யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்

ரெஜினாவின் காட்டுப்புலம் கிராமத்தில் வற்றிய சிறு குளம் -ஒளிப்படம்-துவாரகன்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையென்று. இராணுவத்தைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களைத் தந்தால் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயலாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

சுமந்திரன் கூறுகிறார் கிராமமட்ட விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டுமென்று. தமிழ் மக்கள் தங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தொனி இக்கூற்றில் இருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களில் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது தொகுதிகளில் விழிப்புக் குழுக்களை உருவாக்கலாம் என்றும் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

வடமாகாணசபை உறுப்பினரான டெனீஸ்வரன் புலம்பெயர்ந்த தமிழர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் காசுதான் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒரு காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆளும் யு.என்.பிக் கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாகிய திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மேற்படி வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்து சிக்கலில் மாட்டியிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட வன்முறைகள் இருக்கவில்லை என்றும் இப்பொழுது அதிகரித்து வரும்; வன்முறைகளை அடக்குவதற்கு புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பட அவர் ஓர் உரையை ஆற்றியிருக்கிறார். உட்துறை அமைச்சரும் உட்பட இரண்டு அமைச்சர்கள் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரோடு ஒரு தொகுதி அரச அதிகாரிகளும் அமர்ந்திருந்த ஓர் அரங்கிலேயே விஜயகலா மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். அப்பேச்சு அவருடைய பதவியைப் பதம் பார்த்திருக்கிறது.

மற்றொரு அமைச்சரான மனோகணேசன் முதலில் விஜயகலாவை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். பின்னர்; தென்னிலங்கையில் ஏட்படட கொந்தளிப்பையடுத்து அவர் விஜயகலாவை காப்பாற்றுவதிலிருந்து சிறிது பின் வாங்கினார்.முதலமைச்சர் விக்கியும் விஜயகலா கூறியதை ஆதரித்திருக்கிறார்.

மாகாணசபைக்கு அதிகாரம் இல்லையென்பதை இது போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விக்கினேஸ்வரன் வலியுறுத்திக் கூறுவதுண்டு. டெனீஸ்வரனின் வழக்கில் அது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லையென்பதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு முதலமைச்சராகத்தான் வரவேண்டும் என்றில்லை. அது பற்றி ஏற்கெனவே நிறைய உரையாடப்;பட்டு விட்டது. மாகாணசபைக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்குக் கூட இலங்கைத்தீவின் நிர்வாகக் கட்டமைப்போ அல்லது அதிகாரப் படிநிலைக் கட்டமைப்போ இடம் கொடுக்காது. விக்னேஸ்வரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அதை கண்டு பிடித்து வருகிறார்.

ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் அதிகாரத்தைத் தரவில்லை என்று கூறிக்கொண்டு எதையும் செய்யாமல் இருந்து விடுவதுதான். எதிர்ப்பு அரசியல் எனப்படுவது கொழும்பைக் குறை கூறுவது மட்டுமல்ல. அதற்குமப்பால் அதற்கொரு ஆக்கபூர்வ நிகழ்ச்சித் திட்டம் உண்டு. எதிரியைத் திட்டுவதும், விமர்சிப்பதும் மட்டும் எதிர்ப்பு அரசியலாகாது. எதிர்த்தரப்பு என்ன செய்கிறதோ அதற்கு எதிரான தற்காப்புச் சுய கவசங்களைக் கட்டியெழுப்புவதே எதிர்ப்பு அரசியலின் இதயமான பகுதியாகும். இந்த ஆக்க பூர்வ தரிசனம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் சிங்களத் தரப்பைக் குறை கூறிக்கொண்டிருப்பது முழுமையான எதிர்ப்பு அரசியலல்ல.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு அரசியல் எனப்படுவது பிரதானமாக இரண்டு தடங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியது. முதலாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் போராட்டம். இரண்டாவது கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிராக சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்புவது.

இனப்படுகொலை என்றால் என்ன? ஒரு இனத்தின் தேசிய இருப்பை நிர்மூலம் செய்வதுதான். எனவே நேரடியான இனப்படுகொலை அல்லது கட்டமைப்புசார் இனப்படுகொலைக்கு எதிரான சுயகவசங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த்தேசிய மூலக்கூறுகளை கீழிருந்து மேல் நோக்கி பலப்படுத்துவதுதான். இனம், மொழி, நிலம், பண்பாடு போன்ற அடிப்படையான மூலக்கூறுகளை எப்படிப் பலப்படுத்தலாம் என்று ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதுதான்.

இதை மேலிருந்து கீழ்நோக்கிச் செய்வதில் வரையறைகள் உண்டு. ஏனெனில் 2009ற்குப் பின்னரான அரசியலில் மேலிருந்து கீழ்நோக்கிய பெரும்பாலான கட்டமைப்புகள் அரசாங்கத்தின் நிர்வாகப் படிநிலைக் கட்டமைப்புக்களுக்குள்தான் வருகின்றன. எனவே தமக்குரிய சுய கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு மக்கள் கூட்டம் அதை அதிக பட்சமாக கீழிருந்து மேல் நோக்கியே கட்டியெழுப்ப வேண்டும்.

உதாரணமாக வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் நுண்கடன்கள் தொடர்பில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கீழிருந்து மேல் நோக்கிய விழிப்புக் கட்டமைப்புக்கள் அவசியம். பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் தொடர்பகத்தில் நிகழ்ந்த பெண் அமைப்புக்களுடனான சந்திப்பு ஒன்றின் போது வலிகாமம் மேற்கைச் சேர்ந்த ஒரு சங்கத் தலைவி ஆணித்தரமாகச் சொன்னார். எமது கிராமத்தில் நுண்கடன் நிதி அமைப்புக்களை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். எமது பெண்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தி அவர்களாக அந்த அமைப்புக்களை புறக்கணிக்கச் செய்து விட்டோம் என்று.

இது ஒரு சிறிய உதாரணம். இது போல கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கவசங்களை ஈழத்தமிர்கள் உருவாக்கலாம். முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையும் இது தொடர்பில் சிந்திக்கலாம். மாற்று அரசியலைக் குறித்து விவாதிக்கும் எல்லாரும் இது தொடர்பில் சிந்திக்கலாம். தமிழ் சிவில் சமூக அமையம் சிந்திக்கலாம். ஏனைய சிவில் இயக்கங்களும் சிந்திக்கலாம். இரணைதீவு மக்களின் நிலமீட்பிற்கான போராட்டத்தை பின்னிருந்து ஊக்குவித்தது ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான். அந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கிராமமட்ட வலையமைப்பே போராட்டத்தில் பெரும் பங்கை வகித்தது. ஓர் அரச சார்பற்ற நிறுவனம் அதைச் செய்யலாம் என்றால் ஏன் செயற்பாட்டு இயக்கங்களால் முடியாது? ஏன் மக்கள் இயக்கங்களால் முடியாது? ஏன் அரசியல் கட்சிகளால் முடியாது?

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடம் கிராம மட்டக் கட்டமைப்பு உண்டு.ராணுவப் புலனாய்வாளர்களிடம் கிராம மட்டக் கட்டமைப்பு உண்டு. ஆனால் தமிழ் செயற்பாட்டாளர்களிடம் அவ்வாறான கட்டமைப்புக்கள் இல்லை.இந்த வெற்றிடத்துள்தான் ரட்ணபிரியாக்கள் எம்.ஜி. யார்களாக மேலெழுகிறார்கள். விஜயகலாக்கள் புலிகளைப் போற்றித் தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்துகிறார்கள்.

இது தொடர்பில் ஒரு விசித்திரமான முரணை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்து வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் விழிப்புக்குழுக்களைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் எதிர்ப்பு அரசியலுக்குரியவர் அல்ல. ஆனால் உள்ளுர் மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரும் உட்பட மேற்படி வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்த எல்லாருமே நிலமைகளைக் கட்டுப்படுத்த பொலீசாரால் முடியவில்லை என்பதனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது விடயத்தில் விஜயகலா ஓர் அரசாங்க அமைச்சர் என்ற தனது பதவியை மறந்து பேசியிருக்கிறார். அமைச்சர் மனோ கணேசனும் பொலீசைக் காட்டமாகப் விமர்சித்திருக்கிறார்.

மேற்படி விமர்சனங்கள் யாவும் பொலிசின் இயலாமையை அல்லது செயற்திறன் இன்மையை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அந்தப் பொலிசின் பாதுகாப்பைப் பெறும் அரசியல் பிரமுகர்களே இவர்கள் எல்லாரும். தனது பாதுகாப்பிற்காக அதிரடிப்படையை நம்பியிருக்கும் சுமந்திரன் விழிப்புக் குழுக்களைப் பற்றிக் கதைக்கிறார். மெய்யாகவே கீழிருந்து மேல்நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களை உருவாக்க விளையும் எந்தவோர் அரசியல்வாதியும் தனக்கு மெய்க்காவலர்களாக இருக்கும் பொலிசார் அல்லது அதிரடிப்படையின் பாதுகாப்பை முதலில் கைவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கூற்றுக்களை வாக்கு வேட்டை அரசியல் உத்தியாகவே பார்க்க வேண்டியிருக்கும்.


அண்மை வாரங்களாக சம்பந்தரும், சுமந்திரனும், மாவையும் சற்றுக் கூடுதலாக எதிர்ப்பு அரசியலைக் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாகச் சம்பந்தர் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஐ.நா வதிவிடப் பிரதிநிதி போன்றோரிடம் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் மாவை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது அடுத்த தேர்தலுக்கு முன் வாக்கு வங்கியை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். விஜயகலாவும் அப்படியொரு நோக்கத்தோடு பேசியிருக்கலாம். அது அவருடை பதவியை உடனடிக்குப் பாதித்திருக்கலாம். ஆனால் நீண்ட எதிர்காலத்;தில் அவர் தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். தன்னை ஆதரிக்கும் சாதாரண மக்களின் நம்பிக்கைகளை பிரதிபலித்த காரணத்தால் நெருக்கடிக்குள்ளாகியமை என்பது அவருடைய ஜனவசியத்தைக் கூட்டுமே தவிர குறைக்காது. புலிகள் இயக்கத்தைப் போற்றி அவர் தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்துகிறார். ஆனால் வன்முறைச் சூழலில் இருந்து அது தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை. அதோடு விஜயகலா தனது மெய்க்காவலர்களான பொலிஸ்காரர்களைக் கைவிடப் போவதுமில்லை.

எனவே செயலுக்குதவாத வீரப்பேச்சுக்களை விடுவோம். வித்தியா கொல்லப்பட்;ட போதும் யாழ்ப்பாணமா? வாள்ப்பாணமா? என்ற கேள்வி எழுந்த பொழுதும் வலியுறுத்தப்பட்டதைப் போல கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்புவதே இப்போதைக்குச் சாத்தியமானது. தமிழ்த்தேசிய செயற்பாட்டு அரசியல் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் இங்கிருந்தே தொடங்குகிறது. முதலமைச்சர் கூறும் மக்கள் இயக்கம் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் இங்கிருந்தே தொடங்குகிறது. விட்டுக்கொடுப்பு அரசியல் அல்லது சரணாகதி அரசியல் போன்றவற்றுக்கு மாற்றான மெய்யான எதிர்ப்பு அரசியல் எனப்படுவது இங்கிருந்தே தொடங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *