிறது. ஓய்வுபெற்ற நீதியரசரை அரங்கிற்குள் கொண்டு வந்ததையும் அவருக்குத் தேவையான மக்கள் ஆணையைப் பெற்றுக் கொடுத்ததையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

மாகாண சபைக்கான முதன்மை வேட்பாளர் தெரிவில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையினரின் முடிவுக்கு எதிராகவே சிந்தித்தார். ஆனாலும் அவருடைய தலைமைத்துவத்தை மேவியெழ கட்சிக்குள் வேறு எவரும் இல்லாதபடியால் அவர் நினைத்ததே நடந்தது.

எனவே, சரிகளிற்கும், பிழைகளிற்கும் அப்பால் தான் எதை நினைக்கிறாரோ அதை நோக்கி தனது சொந்தக் கட்சியையும், ஏனைய கட்சிகளையும், வாக்காளர்களையும் வளைத்தெடுக்கும் ஆற்றலைப் பெற்றவர் என்ற அடிப்படையில் அரங்கில் தற்போதுள்ள எந்தவொரு ஆளுமையை விடவும் சம்பந்தரே தலைமைத்துவப் பண்பு அதிகமுடையவராக தோன்றுகிறார்.

தென்னிலங்கையில் சிங்கள அரசியல் ராஜபக்ச மைய அரசியலாகக் காணப்படுகிறது. அரசுத் தலைவர் ராஜபக்ச சக்திமிக்க சகோதரர்களால் அரணமைக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதியாகவும் மிகப்பலமானதொரு புலனாய்வுக் கட்டமைப்பின் மையத்;திலும் அவர் காணப்படுகிறார். தனக்கு முன்பிருந்த வேறெந்த ஓர் அரசுத் தலைவரும் பெற்றுக் கொடுத்திராத ஒரு வெற்றியை அவர் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இத்தகைய மிகப் பலமான பின்னணிக்குள் வைத்தே ராஜபக்ச மைய அரசியலை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால், சம்பந்தர் மைய அரசியல் அப்படிப்பட்டது அல்ல. சம்பந்தரிடம் படை பலமும் இல்லை. சக்தி மிக்க தம்பிமாரும் இல்லை. களைத்துப் போனால் இன்னொருவரின் கையைப் பற்றி நடக்க வேண்டிய அளவுக்கு வயதானவராகவும், குளிசைகளோடு வாழ்பவராகவும் காணப்படும் அவருடைய அரசியலை ராஜபக்ச அரசியலுடன் ஒப்பிட முடியாதுதான்.

ஒரு தலைமைத்துவம் எனப்படுவது பெருமளவுக்கு ஆளுமை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் தான். அது அறநெறி சம்பந்தப்பட்ட விவகாரமாகவோ அல்லது இலட்சியப் பாங்கானதாகவோ இருப்பது மேலதிக தகைமைதான். காந்தியும், நேதாஐpயும் எதிரெதிரான இருவேறு போக்குகள். ஆனால், இருவரிடமும் தலைமைத்துவம் இருந்தது. லெனின், ஸ்டாலின் இருவரிடமும் தலைமைத்துவம் இருந்தது. ஆனால், இரண்டும் இருவேறு ஆளுமைகள். பாபரும், அக்பரும் ஒரே விதமான ஆளுமைகள் அல்ல. ஆனால், இருவரிடமும் தலைமைத்துவம் இருந்தது. இங்கெல்லாம் தலைமைத்துவம் எனப்படுவது பெருமளவுக்கு ஆளுமை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் தான். அது இலட்சியப் பாங்கானதாகவும், அறநெறியின் பாற்பட்டதாகவும் தீர்க்க தரிசனமுடையதாகவும் ஜனவசியம் மிக்கதாகவும் அமையும் போது வரலாற்றின் உன்னதங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

அரசியலில் எந்தவொரு செயலும் அதன் விளைவின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றது என்று ஜவகர்லால் நேரு கூறியுள்ளார். ஆனால், விளைவுகள் வழிவகைகளை நியாயப்படுத்திவிட முடியாது என்று யூத எழுத்தாளரான ஆர்தர் கோஸ்லர் கூறியுள்ளார். நீதியான ஒரு கனவை அநீதியான வழிமுறைகளிற்கூடாக வென்றெடுக்க முடியாது என்பதே இதன் பொருளாகும். ”நானே சத்தியமும் அதற்கான வழியுமாக இருக்கிறேன்’ என்று கிறிஸ்து கூறியதும் இதைத்தான். ”விடுதலைக்கான வழிவகைகள் யாவும் விடுதலை பயப்பனவாக அமையவேண்டும்’ என்று ஈழத்துச் சிந்தனையாளர் மு.தளையசிங்கம் கூறியதும் இதைத்தான்.

எனவே, சம்பந்தரின் அரசியலை அதன் விளைவுகளிற்கூடாக மட்டுமல்ல, அவர் கைக்கொள்ளும் வழிமுறைகளிற்கூடாகவும் பார்க்கவேண்டும். கட்சியின் மீதான தனது இரும்புப் பிடியை படிப்படியாக இறுக்கி வருவதன் மூலம் அவர் ஒரு கட்சித் தலைவராக வெற்றிபெற்றுவிட்டார். ஆனால், வெற்றிபெற்ற எல்லாக் கட்சித் தலைவர்களும் ஜனவசியம் மிக்க பெருந்தலைவர்களாக வெற்றி பெறுவதில்லை. பெருந்தலைவர்கள் பெருச்செயல்களின் மூலம் உருவாகிறார்கள். பெருஞ்செயல்களைச் செய்வதென்றால் குறுகிய வட்டங்களைக் கடந்து வெளியில் வரவேண்டும். சாதி, சமயம், வம்சம், பிரதேசம், மட்டுமல்ல, கட்சியும்கூட ஒரு குறுக்கம் தான்.

எங்கே இலட்சியம் அல்லது கனவு கடசியைவிட உன்னதமானதாகிறதோ எங்கே கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய திடசித்தமும், தியாக சிந்தையும், தீர்க்க தரிசனமும் காணப்படுகின்றனவோ அங்கே தான் பெருந்தலைவர்கள் உருவாகிறார்கள்.

கனவையும், ஜனங்களையும் பாதுகாக்கும் பெருந்தலைவர்களை ஜனங்கள் ஒரு கட்சியின் பிரதிநிதியாகக் காண்பதில்லை. மாறாக, அவரைத் தமது கனவின் பிரதிநிதியாகவே காண்கிறார்கள். தமிழ் மக்களுக்கும் இப்பொழுது தேவைப்படுவது கட்சித் தலைவர்கள் அல்ல. பெருந்தலைவர்களே.
01-11-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *