நீதியிலிருந்து ஊற்றெடுக்காத நல்லிணக்கம்?

கடந்த மாதம்  கொழும்பில்  சிவில் சமூகப் பிரதிநிதிகளை வெளியுறவு அமைச்சர் சந்தித்தார்.  இதன் போது  அவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளுக்காக  ஏறக்குறைய 450 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாம்.  இதைப் போலவே அண்மையில் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின் போது  ஜஸ்மின் சூக்கா இதையொத்த மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார். தென்னாபிரிக்கா, சியாரா லியோன், கம்பூச்சியா போன்ற உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில் கணிக்குமிடத்து இலங்கைத்தீவின் நிலைமாறு காலகட்டத்திற்குரிய நீதியை  ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஏறக்குறைய  450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படலாம் என்று.  அதே சமயம்  இலங்கைத் தீவானது  ஏனைய நாடுகளின் மாதிரிகளை  அப்படியே பின்பற்றாமல் தனக்கேயான கள யதார்த்தத்தின்படி  தனக்கேயான நிலைமாறுகாலகட்டத்திற்குரிய நீதியை  ஸ்தாபிக்க வேண்டும்  என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அண்மை மாதங்களில்  தமிழ்ப் பகுதிகளில்  அடிமட்டச் சிவில் அமைப்புக்கள் மத்தியில்  முன்னெடுக்கப்பட்டு வரும்  நிகழ்ச்சித் திட்டங்களின்படி  நல்லிணக்கம், தேசியக் கலந்துரையாடல் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில்  சிவில் சமூகங்களின் பங்களிப்பு  போன்ற  இன்னோரன்ன தலைப்புக்களின் கீழ் தொடர்ச்சியாக  சந்திப்புக்களும்  கருத்தரங்குகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் பிரித்தானிய கொன்சவேர்ற்றிவ் கட்சியின் பிரமுகர் ஒருவர் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரோடு உரையாடியபோது ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். அதன்படி கொழும்பில் இருந்து வெளிவரும் இரண்டு இணையங்களுக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கும் நிதி உதவிகள் செய்யப்படுவதாக  ஊகிக்க முடிகிறது.

அதாவது எனது கட்டுரைகளில் அடிக்கடி கூறப்படுவது போல  நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான உரையாடல் போன்ற  பல விடயங்களும்  என்.ஜி.ஓக்களின் நிகழ்ச்சித் திட்டங்களாக முன்னெடுக்கப்படப் போகின்றன. இதற்கென்று பெருந்தொகைப் பணம் இச்சிறு தீவை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளது.  அரபு வசந்தங்களுக்காக  மேற்கு நாடுகள் செலவழித்த பணத்தில் பெரும்தொகுதி வெடி மருந்துகளுக்கே செலவாகியது. இவ்வாறு  அரபு நாடுகளில் கரியாகும் காசோடு ஒப்பிடுகையில் இலங்கைத்தீவின் வசந்தத்திற்காக தாங்கள் முதலீடு செய்யும் டொலர்கள் அனைத்தும்  வீணாகப் போவதில்லை என்று  சக்திமிக்க நாடுகள் சிந்திக்கக் கூடும். எனவே  புதிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட பின் இலங்கைத் தீவுக்குள் பெருமளவு நிதி பாய்ச்சப்படுகிறது இது ஏற்கனவே ஜனவரியில் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தின் பின் தொடங்கிவிட்டது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஐ.நா. நிதி அனுசரணை புரியும் என்ற தகவல்  ஆட்சி மாற்றத்தை அடுத்து வெளியாகி இருந்தது.

இவ்வாறு  பெருமளவு நிதியைக் கொட்டி  முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவர்கள்  நல்லிணக்கம்,இனங்களுக்கிடையிலான கலந்துரையாடல், நிலைமாறு காலகட்ட நீதியை உருவாக்குதல் போன்ற கவர்ச்சியான தலைப்புக்களை வைக்கக் கூடும். ஆனால் இச்செயற்பாடுகளின்  உள்நோக்கத்தைக் கருதி இவை அனைத்தையும் ஒரு பொதுத் தலைப்பின் கீழ் கொண்டு வந்துவிடலாம். அதாவது ஆட்சிமாற்றத்தைப் பலப்படுத்துவது.

மாற்றத்தை எப்படிப் பலப்படுத்துவது? பிரதானமாக அது மூன்று முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

முதலாவது – புதிய அரசாங்கத்தைத் தத்தெடுப்பது.

இரண்டாவது – ராஜபக்ச சகோதரர்கள் உட்பட சிங்கள தரப்பில் இருக்கக் கூடிய கடும் போக்காளர்களையும், தமிழ் தரப்பில் இருக்கக் கூடிய இலட்சியப்பற்றுறுதி மிக்க சக்திகளையும்  தலையெடுக்க விடாமல் தடுப்பது.

மூன்றாவது – அடிமட்டச் சிவில்  அமைப்புக்களின் மத்தியில்  தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சந்திப்புக்களையும் கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடாத்துவது.

இம் மூன்றாவது விடயப்பரப்பே இன்று இக்கட்டுரையின்  குவி மையமாகும்.  எனினும்  முதலிரு  பரப்புக்களையும் சற்று மேலோட்டமாகப் பார்ப்பது என்பது  இந்த மூன்றாவது விடயப்பரப்பை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்.

புதிய அரசாங்கத்தை மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஏற்கனவே தத்தெடுத்துவிட்டன. இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்தில்  பால்ப்பொங்கல் பொங்கியது,  சமந்தா பவர்  ஒஸ்மானியாக் கல்லூரியில் எல்லே விளையாடியது போன்ற எல்லாவற்றுக்கூடாகவும்  சக்திமிக்க நாடுகள் இச்சிறு தீவுடனான தமது ஐக்கியத்தை  வெளிக்காட்ட விளைகின்றன.  இதன் மூலம் இச்சிறிய தீவானது ஒரு புறம்  மேற்குமயப்படுகிறது என்றும் இன்னொரு புறம் இந்திய மயப்படுகிறது என்றும் சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தியத் துணைத் தூதுவர் ஏறக்குறைய ஒரு சமூகப் பிரமுகர் ஆகிவிட்டார்.  சமய நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், கலை,பண்பாட்டு நிகழ்ச்சிகள்,காந்தி ஜெயந்தி, மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் போன்ற இன்னோரென்ன நிகழ்ச்சிகளுக்கு அவர் சமூகப் பெரியாராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.  இலங்கைத் தீவில் உள்ள எந்த ஒரு  வெளிநாட்டுத் தூதருக்கும் கிடைத்திராத கௌரவம் அது.

இப்படியாக ஆட்சிமாற்றத்தின் பின்னிருந்து தொடங்கி இச்சிறிய தீவானது மேற்கத்தேய தரப்புக்களுக்கும் பிராந்திய  தரப்புக்களுக்கும் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டது என்றே தோன்றுகின்றது.

ஆட்சிமாற்றத்திற்கு முன்புவரை ராஜபக்ச அரசாங்கமானது எந்தளவுக்கு அனைத்துலக சமூகத்தால்  அசூசையோடு பார்க்கப்பட்டதோ அதேயளவுக்கு   ரணில் – மைத்திரி அரசாங்கமானது அனைத்துலக கவர்ச்சிமிக்கதாக மாறியிருக்கிறது.  இந்த மாற்றத்தைத்தான் அவர்கள்  நிலைமாறு காலகட்டம் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலைமாறு காலகட்டத்திற்குரிய நீதியே தமிழ் மக்களுக்குரிய நீதியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டாவது- சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்களில் காணப்படும் தீவிர நிலைப்பாடுள்ள சக்திகளை  தலையெடுக்கவிடாமல் தடுப்பது. நடந்து முடிந்த பொதுத்தேர்தல்  முடிவுகள் இதற்குரிய வழிகளை இலகுவாக்கி கொடுத்திருக்கின்றன.  ராஜபக்ச சகோதரர்கள் போர்க்குற்றம் தவிர மற்றெல்லாக் குற்றச்சாட்டுக்களினாலும்  சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் தமிழ்தரப்பில் தமிழ் தேசியத்தின் கூர்முனை போலக் காணப்படும்  தமிழ் டயஸ்போறாவை எப்படி வெட்டியாழலாம் என்று மேற்கத்தேய அரசாங்கங்கள் சிந்திக்கக் கூடும். அண்மையில் சில அமைப்புக்களின் மீதான தடைகள் நீக்ப்பட்டன. இதன் மூலம்  தமிழ் டயஸ்போறா  மேலும்  பிளவுபடக் கூடும்.  தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் யாவும் துரோகிகளாக முத்திரை குத்தப்படும். தடை நீக்கப்படாதவை  மெய்யான தேசிய சக்திகளாக முத்திரை குத்தப்படும.; எப்படி  அரசியல் கைதிகளின் விவகாரத்தில்  பிணை வழங்கும் பொழுது  கைதிகளை  வகைப்படுத்தியதன் மூலம்  அவர்களை  பிரித்தாழ முடிந்ததோ அதேபோல புலம்பெயர்ந்த அமைப்புக்களில் சிலவற்றின் மீதான தடைகளை நீக்குவதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் பிளவுகளை ஊக்குவிக்கலாம்.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே இடைமாறு காலகட்டத்திற்குரிய நீதியை  ஸ்தாபிப்பது தொடர்பாகவும் நல்லிணக்கம் தொடர்பாகவும், இனங்களுக்கிடையிலான கலந்துரையாடல்  தொடர்பாகவும்;  முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகரித்த அளவில்  கலந்துரையாடப்படும்  ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.

இந்த உரையாடல்களின் போது  போர் இல்லாத வாழ்க்கை என்பது  அதிகம் முக்கியத்துவம் மிக்கதாகக் காட்டப்படுகிறது. இதன் மூலம் போர்தான் ஒரு பிரச்சினை என்பதாகவும் காட்டப்படுகிறது.  சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சதான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம் என்று காட்டப்படுகிறது.  அமைச்சர் மனோகணேசன் கிளிநொச்சியில் வைத்துக் கூறுகிறார். ‘இப்பொழுது சிங்களப் பயங்கரவாதமும் இல்லை. தமிழ் பயங்கரவாதமும் இல்லை’என்று.

ஆயின்  இலங்கைத்தீவின் பிரச்சினை எனப்படுவது  போரும் அந்தப் போரை வெற்றிகொண்ட ராஜபக்ச அரசாங்கமும் மட்டும்தானா?  நிச்சயமாக இல்லை. போர் ஒரு காரணம் அல்ல. விளைவுதான்.  ஆயுதப் போராட்டம் ஒரு காரணம் அல்ல. ஒரு விளைவுதான். பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கமோ விளைவுகள்தான். ராஜபக்சவும் மைத்திரியும் கூட விளைவுகள்தான். இப்போதிருக்கும் ரணில் மைத்திரி அரசாங்கமும் ஒரு விளைவுதான். கூட்டமைப்பு எதிர்;க்கட்சி ஆகியதும் கூட ஒரு விளைவுதான். ஆயின் காரணம் எது?

சிங்கள பௌத்த மேலாண்மை வாதம்தான் மூலகாரணம்.  அந்த மேலாண்மை வாதத்தை அடிச்சட்டமாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புத்தான் மூலகாரணம். அதன் விளைவே இனப்பிரச்சினை. இனப்பிரச்சினையின் விளைவுகளே மேற்கண்ட எல்லாமும். ராஜபக்ச சிங்கள பௌத்த மேலாண்மைவாதத்தை அதன் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு போனார்.  அவரும் அதன் கருவிதான்.  ரணிலும் மைத்திரியும் கூட அந்த அரசுக் கட்டமைப்பின் கைதிகள் தான்.

எனவே மூலகாரணம் அப்படியே இருக்கத் தக்கதாக  விளைவுகளை  மூலகாரணமாக மாறாட்டம் செய்யும்  ஓர்  அரசியல்  சூழலைத்தான்  உலகச் சமூகம் நிலைமாறு காலகட்டம் என்று அழைக்கின்றதா?

இக்கட்டுரையின் தொடக்கத்தில்  மேற்கோள் காட்டப்பட்டதைப் போல ஜஸ்மின் சூக்கா கூறும்  இலங்கைத் தீவிற்கேயான கள யதார்த்தம் எது?

இது தொடர்பாக அதாவது நிலைமாறு காலகட்டத்துக்குரிய நீதி தொடர்பாக தமிழ் சிவில் சமூகங்களின் அமையம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கைத்தீவின் காலகட்டத்தை  நிலைமாறு காலகட்டம் என்று அழைக்கமுடியுமா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. நிலைமாறு காலகட்டத்திற்குரிய நீதி என்ற சொற்றொடர்; கொடுங்கோன்மை,போர்,வன்முறை,சர்வாதிகாரம் அல்லது ஏதேச்சாதிகாரம் போன்றவற்றிலிருந்து இயல்பு வாழ்க்கை,அரசியல்ஸ்திரம்,ஜனநாயகம் போன்றவற்றை நோக்கித் திரும்பிய நாடுகளின் விடயத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.  அதன்படி சர்வாதிகாரம் அல்லது ஏதேச்சாதிகாரம் அல்லது கொடுங்கோன்மை,போர்,வன்முறை போன்றவற்றிலிருந்து இருந்து நல்லிணக்கம்,சமூகஸ்திரம்,ஜனநாயகம் போன்றவற்றை நோக்கிச் செல்லும் இடைப்பட்ட காலகட்டமே நிலைமாறு காலகட்டம் என்று அழைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் முன்னைய கொடுங்கோண்மை ஆட்சியின்போது இழைக்கப்பட்ட அக்கிரமங்களுக்கு உரிய நீதியை,இழப்பீட்டை பெற்றுக்கொடுக்கும் ஒரு செயற்பாடே  நிலைமாறுகாலகட்டத்திற்குரிய  நீதி என்று அழைக்கப்படுகிறது. கெடுபிடிப்போருக்குப் பின்னரான  உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில்  நிலைமாறு காலகட்டத்துக்குரிய நீதி எனப்படுவது  உண்மையைக் கண்டறியும் பொறிமுறை,போர்க்குற்ற விசாரணைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்க முன்னெடுப்புக்கள்  போன்றவற்றுக்கு அதிகரித்த முக்கியத்துவம் கொடுப்பதாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது.  இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் இலங்கைத்தீவில் இப்பொழுது இருப்பது ஒரு நிலைமாறு காலகட்டமா?

நிச்சயமாக இல்லை.  எது மூலகாரணமோ அது மாறவே இல்லை. பதிலாக  அந்த மூலகாரணத்தின் கைதிகளாகக் காணப்படும் அரசாங்கங்கள்தான் மாறியிருக்கின்றன. அதாவது விளைவுகளின் மாற்றம் .இது விடயத்தில்  தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சுட்டிக்காட்டுவது போல மகிந்த ராஜபக்சவை ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டு மாற்றத்தையும் இனப்பிரச்சினையையும் அளக்க முடியாது என்பதே சரி.அனைத்துலகக் கவர்ச்சியற்ற சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்திலிருந்து அனைத்துலகக்கவர்ச்சி மிக்க சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்திடம் ஆட்சி கைமாறியிருப்பதை நிலைமாறு காலகட்டம் என்று அழைக்கலாமா? தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த மேலான்மைவாத கருத்து நிலையில்  பண்புமாற்றம் ஏற்படும் போதே அதை  மாற்றம் என்று  அழைக்கமுடியும். அதல்லாத வேறெந்த மாற்றமும்  மேலிருந்து கீழ் நோக்கித் திணிக்கப்படும் மேலோட்டமான மாற்றங்களே. கீழிருந்து மேல் நோக்கி உருவாக்கப்படும் அடிப்படை மாற்றங்களாக இருக்கப்போவதில்லை. இதற்கு இரண்டு கூர்மையான உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

முதலாவது யாழ்ப்பாணத்துக்கு வந்து போகும் சிங்கள உல்லாசப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் பற்றியது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். முதலில் அவர்கள் ஆரிய குளம் சந்தியில் உள்ள நாகவிகாரைக்குப் போகிறார்கள். அதன் பின் அவர்கள் நைனாதீவுக்குப் போகிறார்கள். அதன் பின் கந்தரோடைக்குப் போகிறார்கள் அல்லது காரைநகருக்குப் போகிறார்கள். நல்லூருக்கும் போகிறார்கள். அப்படிப் போகும் போது   அருகேயுள்ள  றியோ குளிர்பான நிலையத்தில் றோல்ஸ் சாப்பிடுகிறார்கள்.  வசதியானவர்கள் அநேகமாக காங்கேசன் துறையில் படையினரால் நடாத்தப்படும் விடுதியில் தங்குகிறார்கள். வசதி குறைந்தவர்கள்  பெரும்பாலும் படையினரின் நிலைகளுக்கு  அருகில் இருக்கும்  அல்லது ஏற்கனவே பேருந்து ஓட்டுனர்களுக்கு பரீட்சயமான தங்ககங்களில் தங்குகிறார்கள்.

இவ்வாறு  கடந்த ஆறே முக்கால் ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஏனைய விடுமுறை நாட்களுக்கும்  வடக்குக்கு வரும் சிங்கள மக்கள்  வடக்கில் உள்ள சாதாரண தமிழ் மக்களோடு  எவ்வளவு தூரம் நெருங்கிப் பழகுகிறார்கள்?.  அவர்கள் வடக்கில் தங்கியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்குள் இங்குள்ள தமிழர்களோடு  எந்தளவுக்கு  இடையூடாடுகிறார்கள்?.

இது தொடர்பாக  இவ்வாண்டின் தொடக்கத்தில்  கொழும்பில் உள்ள  ஐரோப்பிய நாடொன்றின் தூதுவரோடு உரையாடியபோது அவர் சிரித்துக்கொண்டே கேட்டார்  யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்கள மக்கள்  றியோ குளிர்பான நிலையத்தில்  றோல்ஸ் சாப்பிடுகிறார்கள்தானே என்று. அவரிடம் நான் சிரித்துக் கொண்டு கேட்டேன் அப்படி என்றால்  அந்த றோல்ஸ்களில் இருந்து  நல்லிணக்கத்தை  தொடங்கலாமா? என்று.

அடுத்த உதாரணம். வடக்கில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் தொடர்பானது.   கடந்த ஆறேமுக்கால் ஆண்டுகாலப் பகுதிக்குள் யாழ். நகரப் பகுதியில்  புடவை வியாபாரத்திலும், அசைவ  உணவு வியாபாரத்திலும்  முஸ்லிம்கள்  முன்னிலை வகிக்கத் தொடங்கிவிட்டார்கள். கடந்த தீபாவளிக்கு முதல் நாள் இரவு 8.00 மணியளவில் யாழ். நகரப்பகுதியில் இருக்கும் முன்னணி தமிழ் புடவைக் கடைகள் பல மூடப்பட்டுவிட்டன. ஆனால் பெரும்பாலான முஸ்லிம் கடைகளில்  அப்பொழும் வியாபாரம்  அமோகமாக நடந்துகொண்டிருந்தது. முஸ்லிம்கள் மீளக்குடியேறி பல ஆண்டுகளாகிவிட்டன.  ஆனால்  யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு எந்தளவிற்கு நெருக்கமாக வந்திருக்கிறது.?  கடைகளில் விற்போர் வாங்குவோர் என்ற வர்த்தக உறவுக்கும் அப்பால்  நல்லிணக்கத்துக்குரிய ஜீவனுள்ள உறவாக அது வளர்ச்சியடைந்துள்ளதா? சமந்தா பவர்  ஒஸ்மானியாக் கல்லூரியில் மழையில் நனைந்து நனைந்து எல்லே விளையாடினர்.  ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எத்தனை விளையாட்டுக் கழகங்கள் அந்த மைதானத்தில் நல்லிணக்கப் போட்டிகளில் பங்குபற்றியிருக்கின்றன?

மேற்கண்ட  இரண்டு கசப்பான உதாரணங்களுக்கூடாகவும் வெளிவரும் உண்மை எது?  நல்லிணக்கத்தைப் பற்றிய மேற்கத்தேய  வாசிப்புக்களில்  “பிளவுபட்ட இறந்தகாலத்தில் இருந்து  பகிரப்படும் எதிர்காலத்தை நோக்கி” என்று கூறப்படுவது உண்டு. ஆனால்  கடந்த ஆறே முக்கால் ஆண்டுகால இலங்கைத்தீவின்  அரசியல் யதார்;த்தம் அத்தகையதா?  அதை  மேற்கத்தேய வாசிப்புக்களுக்கூடாக நிலைமாறு காலகட்டம் என்று அழைக்கலாமா?  அதற்குகூடாக ஸ்தாபிக்கப்படும் நீதி தமிழ் மக்களின்  கூட்டுக் காயங்களை சுகப்படுத்த வல்லதாக அமையுமா?  அல்லது அனைத்துலக கவர்ச்சிமிக்க சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தமிழ் மக்களை மீண்டுமொருமுறை தோற்கடித்துவிடுமா?

04.12.15

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *