83 யூலை இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை என்றோ கூற முடியாது. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஓர் இன அழிப்பு. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்தும் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கிருந்த பொருளாதாரப் பலத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு. அதில் அப்போதிருந்த அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வன்முறைகளிற்கு முன் பின்னாக அப்போதைய அரசுத்தலைவர் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் தாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்புத் தருபவைகளாக இருக்கவில்லை.
அதற்கு முன்னரும் தென்னிலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அதுதான் பெரிய அழிவு. அது மட்டுமல்ல இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் வெளியாரின் நேரடித் தலையீட்டிற்கு அது வாசலைத் திறந்து விட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் 2009 மேயைப் போலவே 83 யூலையும் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் திருப்பகரமான மாதமாகும்.
83 யூலை பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவது -அது இலங்கைத்தீவு ஒரு பல்லினத்தன்மை மிக்க நாடாக மேலெழுவதில் தோல்வி அடைந்து விட்டதை நிரூபித்தது. வன்முறைகளிற்கு முன் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்களிலும் அது வெளிப்படையாகத் தெரிந்தது. இரண்டாவது -இலங்கைத் தீவை அது அனைத்துலக அளவில் அம்பலப்படுத்தியது. அவமானப்படுத்தியது. மூன்றாவது -தமிழ் புலப்பெயர்ச்சியின் இரண்டாவது பேரலையையை அது தொடக்கி வைத்தது. தமிழ் பெரு வணிகர்களும் உயர் குழாமும் இலங்கைத் தீவிற்கு வெளியே பாதுகாப்பைத் தேடும் ஒரு சூழலை ஏற்படுத்தியது. நாலாவது-ஆயுதப் போராட்டத்திற்கான ஆட்சேர்ப்புத் தளத்தை திடீரென்று பெருப்பித்தது. அதனால் ஆயுதப் போராட்டம் திடீரென்று வீங்கியது.ஐந்தாவது -இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கு வாசலைத் திறந்து விட்டது.
இதில் கடைசியாகக் கூறப்பட்ட விளைவு. அதாவது இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கு அது வாசலைத் திறந்து விட்டது என்பது இப்போதுள்ள அரசியற் சூழலில் ஆழமாக வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்போதிருந்த பனிப்போர்ச் சூழலில் இலங்கை அரசாங்கம் மேற்கிற்கு விசுவாசமாகக் காணப்பட்டது. அதே சமயம் பிராந்தியப் பேரசாகிய இந்தியா சோவியத் யூனியனுக்கு விசுவாசமாகக் காணப்பட்டது. ஒரு பிராந்தியப் பேரரசை மீறி அதன் தெற்கு மூலையில் ஒரு தண்ணீர்த்துளி அளவில் காணப்பட்ட ஒரு சிறிய தீவு அமெரிக்காவை ஆதரித்தது. இதனால் பிராந்திய மட்டத்தில் அது பனிப்போரை ஊக்குவித்தது. ஜயவர்த்தனா அரசாங்கத்தை பணிய வைப்பதற்காக தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை இந்தியா கையில் எடுத்தது. யூலை இன அழிப்பு அதற்கொரு சாட்டாக அமைந்தது. எனவே பேரரசுகளின் பனிப்போரை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நிஜப் போராக முன்னெடுத்தனர். இந்த நிஜப் போர் இன அழிப்பை மேலும் புதிய கட்டங்களுக்கு விஸ்தரித்தது. அதன் உச்சக்கட்டமே நந்திக் கடற்கரையில் இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையை அரங்கேற்றியது.
யூலை 83ற்காக மனம் வருந்திய சில சிங்களப் படைப்பாளிகளும், புத்திஜீவிகளும் உண்டு. ஆனால் பொறுப்பு மிக்க எந்தவோர் அரசியல்வாதியும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை. ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்று வரையிலும் யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை. யூலை 83ற்காக மன்னிப்புக் கேட்பது என்பது பல்லினத் தன்மை மிக்க ஓர் இலங்கைத் தீவை கட்டியெழுப்பத் தவறியமைக்காக மன்னிப்பு கேட்பதுதான். ஆனால் அவ்வாறு மன்னிப்புக் கேட்பதற்குத் தேவையான குற்ற உணர்ச்சியை சிங்கள அரசியற் பரப்பில் காண முடியவில்லை. இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தத்தால் அப்படியொரு குற்றவுணர்ச்சியை தோற்றுவிக்க முடியவில்லை.
இலங்கைத் தீவு தன்னை ஒரு தேரவாத பௌத்த நாடாக பெருமையோடு காட்டிக்கொள்கிறது. தனது எல்லா ஒலிபரப்புக்களையும் ஒளிபரப்புக்களையும் தொடங்கும் பொழுது மத அனுஸ்டானங்களோடேயே தொடங்குகிறது. இலவசக் கல்வியை இப்பொழுதும் கைவிடவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால் இலங்கைத் தீவின் பௌத்தமும், இலவசக் கல்வியும் ஓர் இனப்படுகொலையைத் தான் உற்பத்தி செய்தனவா? இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் இலவசக் கல்வி முறைமையானது தோற்றுவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?
சிங்களப் பொது உளவியலில் அப்படியொரு குற்றவுணர்ச்சி தோன்றியிருந்திருந்திருந்தால் 2009ம் ஆண்டு மே மாதம் நாற்பதினாயிரத்திற்கும் அறுபதினாயிரத்திற்கும் இடைப்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்படும் ஒரு நிலை தோன்றியிருக்காது. அந்த வெற்றியை பாற்சோறு பொங்கி கொண்டாடும் ஒரு நிலமை தோன்றியிருக்காது. 83 யூலையிலிருந்து பாடங்களைக் கற்றிருந்திருந்தால் 2009 மே இடம்பெற்றிருக்காது. 2009 மேயிலிருந்து பாடங்களைக் கற்றிருந்திருந்;தால் சில மாதங்களுக்கு முன்பு அம்பாறையில்; திகனவில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்திருக்காது. அதாவது இறந்த காலத்திலிருந்து இலங்கைத் தீவு பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.
83 யூலை இன அழிப்பின் போது தமிழ் மக்களின் பொருளாதாரம் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது. ஆனால் அதனால் தமிழ் மக்கள் துவண்டு வீழ்ந்து விடவில்லை. கொழும்பில் அவர்களுடைய தொழிற் துறைகளும் முதலீடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவாக அவர்கள் உலகம் முழுதும் பரந்து போனார்க்ள. ரூபாய்களால் சிந்தித்த முதலாளிகள் இப்பொழுது டொலர்களால் சிந்திக்கும் கோப்பரேற் பெரு முதலாளிகளாக மாறி வருகிறார்கள். தமிழ் டயஸ்பொறாவிற்குள் தோற்றம் பெற்றுள்ள தமிழ்க் கோப்பரேற் நிறுவனங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பெருநகரங்களில் தம்மைப் பலமாக ஸ்தாபித்து வருகின்றன. அது மட்டுமல்ல. கொழும்பில் வங்குறோத்து நிலையை அடைந்த சிங்களப் பெரு நிறுவனங்களையும் அவை விலைக்கு வாங்க முற்படுகின்றன. அது மட்டுமல்ல எந்தக் கொழும்பு மாநகரிலிருந்து தமிழ் மக்களை அகதிகளாக்கி துரத்த முற்பட்டார்களோ அதே கொழும்பு மாநகரில் தமிழ் பெரு நிறுவனங்கள் காணிகளை வாங்கி அடுக்கு மாடிகளைக் கட்டி வருகின்றன. 35 ஆண்டுகளுக்கு முன்பு எந்தத் தமிழ்ப் பொருளாதாரத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டதோ அதே தமிழ்ப் பொருளாதாரம் உலகம் முழுவதும் பரந்து பெரு வணிக நிறுவனங்களாக எழுச்சி பெற்று வருகிறது.
அதாவது 83 யூலை இனஅழிப்பிற்குப் பின்னாலிருந்த அந்தப் பொருளாதாரத் திட்டம் வெற்றி பெறவில்லை. அது தமிழ்ப் பொருளாதாரத்தை உலகப் பரப்பிற்கு உயர்த்தி விட்டிருக்கிறது. யூலை 83 ஏற்படுத்திய பொருளாதார பின்விளைவுகள் இவை. அவ்வாறே 2009 மேயும் அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
83 யூலைக்கும் 2009 மேக்கும் ஓர் அடிப்படையான ஒற்றுமையுண்டு. 83 யூலையானது இந்தியத் தலையீட்டிற்கு வழிவகுத்தது. 2009 மேயானது சீன,மேற்கத்தைய,இந்தியத் தலையீட்டிற்கு வழிவகுத்திருக்கிறது. இந்திய அமைதிப் படையையும் புலிகள் இயக்கத்தையும் ஜயவர்த்தன மோத விட்டார். அதன் மூலம் இந்தியத் தலையீட்டை வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக அவர் நம்பியிருக்கக்கூடும். ஆனால் அதற்குப் பின்னரும் யுத்தம் தொடர்ந்தது. புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்தியாவும் உட்பட உலகப் பேரரசுகள் எல்லாவற்றையும் இணைத்து மகிந்த வெற்றி பெற்றார். தமிழ் மக்களுக்கு எதிராக முழு உலகத்தையும் ஓரணியில் திரட்டியதால் பெற்ற வெற்றி அதுவென்று அவர் இறுமாந்திருக்கக்கூடும். ஆனால் அந்த வெற்றியே அவருக்கு பொறியாக மாறியது. யுத்த வெற்றி வாதத்தின் மீது அவர் கட்டியெழுப்பிய அரசாட்சியை அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து கவிழ்த்தன. அதற்கு தமிழ் மக்களையே மறுபடியும் கருவிகளாகக் கையாண்டன. 2009 மே மாதம் நிகழ்ந்த படுகொலைகளை வைத்து ராஜபக்சக்களை மேற்கு நாடுகள் சுற்றிவளைக்க முற்படுகின்றன. 83 யூலை மாதம் நிகழ்ந்த அதே நாடகம் புதிய நடிகர்களோடு மறுபடியும் மேடையேற்றப்படுகிறது. தமிழ் மக்களைக் கருவிகளாகக் கையாண்டு ஐ.நாவும், மேற்கு நாடுகளும் மகிந்தவை மிரட்டுகின்றன.
2009 மே மாதம் பெற்ற வெற்றியை இறுதி வெற்றி என்று பெரும்பாலான சிங்களத் தலைவர்களும் கருத்துருவாக்கிகளும் மகா சங்கத்தினரும் நம்புவதாகத் தெரிகிறது. அந்த வெற்றி மூலம் இலங்கைத் தீவின் இறைமை பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்த பின்னரும் சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதைத்தான் ராஜபக்சக்களின் ஆட்சி நிரூபித்தது.
தமிழ் மக்களைத் தோற்கடித்ததன் மூலம் இச் சிறிய தீவின் இறைமை பாதுகாக்கப்படவில்லை. அது பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பமாக மாறிவிட்டது என்பதனை 2015 ஜனவரியில் நடந்த ஆட்சி மாற்றம் நிரூபித்தது. அதிலிருந்து தொடங்கி இன்று வரையிலும் ஐ.நாவும், மேற்கு நாடுகளும், இந்தியாவும் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கைத் தீவை பங்கு பிரிக்க முயற்சிக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம் யாருக்கு? எண்ணெய்க்குதங்கள் யாருக்கு? மத்தள விமான நிலையம் யாருக்கு? பலாலி விமான நிலையம் யாருக்கு? என்று இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமது கால்களை ஊன்றுவதற்காக எல்லாப் பேரரசுகளும் இச்சிறிய தீவின் மீது வட்டமிடுகின்றன.
83 யூலைக்குப் பின்னிருந்து பேரரசுகளின் பனிப்போரை நிஜப்போராக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நடத்தினார்கள். இப்பொழுதும் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பேரரசுகளின் மோதல் களத்தின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களே பொம்மைகளாக ஆட்டப்படுகிறார்கள். இதுதானா 2009 மே மாதம் பெற்ற வெற்றி?
நிச்சயமாக இல்லை. இதற்குப் பெயர் இறைமை அல்ல. அண்மையில் விடை பெற்றுச் சென்ற அமெரிக்கத் தூதுவர் அடுத்த ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதனை மறைமுகமாகத் தீர்மானிப்பதற்குப் பெயர் இறைமையா? நியூயோர்க் ரைம்ஸ் கூறுவது போல இலங்கைத்தீவின் தேர்தல் களத்தில் சீனா தனது பல கோடிகளை முதலீடு செய்வதற்குப் பெயர் இறைமையா? அல்லது இச்சிறிய தீவை பல்லினத் தன்மை மிக்கதாகக் கட்டியெழுப்புவதன் மூலம் பாதுகாக்கப்படும் அந்தப் புனிதமான பேறுதான் இறைமையா?
சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இச்சிறிய தீவின் சக நிர்மாணிகள் என்பதனை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கிடையே இச்சிறிய தீவைப் பங்கிடும் பொழுதே இலங்கைத் தீவின் இறைமையானது அதன் முழு அர்த்தத்தைப் பெறுகிறது. மாறாக தமிழ் மக்களை நசுக்குவதற்காக வெளிச் சக்திகளின் உதவிகளைப் பெறும் பொழுதும் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோத விடும் பொழுதும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறி வைத்துத் தாக்கும் பொழுதும் இலங்கைத் தீவின் இறைமையானது வெளிச்சக்திகளால் பங்கிடப்படும் ஓர் அப்பமாக மாறுகிறது. 83 யூலையின் விளைவாக இந்தியா உள் நுழைந்தது. 2009 மேயின் விளைவாக முதலில் சீனா உள்நுழைந்தது. அதன் விளைவாக இப்பொழுது அமெரிக்காவும், இந்தியாவும் உள்நுழைந்துள்ளன. தமிழ் மக்களைத் தோற்கடிக்க வேண்டும், அதற்கு எந்தப் பிசாசோடும் கூட்டுச் சேரத் தயார் என்று சிங்களத் தலைவர்கள் சிந்திக்கும் வரையிலும் இலங்கைத்தீவு ஓர் இறைமையுள்ள தீவாக இருக்கவே முடியாது.