ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து

பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கலந்து கொண்டு ராக்கிங்கை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்து சிந்தித்தார்கள். அதன் போது ஒரு மூன்றாம் வருட மாணவன் எழுந்து ஆசிரியர்களை பார்த்து பின்வருமாறு கேட்டிருக்கிறார் “உங்களுடைய காலத்தில் ராக்கிங் செய்யாத யாராவது ஒருவர் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று. அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஓர் இளம் விரிவுரையாளரைத் தவிர வேறு யாருமே அந்த மாணவருக்கு பதில் சொல்லக் கூடியதாக இருக்கவில்லை.

ஏன் பதில் சொல்ல முடியவில்லை? ஏனெனில் ராக்கிங் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் ஓர் உப பண்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு பண்பாடாக இருப்பதனால்தான் இன்று வரையிலும் அதை சட்டத்தின் மூலம் மட்டும் கையாள்வது கடினமாக இருக்கிறது.

ஜனநாயகம் ஒரு பெரும் பண்பாடாக செழிப்பாக வளர்த்தெடுக்கப்படாத ஒரு சமூகத்தில் ராக்கிங் ஓர் உப பண்பாடாக தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.

எமது கல்விப் புலத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்ல தொழில்நுட்ப கல்லூரிகள் பாடசாலைகள் முதலாக பெரும்பாலான வளைந்தோருக்கான கல்விப் பரப்புகளில் அதுவோர் உப பண்பாடாகப் பேணப்ப்படுகிறது. எனவே ராகிங்கை கட்டுப்படுத்துவது என்பது தனிய ஒரு சட்ட விவகாரம் மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் அது ஒரு பண்பாட்டு விவகாரம்.

நமது கல்விப் பரப்பில் ஜனநாயகத்தை ஒரு பாரம்பரியமாகக் கட்டி எழுப்பும் போதே ராக்கிங் என்ற உப பண்பாடு வழக்கொழியும்.
எமது கல்விப் பரப்பில் ஜனநாயகம் குறைவு. வகுப்பறைகளில் ஜனநாயகம் குறைவு. அதிபர் அலுவலகங்களில் ஜனநாயகம் குறைவு. கல்வித் திணைக்களத்தில் ஜனநாயகம் குறைவு. மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவில் ஜனநாயகம் குறைவு. மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான உறவில் ஜனநாயகம் குறைவு. ஆசிரியருக்கும் அதிபருக்கும் இடையிலான உறவில் ஜனநாயகம் குறைவு. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கல்வித் திணைக்களத்திற்கும் இடையிலான உறவில் ஜனநாயகம் குறைவு.

கல்விப்புலத்தில் மட்டுமல்ல சமூகத்தின் எல்லா நிறுவனங்களிலும் இக்குறைபாடு இருக்கிறது. தனக்குக் கீழ் வேலை செய்யும் அலுவலர்களை எழுப்பி வைத்துக் கேள்வி கேட்க விரும்பும் எந்த ஓர் உயரதிகாரியிடமும் ஜனநாயகம் இல்லை. மேலதிகாரியுடன் கைபேசியில் பேசும் போதும் எழுந்து நிற்கும் கீழ்ப்படிவுள்ள அலுவலர்கள் உள்ளவரை உயர் அதிகாரிகள் கீழதிகாரிகளை நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்பார்கள்தானே? என்று ஒரு மூத்த சிவில் அதிகாரி பகிடியாகக் சொன்னார்.

ஆஸ்பத்திரிகளில் மருத்துவருக்கும் தாதியருக்குமிடையே மருத்துவர் மற்றும் தாதியருக்கும் நோயாளருக்குமிடையே எப்படிபட்ட உறவு உண்டு? மதநிறுவனங்களின் அதிகாரக் கட்டமைப்பு ஜனநாயகமானதாக உள்ளதா? வீடுகளில் ஆண் பெண் உறவு உட்பட எல்லா உறவுகளிலும் ஜனநாயகம் உள்ளதா? எந்தத் தமிழ்க் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் உண்டு? எந்த ஆயுதப் போராட இயக்கத்திடம் உட்கட்சி ஜனநாயகம் இருந்தது?

கடந்த கிழமை உருவாக்கப்பட்ட விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டிற்குள் பங்காளிக் கட்சிகளுக்கும் விக்னேஸ்வரனின் கட்சிக்கும் இடையே சம அந்தஸ்து பேணப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. விக்னேஸ்வரனின் கட்சிக்குள் மட்டுமில்லை பேரவைக்குள் மட்டுமில்லை கூட்டமைப்புக்குள் மட்டுமில்லை தமிழ் மிதவாத பாரம்பரியத்திலேயே உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு பேணப்பட்டிருக்கிறது? சம்பந்தர் ஒரு ஜனநாயகச் சர்வாதிகாரி என்று ஒரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குக் கூறினார். ஆயுதப் போராட்டத்தில் உட்கட்சி ஜனநாயகம் அனேகமாக இருக்கவேயில்லை.

1980களில் இறுதியில் தனது கருத்துக்களை துணிச்சலாக முன்வைத்த காரணத்துக்காக கொல்லப்பட்டவர் மருத்துவர் ரஜனி திரணகம. இவர் அந்நாட்களில் தன்னோடு பணிபுரிந்த ஓர் இளம் மருத்துவரிடம்-அவர் இப்பொழுது யாழ் போதனா மருத்துவமனையில் ஒரு மூத்த மருத்துவராக உள்ளார்-பின்வருமாறு கேட்டிருக்கிறார் “இந்த அளவுக்கு ஜனநாயக மீறலை மனித உரிமை மீறலை எமது இளையவர்கள் எங்கிருந்து கற்றிருக்கிறார்கள்? எமது சமூக நிறுவனங்களிடமிருந்து தானே ? எமது பாடசாலைகள், எமது மத நிறுவனங்கள், எமது சனசமூக நிலையங்கள், எமது வீடுகள் போன்றவற்றிலிருந்துதானே நமது இளைஞர்கள் மனித உரிமை மீறல்களை கற்றிருக்கிறார்கள்? எனவே இந்த வன்முறைகளுக்கு நாங்களும் பொறுப்பு” என்று.

உண்மை. ஆயுதப்போராட்டம் எனப்படுவது இன ஒடுக்கு முறையின் விளைவு. ஆனால் ஆயுதப் போராட்டத்தில் காணப்பட்ட மனித உரிமை மீறல்கள் எனப்படுபவை சமூகத்தின் பண்பாட்டு வேர்களில் இருந்துதான் வந்தன. அதற்கு இன ஒடுக்குமுறை முழு அளவு காரணம் அல்ல. குறிப்பிட்ட சமூகத்தின் ஜனநாயகப் பாரம்பரியம் பலவீனமாக இருக்கிறது என்று பொருள.

இதுதான் ராக்கிங் போன்ற எல்லா விவகாரங்களுக்கும் காரணம். தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயகப் பாரம்பரியம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பாலர் பாடசாலைகளிலேயே சிறந்த பெறுபேறுகளுக்காக பிள்ளைகள் மிரட்டப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளை திருத்துவதற்காக பிரம்பை தூக்கும்போது வகுப்பறை ஜனநாயகம் பலியிடப்படுகிறது. வீட்டில் ஜனநாயகம் பலியிடப்படுகிறது. சிறந்த பெறுபேறுகளுக்காக முதலில் பலியிடப்படுவது சிறுவர் உரிமைகள் அல்லது மாணவர்கள் உரிமைகள் ஆகும். இது பாலர் பாடசாலையில் இருந்தே தொடங்குகிறது.

மாணவர்களை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ தண்டிப்பது இலங்கைதீவின் சட்டங்களைப் பொறுத்தவரை தண்டனைக்குரிய குற்றம் . ஆனால் சிறந்த பெறுபேறுகளுக்காகவும் ஒழுக்கத்துக்காக்கவும் மாணவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இதைச் சமூகமும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறது. குறிப்பாக பெற்றோர் ஏற்றுக் கொள்கிறார்கள்.அடியாத மாடு படியாது என்று கூறி தண்டனை நியாயப்படுத்தப்படுகிறது. அது சட்டப்படி குற்றமாக இருந்த போதிலும் பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் அது ஒரு வழமையாகக் காணப்படுகிறது.

இங்கிருந்து தொடங்குகிறது கல்விப் பரப்பில் ஜனநாயக மீறல், மனித உரிமை மீறல். இதைத் தடுப்பதற்காக இப்பொழுது திறன் வகுப்புகள் பள்ளிக்கூடங்கள் தோறும் உருவாக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு அணை என்ற பெயரில் ஓர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த தண்டனைகளை கட்டுப்படுத்துவதே இந்த அமைப்பின் இலக்காகும்.
எனினும் வகுப்பறைகளில் உடல் சார் தண்டனை பரவலாக நடைமுறையில் உண்டு. அது ஒரு பண்பாடு. அதைச் சட்டத்தின் மூலம் மட்டும் தடுக்க முடியாது. வகுப்பறை ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும் போதே அது சாத்தியப்படும்.

வகுப்பறை ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவது என்றால் அதைக் கல்வித் திணைக்களத்தில் இருந்து தொடங்க வேண்டும். திணைக்களத்திற்கும் அதிபர்களுக்கும் இடையிலான உறவிலும் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவிலும் திணைக்களத்துக்கும் ஆசிரியர்களுக்கும் கிடையிலான உறவிலும் இல்லாத ஜனநாயகத்தை வகுப்பறைகளில் உருவாக்க முடியாது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வீடுகளில் இல்லாத ஜனநாயகத்தை வகுப்பறைகளில் உருவாக்க முடியாது. எனவே இது பரந்த தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு பண்பாட்டு மாற்றம். இதைச் சட்டங்களால் மட்டும் உருவாக்க முடியாது.
இவ்வாறானதோர் கல்விச் சூழலில் தான் உயர் கல்வி நிறுவனங்களில் ராக்கிங் ஒரு பண்பாடாக வளர்கிறது.

கிளிநொச்சி வளாகத்தில் நடந்த ராக்கிங் தொடர்பில் சில மாணவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பம் குறிப்பாக கைபேசிச் செயலிகள் அவர்களைக் காட்டிக் கொடுத்திருக்கின்றன. சில மாணவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் சில மாணவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டிவிட்டு மற்றவர்கள் தப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதில் ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. ஒரு பண்பாட்டை ஏற்றுக்கொண்ட,அதை பின்பற்றுகின்ற எல்லாருக்கும் இதில் கூட்டுப்பொறுப்பு உண்டு. இது ராக்கிங் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல சமூகத்தின் ஜனநாயகப் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம். எனவே இதை அந்தத் தளத்தில் வைத்தே அணுக வேண்டும். இதை ஒரு சட்டப் பிரச்சனையாக மட்டும் அணுகாமல் அதற்கும் அப்பால் ஒரு பண்பாடாக கருதி எதிர்கொள்ள வேண்டும்.

ராக்கிங் தொடர்பில் சில பல்கலைக்கழக மாணவர்களின் நேர்காணல்களை பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ராகிங்கை நியாயப்படுத்தவில்லை. அதேசமயம் இது தொடர்பில் மாணவர்களைக் குறை கூறும் எவரும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அரசியல் போராட்டங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற தொனி அவர்களுடைய கருத்துக்களில் இருக்கிறது.

ஓர் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு மாணவ சமூகம் தனக்குள் இருக்கும் ஒடுக்குமுறைக்குரிய ஓர் உப பண்பாட்டை எப்படிப் பார்க்கிறது? இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு மாணவ சமூகம் சீனியர் ஜூனியர் என்ற அடிப்படையில் தனக்குள் ஒடுக்குமுறைப் பண்பாட்டை எப்படிப் பேண முடியும்?

யாழ் பல்கலைக்கழகம் ஈழப் போராட்டத்தின் முன்னணி மாணவப் படையாக செய ற்பட்டிருக்கிறது. ராக்கிங் தொடர்பில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஒரு மாணவன் காணாமல் போயிருக்கிறார்.எனினும் தமிழ் பல்கலைக்கழகங்கள் ஈழப்போராட்டத்தில் சரியான நேரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுத்துப் போராடி வந்திருக்கின்றன.

குறிப்பாக 2009க்கு பின் எந்த ஒரு அரசியல் இயக்கமும் செய்யத் தயங்கிய போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்காக சிலர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல கடந்த ஆண்டு மாணவ ஒன்றியத்தின் இரண்டு தலைவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். இப்பொழுதும் அந்த வழக்கு அவர்களைத் தொடர்கிறது. அந்த மாணவத் தலைவர்கள் இப்பொழுது மாணவர் ஒன்றியத்தின் பொறுப்புக்களில் இல்லை. அவர்களுடைய படிப்பு முடிந்துவிட்டது. ஆனால் மாணவர்கள் என்ற ஒரு கூட்டு அடையாளத்துக்காக அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அவர்கள் இப்பொழுது உதிரிகளாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் முன்வந்து போராடும் ஒரு மாணவ சமூகம் ஏன் ராகிங்கை நிறுத்த முடியாதிருக்கிறது? இங்கேதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தித்தின் பலவீனம் தெரிகிறது.

ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்குவது. எந்த அடிப்படையில் திரள் ஆக்குவது ? நிச்சயமாக மத அடிப்படையில் அல்ல. பிராந்திய அடிப்படையில் அல்ல. சாதி அடிப்படையில் அல்ல. பால் அடிப்படையிலும் அல்ல. சீனியர் ஜூனியர் என்ற அடிப்படையிலும் அல்ல. அவ்வாறு சமூக அசமத்துவத்தின் பேரால் மக்களை, மாணவர்களைத் திரளாக்குவது தேசியம் அல்ல. மாறாக ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் அதாவது ஜனநாயக அடித்தளத்தின் மீது மக்களை, மாணவர்களைத் திரளாக்க வேண்டும். இதைத்தான் தேசியவாதத்தை நியாயப்படுத்தும் அறிஞர்கள் “அதன் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும” என்று கூறுகிறார்கள்.

இதன்படி ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அது தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. எனவே சீனியர் ஜூனியர் என்ற அசமத்துவம் இருக்கும் வரை அந்த அசமத்துவத்தைப் பேணும் ஓர் உப பண்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அரசியற் சூழல் இருக்கும் வரை அது முழுமையான பொருளில் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக இருக்க முடியாது. ராக்கிங்கையும் நியாயப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் நியாயப்படுத்த முடியாது. ராக்கிங் என்ற உப பண்பாட்டை ஏற்றுக் கொண்ட ஒருவர் ஒரு தேசியவாதியாக இருக்க முடியாது. இந்த முரண்பாட்டை தமிழப்பல்கலைக்கழகங்கள் அதன் ஆழமான பொருளில் விளங்கிக் கொள்ளும் பொழுதே ராக்கிங் கட்டுப்பாட்டுக்குள் வரும். தமிழ் தேசிய தேசியத்தின் ஜனநாயகப் உள்ளடக்கமும் செழிப்படையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *