வெளியுறவுக்கொள்கை இல்லாத  ஈழத்தமிழர்கள் ?

ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும்  ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம்.

அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை.அதுமட்டுமல்ல அப்படி ஒரு குழு போகவிருப்பதுபற்றி தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தெரியாது.எனவே அக்குழுவை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ குழுவென்றோ அல்லது தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ குழுவென்றோ கூறுவது பொருத்தமாக இருக்காது. இது இன்னொரு ஓட்டம்.

இந்த இரு ஓட்டங்களுக்குள்ளும் இணையாது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனித்து நிற்கிறது. ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பூகோள மற்றும் புவிசார் அரசியலைக் கையாள வேண்டும் என்று அதிகமாகப் பேசியது  அக்கட்சிதான்.

இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் வெளியுறவு அணுகுமுறை தொடர்பில் மூன்று ஓட்டங்கள் காணப்படுகின்றன.

இந்தியா தமிழ்க்கட்சிகளிடமிருந்து ஒரு கூட்டுக் கோரிக்கை வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று சொன்னால்  அதன் பொருள் இந்தியா இனப்பிரச்சினையில் ஏதோ ஒரு விதத்தில் தலையிட முனைகிறது என்பதுதான். இந்திய அமைதிகாக்கும் படையினரை பிரேமதாசாவும் விடுதலைப்புலிகள் இயக்கமும் இணைந்து வெளியேறுமாறு கேட்டார்கள்.எந்த இரண்டு தரப்புக்களுக்கு இடையில்  சமாதானம் செய்வதற்காக அமைதிகாக்கும் படை  இலங்கைக்குள் இறங்கியதொ அதே இரண்டு தரப்புக்களும் அப்படையை  வெளியேறுமாறு கேட்டபோது அமைதிப்படைக்குரிய மக்கள்ஆணை காலாவதி ஆகியது. இவ்வாறான ஒரு பின்னணியில்  கொழும்புடன் இணைந்து தன்னை வெளியே போகுமாறு கேட்ட தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தன்னை திரும்பவும் தலையிடுமாறு கேட்கும் ஒரு கூட்டுக்கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றதா?

அதேசமயம், அமெரிக்கா தமிழ் பிரதிநிதிகளை அழைத்துப்  பேசுகிறது என்றால் அதன் பொருள் இனப்பிரச்சினையை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி  கொழும்பின் மீதான தனது பிடியை பலப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது என்பதுதான்.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. பிராந்தியப் பேரரசும் உலகப் பேரரசும் கொழும்பின் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு தமிழ்த்தரப்பை  கையாள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது.இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தமிழ்த்தரப்பு என்ன செய்ய வேண்டும்? எவ்வளவுக்கு எவ்வளவு வெளித்தரப்புக்களின் அழுத்தத்தை  கொழும்பின் மீது பிரயோகிக்க வைக்க முடியுமோ  அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனும் அதிகரிக்கும்.

மூன்றாவது தரப்பு ஒன்றின் நிர்ப்பந்தம் இன்றி சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் தீர்வுக்கு உடன்படாது. 2016இல் மன்னாரில் “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற கருத்தரங்கில் இக்கருத்தை நான் வலியுறுத்திப்  பேசிய பொழுது சம்பந்தர் கூறினார் “அது ஒரு வறண்டவாதம் வரட்டுவாதம்” என்று.ஆனால் இனப்பிரச்சினையின் பல தசாப்தகால அனுபவத்தை தொகுத்துப் பார்த்தால் எது சரி என்பது மிகத் தெளிவாக தெரியும். இது கடந்த பல தசாப்த கால இலங்கைத்தீவின் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட ஒரு பேருண்மை.

இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை எழுதப்பட்ட எல்லா உடன்படிக்கைகளிலும் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நீடித்தவை மூன்று உடன்படிக்கைகள்.முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை.இரண்டாவது ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை.மூன்றாவது நிலைமாறுகால நீதிக்கான ஐநா தீர்மானம். இம்மூன்று உடன்படிக்கைகளின் போதும் மூன்றாவதுதரப்பின் பிரசன்னம் இருந்தது.இந்திய-இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்த இந்திய அமைதிகாக்கும் படை இறங்கியது.ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையின் போது ஸ்கண்டிநேவிய யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்கள் இறங்கினார்கள். ஐநா தீர்மானத்தின் பின் இலங்கைத்தீவை  கருக்குழு நாடுகளும் ஐநாவின் சிறப்புத் தூதுவர்களும் தொடர்ச்சியாகப் பின் தொடர்ந்தார்கள்.எனவே ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. இப்பொழுது கேள்வி யார்  அந்த மூன்றாவது தரப்பு ? என்பதுதான்.

மேற்கண்ட மூன்று தீர்வு முயற்சிகளின் போதும் இரண்டு தரப்புகள் மத்தியஸ்தம் வகித்தன. இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியா. பின் வந்த இரண்டு ஏற்பாடுகளிலும் மேற்கு நாடுகள். 2000 ஆண்டு விடுதலைப் புலிகளின் காலத்திலிருந்து தொடங்கி இன்றுவரையிலுமான கடந்த 21ஆண்டுகளில் மேற்கு நாடுகளே ஒன்றில் அனுசரணை புரிகின்றன அல்லது மத்தியஸ்தம் வகிக்கின்றன.

இதில் முதலாவது கட்டம் 2009 வரையிலுமானது. மேற்கு  நாடுகள் மற்றும் ஜப்பானின் பின்பலத்தோடு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் போது   நோர்வே சமாதானத்துக்கான அனுசரணையாளராக செயற்பட்டது.அந்நாட்டின் விசேஷ தூதுவரான சொல்ஹெய்ம் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான எல்லா விடயங்களையும் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக அப்டேட் செய்து வந்தார். இது முதலாம் கட்டம்.

இரண்டாம் கட்டம் 2009 க்குப் பின்னரான ஜெனிவா மைய அரசியல். அதன் ஒரு கட்ட விளைவே  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம்.அது இலங்கைத்தீவுக்கு நிலைமாறுகால நீதியை பரிந்துரைக்கின்றது.அதேசமயம் ஐநா  தீர்மானங்களில் 13வது திருத்தம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. அதாவது  ஐநா மைய சமாதான முயற்சிகளிலும் இந்தியாவின் 13வது திருத்தம் ஒரு பேசுபொருளாக இருக்கிறது என்று பொருள்.

எனவே 2000ஆண்டிலிருந்து தொடங்கி மேற்குமைய சமாதான முயற்சிகள் எல்லாவற்றிலும் இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்குச் செலுத்தி வருகிகிறது.அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் புவிசார் அரசியல் யதார்த்தமாகும். இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் இனப்பிரச்சினைக்கான தீர்வைத்தர முற்படாது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகால மேற்குமைய அனுசரணை முயற்சிகளின்மூலம் கற்றுக்கொள்ளப்பட்ட பாடம் ஆகும்.இதை இப்படிக்கூறுவதன் மூலம் இக்கட்டுரையானது இப்புவிசார் அரசியல்  யதார்த்தத்தை நோக்கி தமிழர்கள் தமது கனவுகளை வளைக்கவேண்டும் என்று கூறவரவில்லை. மாறாக தமது கனவுகளை நோக்கி இப்புவிசார் அரசியல் யதார்த்தத்தை  வளைத்தெடுப்பதற்குரிய பொருத்தமான ஒரு வெளியுறவுத் தரிசனம் தமிழ் மக்களுக்குத் தேவை என்பதே இக்கட்டுரை அழுத்திக்கூற முற்படும் விடயமாகும்.

அதற்கு முதலில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் அனைத்தும்   ஒரு பொதுவான வெளியுறவு அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக ஓடக்கூடாது. குறுக்கோட்டமும்  கூடாது. அவ்வாறு பொதுவான ஒரு வெளியுறவு அணுகுமுறைக்கு  ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை அவசியம். ஒரு பொதுவான வெளியுறவு கட்டமைப்பு அவசியம். அவ்வாறான பொருத்தமான வெளியுறவுக்  கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் தமிழ்க்கட்சிகள் மத்தியில் மூன்று வேறு போக்குகள் காணப்படுகின்றன.

அமெரிக்க விஜயத்தின்பின் கனடாவில் உரை நிகழ்த்திய சுமந்திரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க சந்திப்புகளின் பின் அங்கே என்ன பேசப்பட்டன என்பவற்றை வோஷிங்டனில் உள்ள இந்திய தூதுவருக்கும் நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்திய பிரதிநிதிக்கும் தான் எடுத்துரைத்ததாக சுமந்திரன் கனடாவில் வைத்து கூறியுள்ளார்.நோர்வேயின் சிறப்புத் தூதுவர் சொல்ஹெய்ம் வன்னியில் என்ன பேசப்பட்டது என்பதை ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு அப்டேட் செய்ததும் சுமந்திரன் அமெரிக்க விஜயத்தில் பேசப்பட்டவற்றை இந்தியாவுக்கு அப்டேட் செய்வதும் ஒன்றல்ல. ஏனென்றால் சொல்ஹெய்ம் ஒரு ராஜதந்திரி;அனுசரணையாளர்;விஷேஷ தூதுவர். ஆனால் சுமந்திரன்  பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பின் பிரதிநிதி. அவர் தனது மக்களின் நோக்கு நிலையில் இருந்து ஒரு வெளியுறவுக் கொள்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியவர்.

ஆனால் அப்படி ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை ஏதும் தமிழ் கட்சிகள் மத்தியில் கிடையாது. குறைந்தபட்சம்  அமெரிக்க  விஜயத்திற்கு முன்பு   தமிழரசுக்கட்சியின் உயர்மட்டத்திலோ அல்லது கூட்டமைப்பின் உயர்மட்டத்திலோ அதுதொடர்பாகக்  கலந்துரையாடப்படவில்லை.ஒரு  பொது முடிவு எடுக்கப்படவில்லை.மாறாக சிறிய பங்காளிக் கட்சியின் முன்னெடுப்பு ஒன்றை  வெட்டியோடும் முனைப்பே தெரிகிறது. இவை வெளிவிவகார நோக்கு நிலையிலிருந்து தீர்மானிக்கப்பட்ட தந்திரோபாய ஓட்டங்கள் அல்ல. மாறாக நான் பெரிதா நீ பெரிதா என்ற அகந்தையின் பாற்பட்ட ஓட்டங்களாகவே தெரிகின்றன. இந்த அகந்தை  காரணமாக மூலோபாய நோக்கு நிலையிலிருந்து முடிவெடுக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம் தமிழ் மக்களுக்கு படங்காட்டும் ஒரு விவகாரமாக குறுக்கப்பட்டு விட்டதா?

சீனா ஒரு பிராந்திய பேரரசு என்ற நிலையிலிருந்து  பூகோளப் பேரரசு என்ற ஒரு வளர்ச்சியை நோக்கிப்  போக முற்பட்டதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்று மற்றதில் தங்கியிருக்கும்  பூகோளப் பங்காளிகளாக மாறிவிட்டன. சீனாவை எதிர்கொள்வதற்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா தேவை. அதேபோல உலக அளவில் இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவை. covid-19 சூழலானது இத்துருவமயப்படலை கூர்மைப்படுத்தியிருக்கிறது.எனவே அமெரிக்காவை எப்படித்தான் கெட்டித்தனமாகக் கையாண்டாலும் இறுதியிலும் இறுதியாக அமெரிக்கா இந்தியாவிடந்தான் கொண்டு போய்விடும் என்பதுதான் இப்போதுள்ள புவிசார் அரசியல் யதார்த்தமாகும்.

ஆனால் இப்பூகோளப்  பங்காளிகளை கூட்டமைப்பின் இரு வேறு தரப்புக்கள் தனித்தனியாக அணுகுவதே இதிலுள்ள  வேடிக்கையான ஒரு விடயமாகும்.சுமந்திரனின் குழு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சந்திப்புகளை முன்னெடுக்கும் அதே காலப்பகுதியில் டெலோ அமைப்பு கொழும்பிலுள்ள மேற்கத்திய   தூதுவர்களை சந்தித்து வருகிறது.இசந்திப்புகள் கூட்டமைப்பின் சந்திப்புக்களாக செய்திகளில் சித்தரிக்கப்படுகின்றன.ஒரு சிறியதீவில் ஒரு சிறிய மக்கள்கூட்டத்தின் மொத்தம் 13 பிரதிநிதிகள் அவர்களுடைய வெளிவிவகார அணுகுமுறைகளில் ஒற்றுமையாக இல்லை.தமிழ்க்கட்சிகள் இறந்த காலத்திலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *