கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம். வலி வடக்குத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இத்தகையதொரு பின்னணியில் இப்போராட்டங்களை இரண்டு தளங்களில் வைத்துப் பார்ப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலாவது இப்போராட்டங்களுக்குள்ள உள்நாட்டுப் பரிமாணம் அல்லது இதில் கூட்டமைப்புக்குள்ள தேவை. இரண்டாவது ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் இவை போன்ற போராட்டங்களின் நிலை எவ்வாறுள்ளது என்பது.
முதலில் இப்போராட்டங்களுக்குள்ள உள்ளுர்ப் பரிமாணத்தைப் பார்க்கலாம். தமிழ் அரசியலில் அண்மை ஆண்டுகளில் இவை போன்ற போராட்டங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே முன்னெடுத்து வந்துள்ளது. இம்முறையும் அக்கட்சி மேற்படி போராட்டங்களில் பங்கேற்றுள்ளது. கூட்டமைப்பைப் பொறுத்த வரை, குறிப்பாக, வடமாகாண சபைத் தேர்தலிற்குப் பின் இது போன்று களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டிய ஒரு தேவை முன்னரைவிட அதிகரித்திருக்கிறது. அடுத்த ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாகவிருக்கலாம் என்ற ஊகங்களின் பின்னணியில் அத்தேவை மேலும் மேலும் அதிகரித்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
காணியதிகாரம் பற்றிய கவர்ச்சியான வாக்குறுதிகளோடு வடமாகாண சபை பதவிக்கு வந்த சில நாட்களில் வலிகாமம் வடக்கில் வீடுகள் இடிக்கப்படுவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. இந்நிலையில் கூட்டமைப்பானது வடமாகாண சபையில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு களத்தில் இறங்கியிருந்தால் நிலைமை இப்போதிருப்பதை விடவும் பலமாக இருந்திருக்கும் என்ற ஒரு அபிப்பிராயம் போராடும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த ஒரு உறுப்பினர் தான் இது பற்றி தவிசாளரிடம் கதைத்ததாகவும், இது போன்ற விவகாரங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதென்றால் பத்து நாட்களுக்கு முன்னராவது பிரேரணை கொண்டு வரப்படவேண்டும் என்ற தொனிப்பட தவிசாளர் பதிலளித்ததாகவும் கூறியிருக்கிறார்.
மாகாண சபை கூடும் போதே கூடப் பிறந்த ஒரு பிரச்சினை தொடர்பில் ஏன் முன்யோசனையுடன் நடந்துகொள்ள முடியவில்லை என்றும் பொது சனங்கள் மாகாண சபை உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்று மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் போதிய அனுபவம் இல்லை என்பது. மற்றையது வழமை போல, கூட்டமைப்பு இதை அதற்குரிய ஆழத்துடன் விசுவாசமாக அணுகவில்லை என்பது.
மேலும் மாகாண சபை உருவாக்கப்பட்டதோடு, கூட்டமைப்பானது முன்னரை விட மக்கள் மட்டத்திற்கு அதிகம் கிழிறங்கியிருக்கிறது என்பதும் ஒரு புதிய வளர்ச்சியாகும். பிரதேச சபைத் தேர்தலோடு கிராம மட்டத்திற்கு கீழிறங்கிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் மாகாண சபையோடு மேலும் பலப்படுத்துப்பட்டிருக்கிறது. எனவே, கொழும்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் றிமோர்ட் கொன்ரோலில் நடாத்தும் அரசியல் இனி வேலை செய்யாது. மாறாக, களத்தில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு மாகாண சபைத் தேர்தலோடு அதிகரித்திருக்கிறது. இத்தகைய ஒரு பின்னணியில் வைத்தே மேற்படி போராட்டங்களில் கூட்டமைப்பின் ஈடுபாட்டைப்; பார்க்க வேண்டும்.
ஆனால், யாழ். நூலக சூழலில் நிகழ்ந்த போராட்டம் அரசிற்கு எதிரானதாகத் தொடங்கி, முடிவில் கூட்டமைப்பைப்பிற்கு எதிராகத் திரும்பியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இதன் போது மூடப்பட்ட சொகுசு வாகனத்துள் வந்த கூட்டமைப்புத் தலைவர்களை நோக்கிப் பாதிக்கப்பட்ட மக்கள் வசைச் சொற்களை அள்ளி வீசியிருக்கின்றார்கள். இவ்வசைச் சொற்கள் சில தசாப்தங்களுக்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக யாழ். பல்கலைக்கழகத்திலும், வீரமா காளியம்மன் கோவிலடியிலும் அள்ளி வீசப்பட்ட வசைச் சொற்களை விடவும் மிகக் கூரானவை என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். கூட்டமைப்புத் தலைவர்கள் அன்றிரவு நிம்மதியாக உறங்கியிருப்பார்களா? என்று ஒர் ஊடகவியலாளர் கேட்டார். அதாவது பிரிட்டிஷ் பிரதமரின் யாழ் விஜயமானது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல கூட்டமைப்பிற்கும் எதிர்பாராத பின்னுதைப்புக்களைக் கொடுத்திருக்கிறது. இது முதலாவது.
இரண்டாவது, இப்போதுள்ள உலகப் போக்கின் பின்னணியில் இவை போன்ற போராட்டங்களிற்குள்ள முக்கியத்துவம் எத்தகையது என்பது.
நிதி முலதனப்படர்ச்சி மற்றும் தகவல் புரட்சி என்பவற்றின் விளைவாக உலகம் ஓரலகாக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சிவில் எழுச்சிகள் மற்றும் செயற்பாட்டு இ யக்கங்களின் போராட்டங்கள் குறித்தும் புதிய உலகளாவிய அணுகுமுறைகள் உருவாகி வருகின்றன. ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் குறிப்பாக, செப்ரெம்பர் 11இற்குப் பின் ஆயுதப் போராட்டங்கள் அநேகமாக நெருக்கடிக்குள்ளாகின. சில அழிக்கப்பட்டன. சில முடக்கப்பட்டன. சில உறைய வைக்கப்பட்டன. அதேசமயம் சக்தி மிக்க நாடுகளின் பின்பலத்துடன் அல்லது தூண்டுதலால் திடீர் புரட்சிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அல்லது தன்னியல்பாக முகிழ்ந்த புரட்சிகள் தத்தெடுக்கப்பட்டன. இத்தகையதொரு பகைப்புலத்தில், எங்கெல்லாம் போராட்டத்துக்கான தேவைகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் சக்திமிக்க நாடுகள் ஏதோ ஒரு விதத்தில் தலையிடுகின்றன. ஒன்றில் அங்கே சமாதானம் செய்கின்றன அல்லது அங்குள்ள மென்சக்திகளைத் தத்தெடுக்கின்றன. அல்லது புதிதாக மென்சக்திகளை உருவாக்குகின்றன. அல்லது அங்குள்ள சிவில் அமைப்புக்களையும், செயற்பாட்டியக்கங்களையும் ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு விகிதத்திற்கு ;தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது தமது செல்வாக்கு வலையத்துக்குள் கொண்டு வருகின்றன.
உலகளாவிய இப்போக்கின் கீழ் மற்றொரு உத்தியும் பிரயோகிக்கப்படுகிறது. அதன்படி சிவில் எதிர்ப்புக்களோடு மோதாது அவற்றை ஒரு கட்டம் வரை அவற்றின் போக்கில் விடுவது. இதன் மூலம் அவை தாமாகவே தொய்வடைந்து சோர்ந்துபோய்விடும் அல்லது நீர்த்துப்போகும். மாறாக, அவற்றை மோதித் தடுக்க முற்பட்டால் சிலசமயம் எதிர்ப்பு வலுவடையும். போராட்டம் மேலும் மூர்க்கமடையும். எனவே, சில களங்களில் சிவில் எழுச்சிகளை தடுக்காமல் விடுவது என்பதும் ஓர் உத்தியாகப் பிரயோகிக்கப்படுகிறது.
சிவில் எதிர்ப்புக்களை மோதி முறியடிப்பது என்றால் அது சீனாவில் தியனென்மென் சதுக்கத்தில் ராங்கிகளை விட்டு மாணவர்களை நசுக்கியதுபோல, அதன் குரூர எல்லை வரை போகவேண்டும். இல்லையென்றால், சிவில் எதிர்ப்புக்களை மோதி முறியடிக்கும் முயற்சி சில சமயம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தக்கூடும். மோதலே அதற்குப் பிரபல்யத்தையும் ஊடகக் கவர்ச்சியையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
எனவே, மோதலுக்குப் போகாமலே சிவில் எழுச்சிகளை முறியடிக்கவல்ல உத்திகள் வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஓர் உலகச் சூழல் இது.
இந்நிலையில் ஜனவசியமும், தீர்க்கதரிசனமும், திடசித்தமும், தியாக சிந்தனையும் மிக்க தலைமைகள் இல்லையென்றாலோ அல்லது தெளிவான ஓர் அரசியல் வழி வரைபடம் இல்லையென்றாலோ சிவில் எதிர்ப்புக்கள் தாமாகவே தூர்ந்துபோகக் கூடிய ஆபத்துக்களே அதிகம் காணப்படுகின்றன.
அமெரிக்காவில் வோல்ஸ்ரீற் முற்றுகைப் போராட்டம், இந்தியாவில் அன்னா ஹசாரே முன்னெடுத்த போராட்டம், தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மாணவர் எழுச்சி போன்றவற்றை மேற்படி விளக்கத்தின் பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டும்.
அமெரிக்காவின் வோல்ஸ்ரீற் முற்றுகைப் போராட்டம் நீர்த்துப்போனதற்குரிய பிரதான காரணம் அங்கு தெளிவான அரசியல் வழி வரைபடத்துடன் கூடிய தலைமையோ நிறுவன மயப்பட்ட செயற்பாடுகளோ இல்லாமைதான் என்பது இப்போது விவாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக மக்களை வீதிக்குக் கொண்டு வந்தார். அவரிடம் ஏதோவொரு தலைமைத்துவம் இருந்தது. அவருடைய அரசியலைக் குறித்து இக்கட்டுரைக்கும் கேள்விகள் உண்டு. ஆனால், ஊழலுக்கு எதிராக மக்களைக் கொந்தளிக்கச் செய்ததில் ஹசாரேயின் போராட்டங்கள் கவனிப்பிற்குரியவை. ஹசாரே தன்னைக் காந்தியவாதியாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால், 20ஆம் நூற்றாண்டின் காந்தியத்தை இருபத்தியொராம் நூற்றாண்டிற்குப் புதுப்பிக்கும் அளவிற்கு அவரிடம் அரசியல் தரிசனமோ படைப்பாற்றலோ இருக்கவில்லை.
மேற்கண்ட இரண்டு உதாரணங்களுடன் ஒப்பிடுகையில், கூடங்குளம் போராட்டம் வித்தியாசமானது. அங்கே நிலைமைகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவல்ல ஒரு தலைமையும் ஒப்பீட்டளவிற் தெளிவான வழி வரை படமும் உண்டு. அன்னா ஹராரேயின் இயக்கத்தைப் போல இது பரந்த அளவிலானது அல்ல. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் நிகழ்வதும் அதன் ஒப்பீட்டளவிற் தொய்வுறாத் தன்மைக்கு ஒரு காரணம் எனலாம்.
இதை தவிர கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் நிகழ்ந்த மாணவர் போராட்டங்களிலும் தலைமைத்துவ வெற்றிடம் காணப்பட்டது. தெளிவான அரசியல் வழி வரைபடமும், நிறுவன மயப்பட்ட செயற்பாடுகளும் போதாமலிருந்தன. மாணவர்கள் ஏற்கனவே, நிறுவனமாகக் காணப்படுவதுதான் அவர்களுடைய பிரதான பலம். ஆனால், அந்த நிறுவனம் மாறுந்தன்மை மிக்கது. ஆண்டுகள் தோறும் அது மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு தொகுதி வெளியேறும் ஒரு தொகுதி புதிதாக வரும். எனவே, மாறுந்தன்மை மிக்க மாணவர் கட்டமைப்பை பின்னிருந்து வழி நடத்தவல்ல ஒரு அரசியற் தலைமைத்துவம் இருக்க வேண்டும். தன்னியல்பானது என்பதே மாணவர் எழுச்சிக்குள்ள பலமும் பலவீனமும் ஆகும்.
மேற்படி மாணவர் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது கூடங்குளம் செயற்பாட்டியகத்தின் தலைவரான உதயகுமார் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக, அது தொடர்பாக எழுதி வந்த குறிப்புக்கள் கவனிப்புக்குரியவை. அவற்றில் அவர் இந்தியாவில் ஏற்கனவே, வௌ;வேறு மாநிலங்களில் நிகழ்ந்த இது போன்ற மாணவர் எழுச்சிகள் எப்படி முடிந்துபோயின என்பது பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். அம்மாணவர்கள் போராட்டங்களிலிருந்து பாடம் கற்க வேண்டிய தேவை பற்றியும் அறிவுறுத்தியிருந்தார்.
மேற்சொன்ன எந்த ஒரு போராட்டத்தோடும் வடக்கில் கொமென் வெல்த் மாநாட்டையொட்டி நடந்தவற்றை ஒப்பிட முடியாது. இது மட்டுமல்ல, இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட, குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தலைமை தாங்கப்பட்ட போராட்டங்களும் உட்பட காணாமற் போனவர்களுடைய உறவினர்களின் போராட்டங்கள் போன்ற எதையும் மேற்சொன்ன தொடர் முன்னெடுப்புக்களோடு ஒப்பிட முடியாது.
கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் நிகழ்ந்து வரும் அநேகமாக எந்தவொரு சிவில் எதிர்ப்பும் தெட்டம் தெட்டமானதே. உதிரியானதே. அதைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் வேண்டிய அரசியல் சூழல் நாட்டில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அதற்குத் தேவையான அரசியல் செயற்பாட்டு ஒழுக்கமும், விளக்கமும் இங்குள்ள எந்தவொரு மிதவாதக் கட்சியிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மாறிவரும் உலகச் சூழலுக்கேற்ப புதிதாகச் சிந்திப்பதற்குத் தேவையான படைப்பாற்றலை இதுவரை யாரிமும் காண முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பகிஷ்கரிப்புகள், எதிர்ப்புக்கள் போன்றவற்றில் பெரும்பாலானவை குறியீட்டு வகைப்பட்டவைதான். எதிர்ப்பைப் பதிவு செய்வதோடு சரி.
எனவே, இத்தகைய பொருள்படக் கூறின், கொமென்வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்தவையனைத்தும் கவன ஈர்ப்புப் போராட்டங்கள்தான். வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலின் ஒரு பகுதியே இது. அனைத்துலக சமூகத்திடம் முறையீடு செய்வதற்கு கொமென் வெல்த் மாநாட்டுச் சூழல் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.தெற்கை நோக்கி குவிந்திருந்த உலகின் கவனத்தை இது வடக்கை நோக்கித் திருப்பியிருக்கிறது
கூட்டமைப்பைப் பொறுத்த வரை இது அடுத்தடுத்த ஆண்டுகளில் வரக்கூடிய தேர்தலிற்கான ஒரு முதலீடாகவும் இருக்கலாம். கொமென் வெல்த் மாநாடு முடிய இது சோர்ந்துபோகக்கூடும். ஏற்கனவே, சோர்ந்து போன பல விடயங்களைப் போல இதுவும் சோர்ந்துபோகலாம். அப்படியொரு நிலைமை வந்தால் அடுத்த தேர்தலிற்குப்போகும்போது ஆசியாவின் பெரும்பாலான ஜனநாயகங்களில் காணப்படுவதைப் போல போராடிச் சலித்த மக்களின் மறதியை நம்பி வாக்குக் கேட்கலாம்.
15-11-2013