ஓராண்டு கால ஆட்சி ஒரு மதிப்பீடு  

  

“ஜனாதிபதியால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளை சில அமைச்சர்கள் அரைவாசி அளவுக்குக்கூட நிறைவேற்ற தவறியிருக்கிறார்கள். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு அமைச்சுக்கும் அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர்களாக  மூத்த படை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்”. மேற்கண்ட தொனிப்படக் கூறியிருப்பவர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ஜெயசுந்தர. கடந்த 2 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதியின் செயலகத்தில் நடந்த  அமைச்சுக்களின் செயலாளர்களோடான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இதே வேளை ஜனாதிபதி ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டச் செயலர் பிரிவுக்கும் அபிவிருத்திக்கான மாவட்ட இணைப்பாளராக படை அதிகாரிகளை நியமித்திருக்கிறார்.மாவட்டச் செயலர்களின் திறனற்ற திருப்தியற்ற நிர்வாகங் காரணமாகவே இவ்வாறு 25 படை அதிகாரிகளை ஜனாதிபதி மாவட்ட இணைப்பாளர்களாக நியமித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவிட்-19  நோய்த்தொற்றுச் சூழலுக்குள் அதிகாரத்தை அதிகம் மத்தியில் குவித்த நாடுகளில் ஒன்றாகவும் குறிப்பாக அதிகரித்த அளவில் படைமயப்படுத்தப்பட்ட ஒரு நாடாகவும் இலங்கை காணப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றுச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை மேலும் பலப்படுத்தி வருகிறார். சிங்கள ஊடகவியலாளரான குசல பெரேரா கூறுவதுபோல படைத்தரப்புக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான உறவு சிமெந்தால் கட்டப்பட்ட ஒன்று. எனவே ராஜபக்சக்கள் தங்களைப் பலப்படுத்துகிறார்கள் என்றால் அது இன்னொரு விதத்தில் படைத்தரப்பை பலப்படுத்துகிறார்கள் என்று பொருள்.

நாட்டில் இப்பொழுது கோவிட்-19 சூழலைக் கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட விசேட செயலணியின் பணிப்பாளராக படைத் தளபதியே இருக்கிறார். இவர் அமெரிக்காவால் பயணத்தடை விதிக்கப்பட்ட ஒருவர். அதேபோல பாதுகாப்பு அமைச்சு உட்பட மொத்தம் ஐந்து அமைச்சுக்களின் செயலர்களாக ஓய்வுபெற்ற படைப் பிரதானிகளே உள்ளார்கள். இதைத் தவிர ஊடகங்களில் நோய்த் தொற்று தொடர்பான அல்லது நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் படை அதிகாரிகளே மருத்துவர்களுடன் அமர்ந்திருந்து கருத்து கூறுகிறார்கள். ஒரு வைரசுக்கு எதிரான யுத்தம் நாட்டில் நடப்பதாகவும் ஏற்கனவே விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட ஒரு படைத் தரப்பு வைரசுக்கு எதிரான யுத்தத்தையும் முன்னெடுப்பதாகவும் ஒரு தோற்றம் கட்டிஎழுப்பப்படுகிறது. ஏற்கெனவே அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகளை தோற்கடித்த எமக்கு வைரசைத் தோற்கடிப்பது ஒரு பெரிய காரியம் அல்ல என்ற தொனிப்படக் கூறியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

போர்க் குற்றம் தொடர்பிலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் படைத் தரப்பை குற்றம் சாட்டும் சில மேற்கத்திய நாடுகளின் தூதுவர்கள் அதே படைக் கட்டமைப்பின் பிரதானிகள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் அவர்களோடு உரையாட வேண்டிய உத்தியோகபூர்வ தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு ஒரு கூர்மையான செய்தியை வெளிப்படுத்த விரும்புகிறது. எந்தப் படைக் கட்டமைப்பை நீங்கள் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அதே கட்டமைப்பின் பிரதானிகள்தான் இப்பொழுது நாட்டில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களோடுதான் நீங்கள் உரையாட வேண்டும். அதாவது அவர்களை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். இது மிகத் தெளிவான  ஒரு செய்தி.முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் “நாட்டின் முழுச் சிவில் நிர்வாகமும் ராணுவமயப்படுகிறது” என்று  அண்மையில் கூறியிருக்கிறார்.

இவ்வாறாக கடந்த ஆண்டு முழுவதிலும் கோட்டாபய ராஜபக்ச எதை அதிகமாகச் செய்திருக்கிறார் என்று தொகுத்துப் பார்த்தால் முதலாவதாக, அவர் படைத் தரப்பை தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாக அல்லது தண்டணை விலக்களிக்கப்பட்ட ஒரு தரப்பாக மாற்றும் உள்நோக்கத்தோடு படைப் பிரதானி களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகிறார். இதன்  மூலம் மேற்கத்திய நாடுகள் அவர்களை மறைமுகமாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைமையை ஏற்படுத்துகிறார்.இரண்டாவதாக, நாட்டின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பை முன்னெப்போதையும் விட அதிகரித்த அளவில் படை மயப்படுத்தி வருகிறார். மூன்றாவதாக, தமிழ் மக்களுக்கு எதிராக நினைவு கூறும் உரிமையை மறுப்பது,கிழக்கில் தொல்லியல் செயலணி; மேய்ச்சல் தரை விவகாரம் போன்றவற்றில் நீண்டகால நோக்கில் திட்டமிட்டு செயல்படுகிறார். நான்காவதாக, முஸ்லிம்களுக்கு அச்சமூட்டும் விதத்தில் நாட்டை நிர்வகித்து வருகிறார்.இலங்கைத்தீவின் வரலாற்றில் முஸ்லிம்களின் பண்பாட்டுரிமைகள் முன்னெப்பொழுதும் இந்தளவுக்கு மறுக்கபட்டதில்லை.

மேற்கண்ட நான்கு நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால் அவை நான்கும் ஒரே புள்ளியில் சந்திப்பதைக் காணலாம். எப்படியென்றால், அவர் தனக்கு வாக்களித்த தனிச் சிங்கள வாக்காளர்களைக் கவரும் விதத்தில் நாட்டை நிர்வகித்து வருகிறார். படைத் தரப்பை பலப்படுத்தினாலும் படைத் தரப்பை தண்டனை விலக்களிக்கப்பட்ட ஒரு தரப்பாகக் கட்டிஎழுப்புவதன் மூலமும் தனிச் சிங்கள வாக்காளர்களைத் திருப்திப்படுத்தலாம். அதேபோல தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிராக நிர்வாக நடைமுறைகளை தீவிரமாக்குவதன் மூலம் தனிச் சிங்கள வாக்காளர்களைத் திருப்திப்படுத்தலாம்.

அவர் நினைத்தது போலவோ அல்லது கெகலிய ரம்புக்வெல சூளுரைத்ததைப் போலவோ கோவிட்-19 உம் புலிகளும் ஒன்றல்ல என்பதைக் கடந்த ஆண்டு எண்பித்திருக்கிறது. அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி ; சமூக நெருக்கடி; உளவியல் நெருக்கடி போன்றவற்றை திசை திருப்ப அவருக்கு இது உதவும்.எப்படியென்றால் கோவிட்-19 இன் விளைவுகளிலிருந்து பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்காளர்களைத் திசை திருப்ப தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒரு தலைவராகத் தன்னைக் கட்டமைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே அடுத்த ஜெனிவா தொடரையும் அவர் கையாளப் போகிறாரா?

ஜெனிவா கூட்டத் தொடரும் அதிகம்  உணர்ச்சிகரமானது. கோவிட்-19 இன் சமூகப் பொருளாதார உளவியல் விளைவுகளிலிருந்து சிங்கள-பௌத்த பெரும்பான்மையின் கவனத்தைத் திசை  திருப்ப அது அவருக்கு உதவும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரை வேறு யாரையும் அனுப்பி எதிர்கொள்வதே நல்லது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. ஏனெனில் வரும் கூட்டத்தொடரில் அரசாங்கத்துக்கு எதிரான நிலைமைகள் அதிகமாக இருப்பதாக ஒரு பொதுவான அவதானிப்பு உண்டு. தமிழ் தரப்பிலும் ஒரு பகுதியினர் மத்தியில் அவ்வாறான ஓர் எதிர்பார்ப்பு உண்டு.

ஆனால் ராஜபக்சக்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். ஏனெனில் உள்நாட்டில் கோவிட்-19இன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சமூகப் பொருளாதார உளவியல் நெருக்கடிகளிலிருந்து சிங்கள-பௌத்த பெரும்பான்மையின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு ஜெனிவா ஒரு நல்ல சந்தர்ப்பம்.அதிலும் குறிப்பாக மாகாணசபை தேர்தலை வெற்றிகரமாகக் கடக்க அது உதவக்கூடும். ஏனெனில் மாகாண சபைத் தேர்தல் நடக்குமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு கடந்த தேர்தல்களில் கிடைத்ததைப் போல பிரமாண்டமான வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்றே பரவலாக நம்பப்படுகிறது. கோவிட்-19இன் தொகுக்கப்பட்ட சமூக பொருளாதார உளவியல் விளைவுகள் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள்.மகரச் சிறைச்சாலை வாசலில் போலீசாரின் கால்களில் விழும் ஏழைத் தாய்மாரின் கண்ணீரில் அது தெரிகிறது. மஞ்சள் இல்லாத சமையலறைகளில் அது தெரிகிறது.முஸ்லிம்கள் மத்தியிலும் அதே நிலைமைதான்.

எனவே மாகாணசபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால் அதில் முன்னைய ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் பெற்ற அதேயளவு வெற்றியை இம்முறை பெறுவது கடினமாக இருக்கலாம் என்று ஓர் அவதானிப்பு தென்னிலங்கையில் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் இலகுவாக கடப்பதற்கு அவர்களுக்கு இன முரண்பாடுகள் உதவும். ஜெனிவா கூட்டத் தொடரை முன்வைத்து ஓர் இனஅலையைத் தட்டியெழுப்பினால் அது ஒன்றே அவர்களுக்கு போதும். இப்படிப் பார்த்தால் 2020இல் அவர்களுடைய வெற்றிக்கு அடிப்படையாக இருந்த கோவிட்-19 இப்பொழுது அவர்களுக்கு எதிரான உணர்வலைகளை திரட்டும் விவகாரமாக மாறி இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும்  எதிரான உணர்வுகளை ஒன்று திரட்டுவதன் மூலம் அவர்கள் கோவிட்-19இன் தீய விளைவுகளை இலகுவாகக் கடந்து விடுவார்கள்.

எனவே தொகுத்துப் பார்த்தால் ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதலாவது ஆண்டின் முடிவில் நமக்கு கிடைக்கும் சித்திரம் மிகவும் தெளிவானது. அது என்னவெனில் அவர்கள் முன்னைய ஆட்சியின் தொடர்ச்சியாகவே இந்தமுறையும் சிந்திக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்களுடைய சொந்த வெற்றியின் கைதிகள். யுத்த வெற்றிதான் அவர்களுடைய அடிப்படைப் பலம். அதேசமயம் அந்த வெற்றியின் கைதிகளும் அவர்கள். அந்த வெற்றிக்கு வெளியே அவர்களால் சிந்திக்க முடியாது. அந்த வெற்றியை தலைமுறைகள் தோறும் பாதுகாப்பதன் மூலம் அல்லது அந்த வெற்றிக்கான உரிமையை தலைமுறைகள் தோறும் பாதுகாப்பதன் மூலம் ஒரு வம்ச ஆட்சியைத் அவர்கள் ஸ்தாபிக்கமுடியும்..

எனவே கடந்த ஓராண்டு கால ஆட்சியைத் தொகுத்துப் பார்த்தால் அவர்கள் இறந்த காலத்தில் இருந்து பாடங்களைப் பெற்றிருந்தாலும் அந்த பாடங்களின் அடிப்படையில் ஒரு புதிய காலத்தை கட்டமைக்கவும் திட்டமிடவும் முடியாதபடிக்கு அவர்கள் தங்களுடைய சொந்த வெற்றிகளின் கைதிகளாக காணப்படுகிறார்கள். 2005 லிருந்து தொடங்கி 2015 வரையிலுமான அவர்களுடைய முதலாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்த அதே தவறுகளைத்தான் இந்த முறையும் செய்யப்போகிறார்களா ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *