யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ஒரு காலம் எந்த படைத்தரப்பிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரினோமோ அதே படைத்தரப்பு இப்பொழுது பெண்கள் பயிலும் பாடசாலைகளின் வாயிலில் காவலுக்கு நிற்கிறது” என்று. அதற்கு கட்டளைத் தளபதி சொன்னாராம் அவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் அங்கே நிற்கிறோம் என்று.
யாழ். சர்வமத சங்கத்தைச் சேர்ந்த ஓர் இந்து மத தலைவருக்கும் மேற்சொன்ன தளபதி அவ்வாறு தான் கூறியிருக்கிறார். தமிழர்களை பாதுகாப்பதற்காகத்தான் சோதனைச் சாவடிகளும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக.
அதே தளபதியிடம் கடந்த கிழமை பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் கதைத்திருக்கிறார். அதன்போது வடக்கு கிழக்கில் சோதனை நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுவது பற்றிய முறைப்பாடுகளை அவரிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு பதில் கூறிய மேற்படி தளபதி தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் அவ்வாறு செய்கின்றோம் என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் மனோகணேசன் கேட்டுக் கொண்டதையடுத்து ஊடகக் கவனிப்புடைய A 9 சாலை போன்றவற்றில் சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஆனால் ஊடகக் கவனிப்புக் குறைந்த உள்வீதிகளில் உதாரணமாக கிளிநொச்சியின் உள்வீதியான பன்னங்கண்டி வீதியில் சோதனைச் சாவடியில் பயணிகள் வாகனங்களைப் பதிய வேண்டும் .அப்படித்தான் காரைநகரின் வாசலில் பொன்னாலைச் சந்தியில் சோதனைகள் உண்டு. வாகனப் பதிவும் உண்டு.
வடக்கு கிழக்கில் பாடசாலைகளின் முன் இரண்டு படையாட்கள் காவலுக்கு நிற்கிறார்கள். பாடசாலைகள் தொடங்கும் முடியும் நேரங்களில் அவர்கள் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் மிகவும் ரிலாக்சாக நிற்கிறார்கள். பாடசாலைப் பிள்ளைகளை தாங்களே பாதுகாப்பதான ஒரு தோரணை அவர்களுடைய முக பாவனைகளிலும் உடல் மொழியிலும் காணக் கிடைக்கிறது.
அவ்வாறு பாதுகாக்கும் கடமையின் போது அவர்கள் எதிர்த் தரப்பிடம் இருந்து வரக்கூடிய ஆபத்துக்களை குறித்த அச்சமும் திகிலுமின்றி மிகவும் சாவகாசமாக ஒரு வித கதாநாயகத் தனத்தோடு பள்ளிக்கூடங்கள் பொது இடங்களின் வாசல்களிலும் கோவில் வாசல்களிலும் திருவிழாக்களின் போதும் காணப்படுகிறார்கள்.
அவர்கள் அவ்வாறு ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. இது ஈழப் போர்க்களம் அல்ல. இந்த யுத்தம் ஆயுதமேந்திய படைகளைக் குறி வைக்கவில்லை. மாறாக ஆயுதம் ஏந்தியிராத அப்பாவிகளைத்தான் இலக்கு வைத்திருக்கிறது. நாங்களும் இந்த யுத்தத்தின் ஒரு பகுதி என்பதைக் குறித்த எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இன்றி வழமைபோல தேவாலயங்களில் வழிபடச் சென்ற அப்பாவிகளான பக்தர்களைத்தான் ஜிகாத் அமைப்பு வேட்டையாடியிருக்கிறது. எனவே இந்த யுத்தத்தில் படைத்தரப்பு ஓர் இலக்கு அல்ல என்பது படைத் தரப்பை பெருமளவிற்கு ரிலாக்சாக வைத்திருக்கிறது. அதோடு கடந்த பத்தாண்டுகளாக அவர்களுக்கு பெரிய அளவு வேலைகள் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது வேலை கிடைத்திருக்கிறது. அதுவும் காவல் காக்கும் வேலை. எனவே ஒருவித ரிலாக்ஸான மனோநிலையோடு கதாநாயகத்தனமாக அவர்கள் பாடசாலைகளின் முன்னே நிற்கிறார்கள். வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் கூலிங் கிளாஸ்களையும் அணிந்தபடி நிற்கிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக உலக சமூகத்தின் முன் எந்த ஒரு படைத்தரப்பை தமிழ் மக்கள் போர்க் குற்றவாளிகளாக காட்டி வருகிறார்களோ எந்த ஒரு படைத்தரப்பு இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் உலக சமூகத்திடம் குற்றம் சாட்டி வருகிறார்களோ அதே படைத்தரப்பு இப்பொழுது தமிழ் பள்ளிக்கூட பிள்ளைகளையும் பக்தர்களையும் பாதுகாக்கும் ஒரு பொறுப்பை ஏற்றிருப்பது என்பது ஒரு தலைகீழ் மாற்றம்.
ஒருபுறம் ஐநாவில் தமிழ் தரப்பு போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக நீதி கேட்கிறது. இன்னொருபுறம் எந்த ஒரு படைத்தரப்புக்கு எதிராக ஐநாவில் தமிழ்த் தரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றதோ அதே அதே படைத்தரப்பு தமிழ் தரப்பின் பள்ளிக்கூடங்களையும் ஆலயங்களையும் பாதுகாக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த முரண் வளர்ச்சியானது ஜிகாத் தாக்குதல்களின் நேரடி விளைவாகும். இது அனைத்துலக அளவில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்த கூடியது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் தமிழ் அரசியலானது இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் பலவீனப்பட்டுள்ளது என்பது அல்ல. இதைவிட வேறு பல இடங்களிலும் அது பலவீனமடைந்துள்ளது.
முதலாவதாக கூட்டமைப்பின் யாப்பு உருவாக்க முயற்சிகள் முழுவதுமாக கைவிடப்பட்டு விட்டன. யாப்பு முயற்சிகளைக் காட்டித்தான் சம்பந்தர் தனது வாக்காளர்களின் நம்பிக்கைகளை கட்டியெழுப்பி வந்தார் ஆனால் இப்பொழுது யாப்பு முயற்சிகள் பின் தள்ளப்பட்டு விட்டன.
இரண்டாவதாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் செயல்பாட்டாளர்களும் முடக்கப்பட்டிருக்கிறார்கள். யாரை முடக்க வேண்டுமோ அவர்களின் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பிரயோகிக்கலாம் என்ற நிலைமை தோன்றியிருக்கிறது.
மூன்றாவது -ராஜபக்ச அணிவெல்லக் கூடிய வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. ஜிகாத் தாக்குதல்களின் விளைவாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் மறுபடியும் மேலோங்கத் தொடங்கியுள்ளது. இது இனவாத அலையொன்றைத் தோற்றுவிப்பதற்கு தேவையான தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
ஜிகாத் தாக்குதல்களுக்கு முன்பு மஹிந்த அணி யாப்புருவாக்க முயற்சிகளை முன் வைத்து ஒரு இனவாத அலையைத் தோற்றுவிக்கக்கூடிய நிலைமைகளே காணப்பட்டன. ஆனால் இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சிங்களப் பொது உளவியலை தூண்டிவிடுவதன் மூலம் இனவாத அலையை பெரிதாக்கலாம். இதனால் முஸ்லிம் வாக்குகளை சிலவேளைகளில் ராஜபக்சே இழக்க நேரிடலாம். எனினும் தனிச்சிங்கள வாக்குகளால் அரசுத்தலைவர் ஆகும் திட்டம் எதுவும் அவர்களிடம் இருந்தால் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து இனவாத அலையை ஆகக் கூடிய மட்டும் தூண்டக் கூடும்.
நாலாவது- உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து தமிழ்த் தரப்பு உலக அரங்கில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அனைத்துலக யுத்த களத்திற்குள் நாடு இழுத்துத்து வரப்பட்டு விட்டது. இதனால் அனைத்துலக சமூகத்;தின் கவனம் ஜிகாத் அமைப்புக்கு எதிராகக் குவிக்கப்பட்டு விட்டது. இதனால் தமிழ் மக்கள் முன் வைத்த போர்க்குற்ற விசாரணை இனப்படுகொலைக்கு எதிரான நீதி போன்ற விடயங்கள் பின் தள்ளப்பட்டு விட்டன. அது மட்டுமல்ல உலக சமூகம் இப்பொழுது ஜிகாத்தை எப்படி தோற்கடிக்கலாம் என்பதிற்தான் தனது கவனம் முழுவதையும் குவித்து வருகிறது. இதனால் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படக்கூடிய கொடுமைகளைகளின் மீது உலகத்தின் கவனம் அதிகம் ஈர்க்கப்படாது.
ஆனால் இந்த இடையூட்டுக்குள் அரசாங்கமும் அதன் உபகரணங்களான திணைக்களங்களும் மகா சங்கத்தவர்களும் யுத்தத்தை வேறு வழிகளில் தொடர்கிறார்கள். முல்லைத்தீவில் ஒரு பிள்ளையார் கோயிலுக்கு அருகே பௌத்த கோவில் கட்டப்படுக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி பிக்குகள் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவுக்கு கடந்த வாரம் வருகை தந்த அரசுத்தலைவர் அங்கே ஒரு தமிழ் குளத்தின் பெயரை சிங்களத்தில் மாற்றி எழுதி அதில் மீன் குஞ்சுகளை விட்டிருக்கிறார். அதாவது உலகத்தின் கவனம் ஜிகாத்தை எப்படி முறியடிப்பது என்பதில் குவிக்கப்பட்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அரசாங்கமும் அதன் உபகரணங்களும் தமிழ் மக்கள் மீது யுத்தத்தை வேறு வழிகளில் தொடர்ந்து வருகின்றன.
ஐந்தாவது – புதிய யாப்பொன்றைக் கொண்டு வரப்போவதாக வாக்களித்த கூட்டமைப்பு இப்பொழுது வீதிகளை திருத்துவதிலும் கட்டடங்களைக் கட்டி எழுப்புவதிலும் தனது கவனத்தைக் குவித்து வருகிறது. கம்பெரலிய திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் அபிவிருத்தி அரசியலில் ஒரு பங்காளியாகியதன் மூலம் தமிழ் மக்களின் உரிமை அரசியலை பின்தள்ளும் ஒரு வேலைக்குக் கூட்டமைப்பு உடந்தையாக காணப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான மேற்கண்ட விளைவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அத்தாக்குதல்கள் தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தி இருக்கின்றன. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் தமிழ் மக்களின் உரிமை மைய அரசியலுக்கு ஒப்பீட்டளவில் பாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு பின்னணியில் புதிய நிலைமைகளை எதிர்கொள்ள புதிய உபாயங்களுடன் களமிறங்கும் புதிய தலைமைகள் தமிழ் மக்களுக்கு தேவை.
இந்தியாவில் மறுபடியும் நரேந்திர மோடி தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பதவியேற்றதும் அவர் முதலாவதாக மாலை தீவுக்கும் இரண்டாவதாக இலங்கைக்கும் வருகை தந்திருக்கிறார். மாலைதீவின் முன்னைய அரசாங்கம் சீனாவுக்கு நெருக்கமாயிருந்தது. அது சீனாவுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்திருந்தது. அந்த உடன்படிக்கையானது மாலைதீவை சீனாவின் கடல் வழிப் பட்டுப் பாதைத் திட்டத்துக்குத் திறந்துவிடுவதாக அமைத்தது. அது சீனாவின் பெல்ட் அன்ட் றோட் திட்டத்தில் மாலைதீவையும் பங்காளியாகியது. இச்சீனச் சார்பு அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதம் தோற்கடிக்கப்பட்டு இப்போதுள்ள புதிய அரசாங்கம் பதவியேற்றது. இவ்வரசாங்கம் சீனாவை விடவும் இந்தியாவை நெருங்கி வருகிறது. நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய அரசுத்தலைவருடன் பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட ஆறு உடன்படிக்கைகளைச் செய்துள்ளார். குறிப்பாக மாலைதீவுக் கடலில் சீனாவின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் இந்தியக் ராடர்களைப் பொருத்தும் ஓர் உடன்படிக்கையும் இவற்றுள் அடங்கும்.
மோடியின் மாலை தீவு விஜயத்தின் பின் மாலைதீவுகளின் அரசுத்தலைவர் இலங்கைக்கு அடுத்த வார இறுதியில் வருகிறார். ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று அவர் வருகிறார். எனவே இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தல் ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கும. அச்சித்திரத்தை விளங்கி ஈழத்து தமிழ் அரசியலைத் திட்டமிடவல்ல தலைவர்கள் தேவை.
அதேசமயம் தமிழகத்தில் நரேந்திர மோடியின் கட்சி தோல்வி கண்டிருக்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு தடவை தனது தனித்துவத்தை வெளிக்காட்டியிருக்கிறது. புதிய முதல்வர் ஸ்டாலினை எப்படி அணுகுவது ? ஈழத்தமிழர்களுக்கு அதிகம் நெருக்கமாகக் காணப்படும் வைகோவின் கை ஒப்பீட்டளவில் ஓங்கியிருக்கிறது. தொல்.திருமாவளவன், கனிமொழி போன்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் எப்படிக் கையாள்வது?
அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான உலக சூழலையும் உள்நாட்டுச் சூழலையும் இந்திய பொதுத் தேர்தலின் பின்னரான பிராந்தியச் சூழலையும் குறிப்பாக தமிழகச் சூழலையும் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து எப்படிக் கையாள்வது என்பது குறித்து புதிய தரிசனத்தையும் புதிய வியூகத்தையும் கொண்ட ஒரு புதிய தமிழ்த் தலைமை தேவை. இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் தலைமைகளுள் யார் அப்படிப்பட்ட ஒரு தலைமையாக மேலெழப் போகிறார் ?