யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார். “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ் நாட்டு அசரியல்வாதிகளைப் போலன்றி இவர்கள் வித்தியாசமான புதிய போக்கு ஒன்றைக் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் இவர்களும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஆகிவிடுவார்கள் போலிருக்கிறதே என்று.”
அவர் ஏன் அப்படிச் சொன்னார்? சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னணியில் வைத்தே அவர் அப்படிச் சொல்லியிருந்திருக்கக் கூடும். ஏனெனில் முழு உலகிற்கும் ஒரு புதிய அனுபவமாகக் கிடைத்த ஆயுதப் போராட்டம் அது. அது தோற்கடிக்கப்பட்ட பின் அந்த வெற்றிடத்தை நிரப்பும் மிதவாதிகளைக் குறித்து தமிழ் மக்களிடம் அதிகரித்த எதிர்பார்ப்புக்கள் இருப்பது இயல்பானதே. ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்ற படிப்பினைகளின் அடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகால ஈழத்தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய மிதவாதப் போக்குகளில் இருந்து ஏதோ ஒரு விதத்தில் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இயல்பானதே. அந்த எதிர்பார்ப்பை தமிழ் மிதவாதிகள் நிறைவேற்றியிருக்கிறார்களா?
ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் ஐந்து தேர்தல்கள் நடந்துவிட்டன. இப்பொழுது ஆறாவது தேர்தல் நடக்கவிருக்கிறது. இவ் ஆறு ஆண்டுகால பகுதிக்குள் தமிழ் மிதவாதிகள் தமது வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களை எந்தளவு தூரம் பூர்த்தி செய்திருக்கிறார்கள்? வரவிருக்கும் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கடந்த ஆறு ஆண்டு காலத்தைப் பற்றிய மதிப்பீடு எதுவும் அவர்களிடம் இருந்ததா?
தமிழ் வேட்பாளர்களை பிரதானமாக இரண்டு பெரும் பிரிவுகளாக்கலாம். ஒரு பிரிவு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். மற்றொரு பிரிவு புதிய முகங்கள். இவ்விரு பிரிவினரும் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்?
அவர்களைத் தெரிவு செய்த கட்சிகள் அதற்கான விளக்கங்கள் எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும் தமிழ் வேட்பாளர் தெரிவைப் பொறுத்தவரை பிரதானமாக பின்வரும் தகுதிகளில் ஒன்றோ பலவோ கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக அனுமானிக்க இடமுண்டு.
தகுதி ஒன்று – கொள்கை அடிப்படையிலானது.
தகுதி இரண்டு – வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களின் அடிப்படையிலானது.
தகுதி மூன்று – கல்வித் தகைமைகள்.
தகுதி நான்கு – பணபலம்.
தகுதி ஐந்து – பால் அடிப்படையிலானது
தகுதி ஆறு – சமூகப் பிரிவு அல்லது சாதி அடிப்படையிலானது.
இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
முதலாவதாக கொள்கை. பிரதானமாக மூன்று கொள்கைகள் தமிழ் தேர்தல் அரங்கில் காணப்படுகின்றன. ஓன்று தமிழ்த் தேசியக் கொள்கை, இரண்டு முழு இலங்கைக்குமான தேசியக் கொள்கை. மூன்று இடதுசாரிகள். இதில் இடதுசாரிகள் தீர்மானகரமான வாக்குப் பலத்தைக் கொண்டவர்கள் அல்ல. எனவே இரண்டு பிரதான கொள்கைகளையும் பார்க்கலாம்.
தமிழ்த்தேசியக் கொள்கையைப் பொறுத்தவரை இரண்டு பெரிய கட்சிகளும் தேசியம் என்ற வார்த்தையை கட்சிப் பெயர்களிலேயே வைத்திருக்கின்றன. ஆனால் அதை எத்தனை பேர் விளங்கிப் பிரயோகிக்கிறார்கள்? தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு தமிழ்; அரசியல்வாதிகளில் எத்தனை பேர் பதில் கூறத்தக்க ஆழுமையோடு காணப்படுகிறார்கள்?
மேற்படி கேள்விக்கு சரியான பதிலைக் கூறினால் தான் இவர்கள் கருதும் இனவிடுதலைக்குள் சமூக விடுதலையும் அடங்குமா இல்லையா என்ற கேள்விக்கும் விடைகாண முடியும். சாதி அசமத்துவங்கள் குறித்தும், பால் அசமத்துவங்கள் குறித்தும் பிரதேச அசமத்துவங்கள் குறித்தும் முஸ்லிம்களுக்கான இறுதித் தீர்வு குறித்தும் பொருத்தமான ஓர் உரையாடலைத் தொடங்குவது என்றால் முதலில் தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். தமிழ் வேட்பாளர்கள் விடை கூறுவார்களா?
இம்முறை தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியத்துக்கு யார் அதிகம் உரித்துடையவர் என்ற வாதப் பிரதிவாதம் அதிகம் சூடுபிடித்திருப்பதைக் காணலாம். கூட்டமைப்பானது தன்னைத் தேசிய நீக்கம் செய்துவிட்டது என்று கூறும் அதன் எதிரிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே இது விடயத்தில் அதிகம் தேசியத்தன்மைமிக்க ஒரு கட்சி என்று வாதிடுகிறார்கள்.
தமிழ்த்தேசியக் கோசங்களை யாரும் பாவிக்கலாம் என்ற ஒரு நிலைமை தற்பொழுது காணப்படுகின்றது. அதற்குரிய வாழ்க்கை முறை உண்டோ இல்லையோ எந்தவொரு அரசியல்வாதியும் தனது வாக்குவேட்டை நோக்கங்களுக்காக தமிழ்த்தேசியக் கோசங்களை பயன்படுத்த முடியும் என்று நம்புவதாகத் தெரிகிறது. அண்மை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள யு.என்.பி பிரதானிகள் தமிழ்த்தேசிய கோசங்களை உச்சரித்து வருவதைக் காண முடிகிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்ட தலைவர்கள் பெற்ற தோல்விகளின் விளைவாக தோன்றிய ஒரு போக்குத்தான்.அதாவது மிதவாதத் தலைவர்கள் பலருக்கு தமிழ்த்தேசியம் ஒரு வாழ்க்கை முறையாக இல்லை என்று பொருள்
அதே சமயம் தமிழ்த்தேசியத்துக்கு எதிர்நிலையை எடுத்து முழு இலங்கைக்குமான தேசியத்தை முன்வைத்த தமிழ்க் கட்சிகள் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சாதித்தவை எவை? கடந்த ஆறு ஆண்டுகளில் அக்கட்சிகளின் வாக்கு வங்கி படிப்படியாக மெலிந்து போகக் காணலாம். கடந்த வடமாகாணசைபத் தேர்தல் முடிவுகள் இதை நிரூபித்திருக்கின்றன. அபிவிருத்தி மைய அரசியலா? அல்லது உரிமைமைய அரசியலா? ஏன்ற கேள்வி எழும்போது தமிழ் மக்கள் உரிமைமைய அரசியலுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்களுக்கும் ஏனைய தேவைகளுக்கும் அவர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமான கட்சிகளைத் தேடிப் போவார்கள். ஆனால் வாக்களிப்பு என்று வரும் போது தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே பெருமளவில் வாக்களிக்கிறார்கள்..எனவே இங்கு கொள்கைப் பேட்டி எனப்படுவது யார் தமிழ்தேசியக் கொள்கைக்கு அதிகம் உரித்துடையவர் என்ற போட்டிதான். இது முதலாவது.
இரண்டாவது தகுதி – வெற்றிபெறுவதற்கான அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்டிருப்பது. ஏற்கனவே பிரபல்யமடைந்திருப்பவரைப் போட்டியிடவைப்பதன் மூலம் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தலாம். முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மறுபடியும் போட்டியிடுவதற்கான அடிப்படைகளில் இதுவும் ஒன்று. இதுதவிர வேறு துறைகளில் பிரபல்யமடைந்தவர்களும் தமது பிரபல்யத்தை அரசியலில் முதலீடு செய்வதுண்டு.
எனினும் இம்முறை தேர்தல் களத்தில் எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்காகத்தான் இறக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாகக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தோற்பதற்காகவும் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட தொகுதியில் ஒரு முதன்மை வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக அவரைவிட பிரகாசம் குறைந்த சிலரும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே சில சமயங்களில் தோல்வியுறுவதற்கான வாய்பும் ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ? இது இரண்டாவது.
மூன்றாவது தகுதி – படிப்பு. கல்வித் தகைமைகளின் மூலம் ஒரு வேட்பாளர் தனக்குரிய சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்பு காணப்பட்ட இந்த நம்பிக்கைகள் 2009 இற்குப் பின் மறுபடியும் மேலெழத் தொடங்கிவிட்டன. குறிப்பாக சட்டத்துறை வல்லுனர்கள் நன்றாக அரசியல் செய்வார்கள் என்றும் நம்பிக்கையூட்டப்படுகிறது. ‘அப்புக்காத்து’ அரசியல் பற்றிய இக்கருதுகோளானது 70 களிலேயே பிழையானது என்று நிரூபிக்கப்பட்டதொன்று. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் சமூகம் பல விடயங்களிலும் பின்நோக்கிச் சறுக்கியபோது மேற்படி அப்புக்காத்து அரசியலும் மறுபடியும் அரங்கின் முன்னணிக்கு வரத் தொடங்கிவிட்டது.
கிழக்கு பல்லைக்கழகத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் சொல்வார். “சட்டத்துறை ஒழுக்கம் மட்டும் ஒருவரை அரசியல்வாதியாக்கிவிடாது. பதிலாக அரசியல் எனப்படுவது பல்வேறு அறிவியல் துறைககளினதும் கூட்டு ஒழுக்கமாகும். எமது சட்டத்துறை வல்லுனர்கள் அரசியலை மிகவும் குறுக்கி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்று.” கடந்த ஆறு ஆண்டுகளில் இது தொடர்பில் ஒரு நடைமுறை உதாரணத்தைக் காட்ட முடியும். வுடமாகாண முதலமைச்சர் சட்டத்துறை ஊடாகவே அரசியலுக்கு வந்தார்.; ஆனால் அவர் சட்டத்தரணியாகவோ அல்லது நீதிபதியாகவோ இருந்த காலங்களில் பேசியிராத அளவிற்கு தற்பொழுது மிகத் தீவிரமாகப் பேசிவருகிறார். அவருடைய சட்டத்துறை ஒழுக்கத்திற்கூடாக அவர் கற்றறிந்தவற்றை விடவும் ஓய்வு பெற்ற பின் ஓர் அரசியல்வாதியாக பட்டறிவுக்கூடாக அவர் பெற்றுக் கொண்டவைகளே அதிகம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
நான்காவது தகுதி – பண பலம். அரசியலில் ஈடுபடுவது என்பது ஏறக்குறைய ஒரு முதலீடுதான். ஒரு வேட்பாளர் பிரச்சாரப் பணிகளுக்காக இலட்சக்கணக்கில் செலவழிக்கவேண்டியிருக்கும்;. ஆளணிகளுக்கும், போக்குவரத்திற்கும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், விளம்பரங்கள் போன்ற எல்லாவற்றுக்கும் காசை அள்ளி இறைக்கவேண்டியிருக்கும்.
தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தின் பங்களிப்பு இந்த இடத்தில் பெரிதும் கவனிப்புக்குரியது. தமிழ் வேட்பாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கடன்படும் இடம் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தேர்தல் களத்தின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய வாய்ப்புக்களை இது ஏற்படுத்துகிறது. இது நான்காவது .
ஐந்தாவது தகுதி – பால் அடிப்படையிலான தகுதி. தமிழ் வேட்பாளர்கள் தெரிவில் என்றைக்குமே பால்சமத்துவம் பேணப்பட்டதில்லை. இம்முறையும் அப்படித்தான். எண்பதினாயிரத்துக்கும் அதிகமான விதவைகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு பெண் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது எது அடிப்படைத் தகுதியாக இருக்க வேண்டும்.? அவருடைய பால் நிலைப்பட்ட விழிப்புத்தான். அதாவது பெண் வேட்பாளர் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராக இருக்க வேண்டும். தற்போதுள்ள வேட்பாளர்களில் எத்தனைபேர் அத்தனை தகுதிகளை உடையவர்கள்? பெண் வேட்பாளர்கள் வேண்டும் என்பதற்காக தெரிவு செய்யப்பட்ட பலரும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிராதவர்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒப்பீட்டளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம்தான் இது தொடர்பில் ஓரளவிற்கேனும் செயற்பாட்டு ஆளுமைகளைக் காண முடிகிறது. ஆனால் அதுவும் போதாது. இனி ஆறாவது.
ஆறாவது தகுதி – சாதி அல்லது சமூக அடிப்படையிலான தகுதி. முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும் இது ஒரு வீழ்ச்சி. ஒரு சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நியமிக்க வேண்டியிருப்பது என்பது தமிழ்த்தேசியத்தின் கோட்பாட்டு அடிப்படைகளின் மீதும் அதன் உள்ளடக்க போதாமைகளின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது.
38 ஆண்டுகால ஆயுதுப் போராட்டமானது சாதியை முழுமையாகக் கடக்க உதவவில்லையா என்றும் கேட்கத் தோன்றுகின்றது. இம்முறை தமிழ்த்தேசியக் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிந்தபோது சில தெரிவுகளில் சாதிக்கும் ஒரு பங்கு இருந்தாகக் கூறப்படுகின்றது. அதாவது கொள்கையை முன்வைத்து வாக்குக் கேட்க முடியாத ஒரிடத்தில் சாதி அடையாளத்தை முன்வைத்து வாக்குக் கேட்கவேண்டிய ஒரு வங்குரோத்து நிலை. இது ஆறாவது.
மேற்கண்ட அனைத்துத் தகுதிகளையும் தொகுத்துப் பார்;த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். 2009 மே இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது இறந்த காலத்தில் இருந்து குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் வெற்றி தோல்விகளில் இருந்தும் கடந்த ஆறாண்டுகால தேக்கத்திலிருந்தும் போதியளவு படிப்பினைகளைப் பெறவில்லை என்பதே. ஆயுதப் போராட்டத்தை ஓர் அளவுகோலாக வைத்துக்கொண்டு மிதவாத அரசியலை அளக்க முடியாது என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆயுதப்; போராட்டத்தில் இருந்து எதைக் கற்கத் தவறினாலும் ஒரு விடயத்தை மிதவாதிகள் கற்றேயாகவேண்டும். அது என்னவெனில் தமது அரசியல் இலக்குகளுக்காக எத்தகைய உச்சமான அர்ப்பணிப்புக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதே. ஓர் அரசியல் தலைமை மென்சக்தியா? ஆல்லது வன்சக்தியா என்பதல்ல இங்கு பிரச்சினை. அது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கிறதா அல்லது யதார்த்தத்தை நோக்கி கனவுகளை வளைக்கிறதா என்பதே இங்கு பிரச்சினை. மென் சக்தியோ அல்லது வன்சக்தியோ எதுவாயினும் உன்னதமான தலைமைகள் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பவைதான். கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதாற்காக அவை எத்தகைய அர்ப்பணிப்புக்களுக்கு தயாராக இருக்கின்றன என்பதே இங்கு அடிப்படைத் தகுதியாகும்.தமிழ் வேட்பாளர்களில் எத்தனை பேரிடம் அந்தத்;; தகுதி இருக்கிறது?