உயிர்த்த ஞாயிறிலன்று திறக்கப்பட்ட புதிய போர் முனை?

போர் வெற்றிக்குப் பின் 2009 இலிருந்து இலங்கை அரசாங்கம் அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்குகளை கொழும்பில் நடத்தி வருகிறது. மைத்திரி பால சிறிசேன அரசுத்தலைவராகிய பின்னரும் அக்கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய அவர் இறுமாப்போடு பின்வருமாறு பிரகடனம் செய்தார் “சிறிலங்காவுக்கு இப்போது எதிரிகள் இல்லை” என்று
ஆனால் அப்படியல்ல சிறிலங்காவுக்கு எதிரிகள் உண்டு என்பதைத்தான் உயிர்த்த ஞாயிறு அன்று வெடித்த குண்டுகள் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின் இனி எதிரிகள் இல்லை என்ற முடிவுக்கு ஏன் மைத்திரி வந்தார்? ஏனெனில் அவர் புலிகள் இயக்கத்தை மட்டும் தான் எதிரிகளாகப் பார்த்தாரா?

அது தான் உண்மை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை வெல்லக் கடினமான ஒரே எதிரியாகக் கருதிய ஓர் அரசுக் கட்டமைப்பானது தமிழ் ஆயுதப் போராளிகள் அல்லாத எதிரிகளும் தனக்கிருக்க முடியும் என்று கணக்கிடத் தவறி விட்டது. தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த வெற்றிப் பெருமிதத்தில் அவர்கள் படிப்படியாக எச்சரிக்கையுணர்வை ,உசார் நிலையை இழந்து வந்ததன் விளைவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் எனலாம். உலகில் வெல்ல முடியாத ஓர் எதிரி என்று கணிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தையே தோற்க்கடித்த ஓர் அரசுக்கட்டமைப்பை வேறு எந்த எதிரியும் என்ன செய்து விட முடியும்? என்று இறுமாப்போடு உசாரற்று இருந்ததன் விளைவே மேற்படி தாக்குதல்கள் எனலாம்.

இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கக் கூடும் என்று 10 நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. புலனாய்வுத் துறை அவ்வெச்சரிக்கையை வழங்கியிருக்கிறது. இந்திய அரசாங்கம் நான்கு நாட்களுக்கு முன்பு எச்சரித்திருக்கிறது. இவ்வாண்டு ஜனவரி 27 ஆம் திகதி பங்களாதேஷ் பத்திரிகை ஒன்று இலங்கையில் இடம்பெறக்கூடிய தாக்குதல்குறித்து விரிவான ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது.இது தொடர்பில் பிளிட்ஸ்- BLITZ இணையதளத்தில் விரிவாக்க கூறப்பட்டுள்ளது.(https://www.weeklyblitz.net/news/bangladesh-newspaper-accurately-anticipated-sri-lanka-jihadist-attacks/ ) மேற்படி பங்களாதேஷ் பத்திரிகையின் கட்டுரையில் இலங்கைத்தீவில் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கும் போதைப் பொருள் வாணிபத்துக்கும் இடையிலான உலகளாவிய உறவுகள் தொடர்பிலும் விரிவான தகவல்கள் உண்டு.

இவ்வெச்சரிக்கைகள் எல்லாவற்றிற்கும் முன்னதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் உதவித் தலைவரான ஸில்மி அகமட் இது தொடர்பாக எச்சரித்திருக்கிறார். குறிப்பாக புலனாய்வுத்துறைக்கு அவர் இது தொடர்பான ஆவணங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கையளித்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் அது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் உசார் நிலையில் வைக்கப்படவில்லை? தாக்குதல்கள் நடந்த கையோடு சம்மந்தப்பட்டவர்களைப் பொலிசும் புலனாய்வுத்துறையும் மிக விரைவாகக் கைது செய்யக் கூடியதாக இருந்தது எதைக் காட்டுகிறது? கடந்த ஒரு வார காலத்துக்குள் முடுக்கிவிடப்பட்;டிருக்கும் முறியடிப்பு நடவடிக்கைகள் எதைக் காட்டுகின்றன? அவர்கள் தொடர்பான விபரங்கள் முன்கூட்டியே தெரிந்திருக்கின்றன என்பதையா?

ஆயின் போதியளவு முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட பேதிலும் அரசாங்கம் முன்தடுப்பு முயற்சிகளை முன்னெடுக்கத் தவறியதற்கு என்ன காரணம்?
இக்கட்டுரையில் தொடக்கத்தில் கூறப்பட்டது போல எதிரியைப் பற்றி இன ரீதியிலான முற்கற்பிதம் காரணமா? இனரீதியாகக் கட்டியெழுப்பப்படட புலனாய்வுக் கட்டமைப்பு காரணமா?அதனால் வேறு எதிரிகளை ஊகிக்க முடியாது போயிற்றா? அப்படியானால் இலங்கைத்தீவின் படைத்துறை மற்றும் புலனாய்வுக்கட்டமைப்பு போன்றன இன ரீதியான முன்முடிவுகளோடும் முற்சாய்வுகளோடும் காணப்பட்டதன் விளைவே இதுவெனலாமா? அதாவது இனச்சாய்வுடைய புலனாய்வுக்கட்டமைப்பு ஒரு காரணம் எனலாமா?

அதே சமயம் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார் மேற்படி முன்னெச்சரிக்கைகள் தமக்குக் கிடைக்கவில்லை என்று. கடந்த ஆறு மாதங்களாக பாதுகாப்புக் கவுன்ஸில் கூட்டங்களுக்கு அவரை மைத்திரி அழைக்கவில்லை என்றும் ரணில் குற்றம் சாட்டுகிறார். குண்டு வெடிப்புக்களின் பின் மைத்திரி நாட்டில் இல்லாத ஒரு சூழலில் கூட்டப்பட்ட பாதுகாப்புக் கவுன்ஸில் கூட்டத்திற்கு ரணில் தலைமை தாங்கியிருக்கிறார். இதன்படி மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான இழுபறியினால் அரசாங்கம் ஏறக்குறைய முடமாக்கப்பட்டிருக்கிறது என்ற பொருள். பாதுகாப்பு அமைச்சரான மைத்திரி பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களில் ரணிலையும் சேர்த்துக் கொண்டு முடிவுகளை எடுத்திருக்கவில்லை என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல நாட்டைவிட்டு வெளிச் செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சரவையும் அவர் நியமித்திருக்கவில்லை. இப்படிப் பார்த்தால் பழி அதிகம் மைத்திரியின் மீதே விழுகிறது.

ஆனால் இப்படிப் பழியை மைத்திரி மீது போட்டு விட்டு ரணில் தப்ப முடியாது என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அவருடைய அமைச்சரவைக்குள் இருக்கும் சில அமைச்சர்களுக்கு மேற்படி முன்னெச்சரிக்கைகள் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தகப்பனுக்கு இது பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் அது ஏனைய அமைச்சர்களுக்கும் பகிரப்பட்டிருக்கும். நிச்சயமாக இது ரணிலுக்கும் கூறப்பட்டிருக்கும. அதுமட்டுமல்ல பொலிஸ்மா அதிபராக இருப்பவர் ரணிலுக்கு நெருக்கமானவராக பார்க்கப்படுகிறார். எனவே ரணிலுக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. எனினும் ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான இழுபறிகளின் நேரடி விளைவு மேற்படி அழிவுகள் எனலாம. இப்படிப்பார்த்தால் மேற்படி தாக்குதல்களுக்குரிய நேரடிக்காரணங்களில் ஒன்று கடந்த ஒக்ரோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக்குழப்பம் எனலாமா? சிறிலங்கா அந்த ஆட்சிக் குழப்பத்தின் விளைவுகளையே தொடர்ந்தும் அறுவடை செய்கிறது எனலாமா?

சரி அந்த ஆட்சிக்குழப்பம் எதனால் வந்தது? அது தாமரை மொட்டின் எழுச்சியால் வந்தது. தாமரை மொட்டின் எழுச்சியென்பது என்ன? யுத்த வெற்றி வாதத்தின் மீள் எழுச்சிதான.யுத்த வெற்றி வாதம் என்றால் என்ன? பெருந்தேசிய வாதத்தின் 2009 இற்குப் பிந்திய வடிவம் தான. எனவே பெருந்தேசிய வாதத்தின் 2018 மீள் எழுச்சியின் விளைவாக ரணில் மைத்திரி அரசாங்கம் ஸ்திரமிழந்ததன் விளைவே மேற்படி குண்டுத்தாக்குதல்கள் எனலாம். அதாவது பெருந்தேசியவாதம் இந்த நாட்டைத் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற ஒரு நிலைக்குள்ளேயே வைத்திருக்கிறது. அது நாட்டை எப்பொழுதும் வெளிச் சக்திகளுக்குத் திறந்தே வைத்திருக்கிறது.

குண்டுதாக்குதல்களை நடாத்தியது ஓர் அனைத்துலக இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் உள்ளூர் வலைப்பின்னலே என்று கூறப்படுகிறது. சிறீலங்கா ஓர் அனைத்துலக யுத்தக்களத்திற்குள் இழுக்கப்பட்டுவிட்டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் பெருமளவிற்கு உள்ளூர்ப் பரிமாணத்தைக் கொண்டது. ஆனால் இஸ்லாமியத் தீவிரவாதம் முழுக்க முழுக்க அனைத்துலகப் பரிமாணத்தைக் கொண்டது. ஓர் உள்நாட்டுப் போரை வெற்றி கொண்ட இறுமாப்பில் உசார் அற்றிருந்த இலங்கைத் தீவு ஒரு அனைத்துலகப் போரிற்குள் இழுக்கப்பட்டு விட்டது. சிரியாவில் ISISஅமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின் நிகழ்ந்த முதலாவது பெரிய தாக்குதல் இது. தோற்கடிக்கப்பட்ட ஓர் அனைத்துலகத் தீவிரவாதம் அதன் முதற் பழிவாங்கற் களமாக சிறிலங்காவை ஏன் தேர்ந்தெடுத்தது?

சிறிலங்காவோடு ஒப்பிடுகையில் முஸ்லீம் சமூக்தவர் மோசமாகப் பாதிக்கப்படும் வேறு நாடுகள் ஆசியாவில் உண்டு. உதாரணமாக பர்மாவில் ரோஹியங்கா முஸ்லீம்கள் இன அழிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இப்படிப் பார்த்தால் ஆசியாவில் முஸ்லீம்கள் ஒப்பீட்டளவில் அதிகம் அச்சுறுத்தப்படும் ஒரு நாடாக இல்லாத சிறிலங்காவைக் குறிவைத்து தாக்க வேண்டிய ஒரு தேவை ஏன் ஓர் உலகளாவிய இஸ்லாமிய அமைப்புக்கு ஏற்பட்டது?

ஏனெனில் இலங்கைத் தீவின் பாதுகாப்புக் கட்டமைப்பும் பாதுகாப்புப் பொறிமுறைகளும் அந்தளவிட்குப் பலவீனமாகக் காணப்பட்டுள்ளன. அதற்குக் காரணம் என்ன? இச்சிறிய தீவின் இன ரீதியாகக் கட்டியெழுப்பப்பட்ட பாதுகாப்புக் கட்டமைப்பு அப்படியொரு எதிரியை கற்பனை செய்து கூடப் பார்க்காமல் உசாரற்றிருந்தது ஒரு காரணமா? அல்லது ஒக்டோபர் ஆட்சிக் குழப்பத்தின் விளைவாக அரசு யந்திரம் வினைத்திறன் குன்றிப்போயிருந்தமை ஒரு காரணமா? அல்லது மகிந்த ராஜபக்ச கூறுவது போல படைத் தரப்பும் புலனாய்வுத் தரப்பும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் பலவீனமாக்கப்பட்டு விட்டமை ஒரு காரணமா? அல்லது இப்படிபட்ட தாக்குதல்களால் எதிர் காலத்தில் நன்மை கிடைக்கும் என்று கருதிய தரப்புக்கள் அதைத் தடுக்காமல் விட்டனவா?

படைத் தரப்பு மறுபடியும் தெருவில் இறங்கி விட்டது. சோதனைச் சாவடிகளும் சோதனைகளும் தொடக்கி விட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் அடையாள அட்டை போன்ற ஆவணங்களைக் காவும் ஒரு வாழ்க்கை தொடங்கிவிட்டது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களைப் பதியும் நடைமுறையும் தொடங்கிவிட்டது. பயணிகளை இறக்கிச் சோதிப்பது பொதிகளை சோதிப்பது என்று மறுபடியும் ஏறக்குறைய ஒரு யுத்தச் சூழல் தோன்றிவிட்டது. படைத்தரப்பிற்கும் ராஜபக்ஸக்களுக்கும் இடையிலான உறவு சீமெந்தினால் கட்டப்பட்டது என்று குசல பெரேரா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூறியுள்ளார். அப்படியானால் படைத் தரப்பு முன்னால் வருவது யாருக்கு நன்மையாக முடியும்?

ராணுவத்தனம் மிக்க இறுக்கமான ஒரு ஆட்சி வேண்டும் என்று ஒரு பகுதி சிங்கள மக்கள் கூறத் தொடக்கி விடடார்கள் இவர்களில் பலர் ராஜபக்ஸக்களுக்கு முன்பு ஆதரவாக இருந்தவர்கள் அல்ல. நீர்கொழும்பில் நடந்த இறுதிக் கிரியைகளில் பங்குபற்றச் சென்ற நாமல் ராஜபக்சவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு ராஜபக்ச ஆட்சியை திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். அதாவது ராஜபக்ச ஆட்சி போன்ற ஒரு ராணுவப் பரிமாணம் அதிகமுடைய இறுக்கமான ஆட்சியின் கீழ் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நிகழாது என்று அவர்கள் நம்புகிறார்களா?
ஆனால் ஓர் உள்நாட்டுப் போரை வெற்றி கொண்ட ஒரு நாடு பத்து ஆண்டுகளின் பின் ஓர் அனைத்துலகப் போர் அரங்கிற்குள் இழுத்துக் கொண்டு வரப்பட்டதற்குக் காரணங்கள் அந்த உள்நாட்டுப் போரிற்கு காரணமான இனவாதத் தன்மை மிக்க பாதுகாப்புக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்புக்களும் இனவாதத்தின் 2009 இற்குப் பிந்திய வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட ஆட்சிக் குழப்பத்தின் விளைவாக நாட்டின் தலைமை பிளவுண்டு காணப்படுவதும்தான் என்பதை சிறிலங்கா எப்பொழுது கண்டுபிடிக்கப் போகின்றது? இன்னும் எவ்வளவு விலை கொடுத்துக் கண்டுபிடிக்கப் போகின்றது? பழைய யுத்தத்தின் மூல காரணங்கள் அகற்றப்படாத ஒரு நாட்டில் ஒரு புதிய போர் முனை திறக்கப்பட்டுள்ளதா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *